'கதையும் கற்பனையும்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யர் தமிழ் மொழியில்,
'பிறிதுமொழிதல்'  எனும் ஓர் அலங்காரம் உண்டு.
புலவன் தான் சொல்ல நினைத்த கருத்தை வெளிப்படையாய்க் கூறாமல்,
அதனைக் குறிப்பால் உணர்த்தும்,
ஓர் உவமையை மட்டும் கூறி விட்டு விடுவான்.
அதனையே பிறிதுமொழிதல் அலங்காரம் என இலக்கண நூல்கள் பேசும்.

🦢 🐃 🌾

வள்ளுவக் கடவுளாரும் இவ் உத்தியைப் பல இடங்களிலும் பயன்படுத்தியுள்ளார்.
பொருட்பாலில் வரும், 'வலியறிதல்' எனும் அதிகாரத்தில்,
'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்' 
என ஓர் குறள் வருகிறது.
மென்மையான மயில் பீலியை ஏற்றிய வண்டியின் அச்சும்,
அப்பொருளை அளவுக்கதிகமாய் ஏற்றினால் முறியும்,
என்பது இதன் பொருள்.
இக்குறளில் மேற் சொன்ன பிறிதுமொழிதல் அலங்காரத்தை,
வள்ளுவப் பெருந்தகை பயன்படுத்தியுள்ளார்.

🦢 🐃 🌾

இக் குறளுக்கு, கீழ்கண்டவாறு பரிமேலழகர் உரை வகுப்பார்.
'எளியர் என்று பலரோடு பகை கொள்வான் 
தான் வலியனே ஆயினும், அவர் தொக்கவழி வலியழியும்
என்னும் பொருள் தோன்ற நின்றமையின்,
இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம்.'

கம்பனும் இப்பிறிதுமொழிதல் அலங்காரத்தை,
அயோத்தி வர்ணனையூடு அற்புதமாய்ப் பயன்படுத்தும் ஓர் கவிதை உண்டு.
அக்கவிதையூடு, மேற்சொன்ன பிறிதுமொழிதல் உத்தியினால்,
கம்பன் தன் கருத்துரைக்கும் திறன் காண்பாம்.

🦢 🐃 🌾

அறநெறி பிறழாமல் தசரதனால் ஆளப்படும் அயோத்தியின் வளத்தை,
வர்ணிக்க நினைக்கிறான் கம்பன்.
தான்; கண்ணாற் காணாத அயோத்தியைக் கற்பனையாற் காண விழைந்த அவன்,
மனோரதத்திலேறி அயோத்தி செல்கிறான்.

🦢 🐃 🌾

அது ஒரு மாலைப் பொழுது.
அயோத்தியில் செழிப்புற்றிருக்கும் மருத நிலமொன்றில் வயற்கரையில்,
கற்பனையால் வந்த கம்பன் நிற்கிறான்.
செழிப்புற்ற அவ்வயலினை இரசித்துக் கண்டு நிற்கும் கம்பன் கண்களில்,
ஓர் அதிசயக் காட்சி படுகிறது.
சில அன்னப்பட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து,
அவ்வயலினுள் குறித்த எல்லைக்குள் அங்கும் இங்குமாய் நடைபயில்கின்றன.
அவ் அன்னங்களின் அருகிற் சென்று,
அவை நடைபயில்வதற்கான காரணமறிய விரும்புகிறான் கம்பன்.

🦢 🐃 🌾

கம்பன் அவற்றின் அருகிற் சென்றதும்,
நடைபயிலும் அன்னங்கள் அத்தனையும் பெண் அன்னங்கள் எனத் தெரியவர,
அவனுக்கு மேலும் சுவாரசியம் கூடுகிறது.
அவ் அன்னங்களை வழிமறித்த கம்பன்,
அங்குமிங்குமாய் நீவிர் நடைபயிலும்; காரணம் என்ன?
என அங்கு நின்ற தலைமை அன்னத்திடம் வினவுகிறான்.
அவ் அன்னம் பேசத் தொடங்குகிறது.
'கம்பனே!
நாம் பறவைகளுள் சிறந்தனவாய்ப் பேசப்படும் அன்னங்கள்.
கவிஞர்களாலும் போற்றப்படும் நடைச்சிறப்பைக் கொண்டவர்கள்.
அப்பெருமைக்கு இழுக்கு ஏற்படுமாப் போல,
நேற்றுமாலை ஓர் சம்பவம் இங்கு நிகழ்ந்தது.
அச்சம்பவத்தைச் சொல்கிறேன் கேள்' என,
அன்னம் தன் உரையைத் தொடர்ந்தது.

🦢 🐃 🌾

'நேற்று மாலை,
சேல் மீனினைப் போன்ற பெரிய ஒளிவிடும் கண்களையுடைய,
அழகிய அயோத்திப் பெண்ணொருத்தி இவ்வயல் வரம்பினூடே நடந்து சென்றாள்.
அவள் நடையழகு கவிஞர்களாற் போற்றப்படும் எம் நடை அழகை வென்றுவிட்டது.
அவ் அயோத்திப் பெண்ணால்,
பாரம்பரியமாகப் போற்றப்பெற்று வரும்,
எம் இனத்துக்கே உரிய நடையழகு தாழ்ச்சியுறும் எனக் கருதியதால்,
மனவருத்தம் உற்ற நாம்,
எம் இனத்துக்குரிய அப்பெருமையை விட்டுக் கொடுக்க விரும்பாமல்,
அவ் அயோத்திப் பெண்போல் நடைபயிலுவது எனத் தீர்மானித்தோம்.
அத் தீர்மானத்தின்படி இங்கு நடை பயில்கிறோம்' என,
அத்தலைமை அன்னம் சொல்லி முடிக்க ஆச்சரியமுற்றான் கம்பன்.

🦢 🐃 🌾

அன்னம் சொல்லி முடித்ததும்.
கம்பன், அவ் அன்னத்தை நோக்கி,
இதுவரை பயின்றதால், அப்பெண்ணின் நடை உமக்கு வாய்த்ததோ? எனக் கேட்கிறான்.
செம்மையான கால்களிருந்தும் அப்பெண்ணின் நடை வராமல் நாம் திரிகிறோம் என,
வருந்திக் கூறின அவ் அன்னங்கள்.
'சேலுண்ட ஓண்கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்,'

🦢 🐃 🌾

இப்போது கம்பன் மனதில் மீண்டும் ஓர் கேள்வி.
அவ் அன்னங்களை நோக்கி மறுபடியும் அவன் பேசத் தொடங்குகிறான்.
பெண்களாகிய நீங்கள் இங்கு வந்து நடை பயின்றால்,
இல்லத்தில் உம் குழந்தைகளை யார் காப்பார்? என வினவுகிறான் அவன். 
தம்மைக் குறைகூறுவதாய இக்கேள்வி அன்னங்களைச் சினமுறச் செய்கிறது.
அவை கம்பனை நோக்கி,
எம் இல்லக் கடமைகளைச் சரிவரச் செய்தபின்பே இங்கு நாம் நடை பயில்கிறோம்.
ஐயமுறின், வயல்களாய எம் இல்லங்களை நீரே சென்று பார்த்துக் கொள்ளும் எனக் கூறி,
தம் நடைப் பயிற்சியை அவை தொடர்ந்தன.

🦢 🐃 🌾

அவ் அன்னங்களின் இருப்பிடமாகிய வயல்களைக் காண விரும்பிய கம்பன்,
அவை காட்டிய இடம் நோக்கிச் செல்கிறான்.
அங்கு அவன் கண்ட காட்சி அவனை வியப்பில் ஆழ்த்துகிறது.
நீர் நிரம்பி வழிகின்ற வயல்கள்,
அவ்வயல்களில் செழிப்புற்றிருக்கும் நெற்கதிர்களுக்கிடையே,
களைகளாகப் படர்ந்து கிடக்கும் தாமரைக் கொடிகள்.
அக்கொடிகளில் பெரியனவான தாமரைப் பூக்கள் பூத்திருக்கின்றன.
அத்தாமரைப் பூக்களைத் தொட்டிலாக்கி,
தம் குஞ்சுகளை அத் தாமரைத் தொட்டிலில்,
பெண் அன்னங்கள் உறங்க வைத்திருக்கும் காட்சியைக் காண்கிறான் கம்பன்.
மகிழ்கிறது அவன் மனம்.
'மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை'

🦢 🐃 🌾

அக்காட்சியை இரசித்து நின்ற கம்பன் மனதில் அதிர்ச்சி ஏற்படும் படியாய்,
அப்போது ஓர் சம்பவம் நிகழ்கிறது.
மாலை நேரமானதால் மேய்ச்சலுக்குச் சென்ற எருமை ஒன்று,
வயலினூடு நடந்து வருகிறது.
அறிவுத்திறன் குறைந்த அவ் எருமை,
தாமரையிற் பள்ளி கொள்ளும் அன்னக் குஞ்சுகளை மிதித்து விடுமோ? என,
கம்பன் மனம் துணுக்குறுகின்றது.

🦢 🐃 🌾

வந்தவையோ அயோத்தி எருமைகள்.
அதனால் அவற்றிடம் கூட அறிவுத் தெளிவாம்.
தாமரையிற் கிடக்கும் அன்னக் குஞ்சுகளை மிதித்து விடாமல்,
அவை தாண்டித் தாண்டி நடப்பதைக் காண்கிறான் கம்பன்.
இவ் அற்புதம் கண்டு மகிழ்ந்த அவன்.
தொடர்ந்து எப்புலவர்க்கும் காணக்கிடைக்காத ஓர் காட்சி கிட்ட,
மகிழ்ந்து போகிறான்.

🦢 🐃 🌾

தாண்டி நடக்கும் எருமையின் கால்களின் அசைவால் நீரசைய,
அந்நீரசைவால் அதில் தங்கிய தாமரைகள் அசைகின்றன.
தாமரையின் அசைவினால் அன்னக்குஞ்சு ஒன்று துயில் நீங்க,
அது பசி மிகுதியால் தன் தலை நிமிர்த்தி,
தாயை எண்ணிச் சத்தமிடுகின்றது.
அதைக் கண்ட எருமை,
தான் தொழுவத்தில் விட்டு வந்த கன்றும்,
இவ்வாறே எனை நினைத்து ஏங்கும் அன்றோ என நினைக்க, 
அதன் மனமுதித்த தாய்மை உணர்ச்சியினால்,
மடியில் பால் சுரந்து வழியத் தொடங்குகிறது.

🦢 🐃 🌾

அப்போது தாமரையைத் தாண்டிச் செல்லும் எருமையின் முலைக்காம்பு,
தலை நிமிர்த்திக் கத்தும் அன்னக் குஞ்சின் வாய்க்கு நேரே வர,
அதிலிருந்து வழிந்த பால் அவ் அன்னக் குஞ்சின் வாய்க்குள் வீழ்கிறது.
தாய் அன்னம் தான் தனக்கு உணவூட்டுவதாய்க்; கருதிய அவ் அன்னக்குஞ்சு,
அப்பாலினை உண்டு மீண்டும் துயிலத் தொடங்குகிறது.

🦢 🐃 🌾

தாய் அன்னம் மீண்டும் வரும் வரையில்,
இவ் அன்னக் குஞ்சுகளை உறங்கச் செய்வது,
செவிலித் தாயாரான தம் கடமை எனக் கருதிய,
அவ்வயலில் வாழும் பச்சைத் தேரைகள்,
தம் வாய் திறந்து தாலாட்டுப் பாடத் தொடங்குகின்றன.

🦢 🐃 🌾

இக்காட்சியில் மனம் நிறைவுற்ற கம்பன்,
தன் கவிதையையும் நிறைவு செய்கிறான்.
'சேல் உண்ட ஓண் கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்
மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பாலுண்டு துயில பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை'

🦢 🐃 🌾

கம்பனின் இப்பாடல்
வெறுமனே அயோத்தியை வர்ணித்ததோடல்லாமல்,
பிறிதுமொழிதல் எனும் அலங்காரத்தின் மூலம்,
அயோத்தியில் நிகழப் போகும் இராமாயணக் காதையின் போக்கினை எடுத்தியம்புவதை, 
என் குருநாதர் பேராசிரியர் இரா. ராதாக்கிருஷ்ணன் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்.
அவ்வெடுத்துக் காட்டு நம் மனதைக் கொள்ளை கொள்கிறது.
அவ் அற்புத விளக்கத்தினைக் காண்பாம்.

🦢 🐃 🌾

எருமையின் பால் கன்றுக்குரியது.
கம்பன் வர்ணித்த இக்காட்சியில் அதன் பால் கன்றைச் சேரவில்லை.
கன்றைச் சேராதவிடத்து அப்பால், அதை வளர்த்தவனைச் சேர வேண்டும்.
இக்காட்சியில் அங்கும் அது சேரவில்லை.
இவ்விரண்டும் தவறும் பட்சத்தில்,
வீழ்ந்த பால் நிலத்தைச் சேர்ந்திருக்க வேண்டும்.
இவை எதுவும் நிகழாமல் எருமையின் பால்,
எவ்வித உரிமையும் தொடர்பும் அற்ற அன்னக்குஞ்சைச் சேருகிறது.

❖❖❖❖❖❖

இந்த வர்ணனையின் மூலம்,
அயோத்தியின் ஆட்சியை உரிமையுள்ள இராமன் ஆளப்போவதில்லை.
கைகேயி வரத்தினால் உரிமைபெற்ற பரதனும் ஆளப்போவதில்லை.
இவ்விருவரும் ஆட்சியை ஏற்கத் தவறின்,
உரிமையுள்ளவர்களான, இலக்குவ, சத்துருக்கர்களிடம் அவ் ஆட்சி சேரவேண்டும்.
ஆனால் அவர்களிடமும் இவ் ஆட்சி சேரப் போவதில்லை.
இங்ஙனமாய் உரிமையுள்ள அனைவரும் அயோத்தியை ஆளாமல் விட,
எவ்விதத்திலும் உரிமையற்ற இராமனின் இரு திருவடிகளே,
பதினான்கு ஆண்டுகள் அயோத்தியை ஆளப்போகின்றன எனும் செய்தியை,
மேல் வர்ணனை மூலம் குறிப்பால் உணர்த்துகிறான் கம்பன்.

🦢 🐃 🌾

இக்குறிப்பு,
பிறிதுமொழிதல் எனும் அலங்காரமாய்; அமைக்கப்பட்டிருப்பதை,
எனது குருநாதரான,
'கம்பகலாநிதி' பேராசிரியர் இரா. ராதாக்கிருஷ்ணன் அவர்கள் எடுத்துக்காட்ட,
ஓர் வர்ணனைப் பாடலூடு அயோத்தியின் வருங்கால வரலாற்றினை உரைக்கும்,
கம்பன் திறம் கண்டு வியந்து நிற்கிறோம் நாம்.

🦢 🐃 🌾

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்