'உலகம் யாவையும்':பகுதி 01-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகை உய்விக்க,
இராமகாவியம் செய்தான் கம்பன்.
'அறம் வெல்லும் பாவம் தோற்கும்' எனும் பாவிகத்தை,
தன்காவியத்தின் ஊடுபொருளாக்கி, 
மனுக்குலத்திற்கு,
அறம் உரைக்கத் தலைப்பட்டான் அவன்.
மூலஅறம், சார்பறம் என அறம் இருவகைப்படும்.
மூலஅறம்,
எத்தேயத்திற்கும், எவ்வினத்திற்கும், எம்மதத்திற்கும், பொதுவானதாம்.
அவ் உண்மை உணர்ந்த கம்பன்,
தான், 
குறித்தவொரு மொழி, மதம், இனம் சார்ந்து இருப்பினும்,
தன் காவியம், 
உலகத்தார் அனைவர்க்கும் பொதுவாதல் வேண்டும் என,
விருப்புக்கொண்டான்.
உலகம் அற இயல்பு பெற,
மானுடம் அமர இயல்பு பெறும்.
இஃது கம்பன் தன் தெளிந்த தீர்மானம்.
'வையத்துள்  வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப்படும்'
- என,
இக்கருத்து ஏலவே வள்ளுவரால் உரைக்கப்பட்டிருப்பினும்,
தெளிவு நோக்கி வள்ளுவர்தம் குறட்கருத்தை,
மறுதலையாய்ச் சொல்லத்தலைப்பட்டான் கம்பன்.
வையத்துள் வாழ்வாங்கு வாழின்,
வானுறையும் தெய்வத்துள் வைகலாம் எனும் வள்ளுவர் கருத்து,
பின்பற்ற விழைந்தார்க்குக் குழப்பம் தந்தது.
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டார் யார்?  
என அறிதல் கூடாமையின்,
எவரைப் போல் வாழ்தல் வாழ்வாங்கு வாழ்தலாகும்? எனும் கேள்வி குழப்பிற்று.
இக்குழப்பம் தீர்த்து, 
வாழ்வாங்கு வாழ்தலை உலகுக்கு உணர்த்த,
கம்பன் ஓர் உத்தியைக் கையாண்டான்.
வானுறையும் தெய்வத்தையே மானுடனாக்கி,
வையத்துள் வாழ்வாங்கு வாழவைத்து,
வாழ்வாங்கு வாழ்தலை வரையறை செய்தான்.
கம்பன் சொன்ன, 'காசில் கொற்றத்து இராமன்' தன் வாழ்வே,
அறவாழ்வின் அடிப்படையாகி,
மனுக்குலத்தை அறம்நோக்கி வழிப்படுத்திற்று.
வள்ளுவர் கருத்தைத் தெளிவாய் உலகுக்குணர்த்தி,
கம்பன் வெற்றிகொண்டான்.
இராமன்தன் வாழ்வு, 
அகில உலகுக்கும் அறம் உணர்த்துதலால்,
தான் இயற்றும் இராமகாதை,
மனுக்குலத்திற்குப் பொதுவாதல் வேண்டும் எனும் விருப்போடு,
காவியத்தின் முதற்பாடலான கடவுள் வாழ்த்தினை, 
எழுதத்தலைப்பட்டான் கம்பன்.
அறம், உலகம் முழுதிற்குமாம் எனும் பேருண்மை,
அவன் கருத்திலிருந்து கரத்தில் புக,
அவனை அறியாமல் அவன் எழுத்தாணி,
'உலகம்' என ஒருதரம் எழுதிற்று.
♠♠
'உளவாதல், நிலைபெறுதல், நீங்குதல்',
இம்மூன்றும் உலகின் நியதி.
இவை உலகின் நியதியானது எங்ஙனம்?
கம்பன் மனதிற் கேள்வி பிறக்க,
அவன் சிந்திக்கத் தலைப்படுகிறான்.
எதில் நின்று உலகம் தோன்றியதோ,
அதன் இயல்பே உலகியல்பாதல் இயற்கையாம்.
சிந்தனையின் விளைவாய்,
தோன்றல், நிலைத்தல், முடிதல் எனும் இயல்புகள் பொருந்திய,
ஏதோ ஒரு மூலகாரணத்திலிருந்தே, 
உலகு உதித்திருத்தல் வேண்டும் எனும் உண்மை புலனாயிற்று.
உலகை உதிப்பித்த அம்மூலகாரணம் எது?
மீண்டும் கம்பன் ஆராயத்தலைப்படுகிறான்.
ஒலியே உலகின் தொடக்கம்.
இது மெஞ்ஞானிகளுக்கு மட்டுமன்றி, 
விஞ்ஞானிகளுக்கும் உடன்பாடான கருத்தாம்.
உலகை உதிக்கச் செய்த ஒலியை,
'ஓம்' எனும் பிரணவம் என்றனர் எம் ஞானியர்.
பிரணவத்திலிருந்தே உலகுதித்தது என்பது, 
அவர்தம் முடிவான கருத்து.
அக்கருத்தேற்று, சிந்தனையைத் தொடர்கிறான் கம்பன்.
பிரணவமே உலகின் மூலமாயின்,
தோற்றம், நிலைத்தல், முடிவு எனும் முச்செயல்களும்,
'ஓம்' எனும் ஓர் ஒலியுள் அடங்குதல் வேண்டும் என,
உணர்கிறது அவன் அறிவு.
உடன், 
பிரணவத்தைப் பகுத்து ஆராயத்தலைப்படுகிறான் அவன்.
அவ்வாய்வின் பயனாய்,
'அ', 'உ', 'ம்' எனும் மூன்றொலியின் கலப்பே,
'ஓம்' எனும் பிரணவமாம் எனும் உண்மை புலனாகிறது.
வாயைத்திறக்கப் பிறப்பது 'அ' எனும் ஒலி.
திறந்த வாயைக் குவித்து,
அவ்வொலியை நீடிக்கப் பிறப்பது 'உ' எனும் ஒலி.
வாயை மூடி, தோன்றிய ஒலியை முடிக்கையில்,
பிறப்பது 'ம்' எனும் ஒலி.
'அ' தோற்றம், 'உ' நிலைத்தல், 'ம்' முடிவு.
தோற்றம், நிலைத்தல், முடிவு கொண்டு ஒலிக்கும்,
இம்மூன்றெழுத்துக்களின் தொகுப்பான ஷஓம்| எனும் பிரணவம்,
மேற்சொன்ன இம்மூவியல்புகளையும் தன்னுள் அடக்கியது.
இம்மூவியல்புகளையும் கொண்ட பிரணவத்திலிருந்து,
உதித்த உலகும் இம்மூவியல்புகளையும் கொள்ளுமாம்.
தோற்றம், நிலைத்தல், முடிவுஎனும் இம்முத்தொழில்களும்,
இறைவன்தன் விளையாட்டாய் நிகழ்வன.
மேற்சொன்ன உண்மைகள் புலனாக,
இம்மூவியல்புகளும் பொருந்திய பிரணவ வடிவான ஒரு சொல் கொண்டே,
தன் கடவுள் வாழ்த்தைத் தொடக்க நினைக்கிறான் கம்பன்.
உலகம் எனும்சொல் அவன் மனத்துள் மீண்டும் உதிக்கிறது.
இச்சொல்லின் முதலெழுத்து 'உ', முடிவெழுத்து 'ம்',
'அ' அனைத்தெழுத்துக்களுள்ளும் கலந்து நிற்பது.
இஃதுணர, உலகம் எனும் சொல்லே,
பிரணவமாய்க் கம்பன் காதில் ஒலிக்கிறது.
அதுவுமன்றி,
தன்காவியம் அறம் உணர்த்தி நிலைக்கவேணடும் என்ற,
விருப்புக் கொண்ட அவனுக்கு, இம்முத்தொழில்களுள்ளும், 
நிலைத்தலைக் குறிக்கும் உகரம் முன்னிற்கும் உலகம் எனும் சொல்,
மேலும் விருப்புண்டாக்க,
எண்ணத்தில் உதித்த அக்கருத்தை வண்ணமாக்கி,
அவன் கை எழுத்தாணி,
'உலகம்'எனும் அச்சொல்லையேமீண்டும் அழுத்தி எழுதிற்று.
♠♠
(தொடரும்)

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்