'சலியாது கம்பனுக்காய்ப் பணிகள் செய்தோன்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ளமதிர அடுத்தடுத்து அவலச் செய்தி 
ஒவ்வொன்றாய் வருகிறதே விதியோ சொல்வீர்!
நலமிகுந்த புதுவையிலே கம்பன் தொண்டில் 
நாளும்தான் தனைத் தேய்த்து உழைத்த ஐயன்
விலையதிலா உழைப்பாலே கழகம் தன்னை
விண்ணளவாய் உயர்த்துதற்கு வழிகள் செய்தோன்
தளர்ந்திடவே நாமெல்லாம் விண்ணைச் சேர்ந்தான்
தன்னிகரில் பெரியவனை வணங்கி நின்றோம்.
 
கலியாண சுந்தரனார் மறைவுச் செய்தி
கனவாகிப் போகாதா என்றே உள்ளம்
நலிவோடு உள்ளுருகி நினையும் உள்ளம்
நாம் நினைந்து நிஜமதனை நீக்கலாமோ?
எளிமையதன் வடிவாகி நின்ற ஏந்தல்
எப்போதும் வெண்மை நிற உடையில் நின்று
சலியாது கம்பனுக்காய்ப் பணிகள் செய்து
சரியாது புகழ் நிறுத்தி விண்ணைச் சேர்ந்தான்.
 
அருணகிரி ஐயாவின் கரங்கள் பற்றி 
அற்புதமாய் கம்பனுக்குத் தொண்டு செய்தான்
பெருமையுறு முருகேசன் கைகள் கோர்த்து
பேணித்தான் கம்பனையே நிமிரச் செய்தான்
உரிமையுடன் சிவக்கொழுந்து ஏந்தல் தன்னை
உயிர்க்குயிராய் நேசித்துப் பணிகள் செய்தான் 
வரும் புகழைப் பிறர்க்காக்கும் வற்றா நெஞ்சன்
வான் சேர மனமெல்லாம் வாடிற்றம்மா!
 
கம்பனடிப் பொடி காலத்து உள்ளே வந்து
கம்பனவன் தொண்டியற்றும் வரத்தைப் பெற்றோம்
நம்பி எமைப் பெரியவர்கள் ஏற்றதாலே 
நம்மையுமோர் அங்கமதாய் கம்பன் தன்னின்
செம்மையுறு கழகமதாம் குடும்பத்தேற்று
செழிப்படையச் செய்தவர்கள் வரிசை தன்னில்
தம் பெரிய மனத்தாலே இன்றுமட்டும் 
தாங்கியதோர் வேரறுந்து போனதம்மா!
 
ஈழத்துக் கம்பனவன் கழகந்தன்னை
எப்போதும் தன் உறவாய் விரும்பி ஏற்று
ஆழத்து அன்பதனால் எம்மைக் காத்து
அருகிருத்திப் போற்றுகிற அரிய ஐயன்
நீளத் தன் உறவாலே நெஞ்சம் ஈர்த்து
நினைவெல்லாம் எமதாக்கி நின்ற ஏந்தல்
காலத்தின் அழைப்பதனால் வானம் சென்றான்
கற்றவனை இனி எங்கு காண்போம் நாமே?
 
கண்டதுமே முகம் மலரச் சிரித்து எம்மை
கற்றவர்கள் வரிசையிலே இருத்தி அன்பாய்
தன் பெரிய நிலையினையும் மறந்து எங்கள்
தாள் அடியில் இருந்தே தான் விருந்துக்காக
வண்ணமுறு அழைப்பிதழ்கள் தந்தே எம்மை
வருக விருந்தேற்கவென வேண்டி நிற்கும்
அண்ணலவர் அன்பதனை நினைக்க நெஞ்சம்
அனலாகி வாடுவதை எங்கு சொல்வோம்?
 
எத்தனை நாள் எம்முடைய கம்பன் மேடை
ஏறி எமை புகழ்ந்துரைத்து ஏற்றம் செய்தார்
முத்தனைய மணி வார்த்தை கோர்த்துக் கோர்த்து
முகம் மலர எங்களையே போற்றி நின்றார்
வித்தகராய் எம்மவர்கள் இல்லமெல்லாம்
விரும்பித்தான் சென்றவர்கள் உறவுங் கொண்டார்
அத்தனையும் கனவாகிப் போயிற்றம்மா!
ஐயனவன் இறையடியில் அமைதி கொள்வான்.

🪔 🪔 🪔
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்