'இயற்கை - தமிழ் - கம்பன்': பகுதி 4 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகம் வியக்கும் நம் தமிழ் எழுத்துக்களின் அமைப்புப் பற்றி,
மேலும் சில சிந்திக்கலாம்.
எழுத்துக்களின் பிறப்புரைக்கும் நம் இலக்கண நூல்கள்,
ஆய்த எழுத்தின் பிறப்பை வரையறை செய்கின்றன.
ஒரு குற்றெழுத்தினதும், வல்லின உயிர்மெய்யினதும் இடையிலேயே,
ஆய்த எழுத்துப் பிறக்கும் என்பது இலக்கணம்.
அஃது, இஃது போன்ற சொற்கள் இவ்வுண்மைக்காம் உதாரணங்கள்.
இன்றைய அறிவுலகம்,
இயற்கை ஆராய்ச்;சியில் விரிந்த தேடுதல் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நம் தமிழெழுத்துக்களூடு,
அவர்தம் ஆராய்ச்சிக்கென நாம் தரக்கூடிய எடுகோளொன்றினை,
மேற்சொன்ன ஆய்த எழுத்தின் பிறப்பின்மூலம் வழங்கமுடியும்.
குற்றெழுத்தான உயிரெழுத்தென்பது,
வலிமைகுன்றிய ஓர் ஆணினைக் குறிக்கும்.
வல்லின மெய்யெழுத்தென்பது,
பெண்மைத்தன்மை மிகக்குறைந்து ஆண்தன்மைபெற்ற பெண்ணினைக் குறிக்கும்.  
அவ்வல்லின மெய்யெழுத்தோடு உயிர்க்குற்றெழுத்து இணையப்பிறப்பது,
வல்லின உயிர்மெய்.
பெண்மை மிகக்குறைந்து ஆண்தன்மைகொண்ட பெண்ணில், 
மேலும் ஆண்தன்மை வெளிப்பட்ட நிலையென,
இவ்வுயிர்மெய்யைக் கொள்ளலாம்.
ஆண்மை குறைந்த உயிர்க்குற்றெழுத்துக்கும்,
பெண்மை குறைந்த ஆண்மைவழிப்பட்ட வல்லின உயிர்மெய்க்கும் இடையில்,
ஆய்த எழுத்துப் பிறக்கும் என இலக்கணம் சொல்வதால்,
ஆண்மை குறைந்த ஓர் ஆணும்,
பெண்மை குறைந்து ஆண் நிலையுற்ற ஒரு பெண்ணும் இணையவே,
அலிப்பிறப்புத் தோன்றுகிறதெனக் கொள்ளலாம்போற் தெரிகிறது.
மேற்கு நாகரீகத்தில் பெண்கள் ஆண்தன்மை கொள்கின்றனர்.
அதனால், 
மேற்குநாடுகளில் அலித்தன்மை கொண்டோரின் பிறப்பு அதிகமாகிறது.
மேற்சொன்ன கருத்துக்களுக்கு இச்செயற்பாடு பொருந்துமாற்போல் தெரிகிறது.
இயற்கை ஆய்வில் நாட்டம் கொண்டார்,
தமிழ் எழுத்து வடிவுதரும் இவ்வெடுகோளைக்கொண்டு,
இக்கருத்தினைத் தெளிவுற நிரூபிக்க முயலலாம்.

🌍 🌍 🌍

அதுபோலவே உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து என்பவை,
பன்னிரண்டு, பதினெட்டு, ஒன்று எனத் தமிழ் மொழியில் அமைந்திருப்பது கொண்டு,
ஆண், பெண், அலி எனும் பிறவிகளின் எண்ணிக்கை விகிதாசாரத்தையும்,
இயற்கையிற் பொருத்தி ஆராய முயலலாம். 

🌍 🌍 🌍

மெய்யெழுத்துக்கள் பெண்ணெழுத்துக்கள் எனப்படுகின்றன.
நம் தமிழ் எழுத்து வடிவில்,
மெய்யெழுத்துக்கள் அனைத்துக்கும்மேலே புள்ளியிடுவது வழக்கம்.
ஆன்றோர், நம் தமிழ்ப் பெண்களின் பொட்டிடும் வழக்கத்தை,
எழுத்தின் வடிவிலும் கொண்டனர் போலும்.
இது, வெறுமனே இரசனை நோக்கிலான ஒரு பார்வை.

🌍 🌍 🌍

இனி, 
இயற்கையுடன் பொருந்திய இத்தமிழ் எழுத்துக்களின் தன்மையுள் ஒரு பகுதியை,
தன் காவியத்துள் கம்பன் குறிப்பாலுணர்த்தியுள்ளமையை,
கண்டு மகிழ்வோம்.

🌍 🌍 🌍

இயக்கம் நோக்கி உயிரெழுத்து,
குற்றெழுத்து, நெட்டெழுத்து என இருவகைப்படும்.
குறுகி ஒலிப்பது குற்றெழுத்து.-நீண்டொலிப்பது நெட்டெழுத்து.
'அ' குற்றெழுத்து, 'ஆ' நெட்டெழுத்து.
இவை உயிரெழுத்தின் இருவகைகள்.
இதுபோலவே மெய்யெழுத்தும்,
மெல்லெழுத்து, இடையெழுத்து, வல்லெழுத்து என மூவகையாய்ப் பிரிக்கப்படும்.
பதினெட்டு மெய்யெழுத்துக்களில்,
மெல்லொலி கொண்டவை ஆறு எழுத்துக்கள்.
இடையொலி கொண்டவை ஆறு எழுத்துக்கள்.
வல்லொலி கொண்டவை ஆறு எழுத்துக்கள்.
மெல்லொலி கொண்ட ஆறு எழுத்துக்களும், மெல்லினம் எனப்படுகின்றன.
இடையொலி கொண்ட ஆறு எழுத்துக்களும், இடையினம் எனப்படுகின்றன.
வல்லொலி கொண்ட ஆறு எழுத்துக்களும், வல்லினம் எனப்படுகின்றன.
மொத்தத்தில் தமிழெழுத்தமைப்பில், உயிரெழுத்து இருவகையாகவும்,
மெய்யெழுத்து மூவகையாகவும் பிரிக்கப்படுகிறது.
இவ்வெழுத்தமைப்பை மனங்கொண்டு,
இயற்கையை மீண்டும் நோக்கலாம்.

🌍 🌍 🌍

இயற்கை அமைப்பில், பெண்கள்,
ஆண்நிலை கொண்டவர்கள், 
இடைநிலைப்பட்டவர்கள், 
மெல்லியர் என மூவகையினராவர்.
ஆண்கள்,
வலிமைமிகுந்த ஆண்கள், 
வலிமைகுன்றிய ஆண்கள் என இருபிரிவினராவர்.
ஆண்களில் பெண்ணியல்பு கொண்டோர், அலியெனப் பிரிக்கப்பட்டதால், 
அவர்களில் இருநிலைகளே வகுக்கப்படுகின்றன.

🌍 🌍 🌍

மெய்யெழுத்துக்கள் மூவகைப்படும் எனக்கண்டோம்.
மெய்யெழுத்துக்கள் பெண்ணெழுத்துக்கள் எனப்பட்டதால்,
பெண்களும் மூவகைப்பட்டு நிற்பதை உணர்ந்தோம்.
தமிழ் எழுத்துவடிவு காட்டும் இவ்வியற்கை உண்மை நிலையை,
கம்பன் தன் காவியத்திற் குறிப்பாற் காட்டுகிறான்.
யாகம் காக்க இராமனை அழைத்துச் செல்லும் விசுவாமித்திரன்,
இராமனுக்கு மூன்று பெண்களை அறிமுகப்படுத்துகிறான்.
முதலிற் தாடகை.
அடுத்து அகலிகை.
நிறைவாய்ச் சீதை.
ஆண்தன்மை கொண்டு நின்ற தாடகை வல்லினம்.
தன்னிலையிற் தளர்ந்த அகலிகை இடையினம்.
மெல்லியல்பாற் சிறப்புற்ற சீதை மெல்லினம்.
வல்லின இடையினப் பெண்களைக் காட்டி,
பின் மெல்லினச் சீதையிடம் இராமனைச் சேர்க்கிறான் கம்பன்.
தமிழ் எழுத்துவடிவு காட்டும் பெண்மையின் இயற்கை நிலை வேறுபாடுகளை,
கதையோட்டத்தில் இயல்பாய் அமைத்து, 
கம்பன் காட்டிச்சென்ற நுட்பம் நம்மை வியக்கவைக்கிறது.

🌍 🌍 🌍

சிவபெருமானால் ஆக்கப்பட்டது என்றும், தமிழ்க்கடவுள் முருகன் என்றும்,
தெய்வங்களோடு இணைத்து நம் தமிழ்மொழி பேசப்படுகின்றது.
இறை என்பது இயற்கையே.
இவ்வியற்கையை இறைவனின் அங்கங்கள் எனப் பரிமேலழகர் பேசுவார்.
இறைவனாலாக்கப்பட்டதெனவே,
தமிழ்மொழி இயற்கையால் உருவாக்கப்பட்டது எனும் உண்மை வெளிப்படுகிறது.
இயற்கையால் ஆக்கப்பட்ட மொழி இயற்கையோடு பொருந்தி,
காலங்கடந்து நிற்பது ஆச்சரியமல்லவே.

🌍 🌍 🌍

பன்னிரண்டு கைகள், பன்னிரண்டு உயிரெழுத்துக்களாகவும்,
ஆறுதலைகள் தமிழின் சிறப்பெழுத்துக்களாகவும்,
ஒருதலையில் மூன்று கண்ணாக ஆறுதலையிலுமுள்ள பதினெட்டுக் கண்கள்,
பதினெட்டு மெய்யெழுத்துக்களாகவும்,
கையில் உள்ள வேலாயுதம் ஆயுத எழுத்தாகவும் வர்ணிக்கப்பட்டு,
தமிழின் வடிவமாகவே திகழ்பவன் முருகன் என்பர்.
முருகன் தமிழின் வடிவானவன்.
எனவே,
தமிழ், இயற்கையின் வடிவாகிறது எனும் உண்மை புலனாகிறது.

🌍 🌍 🌍

தமிழை வளர்த்தவர்கள், 
அகத்தியர், நக்கீரர், தொல்காப்பியர் போன்ற முனிவர்கள். 
முனிவர்கள் என்போர் தம் தவஅடக்கத்தால் இறைவனை உணர்ந்தோர்.
இறைவனை உணர்ந்த முனிவர்களே தமிழை வளர்த்தார்கள்.
எனவே,
இயற்கையை உணர்ந்தவர்களே தமிழை வளர்த்தனர் என்பதும் பெறப்படுகிறது.

🌍 🌍 🌍

இவ்வுண்மைகள் கொண்டு நோக்க,
தமிழ்மொழிக்கும் இயற்கைக்குமான தொடர்பு தெளிவாகிறது.
இத்தொடர்பே, தமிழ்மொழியின் நிலைத்த தன்மைக்குக் காரணமாம்.
தமிழ்மொழியிலும் மொழிவடிவிலும் மாற்றம் செய்ய முனைவோர்,
இயற்கையுடனான தமிழ்மொழியின் தொடர்பினை,
சிதையாது பேணுதலின் அவசியம் உணர்வார்களாக.
அன்றேல்,
தமிழ்மொழியை வளர்ப்பதாய் அவர்செய்யும் மாற்றங்களே,
அம்மொழியின் அழிவுக்குக் காரணமாகிவிடுமாம். 

🌍 🌍 🌍

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்