'கவிஞர் பார்வையில் கலைமகள்' -பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்-

'கணேச ஜனனி துர்க்காரூபவ் ராதாரூபவ் லஸ்மிரூபவ் சரஸ்வதிரூபவ் சாவித்திரி' என்பது தேவி பாகவதம். மூலப் பராசக்தியிலிருந்து உதித்த ஐந்து சக்திகளையே இம்மந்திரம் சுட்டுகின்றது.
 
இச்சக்திகளுள் ராதாதேவியின் நாக்கு நுனியிலிருந்து வெண்ணிறம் கொண்டவளாகவும்  வெண்ணிற ஆடை தரித்தவளாகவும் தோன்றியவளே நாமெல்லாம் கலைத்தெய்வம் என்று போற்றுகின்ற சரஸ்வதி ஆவாள்.
 
இவள் படைத்தற் கடவுளாகிய பிரமனிற்குச் சக்தியாகக் கொடுக்கப்பட்டாள் என்பதையும் தேவி பாகவதமே தெரிவித்து நிற்கின்றது. ஜபமாலைரூபவ் புத்தகம்ரூபவ் வீணைரூபவ் எழுத்தாணி ஆகியவற்றைக் கைகளிலே தரித்து நிற்கின்ற சரஸ்வதி தேவியானவள் 51 அட்சரரூபஅபிணியாகவும் காட்சி தருகின்றாள்.
இச்சரஸ்வதி தேவியைப் பற்றிப் பலரும் பல காலங்களிலும் பாடியுள்ளனர். அவர்களுள் நாயக்கர் காலக் கவிஞராகிய குமரகுருபரரும் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞராகிய மகாகவி பாரதியாரும் முக்கியமானவர்கள். 

வெவ்வேறு காலத்தவராக விளங்கிய போதும் வெவ்வேறு புறக் காரணிகளின் தாக்கங்களிற்கு உள்ளாகியிருந்த  போதும் இருவரிடையேயும் பக்தியுணர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஒற்றுமை விளங்கக் காணலாம். அதனை, சரஸ்வதி பூசைக் காலத்தில் சிந்திப்பது நலம் பயப்பதாகும்.
வெள்ளை நிறமான தாமரையே பொதுவாக கலைத் தேவியின் இருப்பிடமாகக் கொள்ளப்படுகின்றது. வெள்ளை நிறம் முக்குணங்களுள் சாத்விக குணத்தைக் குறிப்பது. 
கலைகளின் அரசியாக விளங்குகின்ற சரஸ்வதியின் கலைகளில் ஈடுபடுகின்றவர்கள் சாத்விகக் குணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற குறிப்பையே இதன்மூலம் நாம் உய்த்தறியலாம். அதாவது, கல்விமான்களதும் கலைஞர்களதும் உள்ளம் வெள்ளையாக இருத்தல் வேண்டும்.
'...எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே' 
என்று சொல்கின்றார். 'சகலகலாவல்லி மாலை' தந்த குமரகுருபரர். இவரின் குரலின் தொடர்ச்சியையே பாரதியாரின் பின்வரும் கவிதையில் காண முடிகின்றது.
 
'மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்
கோத கன்ற தொழிலுடைத்தாகி குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள் இன்பமேவடி வாகிடப் பெற்றாள்.'
 
இவ்விரு கவிஞர்களுடைய வாக்குமூலங்களின் மூலம் சரஸ்வதி தேவி சிறப்பாக வெள்ளைத் தாமரை மலரில் அமர்ந்து இருப்பவள் என்று கருதப்பட்டாலும் பொதுவாக, கல்வி, கலை சார்ந்த எல்லாப் பொருள்களிலும் வீற்றிருப்பவள் என்கின்ற உண்மையை உணர்ந்துகொள்ள முடியும்.
தேவிக்குப் பல உருவ வடிவங்கள் சொல்லப்படுகின்ற போதும் உண்மையில் அவளது வடிவம் ஞானமே என்பதனை இவ்விரு கவிஞர்களும் உணர்ந்திருந்தனர்.
'...சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் 
என்ன நிற்கின்ற நின்னை ........'
என்கிறார் குமரகுருபரர்.

இதனையே பாரதியாரும் பின்வருமாறு பாடுகின்றார்.
'...கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருளாவாள்.......'
இவ்வாறு எங்குமிருக்கும் சரஸ்வதி தேவியிடம் இக் கவிஞர்கள் வேண்டும் வரம் யாதென நோக்கினால், கலைத்தாயிடம் வேறெதனை அவர்கள் எதிர்பார்க்கப்போகின்றார்கள்? 
நல்ல கவிதா ஆளுமைதான் அவர்களது பிரதான வேண்டுதல்.  
மட்டுமல்லாமல்... அத்தேவியின் அருளால் கிடைக்கும் கவிதை ஆற்றலினூடு கல்வியின் உண்மைப் பயன் கிடைக்க வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டவர்களாகவும் அவர்கள் காணப்படுகிறார்கள்.
'...தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருக பணித்தருள்வாய்........'

'...பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்.......'
 
'...பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனும் என்பாற்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய்.......'
 
இவை குமரகுருபரருடைய வேண்டுதல்கள்.

இந்த வேண்டுதல்களே இருபதாம் நூற்றாண்டில் பாரதி வாயிலிருந்து மீண்டும் பிறக்கின்றன.
 
'நாதமொ டெப்பொழுதும் என்றன்
நாவினிலே பொழிந்திடவேண்டும்.......'

இதற்கும் மேலாக, சமுதாயப் பயனாகக் கல்வி மாறவேண்டும் என்ற வேண்டுதலும் அவனிடம், கூடுதலாக உள்ளது.
' எள்ளத் தனைப்பொழுதும் பயனின்றி
இரா தென்றன் நாவினிலே வெள்ள மெனப்பொழி வாய்ச்சக்தி வேல்.....'

நாட்டுக்கு உழைத்தல் அவனது தாரக மந்திரம். இதன் உச்சமாக, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்பதுதான், உண்மையான சரஸ்வதி பூஜை என்கிறான் பாரதி.
'புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
என்பது அவன் பாடல்.
 
இதனைப் புரிந்து கொண்டால், நாம் அனைவருமே எளிமையான – பொருள் செலவில்லாத - வழிபாடியற்றும் புதிய பக்தர்களாக மாறலாம்.
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்