"கம்பன் கைவண்ணம்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உயர் தமிழைக் கையாள்வதில்
ஒப்பற்ற ஆற்றல் கொண்டவன் கம்பன்.
சில்வகைச் சொற்கள் பல்வகைப் பொருள் தரும்படி 
கவிதைகள் அமைக்கும் ஆற்றல் கொண்டவன் அவன்.
இவ்வாற்றலால், கம்பன் கவிதைகள் கம்ப சூத்திரங்கள் எனப்படும்.
கம்ப சூத்திரங்கள், கற்றோர் உள்ளத்தைக் களிக்கச் செய்வன.
விரிக்க விரிக்கப் புதுப் பொருள் தந்து, ஆனந்தக் களிப்பைத் தருவன.
அத்தகு கம்பன் கைவண்ணத்தால் சிறப்புறும் ஒரு காட்சி காண்பாம்.

🌷 🌷 🌷

தாயின் சூழ்ச்சியால், 
தந்தை வானடைய, தமையன் கானடைந்தான் எனும் செய்தி கேட்டு,
புழுவாய்த் துடிக்கிறான் பரதன். 
அவன் வருத்தமறியாது, வசிட்ட மா முனிவர்,
தந்தையின் ஆணைப்படி அரசை ஏற்றுக் கொள்! எனப் பணிக்கிறார்.
அவ் வார்த்தைகள் கேட்டு அயர்கிறான் பரதன்.

தஞ்சம் இவ்வுலகம், நீ தாங்குவாய் என,
செஞ்செவே முனிவரன் செப்பக் கேட்டலும்,
நஞ்சினை நுகர் என, நடுங்குவாரினும்
அஞ்சினன், அயர்ந்தனன்-அருவிக் கண்ணினான்.

தெளிவுற்ற பரதன் முனிவரை நோக்கி,
மூவுலகிற்கும் முதல்வனாம் என் மூத்தவன் இருக்க,
முடிசூட்டும்படி என்னை முனிவரே கேட்பது முறையாமோ?
சான்றோர் செயலே இஃதெனின், ஈன்றாள் செயலில் குற்றமும் உளதாமோ?
எனக் கொதிக்கிறான்.

🌷 🌷 🌷

பின்னர் முனிவரையும், அவையோரையும் நோக்கிய பரதன்,
இராமனைக் கொணர்ந்து தொல்நெறி முறைமையின் மாமுடி சூட்டுவன்!
அன்றெனின், அவனோடு அரிய கானிடைச் சென்று இருந்தவம் ஆற்றுவன்!
வேறொன்று நீர் உரைப்பின் என்னுயிர் நீக்குவன்!
என முடிவுரைத்து
அயோத்தி சூழ்ந்துவர, அழுத கண்ணொடும் தொழுத கையொடும்
கங்கைக் கரையை அடைகிறான்.

🌷 🌷 🌷

கங்கையின் மறுகரை.
இராமன் மேல் தீராக்காதலனாம் குகன்.
பரதனாதியோரின் வருகையால் காற்றில் எழுந்த தூளி கண்டு,
இராமனைப்,  பரதன் அழிக்க வருவதாய் ஐயுறுகிறான்.
அவ் எண்ணம் மனக் கொதிப்பூட்ட
தன் படையை அழைத்து, போர்க்குத் தயாராகின்றான்.

'ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?',
'உய்ஞ்சிவர் போய்விடின் நாய்க்குகன் என்று எனை ஓதாரோ?',
  

'ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ',
'மன்னவர் நெஞ்சினில் வேடர் விடுஞ்சரம் வாயாவோ?'

என்றெல்லாம் பேசிப் பதறுகிறான்.

🌷 🌷 🌷

குகனின் போர் ஆயத்த நிலையைச் சுட்டும் கம்பனின் கவிதை 
எண்ணி எண்ணி மகிழத் தக்கது.
உடைவாளை இடுப்பிற் செருகி
வாயினை  மடித்துக் கடித்து,
கோபத்தாற் சொற்கள் வெட்டி, வெட்டி வெளிவர,
தீப்பாயும் விழியோடு போர்ப்பறை அறைந்து,
கொம்பூதி, யுத்தம் வந்ததென முழங்கி நிற்கிறான் குகன்.
இக்காட்சியைத் தன் கவிதையில் பதிவு செய்கிறான் கம்பன்.
இதோ அக்கவிதை.

'கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய மொழியினன் விழிக்கும் தீயினன்
கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன்
கிட்டிய அமர் எனக் கிளர்ந்த தோளினான்'.

🌷 🌷 🌷

கோபங் கொண்டவனின் வார்த்தைகள்
தொடர் மொழியாய் அன்றி, துண்டங்களாய் வெளிவருதல் இயற்கை.
அஃதுணர்ந்து குகனை, 'வெட்டிய மொழியினன்' எனச்  சுட்டுகிறான் கம்பன்.
இவ் இடத்தில் கம்பனின் கற்பனை விரிகிறது.
கோபத்தால் வெட்டிய மொழியினனாய்ப் பேசும் குகனின் நிலையை,
அச் செய்தியைச் சொல்லும் பாடல் அமைப்பினிலேயே, வெளிப்படுத்திக் காட்டுகிறான்.

🌷 🌷 🌷

கட்டிய சுரிகையோடு கடித்த வாயினோடு வெட்டிய மொழியினோடு என
சொற்களை ஒன்றினோடு ஒன்று தொடுக்காமல்,
கட்டிய சுரிகையன், கடித்த வாயினன், வெட்டிய மொழியினன் எனத்
துண்டாடப்பட்ட சிறு சிறு தொடர்களாய் அமைத்து,
குகன் பேசுவதான வெட்டிய மொழியின் இயல்பை 
எமக்கு உணர்த்தும் கம்பனின் இவ் உத்தி இரசிப்புத் தருகிறது.

🌷 🌷 🌷

'கிட்டியது அமர் எனக் கிளர்ந்த தோளினான்'
எனவரும் இக்கவிதையின் ஈற்றடி,
சிந்தனைக்குரியதாய் கம்பனால் அமைக்கப்பட்டுள்ளது.
வேறான இருவரை ஒன்றாக்கப் பிறப்பது நட்பு.
ஒன்றான இருவரை வேறாக்கப் பிறப்பது பகை.
சேர்க்கையே நட்பு. பிரிவே பகை.
இக் கருத்தை வெளிப்படுத்தும் வகையில்
நுட்பமாய் ஈற்றடியை அமைத்து
கம்பன் காட்டும் திறம் வியப்புக்குரியது.

🌷 🌷 🌷

அவ் ஈற்றடியின் முதலிரு சொற்களான
கிட்டிய, அமர் எனும் இரு சொற்களையும் 
புணர்த்திப் பொருள் கொள்வோமாயின்
கிட்டிய தமர் எனக் கிளர்ந்த தோளினான் என 
அப் பாடல் வரி அமையும்.
'தமர்' என்ற வார்த்தைக்கு உற்றார் என்பது பொருள்.
மேற் சொன்னவாறு அவ் இரு சொற்களையும் புணர்த்தி
கிட்டிய தமர் எனக் கிளர்ந்த தோளினான் என அவ் அடியை அமைத்தால்
நெருங்கிய உறவு கண்ட மகிழ்ச்சியால் கிளர்ந்த தோளினனாய்,
குகன் நின்றான் எனப்பொருள் வெளிப்படுகிறது.

🌷 🌷 🌷

கிட்டிய அமர் எனும் அதே சொற்களைப்  பிரித்துப் பொருள் கொள்ள
கிட்டியது அமர் எனக் கிளிர்ந்த தோளினான்  என அவ் அடி அமையும்.
'அமர்' என்ற வார்த்தைக்குப் போர் என்பது பொருளாம்.
அப் பொருளைக் கொள்ள, போர் வந்ததெனக் கிளர்ந்த தோளினான் என,
அப் பாடல் அடி பொருள் தந்து நிற்கிறது.
இரு வார்த்தைகளைச் சேர்க்க உறவும், பிரிக்கப் பகையும் வெளிப்படுமாறு,
அப்பாடல் அடியைக் கம்பன் அமைத்த விதம் அற்புதத்திலும் அற்புதமாம்.

🌷 🌷 🌷

பிரிந்து நின்ற போது பரதனைப் பகையாய்க் கருதிக் கொதித்த குகன்,
பின்  ஒன்று கூடியதும் அவனைத் தமராய்த் தழுவிக் கொள்கிறான்.
கதைப் போக்கில் நிகழப் போகும் இச் செய்தியை
இரு சொற்களை வைத்துக் குறிப்பால் உணர்த்தி,
கம்பன் விந்தை செய்கிறான்.

🌷 🌷 🌷

இந்நிலையில், மந்திரி சுமந்திரன்
ஆறு கடந்து மறுகரையில்  நிற்கும் குகனைப் பரதனுக்கு அறிமுகம் செய்ய,
தங்கள் குலத் தனிநாதற்கு உயிர்த்துணைவன் என்பதறிந்து,
இராமனால் முன்னே தழீஇக் கொள்ளப்பட்ட  துணைவனேல்
அக் குகனை நானே முன்சென்று காண்பன் எனக் கூறி,
மறுகரை நிற்கும் குகனை நோக்கித் தொழுகிறான் பரதன்.

🌷 🌷 🌷

மறுகரையில் நின்று தன்னைத் தொழும் பரதனை,
பகை கொண்டு நின்ற குகன் உற்று நோக்கி,
அவன் நின்ற நிலைகண்டு நடுநடுங்கிப் போகிறான்.
மரவுரியோடும், மாசடைந்த மெய்யோடும்,
கலையிழந்த திங்களாய், ஒளியிழந்த முகத்தோடும்,
கல்லும் கரையும் படியான துயரோடும் நின்ற பரதனைக் கண்டு,
குகனின் கையில் கிடந்த வில் வீழ்ந்து போகிறது.
தன் தவறுணர்ந்து விம்முறுகிறான் அவன்.

வற்கலையின் உடையானை, மாசு அடைந்த மெய்யானை
நற் கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை,
கல் கனியக் கனிகின்ற துயரானை, கண்ணுற்றான்;
வில் கையினின்று இடைவீழ, விம்முற்று, நின்று ஒழிந்தான்.

🌷 🌷 🌷

தன் தவறுணர்ந்த குகன் பரதனை நோக்கி,
தன்னுள் இரங்கியதாய்க் கம்பன் அமைத்த,
அடுத்த கவிதையின் ஈற்றடியும்
கம்ப சூத்திரமாய்,
பல்பொருள் காட்டிச் சுவை தருகிறது.
குகன் தன்னுள் பேசுகிறான்.
இதோ அவ்வரிய கவிதை.

'நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான், அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான், தவவேடம் தலை நின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை, திசை நோக்கித் தொழுகின்றான்,
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பாரோ பிழைப்பு?' என்றான்,

தமையனின் நண்பனென்பது அறிந்து
மறுகரையில் நிற்கும் குகனை நோக்கி வணங்குகிறான் பரதன்.
ஆனால் குகனோ, அவ் வணக்கத்தைத் தனக்கென நினையாமல் இராமனுக்காக்கி,
இராமன் சென்ற திசையைப் பரதன் தொழுகிறான் எனும் பொருள்பட
'திசை நோக்கித் தொழுகின்றான்' எனப்  பேசுவது, அவன் பண்புக்குச் சான்றாம்.

🌷 🌷 🌷

இக் கவிதையின் ஈற்றடியான
'எம் பெருமான் பின்பிறந்தார் இழைப்பாரோ பிழைப்பு' எனும் அடி
குகனின் மனத்தெழுந்த மூன்று கருத்துக்களை ஒருமித்து வெளிப்படுத்துகிறது.
அவற்றைக் காண்பாம்

🌷 🌷 🌷

புருஷோத்தமனான இராமனோடு உடன் பிறக்கும் பேறு பெற்றவன் பரதன்.
அத்தகைய பரதனும் பிழை செய்வானோ ?என்பது 
அப் பாடல் அடி தரும் முதற் கருத்து.
'எம் பெருமான் பின் பிறந்தார்'  எனும் தொடரில் வரும் 
'பிறந்தார்' எனும் சொல்லை மரியாதைப் பன்மைச் சொல்லாய்க் கொண்டால் 
அத் தொடர் பரதனையே குறிப்பதாய்க் கொள்ளலாம். 
அங்ஙனம் அன்றி, பிறந்தார் எனும் சொல்லை 
வெறுமனே பன்மைச் சொல்லாய்க் கொண்டால்,
அஃது இராமனின் சகோதரர்கள் மூவரையும் குறிப்பதாய் அமைந்து
அம் மூவரும் கூடப்  பிழை செய்யார்கள் எனக் குகன் கூறுவதாய்ப் பொருள்படும்.

🌷 🌷 🌷

இராமன் என்னைச் சகோதரனாய் ஏற்பினும்
அவன் சகோதரனாகும் தகுதி எனக்கில்லை.
அவன் பின் பிறக்கும் பேறு அற்றதனாற் தான்
பரதனைத் தவறாய் நினைந்து நான் பிழை செய்தேன்.
உடன் பிறந்தார் இப்பிழை செய்வரோ? என்பது 
இவ்வடி வெளிப்படுத்தும் இரண்டாம் கருத்து.

🌷 🌷 🌷

இராமனின் மேற் கொண்ட பேரன்பினால், 
பரதனின் தூய்மையை ஐயுற்று நான் தவறிழைத்தேன்.
இப் பரதனைக் காணும் போது, இதே தவறை,
இராமனின் பின்பிறந்தானாகிய இலக்குவனும் இழைத்துவிடுவனோ? என்பது 
இவ்வடி தரும் மூன்றாம் கருத்து.

🌷 🌷 🌷

இங்ஙனம் 
குகனின் மனதில் எழுந்த மூன்று எண்ணங்களை
இந்த ஒரே  அடியில் அமைத்துக் காட்டி
கற்றோர் மனதைக் களிக்கச் செய்கிறான் கம்பன்.

🌷 🌷 🌷

குகனின் கோப உணர்ச்சியைக்
கவிதையமைப்பிற் காட்டியும்,
பதப்புணர்ச்சியிலும், பிரிப்பிலும்
உயர்பொருள்களை வெளிப்படுத்தியும்,
ஒரேயடியிற் பல பொருளைப் பொதித்தும்
கம்பன் அமைத்துத் தந்த கவிதை  நுட்பம்
இரசனையாளர்க்கு விருந்தாய் அமைவனவாம்.

🌷 🌷 🌷

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்