'இயற்கை - தமிழ் - கம்பன்': பகுதி 3-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகுயிர்கள், 
ஆண், பெண், அலி என மூவகைப்படும்.
இவற்றுள் அலிப்பிறப்பென்பது, ஆணும் பெண்ணும் கலந்த நிலை.
இயற்கையில் உள்ள இம்மூவகைப்பிறப்பு நிலைகளும்,
தமிழ் எழுத்துக்களிலும் உரைக்கப்படுகின்றன.

🌍 🌍 🌍

இலக்கணநூல்கள்,
உயிரெழுத்துக்களை ஆண் எழுத்து என்றும்,
மெய்யெழுத்துக்களைப் பெண் எழுத்து என்றும்,
ஆய்த எழுத்தினை அலி எழுத்து என்றும் உரைக்கின்றன.
தமிழ்மொழிப்பிரயோகத்தில் ஆய்த எழுத்து,
சிலவேளைகளில் உயிரெழுத்தாயும்,
சிலவேளைகளில் மெய்யெழுத்தாயும் கணிக்கப்படுகிறது.
ஆண், பெண் என இருநிலையும் கொள்வதால்,
ஆய்த எழுத்து அலி எழுத்து எனப்படுகிறது.
இங்ஙனமாய்,
இயற்கையில் உள்ள மூவகைப்பிறப்புப் பிரிவுகளும்,
தமிழ்மொழிவடிவிலும் பொருந்தி ஆச்சரியம் தருகின்றன.

🌍 🌍 🌍

அலிப்பிறப்பென்பது, ஆண் பெண் கலந்த நிலை.
அப்பிறப்பினை,
ஆண் என்றும் கொள்ள முடியும். பெண் என்றும் கொள்ள முடியும்.
இரண்டும் கலந்ததால் அலி என்றும் கொள்ள முடியும்.
மூன்று முகம் கொண்ட தோற்றம் அது.
தமிழின் மற்றைய எழுத்துக்கள்,
ஒருமுகப்பார்வையிலேயே தம்வடிவம் காட்டும்.
மூன்று புள்ளிகளாலான ஆய்த எழுத்து மாத்திரம்,
முப்புறம் நின்று காணவும் ஒரே வடிவுகொள்ளும்.
இங்ஙனம்,
ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் காண இடம் தரும்,
அலிவடிவத்தை,
ஆய்த எழுத்தும், தன் வடிவமைப்பிலேயே பொருந்தியிருக்கும் அற்புதம் கண்டு,
ஆச்சரியப்படுகிறோம்.

🌍 🌍 🌍

அலியெழுத்தான ஆய்த எழுத்து,
தனியெழுத்தாய்ச் சொல்லப்படினும் தமிழ் நெடுங்கணக்கில்,
உயிரெழுத்துக்களுடன் இணைத்தே உரைக்கப்படுகிறது.
என்றும் அது மெய்யெழுத்துக்களுடன் சேர்த்துச் சொல்லப்படுவதில்லை.
இதற்காம் காரணத்தை ஆராய ஓர் அற்புதச் செய்தி நமக்குக் கிடைக்கிறது.
அஃதறிவோம்.

🌍 🌍 🌍

ஆண், பெண், அலி எனும் மூவகை உயிர்ப்பிரிப்புக்களிலும்,
ஆணும் பெண்ணும் கலந்ததாகிய அலிப்பிறப்பு,
ஆண் வர்க்கத்திலேயே தோன்றுகிறது.
பெண்மை கலந்த ஆணையே அலியென்கிறோம்.
ஆண்மை கலந்த பெண்ணை, அலியெனல் ஆகாதோ? எனில், ஆகாது.
காரணம் யாது?
பெண்மையில் ஆண்மை கலந்திருப்பினும்,
இயற்கை தந்த உடலமைப்பால் அப்பிறவி பெண்ணாய்ப் பயன்படும்.
ஆண்மையிற் பெண்மை கலந்தாலோ,
அதே இயற்கை உடலமைப்பு அப்பிறவியை ஆண்மையாய் இயங்க அனுமதியாது.
அதுநோக்கியே,
ஆண்மையில் பெண்மை கலந்த இயல்புடையாரே, அலியெனப்படுகின்றனர்.
இவ்வியற்கை அமைப்பு நோக்கியே அலியெழுத்தாகிய ஆய்த எழுத்து,
தமிழ் நெடுங்கணக்கில்,
ஆணெழுத்தாய்க் கருதப்படும் உயிரெழுத்துக்களுடன் சேர்த்தே எண்ணப்படுகின்றது.

🌍 🌍 🌍

நம் சமயத்திலும்,
சிவமும், சக்தியும் பாதிபாதியாய்க் கலந்த வடிவொன்றுண்டு.
அர்த்தநாரீஸ்வரன் என, 
அவ்வடிவின் பெயர் உரைக்கப்படுகிறது.
(அர்த்த - பாதி, நாரி - பெண், ஈஸ்வரன் - ஆண்)
ஆண், பெண் எனும் இருநிலையும் சமமாய்க் கலப்பினும்,
அவ்வடிவிற்கு அர்த்தநாரீஸ்வரனென,
ஆண்பால் முடிவுகொண்டே பெயரிடப்பட்டமையும்,
இவ்விடத்தில் நுணுகி நோக்கத்தக்கது.
அதி நுட்பமான இவ்வியற்கை அமைப்பை,
நம் தமிழும், சைவமும் உள்வாங்கி நிற்கும் தன்மை கண்டு ஆச்சரியப்படுகிறோம்.

🌍 🌍 🌍

ஆண், பெண் இயல்பிணைந்த அலிநிலை,
உயர்நிலையில் ஞானியாகவும், 
இழிநிலையில் கேவலப்பிறப்பாகவும் கொள்ளப்படுகிறது.
ஆத்ம பக்குவத்தால் பால்நிலை கடக்கும் ஞானியர்களும் அலிகளே.
சிற்றின்ப நிலையில் ஆண் என்றோ, பெண் என்றோ,
இருநிலையும் முழுமையுற எய்தாமல்,
உணர்வுச் சிதைவுறும் கீழ்மை நிலையாளரும் அலிகளே.
ஞானியர் நிலையை அலிநிலையாய் உரைப்பதன் உண்மையுணர்தல் அவசியம்.
சிற்றின்ப நிலையில் இன்பத்தினை ஆண் வழங்குகிறான் பெண் பெறுகிறாள்.
பேரின்ப நிலையில் தன்னுடலின் மூலாதாரத்திற் பொருந்திய,
குண்டலினி சக்தியை யோக முயற்சியால் எழுப்பி,
சகஸ்ர பீடத்திற் பொருத்தி இன்பநிலை எய்துகிறான் ஞானி.
இந்நிலையில் இன்பத்தினை வழங்குபவனும் அவனே.
பெறுபவனும் அவனே.
வழங்குவதால் ஆணாகவும், பெறுவதால் பெண்ணாகவும்,
இருநிலையுமுறுவதால்,
பேரின்பநிலையுற்ற ஞானியும் அலியாகவே கருதப்படுகிறான்.

🌍 🌍 🌍

இறைவனும் இம்மூநிலையும் ஒருங்கு கொண்டவன்.
'பெண்ணாகி ஆணாகி அலியாய்ப் பிறங்கொளிசேர்' என்பது திருவாசகம்.
ஆண், பெண், அலி எனும்,
மூன்று நிலைகளையும் இயல்பாய்ப் பொருந்தியவன் இறைவன்.
பேரின்பநிலையில், ஞானி இறைத்தன்மை கொள்கிறான்.
இறைவன் இயல்பாய்க்கொண்ட,
பெண், ஆண், அலியெனும் மூன்று நிலைகளையும்,
தம் முயற்சியால் பெற்றவர்கள் ஞானியர்கள்.
இவர்கள், 
முயற்சியால் இறையோடு ஒருநிலைப்படுகின்றனர்.
தகைமையால் வேறுநிலைப்படுகின்றனர்.
இவ்வுண்மையையும் தமிழ் எழுத்திலக்கணம் தெளிவுற எடுத்துக்காட்டுகிறது.
தமிழெழுத்துக்களில் விகாரமின்றிப் பிறந்து,
இறைத்தன்மை காட்டி நிற்பது அகரம்.
அதனாற்தான், அகரம் இறைக்கு உவமானமாய் எடுத்துரைக்கப்படுகிறது.
அவ் அகரத்தினை ஒத்து நிற்பது ஆய்தவெழுத்து.
அகரத்தினை இறையென்றும்,
ஆய்தத்தினை ஞானியரென்றும்,
நினைந்து நோக்க ஒரு பேருண்மை புலனாகிறது.
'நன்னூல்' இலக்கணத்தில், எழுத்தியலில், பிறப்பு எனும் பகுதியில்,
எழுத்துக்களினது பிறப்பினை வரையறைசெய்யும் பவணந்தியார்,
எழுத்துக்கள்,
முயற்சிப்பிறப்பு, இடப்பிறப்பு என,
இருநிலைப்பட்டுப் பிறப்பதாய் வகைப்படுத்துகிறார்.
முயற்சியென்பது, எழுத்தாகிய காரியத்திற்காய்ச் செய்யப்படும் காரணம்.
அவ்வெழுத்துப்பிறப்பு முயற்சியில், காற்றுந்தும் பகுதி, இடம் எனப்படுகின்றது.
நன்னூலாரின் இலக்கணப்படி,
அகர, ஆய்த எழுத்துக்களுக்கான பிறப்பு முயற்சி அங்காப்பேயாம்.
அகரத்திற்கு பிறப்பிடம் மிடறு.
ஆய்தத்திற்கு பிறப்பிடம் தலை.
தோற்றத்தில்,
முயற்சி ஒன்றாயும், இடம் வேறாயும், அகரமும், ஆய்தமும் அமைகின்றன.
இவ்வமைப்பு முன்சொன்ன ஞானிக்கும், இறைக்குமான தொடர்போடு பொருந்தி,
மேலும் நம்மை வியக்கவைக்கின்றது.
ஞானி முயற்சியால் இறைநிலை உற்றவனாயினும், இறையாகான்.
இறைக்கும், ஞானிக்குமான இருப்பு வேறானதே.
அவ்வமைப்பைக் காட்டவே இவ்விரு எழுத்துக்களிலும்,
முயற்சி நிலை ஒன்றாகவும்,
இடநிலை வேறாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் எழுத்தமைப்புக்களுள் பொதிந்த,
இயற்கையுடனான இத்தத்துவநிலையை,
அறிந்து ஆச்சரியம் கொள்கிறோம்.

🌍 🌍 🌍

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்