'நல்லதோர் வீணை செய்து' : பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

(மறைந்த நாடக நடிகர் அருமைநாயகம் பற்றிச் சில எண்ண அலைகள்)
ஏன் அண்ணை அங்க தேவாரம் பாடினனீங்கள், அவர்களுக்குப் பிடிக்காதெல்லோ?' நான் கேட்கிறேன். அருமைநாயகம் மீண்டும் சிரிக்கிறார். 'உமக்கு விஷயம் விளங்கயில்லை.  நான் தேவாரம் பாடின படியால்த்தான், என்னைச் 'செலக்ட்' பண்ணினவங்கள்.  தேவாரம் தெரிஞ்ச நான்தான், சைவசமயத்தைக் கண்டிச்சுப்பேச முடியும் என்பதாலதான், என்னை எடுத்தவங்கள்.  அப்பிடியெடுப்பாங்கள் என்று தெரிஞ்சுதான், நான் தேவாரம் பாடினனான்' இது வழமையான, அருமைநாயகத்தின் குசும்புப்பதில். வந்தசிரிப்பை அடக்கிக்கொண்டு, 'சரி சரி அங்கையும் போய், கொழுவுப்படாம ஒழுங்காய் இருக்கப்பாருங்கோ. உங்கட பிற்காலத்துக்கு நல்லது.' சொல்லி அனுப்பினேன்.

லகம் வேகமாய் உருண்டது.
மூன்று மாதம் கழிந்த பின்,
ஒருநாள் என்னிடம் வருகிறார் அருமைநாயகம்.
'எப்படி அண்ண பாதிரியார் பயிற்சி எல்லாம் போகுது?' என்று நான் கேட்க,
'உமக்கு விஷயம் தெரியாதே? 
அங்கிருந்து என்னை விரட்டியெல்லே போட்டாங்கள்.'
சிரித்தபடி அருமைநாயகத்திடமிருந்து பதில் வருகிறது.
என்ன நடந்ததென்று நான் கேட்க,
நடந்ததை விபரித்தார் அருமைநாயகம்.

'மடத்திலேயே தங்கியிருந்து படிக்கவேணும் எண்டாங்கள்.
வெளியில போக விடமாட்டமெண்டும் சொல்லிட்டாங்கள்.
என்ட வீட்டில ஒரு நாய் நிண்டது.
அதுக்கு என்னில சரியான அன்பு.
செத்த என்ட அம்மாதான் அந்த நாயெண்டு நான் நினைக்கிறனான்.
அதத்தனிய விட்டுட்டுப் போக மனமில்லாமல்,
அதையும் சையிக்கிளில ஏத்திக் கொண்டுதான் மடத்துக்குப் போனனான்.
உதென்ன எண்டு கேட்டாங்கள்?
என்ட அம்மா என்று சொன்னன்.
நான் பகிடிவிடுறதா நினைச்சிட்டாங்கள்.
என்ட பதில் அவங்களுக்குப் பிடிக்கேல.
என்டாலும் நாயை வைச்சிருக்க விட்டிட்டாங்கள்.'

'எங்களைப் பராமரிச்ச பாதிரியார் விதிச்ச கட்டுப்பாடுகள் எனக்குப் பிடிக்கேல.
மற்றவர்களை மேய்க்கிறதில அவருக்குப் பெரிய ஆனந்தம்.
எங்கள செம்மறிக்கூட்டமாகவும், தன்ன இயேசுநாதராகவும்,
நினைச்சு எப்பவும் எங்கள மேய்க்கிற வேலையே செய்வார்.
அன்பில்லாத இயேசுநாதர் அவர்.
அவருடைய போக்கு எனக்குப் பிடிக்கேல'.

தொடர்ந்தார் அருமைநாயகம்.
'ஒருமாசம் ஒருமாதிரிச் சமாளிச்சன்.
ஒருநாள் எங்கட வகுப்பைக் காட்ட,
பெரிய பாதிரியாரைக் கூட்டிக்கொண்டு வந்தார் அவர். 
பெரிய பாதிரியார், 
இந்த வகுப்புப் பற்றி உங்கட அபிப்பிராயத்தைச் சொல்லுங்கோ எண்டார்.
இருந்தவங்கள் எல்லாம் பொறுப்பாளரைச் சந்தோஷப்படுத்த,
திறமான வகுப்பெண்டு சும்மா புளுகினாங்கள்.
கொழுவவேண்டாம் எண்டு நீர் சொன்னதால நான் ஒண்டும் பேசாம இருந்தன்.
ஆற்ற கஷ்டகாலமோ தெரியேல,
பாதிரியார் என்னைப்பார்த்து நீரும் இந்த வகுப்பைப்பற்றிச் சொல்லும்! என்றார்
நான் எழும்பி, 'பூஷா'ச் சிறைச்சாலையைவிடப் பறவாயில்லை எண்டன்.
பொறுப்பாளருக்கு முகம் சிவந்து போச்சு.'

'பெரியபாதிரியார் ஏன் அப்பிடிச் சொல்லுறீர் எண்டார்?
நான், அங்கபிடிச்சு அடைச்சா, துப்பரவா வெளியில விடாங்கள்,
இங்க மாசம் ஒருதரம் வீட்டை போக விடுகினம். 
அதுதான் அதைவிடப் பறவாயில்லை எண்டனான் - என்று சொல்ல,
அண்டைக்குப்பின்னேரமே என்னைக் கலைச்சுப் போட்டாங்கள்.'
எந்தவித கவலையும் இல்லாமல் அருமைநாயகம் சொல்ல,
'சீ வீணா ஒரு நிம்மதியான வாழ்க்கையை இழந்து போட்டீங்கள் அண்ண'
என்று நான் கோபிக்கிறேன்.
'நிம்மதியோ?, உமக்கு விசர்.
அந்த, பாதிரியாரோடு இருந்ததைவிட,
இப்ப வீட்டில நாயோடு வலுசந்தோசமாய் இருக்கிறன்.' - என்கிறார்.
தாயை நாயாய் மதிக்கும் பலர் மத்தியில்,
நாயைத் தாயாய் மதிக்கும் அவர் கருணையுள்ளம் கண்டு,
என் கண்கள் கலங்கின.
ஒரு உண்மைக் கிறிஸ்தவனை அன்று இனங்கண்டேன்.

அருமைநாயகம் பற்றி மறக்கமுடியாத மற்றொரு சம்பவம்.
யாழ்ப்பாணம் அப்போது புலிகள் இயக்கத்தின் ஆட்சியில் இருந்தது.
புலிகளால், 'நிதர்சனம்' என்ற பெயரில்,
தொலைக்காட்சிச் சேவை ஒன்று அப்போது நடாத்தப்பட்டது.
அந்த நிறுவனத்தின் ஓராண்டு நிறைவு.
அப்போது யாழ்ப்பாணத்திலிருந்த பெரிய படிப்பாளிகளையெல்லாம் அழைத்து,
'நிதர்சன' வளர்ச்சி பற்றி ஆலோசனை கேட்கவென,
புலிகள் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர்.

அந்தக்கூட்டத்துக்கு அருமைநாயகமும் வந்திருந்தார்.
காலை ஒன்பது மணிக்குக் கூட்டம் தொடங்கியது.
கூட்டம் தொடங்கிய உடனேயே ஒரு கல்விமான் எழும்பி,
'நிதர்சனம்' என்ற பெயரின் ஆங்கில உச்சரிப்புப் பிழை என்றும்,
அச்சொல் வேறுவிதமாய் எழுதப்பட்டால்த்தான்,
'நியூமோறலஜி' ப்படி இந்த நிறுவனம் உயரும் என்றும் சொல்ல,
மற்றொரு ஆங்கிலப்புலமை மிக்க அறிஞர் அதை மறுக்க,
பயனில்லாமல், மதியம்வரை கல்விமான்களின் விதண்டாவாதங்களில்,
கூட்டம் போய்க்கொண்டிருந்தது.


மதிய உணவு நேரம் நெருங்கிவிட,
திடீரென அருமைநாயகம் எழும்பிப் பேசத்தொடங்கினார்.
அவரது பிச்சைக்காரத் தோற்றம்,
'டிப்ரொப்' பாக வந்திருந்த படிப்பாளிகளுக்குப் பிடிக்கவில்லை.
அருமைநாயகத்தை அலட்சியம் செய்து,
தங்களுக்குள் பேசத்தொடங்கினர்.
இவர்கள் தன்னைக் கவனிக்கவில்லை என்று தெரிந்ததும்,
அருமைநாயகம் திடீரெனக் குரலை உயர்த்தினார்.
அவர் குரலை உயர்த்தியதும் எல்லோரும் அவரைப் பார்க்க,
அருமைநாயகம்,
'உங்களுக்கு நான் பேசிறது பிடிக்கேல்லை எண்டு தெரியுது.
நான் கனக்க ஒண்டும் சொல்ல விரும்பேல.
இவ்வளவு பேரும் பேசினதில இருந்து ஒன்றைத்தெரிஞ்சு கொண்டன்.
அதைச் சொல்லத்தான் எழும்பினனான்.'
என்று சொல்லி விட்டுக்; கொஞ்சம் இடைவெளி விட்டார்.

வாதிட்ட அறிஞர்கள்,
யார் சார்பாக இவர் கருத்துச் சொல்லப்போகிறார் என,
ஆவலுடன் கேட்கத் தொடங்குகின்றனர்.
அருமைநாயகம் தொடர்கிறார்.
'நீங்கள் பேசினதில இருந்து ஒண்டமட்டும் தெரிஞ்சுகொண்டன்.
நல்ல காலம் பிரபாகரன் உங்களை எல்லாம் கூப்பிட்டு,
ஆலோசிச்சு இயக்கம் தொடங்கேல்லை.
அப்படிக்கூப்பிட்டு ஆலோசிச்சிருந்தா,
இண்டைக்குவரைக்கும் அந்தாள்,
இயக்கத்துக்குப் பேரே வைச்சிருக்கமுடியாது.
அதைத்தான் சொல்லவந்தனான்.
நான் வர்றன்.'
வணக்கம் சொல்லிவிட்டு அருமைநாயகம் போக,
அத்தனை அறிஞர் முகத்திலும் அசடு வழிகிறது.
தங்களைப் பைத்தியமாக்கிய அருமைநாயகத்தை,
பைத்தியக்காரன் என்று சொல்லிச் சமாளித்து அவர்கள் சிரித்தனர்.
அலட்சியமாய்ச் சென்ற அருமைநாயகத்தை,
ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.

இவையெல்லாம் அருமைநாயகம் பற்றிய சில மனப்பதிவுகள்.
விசரன்போல்த் திரிந்தாலும்,
ஞானக்கிறுக்கனாய்த் திகழ்ந்தவர் அருமைநாயகம்.
விதி பிழைக்க,
அவர் முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போயின.
ஆனாலும், 
தான் அமைத்துக் கொண்ட நாடகப் பாதையைவிட்டு,
மரணிக்கும் வரையும் அசையாது நடந்தவர். 
செயல்முடியாது போக வார்த்தையாலும்,
வார்த்தையும் முடியாது போக மனத்தினாலும்,
நாடகம் பற்றியே முயன்றுகொண்டிருந்தவர்.

அவரது அந்த முழுமையான ஈடுபாடு,
கல்வி, அறிவு என்பவற்றைக் கடக்கச் செய்து,
அவரை ஓர் ஞானிபோல் ஆக்கிற்று.
நாடகத்தை அவரளவு நேசித்த எவரையும் நான் கண்டதில்லை.
பொய்கலவாத அவர் உண்மை நடத்தை,
பலருக்கு அவரைப் பைத்தியமாய்க் காட்டினும்,
என் மனதில் அவர் ஓர் ஞானி போலவே பதிந்திருக்கிறார்.
நான் சார்ந்த துறையினூடு அவர் அடைந்த நிலையை,
என்றேனும் நான் எய்துவேனா? என ஏங்குகிறேன்.
இறைவன் படைத்த ஓர் அற்புதப்பாத்திரம் அவர்.
'வல்லமைதாராயோ' என்ற ஏக்கத்துடன்,
பாரதியைப்போலவே அருமைநாயகமும்,
கடைசிக் காலத்தில்,
ஓர் அநாதையாய் இறந்துபோனார்!


(அருமைநாயகம் நிறைந்தார்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்