'தொட்டால் வருமாம் தும்மப் பிடித்திடுமாம்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

கொரோனா கவி -2-
லகழிக்க ஆயுதங்கள் உவப்போடு செய்தவர்கள்
நிலமனைத்தும் அவை விதைத்து நிமிர்ந்தார்கள் - தளமதனில்
ஓர் கிருமி உள்நுழைய ஒளிந்தோடித் திரிகின்றார்
வேரறுக்கத் தெரியாமல் வெருண்டு.

தொட்டால் வருமாம் தும்மப் பிடித்திடுமாம்
எட்டாத இடமெல்லாம் எட்டிடுமாம் - விட்டால்
ஊரை அழிக்குமென ஒப்பாரி வைக்கின்றார்
போரை வளர்த்திட்ட புல்லர்.

இறக்குமதிதான் எங்கள் ஏற்றமென உரைத்தவர்கள்
வரக்கிருமி தனைக் கண்டே வருந்துகிறார் - தரக்குறைவால்
நாட்டை அழித்திடவே நாசவழி சமைத்தவர்கள்
மாட்டினராம் வைரஸின் மாண்பில்.

சா அறுக்கவேண்டிச் சதிராடித் திரிந்தவர்கள்
பேருரைக்க நடுங்குகிறார் பேதலித்து - ஊருலகில்
கோரோனா வந்து குதித்ததனால் மரணமதின்
சீரான வேதனையைத் தெரிந்து.

கைகூப்பும் தமிழ்  வணக்கம் கடைத்தொழிலாம் என்றவர்கள்
மெய் கூசி மேனியெலாம் விதிர்விதிர்த்தார் - வையமெலாம்
இருகைதனைக் கூப்பி ஏற்றமுற வணங்குகிறார்
வருகைதர வைரஸால் வருந்தி.

இயற்கையதை வென்றிடவே எத்தனையோ செயல் புரிந்து
மயக்கமதால் முயன்றிட்ட மானுடர்கள் -பயத்துடனே
சின்னக் கிருமியது சீறித்தான் பாய்ந்திடவே
எண்ணத்தால் சோர்ந்தார்கள் இழிந்து.

ஏவுகணை செய்தே நாம் இருந்துலகை அழிப்பம் என
பூவுலகம் நடுங்கத்தான் புகன்றவர்கள் - மேவி ஒரு
வைரஸ் அது வெருட்ட வாடித்தான் நடுநடுங்கி
கையறுந்த நிலையுற்றுக் கவன்றார்.

வல்லார்க்கு வல்லார்கள் வையகத்தில் உண்டென்னும்
நல்லார்தம் பழம் வார்த்தை நயமுறவே - எல்லோர்க்கும்
பாடமாய் கோரோனா பாரதனில் வந்ததுவாம்
நாடசைத்து நிற்கிறதே நலித்து.

தாரானா எனக் கையைத் தாழ்த்தியதால் தேசமதின்
சீரான பெரும்புகழைச் சிதைத்தார்கள்-வேரோட
வாரானா என ஏங்கி வரவேற்ற சீனர்களால்
கோரோனா வந்த கதைகூறு!

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்