'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 21 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

யாழ் கம்பன் கோட்ட அடிக்கல் நாட்டுவிழா
10.02.1986

🌺  🌺  🌺  🌺
யர்ந்தோர்கள் போற்ற,
நல்லையாதீனத்தில் மேற்குறித்த திகதியில்,
அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
அப்போதைய யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர்,
பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையில்,
அங்கு கூட்டம் நடாத்தி முடித்தபின்னர்,
காணிக்கு அனைவருமாக வந்து அடிக்கல் நாட்டினோம்.
முதல் அடிக்கல்லை துணைவேந்தர்,
பேராசிரியர். சு.வித்தியானந்தன் எடுத்து வைத்தார். 
தொடர்ந்து எங்கள் ஆசிரியர்கள் வேலன் மாஸ்ரர்,
சிவராமலிங்கம் மாஸ்ரர் ஆகியோரும்,
பேராசிரியர் சண்முகதாஸ், டொமினிக் ஜீவா, சீ.வி.கே. சிவஞானம் போன்ற,
பலரும் அடிக்கற்களை நாட்டினர். 
அன்று கிரியைகள் செய்ய வந்திருந்த,
அர்ச்சகருக்குக் கொடுக்கக்கூட எங்களிடம் பணமிருக்கவில்லை.
சீ.வி.கே. சிவஞானம் அவர்கள்தான்,
வந்த அந்தணருக்குத் தட்சணை கொடுத்தார்.

🌺  🌺  🌺  🌺
ஊக்கம் தந்த 'ஈழநாட்டு' ஆசிரியர் என். சபாரட்ணம்

நாம் கம்பன் கோட்டம் கட்டத் தொடங்கி விழா எடுப்பதை,
எங்கள் கல்லூரியின் முன்னாள் அதிபரும்,
அப்போதைய 'ஈழநாடு'  பத்திரிகையாசிரியருமான,
என்.சபாரட்ணம் அவர்களிடம் தெரிவித்தபோது,
'யாழ்ப்பாணம் முழுவதற்கும் இராமாயணம் தெரியும்படி செய்யுங்கள்' என்று,
மகிழ்ந்து வாழ்த்தினார்.
ஓரளவு அவர் வார்த்தையை நாம் காப்பாற்றினோம் என்றே சொல்ல வேண்டும்.
எம்மை வாழ்த்தியதோடல்லாமல் 'ஈழநாடு' பத்திரிகையில்,
ஆசிரியத் தலையங்கமும் எழுதி எம்மை ஊக்கப்படுத்தினார் அவர்.
மேலும் பல பத்திரிகைகளும் கூட, ஆசிரியர் தலையங்கம் எழுதியும், செய்திகள் வெளியிட்டும்,
கம்பன் கோட்டம் அமைக்கும் எம்முயற்சியை ஊக்கப்படுத்தின.

🌺  🌺  🌺  🌺
முதற்கட்ட வேலைகள் முடிந்தன

நெருக்கடிகளுக்கிடையில் தொடங்கப்பட்ட கம்பன் கோட்டப்பணிகளின்,
முதற்கட்ட வேலைகள் பல (கீழ்த்தளம்) கழக ரசிகர்களின் ஆதரவினால்,
1986 ஓகஸ்ட் மாதத்தில் ஓரளவு நிறைவுபெற்றன.
வேலைகள் பூரணப்படாமலே, 
எனது பெற்றோர், பேராசிரியர் சண்முகதாஸ்,
நண்பர்களான மகாராஜா, ஈஸ்வரநாதன் முதலானோரோடு சேர்ந்து,
ஒரு நல்ல நாளில்,
அந்தக் கட்டடத்தின் ஓர் அறைக்கு நிலை வைத்து நாம் பால் காய்ச்சினோம். 
இராஜலிங்கம் குடும்பத்தினர் திரும்பி யாழ் வராததால்,
தொடர்ந்தும் நாம் வைமன் ரோட்டிலேயே தங்க வேண்டியிருந்தது.
அதனால், கட்டப்பட்ட கோட்டத்தின் ஓர் அறைக்கு மட்டும் கதவுபோட்டு,
கந்தர்மட அலுவலகத்தில் உள்ள பொருட்களையெல்லாம் கொண்டுவந்து வைத்தோம்.
பூட்டப்பட்ட கட்டடத்தின் ஜன்னலை உடைத்துத் திருடன் புகுந்து,
இருந்த பொருட்களையெல்லாம் ஒருநாள் திருடிப் போனான்.

🌺  🌺  🌺  🌺
காத்திருந்து கைக்கு வராமல் போன பணம்

அக்காலத்தில் எங்கள் கம்பன் கோட்டம் அமைக்கும் முயற்சிக்கு,
உதவுவதற்காய் மாநகரசபை ஊழியர்களிடம்,
சீ.வி.கே. சிவஞானம் ஒரு பெருந்தொகைப் பணத்தினைச் சேர்த்தார்.
அப்பணம் எங்கள் கைக்கு வந்து சேரவில்லை.
ஊழியர்களிடம் வலியுறுத்தி அவர் பணம் சேர்த்தது,
அங்குள்ள சிலருக்குப் பிடிக்கவில்லைப் போலும்.
அவர்களின் தூண்டுதலால் 
அப்போது யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த பல இயக்கங்களுள்,
ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு,
சீ.வி.கேயிடமிருந்து அப்பணத்தைப் பறித்துச் சென்றது.

🌺  🌺  🌺  🌺
கிட்டுவின் கோரிக்கையை மறுத்தேன்

புலிகள் இயக்கத்தின் அப்போதைய  யாழ் மாவட்டத் தளபதி கிட்டு,
ஒரு கதாநாயகனாக ஆளுமையோடு யாழில் உலா வந்த நேரம் அது.
அப்போது எல்லா இயக்கங்களும் யாழில் இருந்தன.
எங்கள் கம்பன் கோட்ட கட்டிட நிதிக்கென,
மாநகர சபை ஆணையாளர் சிவஞானம் அவர்கள் சேர்த்திருந்த பணத்தை,
ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கம் பறித்துச்சென்றதும்,
கிட்டுவோடு நெருக்கமாக இருந்த சிவஞானம் அவர்கள்,
அச்சம்பவத்தைக் கிட்டுவுக்குச் சொல்ல,
'அண்ணை கம்பன்கழகத்தை புலிகளின் சார்பமைப்பு என்று அறிவிக்கச்சொல்லுங்கள்.
நான் பணத்தை மீட்டுத்தருகிறேன்' என்று கிட்டு சொல்லியிருக்கிறார்;.
இச் சம்பவத்தைச் சிவஞானம் எங்களுக்குச்; சொல்ல,
அதற்கு உடன்பட நாம் மறுத்துவிட்டோம்.
எமது முடிவைச் சிவஞானம் அவர்களும் வரவேற்றார்.
இயக்கத்துள் முற்றுமுழுதாய்க் கரைய விரும்பாத,
எங்கள் நிலைப்பாட்டிற்குச் சான்றான சம்பவம் இது.

🌺  🌺  🌺  🌺

தொடரும்...

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்