'சிறந்த தீயாள்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யர்தமிழ்ப் புலவர்களால் அமைக்கப்பட்ட,
காவியப் பாத்திரங்கள் மூவகைப்பட்டன.
அறத்தின் வழி நிற்கும் பாத்திரங்கள் ஒருவகை.
அறத்தின் மாறுபட்ட பாத்திரங்கள் மற்றொரு வகை.
அறத்திற்கும், மறத்திற்கும் இடைநின்று,
குழப்பமுறும் பாத்திரங்கள் மூன்றாம் வகை.
இராமன், தருமன் போன்ற பாத்திரங்கள் முதற் பாத்திர வகைக்கும்,
கூனி, சகுனி முதலிய பாத்திரங்கள் இரண்டாம் பாத்திர வகைக்கும்,
கர்ணன், கும்பகர்ணன் ஆகிய பாத்திரங்கள் மூன்றாம் பாத்திர வகைக்கும்,
தக்க உதாரணங்களாம்.

🦚 🦚 🦚

இம்மரபினின்றும் மாறி, இம்மூன்று நிலையினும் முற்றாய் வேறுபட்டு,
ஓர் பாத்திரத்தை அமைக்க விரும்புகிறான் நம் கம்பன்.
காவியத்தின் ஒரு பகுதிவரை,
முற்றும் தூயதாய் ஒரு பாத்திரத்தை அமைத்து,
அதன் மறு பகுதியில்,
அப்பாத்திரத்தையே முற்றும் தீயதாக்க நினைக்கிறான் அவன்.
தன் எண்ணத்தைக் கைகேயி பாத்திரத்தின் மூலம் நிறைவேற்ற நினைந்த கம்பன்,
முற்பகுதியில் அவளை முழுத் தூய்மையளாயும்,
பிற்பகுதியில் அவளை முழுத் தீமையளாயும் அமைத்துப் புதுமை செய்கிறான்.
தமிழிலக்கியப் பாத்திர அமைப்பில் இப்பாத்திரம் ஒரு புதுமைப் பாத்திரமாம்.
இப் புதுமைப் பாத்திரத்தைக் கம்பன் அமைத்த விதத்தின் நுண்மைகளை ஆராய்வாம்.

🦚 🦚 🦚

ஆரம்பத்தில்,
தூயளாய்த் தன்னாற் காட்டப்படும் கைகேயி,
பின் தீயளாய் மாறுவாள் என்பதற்காம் சான்று எதனையும் முன் காட்டாது,
அப்பாத்திர மாற்றத்தை முன் கூட்டித் திட்டமிடாதவன் போல,
கதையோட்டத்தில் அப் பாத்திரத்தைக் கொண்டு செல்வது கம்பன் செய்த புதுமை.

🦚 🦚 🦚

பாத்திர அறிமுகத்தின் போதே,
இப்பாத்திரங்கள் இத்தன்மையன எனும் உணர்வை ஏற்படுத்த,
கம்பன் தவறுவதில்லை.
கூனியைக் கொடு மனக் கூனி என்றும்,
சூர்ப்பணகையை,
நிருதல் வேந்தனை மூலநாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள் என்றும் 
இராவணனை இன்னல் செய் இராவணன் என்றும்,
அறிமுகத்திலேயே கம்பன் சுட்டுவது இக்கருத்திற்கான உதாரணங்கள்.

🦚 🦚 🦚

கைகேயியைப் பொறுத்த வரை,
அவள் தீயாளாய் மாறப் போகிறாள் என்னும் எண்ணம்,
கற்போர் மனதில் கிஞ்சித்தும் எழாத வகையில்,
மிகக் கவனமாய் அவளை வடிவமைக்கிறான்.
அதனால், இப்பாத்திரத்தைத் தீயதாய் மாற்றும் எண்ணம்,
ஆரம்பத்தில் கம்பனுக்கு இருக்கவில்லையோ? என நாம் ஐயுறுகிறோம்.
அந்த ஐயமே கம்பனின் வெற்றியாகிறது.

🦚 🦚 🦚

தன் வஞ்சனையை நிறைவேற்றக் கைகேயியின் கோயில் புகுகிறாள் கூனி.                       
அங்கு பள்ளியில் உறங்கிக் கிடக்கும் கைகேயியை அவள் காண்கிறாள்.
கம்பன், கைகேயியைத் தெளிவுற அறிமுகம் செய்யும் இடம் இஃது.
பாற்கடலில் தாமரையிலிருக்கும் இலட்சுமியைப் போன்ற தோற்றத்துடன்,
உறக்கத்திலும் கண்களிற் கருணை பொழியக் கிடக்கிறாளாம் அவள்.
இங்ஙனமாய் நம் கருத்துக்குக் கைகேயியைக் கொணர்கிறான் கம்பன்.

🦚 🦚 🦚

உறக்கத்திலும் அவள் கண்களில் கருணை பொழிவதால்,
அவள் மனதில் எப்போதும் கருணை நிறைந்திருப்பது,
சொல்லாமலே நமக்குப் புரிகிறது.
உடனேயே நல்லளாய் கைகேயி நம் மனதில் பதிகிறாள்.
இதோ, கம்பனின் கவி.
நாற்கடல் படு மணி நளினம் பூத்தது ஒர்
பாற்கடல் படு திரைப் பவள வல்லியே
போல், கடைக்கண் அளி பொழிய, பொங்கு அணை
மேல் கிடந்தாள் தனை, விரைவின் எய்தினாள்.

🦚 🦚 🦚

கைகேயியின் சிறப்பை இவ்வாறு சொல்ல ஆரம்பித்த கம்பன்.
அத்தோடு நில்லாமல் கதைப் போக்கில்
'தெய்வக் கற்பினள்' என்றும்,
'ஆழ்ந்த பேரன்பினள்' என்றும்,
'தூமொழி மடமான்' என்றும்,
'இறை திரு மகள்' என்றும்,
'தூயவள்' என்றும்,
தொடர்ந்தும் புகழ்ந்துரைக்கிறான்.

🦚 🦚 🦚

அது மட்டுமன்றி,
கைகேயியை அறத்தின் வழிநின்று பேச வைத்து,
நம் நெஞ்சத்தை அவள்பால் ஈர்க்கின்றான்.
பெருந் துன்பம் வந்தது எனும் கூனியை நோக்கி,
இராமனைப் பயந்த எற்கு இடருண்டோ?
எனக் கைகேயி வினவுதலும்,
இராமனால் தீமை உனக்கு என்று உரைத்த கூனியை நோக்கி, 

எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன் 
தனக்கு நல்லையும் அல்லை அத்தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய் 

என்றும்,

போதி என் எதிர் நின்று நின் புன் பொறி நாவைச்
சேதியாது இது பொறுத்தனன் புறம் சிலர் அறியின்
நீதி அல்லவும் நெறிமுறை அல்லவும் நினைந்தாய்
ஆதி ஆதலின் அறிவிலி அடங்குதி என்றாள் 

என்றும் அவள் கடிதலும்,
அவளை உயர்ந்ததோர் பாத்திரமாய் நம் நெஞ்சத்தில் பதித்து விடுகின்றன.

🦚 🦚 🦚

மந்தரை சூழ்ச்சியால் கைகேயி மனம் மாறும்; போதும்,
இஃது இவள் இயல்பினாலேற்பட்ட மாற்றமல்ல விதியினால் ஏற்பட்டதே என
கம்பன் வலியுறுத்தத் தவறினானில்லை. 

அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க, நல் அருள் துறந்தனள் தூமொழி மடமான்;
இரக்கம் இன்மை அன்றோ, இன்று, இவ் உலகங்கள் இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே?

🦚 🦚 🦚

வெளித்தெரியாமல்,
கைகேயியின் உள்ளத்திலே தீமை உறைந்திருக்குமோ?
எமக்கு ஏற்படும் இந்த ஐயத்தை மறுத்து,
'தேவி தூய சிந்தையும் திரிந்தது' எனக்கூறி,
அவள் தூய சிந்தையள் என்பதனை,
ஐயத்திற்கு இடமின்றி உறுதி செய்கிறான் கம்பன்.

🦚 🦚 🦚

இவ்வாறு,
மிகத் தூயளாய், நமக்குக் கைகேயியைக் காட்டிய கம்பன்,
இதன்பின், முழுத் தீயளாய் அவளை மாற்றுகிறான்.
அவளை எவ்வளவு புகழ்ந்தானோ,
பின்னர் அதன் இரட்டிப்பாய் அவளைத் தூற்றுகிறான்.
நம் மனதில் உயர்ந்து நின்ற அப்பாத்திரத்தை,
நம்மனமே வெறுக்கும்படி செய்கிறான்.
கதையமைப்பிலும் உரையாடலிலும் மாத்திரமின்றி,
கவிக் கூற்றாகவே, அவளைத் திட்டித் தீர்க்கிறான் அவன்.

'குல மலர்க் குப்பை நின்றிழிந்தாள்' என்றும்,
'தீயவை யாவினும் சிறந்த தீயாள்' என்றும்,
'மரம் தான் எனும் நெஞ்சினள்' என்றும்,
'நாகமெனும் கொடியாள்' என்றும்,
'உன்னும் எரி அன்னாள்' என்றும்,
'நாடக மயில்' என்றும்,
'நச்சுத் தீ' என்றும்,
'நாணிலள்' என்றும்,
'தவ்வை' என்றும்,
'தீயள்' என்றும்,
'கொடியாள்' என்றும்,
'கூற்று' என்றும்,
தேடி எடுத்து வசை மொழிந்து,
முன் தான் புகழ்ந்ததை மறந்தவன் போல் அப்பாத்திரத்தைத் தூற்றுகிறான்.

🦚 🦚 🦚

கைகேயியை தான் வெறுத்து உரைத்ததோடல்லாமல்,
அவளை விரும்பிய நம்மையும் வெறுக்கச் செய்து வெற்றி காண்கிறான் கம்பன்.
தூயள் எனக் கம்பன் சொல்கையில் தூயளாயும்,
தீயள் என்று கம்பன் சொல்கையில் தீயளாயும்,
கைகேயியை நம்மனம் எண்ணுவது கம்பனின் வெற்றியன்றோ!

🦚 🦚 🦚

தூயள் எனச் சொல்லும்போது தீயள் எனும் எண்ணமோ,
தீயள் எனச் சொல்லும்போது தூயள் எனும் எண்ணமோ சிறிதும் தோன்றாமல்,
கைகேயியை அமைத்துத் தான் கொண்ட எண்ணத்தைப் பூர்த்தி செய்கிறான் கம்பன்.

🦚 🦚 🦚

இங்குதான் கம்பனுக்குச் சோதனை ஆரம்பமாகிறது.
மேலோட்டமாய் அன்றி, சற்று ஆழமாய்ச் சிந்திப்போர்,
பின்னால், முற்று முழுதாய்க் கைகேயி தீயளாகிவிட,
அத்தீமை கொண்டு, இல்லது பிறவாது எனும் கருத்தால்,
அவளின் முன்னைய நன்மையையும் ஐயுறுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

🦚 🦚 🦚

கற்போர் அங்ஙனம் எண்ணின்,
தான் அமைத்த கைகேயியின் முன்னைத் தூய்மையும் மாசுறும்,
என்பதை உணர்கிறான் கம்பன்.
அதனால், முற்று முழுதாய்த் தீயளாகிவிட்ட பின்பும்,
கைகேயியின் முன்னைத் தூய்மையை,
நிலைநாட்டுமோர் இடத்தை அமைப்பது கம்பனுக்கு அவசியமாகிறது.
தான் அமைக்கும் அவ்விடம் வெளிப்படையாய்த் தீமையைக் காட்டினும்,
உட்சென்று காண்பார்க்கு கைகேயியின் முன்னைத் தூய்மையின் சுவடுகளாய்,
தெரிய வேண்டும் எனத் திட்டமிட்டு,
அவ்விடத்தையும் அமைத்து வெற்றிகாண்கிறான் கம்பன்.

🦚 🦚 🦚

இப்பாத்திர அமைப்பில் வெற்றிச் சிகரத்தைக் கம்பன் தொடும்,
அப்பாடலைக் காண்பாம்.
கைகேயி கேட்ட வரத்தைத் தந்து மயங்கி வீழ்கிறான் தசரதன்.
தசரதனை அழைக்க வந்த சுமந்திரனிடம்,
இராமனை அழைத்து வரும்படி கைகேயி பணிக்கிறாள்.
சுமந்திரன் சொன்ன செய்தி கேட்டு,
கைகேயி கோயில் புகுகிறான் இராமன்.
தாயென நினைவான் முன்னே கூற்றென வந்த கைகேயி,
'ஒன்று உனக்கு உந்தை மைந்த! உரைப்பது ஓர் உரை உண்டு' என்கிறாள்.
அது கேட்டு இராமன் மகிழ்கிறான்.

'எந்தையே ஏவ, நீரே உரை செய இயைவது உண்டேல்
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி
வந்தது என் தவத்தின் ஆய வருபயன் மற்றொன்றுண்டோ
தந்தையும் தாயும் நீரே தலை நின்றேன் பணிமின் என்றான் 


அங்ஙனமாய்க் கூறி,
தெளிவுற்று நின்ற இராமனிடம்,
தான் பெற்ற கொடிய வரத்தைச் சொல்லத் தொடங்குகிறாள் கைகேயி.

🦚 🦚 🦚

பரதன் நாடாள, நீ காடு போ,
கைகேயி இராமனிடம் சொல்ல வேண்டிய செய்தி இது.
கம்பன், கைகேயியின் முன்னைத் தூய்மையை,
அவள் தீயளாய் ஆகிவிட்ட இவ்விடத்திலும் நிறுவ நினைக்கிறான்.
இராமனைத் தன் பிள்ளையாய் நேசித்தவள் கைகேயி.
தீயளாய் மாறிவிட்டாலும் அவளது மனத்திருந்த முன்னை அன்புச் சுவடுகள், 
முற்றாய் மாறுதல் கூடுமோ?
கூடும் எனின் அவளது முன்னை அன்பு பொய்யென்றாகும்.
அதனால் முன் கைகேயியைத் தான் புகழ்ந்தமை தவறாகிவிடும்.
இஃதுணர்ந்த கம்பன்,
கைகேயி இச்செய்தியைச் சொல்வதாய் வரும் பாடலில்,
அவள் முன்னைய அன்பின் பாதிப்பை நுட்பமாய் வெளிப்படுத்துகிறான்.

🦚 🦚 🦚

பரதன் நாடாள இராமன் காடேக வேண்டும்,
தசரதனிடம் கைகேயி வாங்கிய வரம் இது.

ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் உலகாள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.

தசரதனிடம் வரம் கேட்டபோது,
தன் வார்த்தைகளில் காட்டிய கடுமையை,
இராமன் முன்னால் கைகேயியால் காட்ட முடியவில்லை.
முன்னைய இராமன் மீதான அவளது அன்பு,
அவள் வார்த்தைகளைத் தடுமாறச் செய்கிறது.

🦚 🦚 🦚

பின்னர் தன்னை நிதானித்துக் கொண்டு,
'ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள'
எனத் துணிந்து பேசத் தொடங்கியவள்.
தன் முன்னைய அன்பின் முதிர்ச்சியினால்,
இராமனைப் பார்த்து நீ காடேகு எனச் சொல்ல முடியாது,
அவளின் நா தடுமாறுகிறது. - தவிக்கிறாள் அவள்.

🦚 🦚 🦚

தசரதனிடம் சொன்னது போலக் கடுமையாக,
நீ போய் வனம் ஆள் எனச் சொல்ல முடியாது சுற்றி வளைக்கிறாள்.
அவள் நாத் தடுமாறுகிறது.
இச் செய்தியை இராமன் நன்மை நோக்கிச் சொல்பவள் போல,
சொல்லத் தொடங்குகிறாள்.
நீ போய்
தாழ் இரும் சடைகள் தாங்கி
தாங்கரும் தவம் மேங்கொண்டு
பூழி வெங் கானம் நண்ணி
புண்ணியத் துறைகளாடி

🦚 🦚 🦚

எவ்வளவுதான் சுற்றி வளைத்தும்
காடு போ! என்று இராமனை நோக்கி உரைக்க,
அவளது நா மறுத்து நிற்கிறது.
அதனால் வீணே வார்த்தைகளை நீட்டுகிறாள்.
தசரதனிடம் தான் கேட்காத,
பதினான்காண்டு கால எல்லையை வலிந்து சேர்த்து,
தனது உரையைத் தொடர்கிறாள். 
'ஏழிரண்டாண்டு'

🦚 🦚 🦚

இப்போதும் இராமனை நோக்கிப் போ! எனச் சொல்ல,
அவளது நா மறுக்கிறது.
மகனாய் நினைந்து இராமனை வா! வா! என்றழைத்துப் பழகிய அவளது நா,
நாடு விட்டுப் போ! எனச் சொல்வதற்குப் பதிலாய்,
தன்னை அறியாது ஏழிரண்டாண்டில் வா! எனச் சொல்லி,
தனது கூற்றை முடிக்கிறது.

🦚 🦚 🦚

சொற்கள் கடுமையை நீக்கினும்,
பொருள் காடு செல்! என்றே இருப்பதால்
அக் கூற்றையும் தன் கூற்றாய்ச் சொல்லத் தயங்கி,
இயம்பினன் அரசன் என்று, அதனையும் தசரதன் கூற்றாய் முடித்துரைக்கிறாள் கைகேயி.

ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீபோய்த்
தாழ்இரும் சடைகள் தாங்கித் தாங்கருந் தவம் மேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணிய நதிகளாடி
ஏழிரண்டாண்டின் வா என்று இயம்பினன் அரசன்  என்றாள்.

🦚 🦚 🦚

கைகேயியின் மனமாற்றத்தின் பின்னதான தீமை கண்டு,
அவளது முன்னைத் தூய்மையை ஐயுறுவாரை மறுத்து,
அவள் முன்னைத் தூய்மையும் மெய்யானதே என நிறுவி,
கைகேயியின் முன்னை உளத் தூய்மைக்காம் சுவடுகளை,
இப்பாடலூடு சுட்டிய கம்பன் சிறந்தவளாயும், தீயளாயும்,
முழுமை பெற ஓர் பாத்திரத்தை அமைக்கும் தன் எண்ணக் கருத்தை,
முற்றுவிக்கிறான்.
பாத்திர அமைப்பில் கம்பன் செய்த இப் புதுமை கண்டு,
மகிழ்கிறது நம் மனம்.

🦚 🦚 🦚

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்