'நல்லதோர் வீணை செய்து...': பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

(மறைந்த நாடக நடிகர் அருமைநாயகம் பற்றிச் சில எண்ண அலைகள்)
'அப்ப நீங்கள் வேதக்கரரே?'- எனக் கேட்கிறேன். 'ஓம் ஓம்' என்கிறார் சாதாரணமாக 'ஐயோ அதுதெரியாம உங்களைத் திறுநீறு பூசி, கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போயிட்டேன்.' என்று நான் பதற,
சிரிக்கிறார் அருமைநாயகம். 'முருகனைப் பார்த்து நல்லா அழுது கும்பிட்டீங்களே அது எப்படி?' மீண்டும் நான் கேட்க, 'யேசுநாதரும் முருகனும் வேறவேறயோ?' கேள்வியை அருமைநாயகம் பதிலாக்க, அதிர்ந்துபோகிறேன் நான். எனக்குள் ஒரு ஞானக்கண் திறக்கிறது. சித்தன் போல் சிரித்து நிற்கிறார் அவர்.

 

ளம் நிறைந்திருக்கும் இன்னொரு சம்பவம்.
ஆண்டு ஞாபகமில்லை.
கவிஞர் அரியாலையூர் ஐயாத்துரை அவர்கள்,
பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.
எங்கள் கழகத்துடன் தொடர்புபட்டிருந்த அவரின் உடல்நலம் வேண்டி,
அரியாலையில் அவர் அமைத்திருந்த சரஸ்வதி கோயிலில்,
ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தோம்.
அக்கூட்டத்திற்கு அருமைநாயகமும் வந்திருந்தார்.
வழமையைவிடச் சற்று அதிகமான அழுக்கு உடை.
கழுவாத முகம்.
மற்றவர்கள் சற்று அருவருக்கும்படியான தோற்றத்தோடு அவர்வர,
எனக்குக் கோபம் வந்தது.
சத்தம் போடத்தொடங்கினேன்.

✵ ✵ ✵ 

'ஏன் இப்படி உலகத்தை நிராகரிச்சுத் திரியிறீங்கள்? 
இப்படி அழுக்காய்த் திரிஞ்சால் ஆர் உங்களை மதிக்கப் போயினம்?
வேணுமெண்டு மற்றவை பகிடிபண்ணுறமாதிரி ஏன் நடக்கிறீங்கள்?'
நான் கோபிக்க,
எந்தவிதமான தாக்கமுமின்றிச் சிரிக்கிறார் அவர்.
'சிரிக்கிறதை விட்டிட்டுப் பதில் சொல்லுங்கோ?' - நான்கேட்க,
'வேணுமெண்டுதான் நான் அப்படிச் செய்யிறன்' பதில் பிறக்கிறது.
அவரின் அலட்சியமான பதிலால் என் கோபம் அதிகரிக்க,
முறைக்கிறேன் நான்.
தொடர்கிறார் அருமைநாயகம்.

✵ ✵ ✵ 

'தம்பீ, ஒரு நாடகத்தில நடிக்க வருகிறவன்,
டைரக்டர் தந்த வேஷத்தை வடிவாய்ச் செய்யவேணும்.
டைரக்டர் பிச்சக்கார வேஷம் தந்தால்,
சரியாய் பிச்சைக்காரன்போல இருந்து நடிக்கவேணும்.
கதாநாயகன் நல்ல உடுப்புப் போட்டிருக்கிறான்.
வடிவாய் இருக்கிறான்.
என்னையும் அப்படி நடிக்கவிடு என்று கேட்டால்,
டைரக்டருக்குக் கோபம்தான் வரும்.
அதனால அடுத்த நாடகத்தில அதவிடமோசமான பாத்திரம்தான் தருவான்.
நான் சொல்லுறது உண்மையோ? பொய்யோ? என்னைக் கேட்க,
'உண்மைதான்' என்று நான் ஒத்துக்கொள்கிறேன்.

✵ ✵ ✵ 

'தம்பீ, இந்தப்பிறவி என்ற நாடகத்தில,
கடவுள் என்ற டைரக்டர் எனக்குப் பிச்சைக்கார வேஷம்தான் தந்திருக்கிறார்.
அந்த வேஷத்தை வடிவாய்ச் செய்வமெண்டுதான்,
பிச்சைக்காரன் போலவே திரியிறன்.
அப்பதான் கடவுள் அடுத்த பிறவி என்ற நாடகத்தில நல்ல வேஷமாத் தருவார்.
பிச்சைக்கார வேஷம் தந்த இந்த நாடகத்தில,
கதாநாயகன்மாதிரி நான் நடிக்க வெளிக்கிட்டால்,
அடுத்தபிறவி என்ற நாடகத்தில,
இதைவிட மோசமான பாத்திரம்தான் எனக்குக் கிடைக்கும்.
அதனாலதான் வேணுமெண்டு இப்பிடித்திரியிறன்.'
என்று சொன்னதோடு நில்லாமல்,
அன்றைய பிரார்த்தனைக் கூட்டத்தில்,
அதனையே சொல்லிப் பலரையும் அதிரச்செய்தார்.

✵ ✵ ✵ 

அன்றைய பிரார்த்தனைக் கூட்டத்தின் நிறைவில்;,
கவிஞரை ஊக்கப்படுத்துவதற்காய் ஒருசிலரைப் பேச அழைத்தோம்.
அவர்களில் ஒருவராய் அருமைநாயகத்தையும் அழைக்க,
அவர், பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுத்திருந்த கவிஞரைப் பார்த்து,
'உங்களுக்கு இப்ப நோயாளி வேஷம்.
நீங்களும் இதை வடிவாய் நடியுங்கோ.
உங்களுக்கும் பிறமோஷன் கெதியில கிடைக்கும்.' என்று சொல்ல,
பக்கத்தில் நின்றவர்கள்,
யார் இந்தப் பைத்தியக்காரன்? என்பதுபோல் அவரைப் பார்க்கின்றனர்.
தான் மூழ்கிய நாடகத்தாலேயே ஆண்டவனை விளங்கி,
தன் விதியை ஏற்றுநிற்கும் அவர் தெளிவு கண்டு,
நானோ ஆச்சரியப்பட்டுப்போனேன்.

✵ ✵ ✵ 

வேறொருநாள்,
பஸ் வண்டிக்காக வீதியோரத்திற் காத்து நிற்கிறேன் நான்.
நீண்டநேரமாய் பஸ் இல்லை.
அவ்வழியால் வந்த அருமைநாயகம்,
என்னைக் கண்டதும் சைக்கிளை நிறுத்தி,
என்னோடு பேசிக்கொண்டு நிற்கிறார்.
அப்போது அங்கு வந்த ஒருவர்,
அருமைநாயகத்தைத் தெரிந்து கொண்டு,
'என்ன தம்பி நல்லா மெலிஞ்சுபோனீர்?' என்று விசாரிக்க,
அருமைநாயகம் அவரைக் கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்துவிட்டு,
பிறகு ஆகாயத்தைப் பார்த்து,
'இண்டைக்கு மழை வரும் போல' என்கிறார்.
அப்பதில் கேட்டு வந்தவரின் முகம் இருண்டு போகிறது.

✵ ✵ ✵ 

 அருமைநாயகம் தன்னைக் 'காய்வெட்ட' நினைப்பது புரிய,
'சரி சரி வர்றன் தம்பி' என்று அவசரமாய்ப் போய்விடுகிறார் அவர்.
நான் அருமைநாயகத்தைப் பார்த்து,
'அவர் அக்கறையா உங்களை ஏன் மெலிஞ்சு போனீங்கள் என்று கேட்க,
சம்பந்தமில்லாமல் மழைவரும் போல என்று பதில் சொல்லுறீங்கள்.
அந்தாளுக்கு முகம் கறுத்துப் போச்சு.
ஏன் இப்படி உலகத்தோட பகைக்கிறீங்கள்' என்று கேட்கிறேன்.
அருமைநாயகம் சற்றுக் கோபத்துடன்,
'உமக்கு இவங்களை விளங்காது.
போனமாசம் என்னக்கண்டு என்ன, வரவரஉடம்பு கொழுக்குது? 
என்று இவன்தான் கேட்டவன்.
இண்டைக்கு என்ன மெலியிறீர்? என்று கேட்கிறான்.
அவனுக்கு என்னைப்பற்றி ஒரு அக்கறையும் இல்லை.
என்னக்கண்டதால சம்பந்தமில்லாம அவன் சும்மா ஒரு கேள்வி கேட்டவன்.
அதுதான் நானும் சம்மந்தமில்லாம மழைவரும் என்றனான்.'
அருமைநாயகம் சொல்ல,
நான் வீடு போய்ச் சேரும்வரையும் பஸ்ஸுக்குள்ளும் சிரிக்கிறேன்.
அச்சிரிப்பால் அருமைநாயகத்தைப் பார்ப்பதுபோலவே,
என்னையும் சிலபேர் பார்க்கத்தொடங்கினர்.

✵ ✵ ✵ 

யாழில், கம்பன் கோட்டக் கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது.
நான் மேற்பார்வை செய்து கொண்டு நிற்கிறேன்.
நீண்டநாள் வராமலிருந்த அருமைநாயகம் அன்று திடீரென வருகிறார்.
வழமையைவிடச் சற்றுச் சந்தோசமான மனநிலையில் அவரிருப்பதை,
முகம் சொல்கிறது.
உரையாடத் தொடங்குகிறோம்.

✵ ✵ ✵ 

'என்னண்ண, கனநாளாய்க் காணயில்லை?'
'ஓம், வீட்டில வேலை கூடிப்போச்சு அதுதான் வரயில்லை. 
இப்ப ஒரு புதினம் சொல்லிற்றுப்போவமெண்டு வந்தனான்.'
'என்ன புதினம் அண்ண?' 
'நானெல்லோ பாதிரியார் ஆகப்போறன்'
தனியே இருந்து அவர் கஸ்டப்படுவது தெரிந்ததால்,
பாதிரியாரானால், அவருக்குப் பாதுகாப்பான ஒரு வாழ்க்கை கிடைக்கும் என நினைந்து,
எனக்கு மகிழ்ச்சி.
உரையாடல் தொடர்கிறது.

✵ ✵ ✵ 

'நல்லதண்ண. எனக்குப் பெரிய சந்தோஷம்'
நான் சொல்ல அருமைநாயகத்தின் முகம் சுருங்குகிறது.
'என்ன நீரும் பொய்யை வரவேற்கிறீர் போல' என்கிறார்.
'ஏன் பொய்யென்கிறீயள்' நான் கேட்க,
'கொஞ்சப்பேரைப் பாதிரியாருக்குப் படிப்பிக்கப் போயினம் என்று கேள்விப்பட்டு,
நானும் போனன்.
என்னைப் பேசச்சொல்ல, 
வேணுமெண்டு ஒருதேவாரம் பாடிப்போட்டுப் பேசினன்.
வந்த பாதிரியார், உடன என்னைச் 'செலக்ட்' பண்ணிப்போட்டார்.'
அருமைநாயகம் சிரித்தபடி சொல்கிறார்.

✵ ✵ ✵ 

 'ஏன் அண்ணை அங்க தேவாரம் பாடினனீங்கள்,
அவர்களுக்குப் பிடிக்காதெல்லோ?' நான் கேட்கிறேன்.
அருமைநாயகம் மீண்டும் சிரிக்கிறார்.
'உமக்கு விஷயம் விளங்கயில்லை. 
நான் தேவாரம் பாடின படியால்த்தான்,
என்னைச் 'செலக்ட்' பண்ணினவங்கள். 
தேவாரம் தெரிஞ்ச நான்தான்,
சைவசமயத்தைக் கண்டிச்சுப்பேச முடியும் என்பதாலதான்,
என்னை எடுத்தவங்கள். 
அப்பிடியெடுப்பாங்கள் என்று தெரிஞ்சுதான்,
நானும் தேவாரம் பாடினனான்'
இது வழமையான, அருமைநாயகத்தின் குசும்புப்பதில்.
வந்தசிரிப்பை அடக்கிக்கொண்டு,
'சரி சரி அங்கையும் போய்,
கொழுவுப்படாம ஒழுங்காய் இருக்கப்பாருங்கோ.
உங்கட பிற்காலத்துக்கு நல்லது.' சொல்லி அனுப்பினேன்.

✵ ✵ ✵ 
(அடுத்த வாரமும் அருமைநாயகம் வருவார்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்