'யாவர் மாணவர்?' பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்

டந்த வார உகரத்தில் இடப்பெற்ற 'யாவர் ஆசிரியர்?' பதிவைப் பார்த்து ஒருசில நண்பர்கள் 'ஆசிரியர் எப்படி இருக்க வேண்டுமென்றுதான் எல்லோரும் சொல்கிறீர்களே. மாணவரைப் பற்றி ஒன்றும் இல்லையா?' என்று தொலைபேசினார்கள்.
ஏன் இல்லாமல் ... அவர்களை அவ்வளவு இலேசில் நன்னூலாசிரியர் விட்டுவிடுவாரா? எனவே இந்த வாரம் அவர்களைப் பற்றி.
மாணவர்களைப் பற்றிக் கூறவிழையும் நன்னூல் ஆசிரியர், அவர்களின் தரம், திறன் என்பவற்றின் அடிப்படையில் அவர்களை,
தலை மாணாக்கர் (இன்றைய அர்த்தத்தில் விரைவாகக் கற்கும் மாணவர்)
இடை மாணாக்கர் (சராசரி மாணவர்)
கடை மாணாக்கர் (மெல்லக் கற்போர்)
என மூவகைப்படுத்திப் பேசுகின்றார்.

முதலில், தலை மாணாக்கர் பற்றிக் குறிப்பிட விழையும் அவர், இரு உவமைகள் வாயிலாக அவர்தம் இயல்புகளை உணர்த்த விழைகின்றார். அவ்வுமைகள் அன்னம், ஆ என்பன. அன்னம், பாலோடு நீர் கலந்து வழங்கினால், நீர் ஒழியப் பாலை மட்டும் உண்ணும் என்பது இலக்கிய வழக்கு. ஆசிரியர் வழங்கும் பல விடயங்களில் இருந்து, அன்னம் போன்று அவசியமானதை மட்டும் கிரகிக்க வல்லவர் தலை மாணாக்கர் என்பது நன்னூலார் கருத்து.

அடுத்து, ஆ என்பது பசு. பசுவின் இயல்பு, ஓர் இடத்தில் உணவு கிடைத்து இலையை உண்ணின், வேண்டியளவு உணவை அங்கேயே உண்டு, பின் அமர்ந்து இரை மீட்டும். சமிபாடு அடைந்ததன் பின்பே, மற்ற உணவை நாடும். தலை மாணாக்கரும் ஓர் ஆசிரியரிடம் ஒரு விடயம் பற்றிக் கற்று, பூரணமாக உள்வாங்கி, கிரகித்துக்கொண்ட பின்பே அடுத்த விடயத்தை நாடுதல் சிறப்பானதாக இருக்கும். (ஓடி ஓடிப் பல தனியார் வகுப்புகளில் முகங் காட்டும் மாணவர்கள் மன்னிக்க).

இடைத்தரமான மாணவர்களைப் பற்றிப் பேசப் புகுந்த பவணந்தியார், அவர்கள் மண்ணையும் கிளியையும் போன்றவர்கள் எனச் சுட்டுகின்றார். விவசாயிகள் முயன்று வருந்திப் பயிர் செய்தல், அவர்கள் முயற்சியளவுக்குப் பயன் செய்ய வல்லது மண்ணாகிய நிலம். அவ்வாறு, ஆசிரியர் வருந்திக் கற்பிக்கும் அளவுக்கே திறன் வெளிப்படுத்துகின்றவன் இடை மாணாக்கன். 

இவ்வாறே, அடுத்து, கிளி எனும் உவமை மூலமாக, சொல்லிக் கொடுத்த ஒன்றை அப்படியே திருப்பத் திருப்பச் சொல்லும் இடை மாணாக்கனது இயல்பு காட்டப்பட்டுள்ளது.
தலை, இடை மாணாக்கர்களுக்கு, தலா இரண்டு உவமைகளைக் கூறிய பவணந்தியார், கடை மாணாக்கர் தம் இயல்பை,
இல்லிக்குடம்
ஆடு
எருமை
நெய்யரி

ஆகிய நான்கு உவமைகள் மூலமாகவும் சுட்டுகின்றார்.
இல்லிக்குடம் என்பது, நீரை வார்க்க வார்க்க ஒழுகவிடும் ஓட்டைக் குடம். கற்பிக்கக் கற்பிக்க, கற்பித்த விடயங்களை மனதில் பதியாது மறந்துவிடும் இயல்புடையோர், இங்கு ஓட்டைக் குடத்தைப் போன்றவர்கள் எனக் கூறப்படுகின்றனர். இவ்வியல்புடையோர் மாணவர்களுள் மூன்றாம் நிலையினராகவே கொள்ளப்படுவர்.
'ஆடு ஒரு செடியிலே தலை நிறைந்திருந்தாலும் வயிறு நிறைய மேயாது செடிதோறும் போய் மேய்தல் போல,' கல்வியாற்றில் பெரிதும் சிறப்பில்லா மாணவர் ஓர் ஆசிரியர் இடத்து, சிறந்த கல்வி இருந்தாலும் அவரிடம் சென்று ஆழமாகக் கற்றுக் கொள்ளாமல், பல இடமும் சென்று கொஞ்சம் கொஞ்சமாக கல்வியைப் பெற நினைப்பர். இவ்வியல்பை, 'ஒன்றிடை ஆர உறினும் குளகு சென்று சென்றருந்தல் ஆட்டின் சீரே' என்னும் சூத்திரம்.
அடுத்து, குளத்து நீரைக் கலக்கிக் குடிக்கும் எருமைபோல, கற்பிக்கும் ஆசிரியரை வருத்தி (ஐயையோ!) பாடங் கேட்கும் மாணவரை, எருமை என்னும் உவமை மூலம் நன்னூலாசிரியர் காட்டுகின்றார்.

நிறைவாக, நெய்யரி எனப்படும் பன்னாடை போன்ற மாணவர்கள், சுட்டப்படுகின்றனர். முன்பு மக்கள் வாழ்வியலில் பன்னாடை, வடிதட்டாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளது. பன்னாடையானது, தேன் போலும் நல்லவற்றை கீழே வடியவிட்டு, அத்தேனுள் மிதக்கும் அவசியமில்லாத பொருள்களைத் தான் வைத்திருக்கும். மூன்றாம்நிலை மாணவர்களும், ஆசிரியர்கள் கூறும் அவசியமான – அறிவார்ந்த - விடயங்களைத் தம்மிடமிருந்து செல்லவிட்டு, அவசியமில்லாத செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டிருப்பர்.
இவ்வாறு, ஓட்டைக்குடம், ஆடு, எருமை, பன்னாடை போன்றவற்றின் இயல்புடைய மாணவர் தம்மை மென்மேலும் அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டியோராவர் என்பதே நன்னூலாசிரியரின் குறிப்பாகும். 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்