'நாவரசர்' இறையடியில் அமைதி கொண்டார் -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

அண்மையில் மறைந்த மூத்த தமிழறிஞர் 'நாவுக்கரசர்' பேராசிரியர் சோ.சத்தியசீலன் அவர்களுக்கு அகில இலங்கைக் கம்பன் கழகம் தனது அஞ்சலியைச் செலுத்துகிறது.

ளமெல்லாம் பேரதிர்ச்சி கொண்டதம்மா!
ஒப்பற்ற தமிழறிஞன் மறைவைக் கேட்டு
வளமெல்லாம் தமிழுக்கு ஈந்த ஐயன்
வற்றாத சொற்திறத்தால் உலகை ஈர்த்தோன்
பலகற்றும் கல்லார் போல் அடங்கி வாழ்ந்த 
பண்பாளன் பணிவதனால் உள்ளம் ஈர்க்கும்
நலமிக்க தமிழன்னை பெற்ற ஏந்தல் 
'நாவரசர்' இறையடியில் அமைதி கொண்டார்.
 
என்னுடைய குருநாதர் இராதாகிருஷ்ணர் 
இதயத்தில் குடிபுகுந்து வாழ்ந்த ஐயன்
தன்னுடைய பிள்ளையென எந்தன் நாதர்
தனியிடத்தில் வைத்திருந்தார் தாழா அன்பால்
முன்னிருந்து அவர்தமக்குக் கடமை செய்து
முறைப்படியாய் அவர்தம்மின் குடும்பம் காத்தோன்
விண்ணடைய என் ஐயன் விரும்பி வந்து
விழிகளில் நீர் சோர்ந்திடவே அழைத்துக் கொள்வார்
 
புன்சிரிப்பு மாறாத பொலிந்த நல்ல
புவிமுழுதும் ஈர்க்கின்ற வதனம் கொண்டோன்
கண்ணதிலும் இதயத்தும் கருணை பொங்க
கனிவுடனே வருத்தமுறும் உயிர்கள் தம்மை
தன்னுறவாய்க் கொண்டேதான் தயக்கமின்றி
தரணிதன்னில் காக்கின்ற பெரிய வள்ளல்
மன்னுயிரை நீத்தானோ? வானில் உள்ளோர்
மாண்புடனே மதிப்பளிக்க அழைத்திட்டாரோ?
 
தளர்ந்த நடை கொண்டேதான்மேடை ஏறி
தலை சாய்த்து அனைவரையும் வணங்கி மெல்ல
பலர் புகழும் தங்கநிகர் தன்னின் நாவால்
பணிவோடு தொடங்கிடுவார் கருத்தும் ஊற்றாய்
வளர்பிறையாய்க் கடகடவென வளர்ந்து சிங்கம்
வந்ததுவோ மேடையிலே என்றே மக்கள்
கலகலக்கச் செந்தமிழும் வந்து கொட்டும்
கற்றவனை இனி எங்கே காண்போம் நாங்கள்.
 
தன்வயதில் மிக இளைய இளைஞன் கூட
தமிழ் சொன்னால் மகிழ்வுடனே அருகே கூட்டி
எண்ணமதில் வஞ்சமது சிறிதுமின்றி
ஏற்றித்தான் புகழ்ந்திடுவார் இயல்பாய் அந்த
பண்பதனை எவரிடமும் காணலாமோ?
பரிவுடனே அனைவரையும் ஈர்த்து நின்ற
மன்னவனும் இவ்வுலகை நீக்க நொந்து
மருகிற்று இளையோர் தம் இதயமெல்லாம்.
 
ஈழத்துக் கம்பனவன் விழவில் வந்து 
ஏற்றமுறும் பல உரைகள் செய்தான் எம்மை
ஆழத்து அன்பதனால் இதயம் வைத்து
ஆற்றல் மிகு தன்னறிவை எமக்கு ஈந்தான்
வேழத்தை ஒத்த பெரும் நிமிர்வு கொண்டோன்
வேற்றுமைகள் பாராது எமையும் தன்னின்
காலத்து அறிஞர்களாய்க் காட்டி நின்றான்
கற்றவன் போல் இனி எவரைக் காண்போம் நாமே!
 
எங்களது விழவதனில் ஏற்றம் மிக்க 
இனிய பெரும் 'கம்பபுகழ்' விருதைப் பெற்று
மங்களமாய் மனதிருந்து வாழ்த்தி எம்மை
மாண்படையச் செய்த பெரும் புலமை மிக்கோன்
எங்கிருந்த போதும் எமை நினைந்து போற்றி
எப்போதும் எம் உயர்வில் மகிழ்ந்து நின்ற
தங்க நிகர் பேரறிஞன் தாளைப்போற்றி
தரணியது உள்ளளவும் வாழ்த்தி நிற்போம்.
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்