'யாவர் ஆசிரியர்? தமிழிலக்கணம் காட்டும் ஆசிரியத் தகைமைகள்' -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-

ல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகிவிட்டன. பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி விட்டிருக்கின்ற மாணவர் பலரதும் சமூகவலைத்தளங்களைக் காண நெகிழ்ச்சியாக இருக்கிறது, அனைவரும் தமது ஆசிரியப் பெருந்தகைகளைப் பாராட்டிக் கருத்திடுகின்றனர். போற்றிய வண்ணமுள்ளனர். இதுதான் அச்சேவையின் மகத்துவம்.
இந்நிலையில், தமிழறிவுலகம், ஆசிரியரை எவ்வாறு கருதியது என்பதைச் சிந்திப்பது நலம் பயப்பதாகும். குறிப்பாக, இச்சிந்தனை தமிழ் இலக்கண நூல்களில் எவ்வாறு காணப்படுகின்றது என்பதைச் சுட்டுவதே இக்குறிப்பின் நோக்கமாகும்.

இவ் இலக்கண நூல்களில் ஒன்றாகிய நன்னூலில், கற்பிப்பவர் எப்படி இருக்க வேண்டும்? அவர் எவ்வாறு கற்பிக்க வேண்டும்? என்பன குறித்தும் சில செய்திகளை நூலின் தொடக்கத்திற் கூறப்பட்டுள்ளன. 
ஆசிரியராக வரவிரும்பும் ஒருவரிடம் இருக்க வேண்டிய பண்புகளைச் சுட்டும் இவ் இடங்களில் நன்னூலார் பேசியுள்ள விடயங்கள் இரு இயல்பின எனலாம். அவற்றைப் பின்வருமாறு சுட்டுவது பொருத்தமானதாகும்.
 
(அ) கல்வியோடு நேரடியாகத் தொடர்புடையவை
1. பல நூல்களிலே தேர்ச்சி உடையராக இருத்தல்.
2. மாணவர்க்கு இலகுவாக விளங்கும் வண்ணம் எடுத்துக் கூறுதல்.
3. உலகியல் அறிவு கொண்டிருத்தல்.
 
(ஆ) பண்பு நலன் சார்ந்தவை
1. ஒழுக்கமுடைய சிறந்த குடும்பத்தில் பிறந்திருத்தல்.
2. உயிர்கள்மீது இரக்கம் கொண்டிருத்தல்.
3. கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருத்தல்.
4. கொள்கைப் பிடிப்பு உடையராக இருத்தல்.
5. மேன்மையராய் இருத்தல்.
6. உயர்வான குணங்கள் கொண்டிருத்தல்.
 
அடுத்ததாக, தக்க உவமைகளை எடுத்துக்காட்டி, ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் எனப் புரியவைக்கிறது நன்னூல். பவணந்தியார் எடுத்துக் காட்டும் உவமைகளையும், அவ்வுவமைகளின் மூலம் அவர் சுட்ட விரும்பிய இயல்புகளையும் நோக்குதல் பொருத்தமுடையதாகும்.
 
நல்லாசிரியர் ஒருவர் நிலத்தைப்போலவும் மலையைப் போலவும் துலாக்கோல் போலவும் பூவைப் போலவும் இருத்தல் வேண்டும் என்பது நன்னூலாசிரியர் கருத்து. 
நிலம் என்னும் உவமை மூலமாக, பிறரால் அறியப்படாத பெருமையாகிய வியாபகத்தையும் உள்ளத்து வலிமையையும் பொறுமையையும் பருவத்தில் முயற்சி அளவிற்குப் பயன் செய்யுந் தன்மையையும் ஆசிரியர்க்கான தன்மைகளாகப் பவணந்தியார் சுட்டுகின்றார்.
 
மலை என்னும் உவமை மூலமாக, மாணவரால் அளக்க முடியாத அறிவு அளவுத் திறத்தையும் வள நிறைவையும் வலிமையுடையவராலும் அசைக்க முடியாத நிலைமையையும் தொலைவில் உள்ளவராலும் அறியப்படும் தன்மையையும் ஆசிரியர் பண்புகளாக, அவர் காட்டுகிறார்.
 
ஐயம் தீரும்படி வினாவிற்கு விடை காட்டும் இயல்பும் நடுவு நிலைமையும் ஆசிரியர்க்கு அவசியமானவை என்பதை, அடுத்து நிறைகோல் என்னும் உவமை வாயிலாக எடுத்து விளக்குகிறார். 
நிறைவில், மலர் மூலமாக, நல்ல நிகழ்ச்சிக்கு உரியராகும் தன்மை, இன்றியமையாமை, யாவரும் மகிழும்படி இருக்கும் இயல்பு, மென்மையான குணம், பாடம் நடாத்தும்போது முகம் மலர்ந்திருத்தல் ஆகிய பண்புகளைச் சுட்டுகின்றார்.
 
எக் குணங்களை உடையவர் ஆசிரியர் ஆகலாம் என, தொடக்கத்தில் பேசிய நன்னூலார், எக் குற்றங்களைக் கொண்டிருப்பவர் ஆசிரியர் ஆதல் முடியாதெனவும் உடன் குறிப்பிடுகின்றார். கண்டிக்கத்தக்க சில குற்றங்களையும், சில உவமைகளையும் கூறி, இதனைத் தெளிவு செய்கின்றார்.
 
முதலில், அவர் காட்டும் குற்றங்கள் எவை எனக் கூறிச் செல்லுதல் முறையானதாகும்.
1. பாடம் நடத்தும் அளவு சொற்றிறம் இல்லாமை
2. இழிவான குணமுடைமை
3. பொறாமை உடைமை
4. பொருளின் மேலே மிகுதியான பற்றுடைமை
5. வஞ்சனை உடைமை
6. அச்சம் தரும்படியாக உரையாடுந் தன்மை
7. முரண்பட்ட சிந்தனை உடைமை.
 
மேலே தரப்பெற்ற குற்றங்களை உடையவர்கள் மாணவர்களுக்கு அறிவு தருகின்ற உன்னதமான தொழிலாகிய ஆசிரியத்துவத்துக்குப் பொருத்தமானவர்கள் அல்லர் என்பது நன்னூலார் கருத்து. 
தொடர்ந்து, உவமை வாயிலாக, கழற்குடம், மடற்பனை, பருத்திக்குண்டிகை, முடத்தெங்கு ஆகிய நான்கையும் போல இருப்பவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு ஏற்புடையவராகார் என்பதையும் அவர் சுட்டுகிறார்.
இந் நான்கு பொருள்களையும்போல இருப்பவர்களை, அவர் ஏன் தவிர்க்கின்றார் என்பதை அறிவதற்கு, அப்பொருள்களுக்கும் மானுடர்க்குமான ஒப்புமைத் தொடர்பை அறிவது அவசியமாகும்.

கழற்பெய்குடம் என்பது, கழற்காய் போடப்பட்ட குடம் ஆகும். குடம் ஒன்றனுள் கழற்காயைப் போட்டுவிட்டு, மீள எடுக்கவேண்டுமாயின், போட்ட ஒழுங்கிலேயே எடுக்க முடியாது. முன் போட்டது பின் வரும், பின் போட்டது முன் வரும். ஆனால், கல்வியிலே முன் சொல்லப்படவேண்டியதைத்தான் தொடக்கத்தில் சொல்லவேண்டும். முன், பின்னாக மாறாமல், தருக்க ஒழுங்கில்தான் கல்வியைக் கொடுக்க வேண்டும். எனவே, முன்-பின் மாறிப் போதிக்கும், கழற்குடம் போன்றவர்கள் கற்பித்தற்கு ஏற்புடையவர் அல்லர்.
 
ஒருவர் தன்னிடம் நெருங்கி வந்து பழங்களைப் பறிக்க முடியாதபடிக்கு மடற்பனையானது கருக்கு மட்டைகளைக் கொண்டிருக்கும். அது, தானாகப் பழங்களை விழுத்தினால் மட்டும், நாம் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு, சிலர் உள்ளனர். அவர்கள் கருத்துக்களை நெருங்கி அறிந்து பெற்றுக் கொள்ள முடியாது. அவர்களாகத் தந்தால் மட்டுமே பெறலாம். இவ்வாறு, மாணவர் நெருங்க அருமையானவர்களும் ஆசிரியத் தொழிலுக்குப் பொருந்தமாட்டார்கள்.
அடுத்த, பவணந்தியார் காட்டும் உவமப் பொருள் பருத்திக்குண்டிகையாகும். அதாவது, பருத்திப் பஞ்சை அடைத்து வைக்கின்ற குடுவை. இதன் இயல்பு, தான் பஞ்சை உள்ளே பெறும் போதும் மிகவும் சிரமப்படுத்தியே சிறிது சிறிதாக இடங்கொடுக்கும். வெளியே எடுக்கும்போதும் அப்படிச் சிரமம்தான். 'தான் கற்றபோதும் சிரமத்தோடு சிறிது சிறிதாகச் சற்றே கற்று, மாணவர்க்குக் கற்பிக்கும் போதும் எளிதில் இலகுவாகக் கொடுக்கமாட்டாத இயல்புடையவர் இப்பருத்திக் குண்டிகை போன்றவர். இவரும் ஆசிரியராகுதற்குத் தகுதி படைத்தவர் அல்லர்.
 
நிறைவாகப் பவணந்தியார் தரும் உவமை, முடத்தெங்கு என்பதாகும். வளைந்து காய்த்து நிற்கும் முடத்தெங்கு யாரோ தண்ணீர்; விட்டு வளர்க்க, யாருக்கோ பயன்செய்யும். இதேபோன்று, தம்மை வழிபட்டு நாடும் மாணவர்கட்கு வழங்காமல், வேறு யாருக்காவது கல்வியை வழங்க நினைப்பவர்களும் ஆசிரியத்துவத்துக்கு உரியவர் ஆகார்.
இவ்வாறு, குணங்களையும் குற்றங்களையும் எடுத்துக்காட்டுவதன் மூலமாக நல்லாசிரியர்கள் யாவர் என நமக்கு அறிவிக்கிறது நன்னூல்.
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்