'சேருதும் அமளி': -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகம் இறைவனின் ஒப்பற்ற படைப்பு.
அவ் அற்புதப் படைப்பில் சிற்றின்பத்தைப் பொதித்து,
அச்சிற்றின்பத்தினூடு பேரின்பத்தை விளக்கம் செய்கிறான் இறைவன்.
பேரின்பக் குறியீடே சிற்றின்பமாம்.
இஃது நம் பெரியோர்தம் முடிபு.
பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம்
எனும் திருவுந்தியார் அடியே இதற்குச் சான்று.
அருள் நூல்களிலும் சிற்றின்பச் செய்திகள் வருவதன்
அடிப்படையும் இஃதேயாம்.
சிற்றின்பம், பேரின்பம் எனும் வார்த்தைகளே,
இக்கருத்தை தெளிவுற விளக்கம் செய்தல் கண்கூடு.
🌷 🌷 🌷
பேரின்பத்திற் போலவே சிற்றின்பத்திலும் 
இரண்டு ஒன்றாதல் கைகூடுகின்றது.
சிற்றின்பத்தில்,
தலைவியின்பால் தலைவன் ஐம்புல ஒடுக்கம் கொள்கிறான்.
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஓண்டொடி கண்ணே உள

எனும் வள்ளுவக் கடவுளார் வாக்கு இதனை உறுதி செய்யும்.
🌷 🌷 🌷
பேரின்ப நிலையிலும் இந்த ஐம்புல ஒடுக்கம் இயல்பேயாம்.
தலைவன் தலைவியாய் ஆட்படுத்தலும் ஆட்படுதலும்
சிற்றின்பம், பேரின்பம் எனும் இவ்விரு நிலைக்கும் பொதுவானவை.
பேரின்பத்திலும், இறைவனைத் தலைவனாய்க் கொண்டு
அடியார்கள் தாம், அவனுக்குத் தலைவியராய் ஆட்படுவர்.
அங்ஙனம் ஆட்படுவோர்,
அப்பேரின்ப நிலையைச் சிற்றின்ப நிலைகொண்டே
வெளிப்படுத்துதலே வழக்கமாம்.
🌷 🌷 🌷
'சிறையாரும் மடக்கிளியே'
'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்'
'கேட்டாயோ தோழி கிறி செய்த வாறொருவன்'
எனும் 
சம்பந்தர், அப்பர், மணிவாசகர் ஆகியோரின் பாடல்கள்
இக்கருத்தை நிரூபணம் செய்யும் தக்க மேற்கோள்கள்.
இம்மரபைப் பின்பற்றிக் கம்பனும்,
சிற்றின்ப வர்ணனையூடு பேரின்ப விளக்கம் செய்கிறான்.
பாலகாண்ட உலாவியற் படலத்தில்
கம்பன் செய்யும் இவ்விளக்கம் அற்புதமானது.
அவ்வற்புதம் காண்பாம்.
🌷 🌷 🌷
வீதியுலாவரும் இராமனைக் கண்டு
மையலுறுகின்றனர் மிதிலைப் பெண்கள்.
அப்பெண்கள், தாப மிகுதியினால்
நினைத்தவையும், பேசியவையும், செய்தவையும்,
இப்படலத்திற் கம்பனால் எடுத்தோதப்படுகின்றன.
அப்பெண்களின் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றின்,
தாப வெளிப்பாடுகளைக் கூறும் இப்பாடல்கள்,
வெளிப்படையாய்ச் சிற்றின்ப நிலையைக் காட்டினும்,
உள்ளீடாய்ப் பேரின்பக் குறிப்பைக் கொண்டவையாம்.
இறைதரிசனம் கிடைத்த ஆன்மாக்களின் ஏக்க நிலையே,
இப் பெண்களூடு கம்பனால் விபரிக்கப்படுகிறது.
🌷 🌷 🌷
பார்வதிதேவியின் தலைவனே சிவன் என்பதறிந்தும்,
அவன் மேலே கொண்ட காதலால்,
அவன், தம் தலைவனாதல் வேண்டுமென,
அடியார்கள், பெண்களாய்த் தமையமைத்துப் பாடுதல் போல,
சீதையின் மணாளனே இராமன் என்பது முடிவான பின்னும்
இப்பெண்கள், இராமனைத் தம் தலைவனாக்கி,
அவன்மேல் மையல் கொண்டு வாடுவதாய்க்
கவிதை செய்கிறான் கம்பன்.
பலவாய் விரியும் அப்பாடல்களில்
குறித்த ஒரு பெண்ணின் செய்கையை
விளக்கம் செய்கிறது ஒரு கவிதை.
🌷 🌷 🌷
உலாச் சென்ற இராமனைக் கண்டுவிட்ட ஒரு பெண்,
தன்னிரு கண்களையும் இறுக மூடிக் கொள்கிறாள்.
மூடியவள், அருகுற்ற தன் தோழியை வணங்கி
தன்னைப் பள்ளியறைக்கு அழைத்துச் செல்லும்படி வேண்டுகிறாள்.
'கண் திறந்து நீயே பள்ளியறைக்குச் செல்லலாமே?'
என உரைத்த தோழிக்கு,
'உலா வந்த இராமனை நான் கண்டேன்.
இமைகளாகிய இரு கதவங்களைக் கொண்ட
என் கண் எனும் வாயிலூடாக
அவ் வஞ்சக இராமன் என் நெஞ்சகம் புகுந்தான்.
தோழீ! மீண்டும் அவன் வெளிப்போகாமல்
என் இமைக் கதவங்களைச் சிக்கென அடைத்து விட்டேன்.
இப்போது என் அகத்திருக்கும் அவனை நான் அனுபவித்தல் வேண்டும்.
கண்கள் மூடியதால் பஞ்சணை சேர வழி தெரியாது தவிக்கிறேன்.
தோழீ!  நான் பஞ்சணையை அடையத் துணை செய்வையாயின்,
நாம் இருவரும் அவனை அனுபவிக்கலாம்.'
என்கிறாள்.
அவள் கூற்று கம்பன் கவியாய் வெளிப்படுகின்றது.

மைக்கருங் கூந்தல், செவ்வாய், வாணுதல் ஒருத்தி உள்ளம்
நெக்கனள் உருகுகின்றாள், 'நெஞ்சிடை வஞ்சன் வந்து
புக்கனன் போகா வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில்
சிக்கென அடைத்தேன் தோழி, சேருதும் அமளி' என்றாள்.

🌷 🌷 🌷
இப்பாடலில், கம்பன் சிற்றின்ப நிலையினூடு,
பேரின்ப நிலையை எடுத்துக் காட்டுமாற்றை ஆராய்வாம்.
முற்றாய்ச் சிற்றின்ப நிலையை எடுத்துக் காட்டும் இப்பாடலின்,
ஈற்றடியைத் திட்டமிட்டு அமைத்து,
பேரின்ப நிலையைத் தெளிவாய் வெளிப்படுத்துகிறான் கம்பன்.
தான் விரும்பும் தலைவனை,
தன் தனி உடைமையாய் நினைப்பது பெண்களின் இயல்பு.
இங்கோ,
'என்னைப் பஞ்சணைக்கு அழைத்துச் செல். நான் அவனை
அனுபவிக்கப் போகிறேன்'
என்று சொல்ல வேண்டிய அப்பெண்
'நாம் அனுபவிப்போம்' என
தோழியையும் உளப்படுத்திப் பன்மையிற் கூறுதல்,
உலகியலுக்கு முரணான செய்தியாகும்.
🌷 🌷 🌷
செயலாலன்றி,
மனம், வாக்குக்களாற் கூட
தன் தலைவன் பிற பெண்கள் பால் மையலுறுவதை
ஓர் தலைவி பொறாள்.
இந்நிலையை வள்ளுவனின் 'புலவி நுணுக்கம்' என்கின்ற அதிகாரம்,
அழகுற விளக்கம் செய்யும்.
இங்கோ, தான் விரும்பும் தலைவனை அனுபவிக்க,
தன் தோழியையும் அழைக்கிறாள் தலைவி.
'சேருதும் அமளி' என
இவ்வழைப்பினை வெளிப்படுத்தும் இப்பாடலின் ஈற்றடிச் சொற்களே
இச்சிற்றின்பப் பாடலில் பேரின்ப நிலையை விளக்கம் செய்கின்றன.
🌷 🌷 🌷
பேரின்பத்தில் தலைவனாம் இறைவன் ஒருவனே.
தலைவியராய ஆன்மாக்களோ பல.
'ஒன்றாயும் பலவாயும் நிற்க வல்லவனாகிய
எங்கும் நிறைந்திருக்கும் இறைவன்
தாம் அனைவரையும் தனித்தனி ஆள்வான்' 
எனும் உறுதியினால்,
பேரின்பத் தலைவியர் சிற்றின்பத் தலைவியரின் மாறுபட்டு
தம்மைப் போன்ற பக்குவப்பட்ட அனைவரையும்
அவ்வின்ப நிலையில் இறையோடு ஒன்றுபட அழைப்பது இயல்பு.
வாழ்த்தி வணங்குவேன் என்று உரையாது 
வாழ்த்தி வணங்குவாம் என்றுரைத்த சேக்கிழாரும்.
பக்தர்காள் இங்கே வம்மின், நீர் 
உங்கள் பாசந் தீரப் பணிமினோ என்றுரைத்த மணிவாசகரும்,
அன்னவர்க்கே சரண் நானே என்றுரையாமல் 
அன்னவர்க்கே சரண் நாங்களே என்றுரைத்த கம்பனும்
இப் பேரின்பச்சங்கம நிலைக்குச் சான்றாவராம்.
🌷 🌷 🌷
இத்தலைவியும்,
தோழியைத் தன் தலைவனோடு இன்பம் துய்க்க அழைக்கிறாள்.
அவ்வழைப்பை,
பாடலின் ஈற்றடியில் வரும் சேருதும் எனும் வார்த்தையில் வெளிப்படுத்தும் கம்பன்,
தோழியையும் தன், தலைவனோடு இன்பம் துய்க்க அழைப்பதால், 
இத்தலைவியும் பேரின்ப நிலையில் நிற்கும் தலைவியே என,
நமக்கு உணர்த்தி
இப்பாடலைப் பேரின்ப நிலைக்கு உயர்த்துகிறான்.
சிற்றின்பமாய் அமைந்த மூவடிகளையும்
ஈற்றடியின் ஒரு சொல்லால்
பேரின்பப் பொருள் கொள்ள வைப்பது
கம்பனின் கைவண்ணமே.
🌷 🌷 🌷
 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்