'உடம்பும் ஆயினான்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லக மக்களை,
இறைவன் வகுத்ததாய ஒழுக்க நெறியொடு பொருத்தி வாழச் செய்வதால்,
மன்னனை உயிர் எனவும், மக்களை உடம்பு எனவும்,
நம் சங்கச் சான்றோர்தம் கவிதை பேசும்.
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் என்பது அப்புலவோர் கருத்தாம்.
கால மாற்றத்தால் இன்றைய நவீன ஐனநாயக உலகில்,
சர்வாதிகாரக் குறியீடாய் மன்னன் எனும் சொல் அமைந்துவிட்டது கருதி,
மேற்சொன்ன சங்கச் சான்றோர் கருத்தை மறுத்து,
மக்களே உயிர் என நிறுவ முயல்வார்,
தம் கருத்துக்குச் சான்றாகக் கம்பனின் பாடலொன்றை,
உதாரணமாய் எடுத்துக்காட்டி வருகின்றனர்.
அவர்கள் அப்பாடலை ஆதாரமாய்க் கொண்டு, 
கம்பனும் சங்கச் சான்றோரின் கருத்தை மறுப்பதாய் உரைக்கின்றனர். 
அவர்தம் கருத்துச் சரியானதா?
சான்றோர் கருத்தோடு கம்பன் முரண்படுகிறானா?
ஆராய்வோம்.

🐘 🐘 🐘

பால காண்டம் - அரசியற் படலம்.
தன் பிரஜைகளை உயிரெனப் போற்றி வாழும் தசரதனின் ஆட்சிச் சிறப்பை,
சொல்லத் தலைப்படுகிறான் கம்பன்.

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால்
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ்
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்

மேற்பாடலில்,
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்,
எனும் அடியை ஆதாரம் காட்டியே,
கம்பன் சங்க சான்றோரோடு முரண்படுவதாய்,
அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.
சங்கப் புலவோர் மன்னனை உயிரென்றுரைக்க,
கம்பனோ மக்களை உயிராய்ப் பேசுகிறான்.

🐘 🐘 🐘

அரசு, மக்கள் எனும் இரு தத்துவங்களில்,
உயிரோடு ஒப்பிடப்படும் தகுதி எதற்குண்டு? எனும் கேள்விக்கு,
அவர்கள் தரும் விளக்கமோ மிகச் சுவையானது.
அரசு எனும் தத்துவம் மாற்றமடையக் கூடியது.
மக்கள் எனும் தத்துவமோ என்றும் ஒரே தன்மைத்ததாய் நிலைத்திருப்பது.
இஃது இயற்கை.
எனவே உடல் உயிர்ச் சேர்க்கையில் மாற்றமடையும் உடலினை மன்னனுக்கும்,
நிலைத்ததான உயிரினை மக்களுக்கும் உவமிப்பதே சரியானது எனவும்,
இவ் உவமை உணர்ந்தே கம்பன், சங்கச் சான்றோருடன் முரண்பட்டு,
தான் வெய்த இவ் உவமை மாற்றத்தால்,
இன்றைய உலகு ஏற்கும் கருத்தை வலியுறுத்துகிறான் என்கின்றனர் அவர்கள்.

🐘 🐘 🐘

இவ்விளக்கம் சுவை தரினும்,
அவர்தம் கருத்து நம் மனதிற் சில ஐயங்களைக் கிளப்பவே செய்கிறது.
கோதாவரி ஆற்றை வர்ணிக்கப் புகும் கம்பன்,
அவ்வாற்றின் ஆழம், தெளிவு முதலியவற்றைக் கொண்டு,
சான்றோர் கவி எனக் கிடந்தது அது எனப் பேசுவான்.
கம்பனின் இக்கவிதைத் தொடர்,
அவன், சங்கச் சான்றோர் கவிதைமேற் கொண்டிருக்கும்,
ஆழ்ந்த நம்பிக்கையை எடுத்துக்காட்டுகின்றது.
எனவே,
அச்சங்கப் புலவோர்தம் கூற்றைக் கம்பன் மறுதலித்தான் எனும் கருத்து,
ஏற்க முடியாததாய் ஆகிறது.

🐘 🐘 🐘

அங்ஙனமாயின் அவ் உவமை மாற்றத்தால்,
கம்பன் சொல்ல வந்ததுதான் என்ன?
ஆழ்ந்து சிந்திக்க விடை கிடைக்கிறது.
அவ்விடையை நாம் பெறுவதற்கான சான்றினை,
கம்பன் தன் கவிதையிலேயே தந்துள்ளான்.
மக்களே உயிர் - மன்னனே உடல் எனும் கருத்தை மாத்திரம்,
அவன் சொல்லப் புகுந்திருப்பின்,
உயிரெலாம் உறைவதோர் உடம்பு ஆயினான் என்றல்லவா பேசியிருத்தல் வேண்டும்.
ஆனால், கம்பனோ, உடம்பும் ஆயினான் என,
இறந்தது தழீஇய எச்ச உண்மையிட்டுப்  பேசுகிறான்.
உடம்பும் ஆயினான் எனவே உயிரும் ஆயினான் என்பது சொல்லாமலே பெறப்படும்.

🐘 🐘 🐘

இஃது உணர,
கம்பன் சங்கச் சான்றோரின் கருத்தையும் ஏற்றுக்கொண்டு,
மன்னனை உயிராகவும் ஏற்று, 
பின் மற்றோர் கருத்தில் மன்னனை உடலாகவும் கொள்கிறான்,
என்ற உண்மை வெளிப்படுகின்றது.
கம்பனாற் சுட்டப்படும் அவ்விரு நிலைகளும் எவை?
அரசன், மக்களைத் தாங்கி நிற்பவன்.
அவனே, மக்களை இயக்குபவனுமாம்.
உயிரைத் தாங்கி நிற்பது உடம்பு.
உடம்பினை இயக்கி நிற்பது உயிர்.
இக்கருத்துக்களை அடிப்படையாகக்; கொண்டே கம்பன்,
அரசற்கு இவ்விரு நிலைகளையும் உவமையாக்குகிறான்.
இயக்குவது உயிர்.
இயக்கப்படுவது உடம்பு.
இயக்குபவன் மன்னன்.
இயக்கப்படுவோர் மக்கள்.
இவ் ஒப்பீட்டில் அரசன் உயிராதலும், மக்கள் உடம்பாதலும் தெளிவுபடுகிறது.

🐘 🐘 🐘

இனி உயிரைத் தாங்குவது உடல்.
உடலால் தாங்கப்படுவது உயிர்.
தாங்குபவன் மன்னன்.
தாங்கப்படுவது உலகம்.
இவ் ஒப்பீட்டில்,
மன்னன் உடலாதலும் மக்கள் உயிராதலும் கூடச் சரியேயாம்.
உடம்பு, உயிரென மன்னன் இருநிலைப்பட்டு பேசப்பட்டாலும்,
அவனது இருநிலைப்பட்ட செயற்பாடுகளில் முரண்பாடின்மை தெளிவாகின்றது.

🐘 🐘 🐘

எனவே,
கம்பன் சான்றோர் கருத்தை மறுத்தான் எனும் கூற்று.
தவிர்க்கப்பட வேண்டியதென்பது தெளிவாகிறது.
புதுமை செயினும், வழி வழி வந்த மரபின் வித்தாகவே,
கம்பன் காட்சி தர மகிழ்கிறோம் நாம்.

🐘 🐘 🐘

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்