'இயற்கை - தமிழ் - கம்பன்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகம் ஆயிரக்கணக்கான மொழிகளைத் தன்னுள் அடக்கிநிற்கிறது.
அவற்றுள் ஆதி அறியா அற்புதப் பெருமை,
நம் தமிழ்மொழியின் தனிச் சிறப்பாம்.
ஆதி அறியா மொழியெனவே,
அஃது அந்தமறியா மொழியாயும் நிலைக்குமாம்.
காலங் கடந்து நிலைத்தற்கான,
தமிழ் மொழியின் தனித்த சிறப்புத்தான் என்ன?
ஆராய்வது கடமையாகிறது.

🏹 🏹 🏹

அண்டங்களின் இயக்கத்தில்,
யாருமறியா ஓர் அற்புத ஒழுங்கு அமைந்திருக்கிறது.
அவ்வொழுங்கே,
அண்டங்கள் ஒன்றோடொன்று மோதி அழியாது நிலைத்தலின் காரணமாம்.
அவ்வொழுங்குக்குட்பட்டதே நம் பூமியும்.
ஆதலால், பூமிசார்ந்த அனைத்துப் பொருட்களும்கூட, 
ஓர் ஒழுங்கமைதி கொண்டே இயங்குகின்றன.
அண்டங்களினிடையே காணப்படுவதான அவ் ஒழுங்கே,
இயற்கை எனப் பேசப்படுகிறது.
இயற்றியவர் யார்? இயக்குபவர் யார்? எனும் விடயத்தில்,
முரண்பாடுகள் இருப்பினும்,
இயற்கையின் இவ் அபரிமிதமான சக்தியை,
அறிவுலகமும், அருளுலகமும் ஒப்பவே செய்கின்றன.
இவ்வியற்கை ஒழுங்கோடு,
பொருந்துவன எல்லாம் நிலைக்கும்.
மாறுபடுவன எல்லாம் அழியும்.
இஃது இயற்கைக்கே உரியதான அற்புத சக்தி.

🏹 🏹 🏹

விரைவில் அழியக்கூடியதான,
ஓலையில் எழுதப்பட்ட,
திருக்குறள் போன்ற நூல்கள்,
காலங்கடந்து நிலைப்பதும்,
அக்கறையோடும், அழியாத்தன்மையோடும்,
முயன்று அமைக்கப்படும் இன்றைய நூல்கள் பல, 
தோன்றிய சில காலங்களிலேயே மறைந்து போவதும்,
அவ்வியற்கை ஆற்றலுக்காம் சான்றுகள்.
வீரியம் பெற்று நின்ற பல மொழிகளும்,
அம்மொழி சார்ந்த நாகரீகங்களும்,
கால ஓட்டத்திற் கலைந்து போயின.
ஆனால், தமிழ் மொழியோ,
காலங்கடந்தும் கன்னிமை மாறாது நிலைபெற்று நிற்கிறது.
அஃதொன்றே,
தமிழ்மொழி இயற்கையோடு ஒன்றியது எனும்,
உண்மைக்காம் சான்றாம்.
இயற்கையுடனான நம் தமிழ் மொழியின் ஒன்றுதலே,
அதன் நிலைத்த தன்மைக்குக் காரணம்.
இயற்கையோடு நம் தமிழ் மொழி பொருந்துமாற்றையும்,
அத்தமிழ் மொழியில் அமைந்த,
இயற்கையோடு பொருந்துவதான நுட்பமொன்றினை,
கம்பன் தன் காவியத்துட் அமைக்குமாற்றையும்,
காணமுயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

🏹 🏹 🏹

எழுத்து, சொல், பொருள் என,
மொழி விரிவுறும்.
மொழிவிரிவின் முதல்நிலை, எழுத்துக்களே.
தமிழ் எழுத்துக்கள்,
உயிர் எழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து, உயர்மெய்யெழுத்து என நால்வகைப்படும்.
உயிரும் மெய்யும் இணைந்து பிறப்பவையே,
உயிர் மெய்யெழுத்துக்கள்.
'அ' முதல் 'ஒள' வரையிலான,
பன்னிரண்டு எழுத்துக்களும் உயிரெழுத்துக்களாம்.
'க்' முதல் 'ன்' வரையிலான,
பதினெட்டு எழுத்துக்களும் மெய்யெழுத்துக்களாம்;.
தமிழில் உயிரும், மெய்யுமான முதலெழுத்துக்களின் தொகை முப்பது.
இப்பன்னிரண்டு உயிரும், பதினெட்டு மெய்யும் கலக்கப் பிறக்கும்,
'க' முதல் 'னௌ' வரையிலான, 
உயிர்மெய்யெழுத்துக்களின் தொகை இருநூற்றுப் பதினாறு.
'ஃ' ஆய்த எழுத்தென உரைக்கப்படுகின்றது.
இருநூற்றுப் பதினாறு உயிர்மெய்யெழுத்துக்களும், ஆய்தவெழுத்தும், தமிழின் துணையெழுத்துக்களாம்.
இவையே, தமிழ் எழுத்துக்களின் பிரிவுகள்.
இனி,
இத்தமிழெழுத்து வடிவங்கள்,
இயற்கையோடு பொருந்துமாற்றை ஆராய்ந்து அறிவாம்.

🏹 🏹 🏹

உலகில் உள்ள உயிர்ப்பொருள் யாவற்றிலும்,
உணர்வுக்குக் காரணமான உயிர் எனும் ஒரு பகுதியும்,
உயிரைத்தாங்கி நிற்கும் மெய் எனும் ஒரு பகுதியும்
உள்ளன.
இவ் உயிரும், மெய்யும் கலந்த வடிவத்தினையே,
ஓர் உயிர்ப்பொருளின் முழுவடிவாய் நாம்; கொள்கிறோம்.
உயிரும் மெய்யும் கலந்ததாய உயிர்ப்பொருளின் நிலையை,
உயிர் மெய்யென உரைக்கலாம்.
இவ்வியற்கை நிலை,
தமிழெழுத்துவடிவத்திலும் உரைக்கப்படுகிறது.
உயிர், மெய், உயிர்மெய் எனப் பேசப்படும்,
தமிழ் எழுத்துக்களின் பெயர்ப்பிரிவே,
அஃது இயற்கையோடு ஒன்றுமாற்றைக் காட்டி நிற்கிறது.

🏹 🏹 🏹

(தொடரும்...)

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்