'மனதை ஈர்க்கும் ஒற்றை ஒளிக்கீற்று: தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல்' - பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-

னிமைப்படுத்தல் காலத்தில் நாங்கள் தனிமைப்படாதிருக்கவெனச் செய்திகளின் நட்பும் துணையும் தேவைப்பட்டன. எங்கு கொரோனா தொற்றியது? எத்தனை பேருக்குத் தொற்றியது? என, செய்திகளைப் பார்ப்பதிலேயே தனிமைக் காலம் கழிய நேரிட்டது. நாளாகநாளாக அதுவே ஒரு வியாதியாகி விடுமோ? என்ற பயங்கூட வந்துவிட்டது. அவ்வாறு ஆகாமல் பார்த்துக் கொண்ட சில முக்கிய பிரமுகர்களுக்கு நன்றி பாராட்ட வேண்டும்.

அந்த வகையில் உலகசுகாதாரப் பணியகத்துக்கான நிதியை நிறுத்திய அமெரிக்க அதிமேதகு ஜனாதிபதி டிரம்ப், எந்தச் சர்வதேச அமைப்பிலிருந்தும் இலங்கை வெளியேறப் பின்நிற்காது என்ற நமது அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய, தமிழ்க் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுக்கு முன்பே இருந்தது என்ற முன்னாள் பா. உ. சுமந்திரன் ஆகியோர் செய்திகளின் நாயகர்களாக வந்து, கொரோனாவின் பக்கம் இருந்த பார்வையைக் கொஞ்சமாவது திருப்பி, நமக்கு மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள். இந்தப் பரபரப்பான செய்திகளின் பின்னால் ஓடிச்சென்ற அவசரத்தில் நாம் கவனிக்க வேண்டிய சிலரைக் கவனிக்காமல் கடந்து வந்து விட்டிருக்கிறோம். அவர்களை ஒருமுறை நின்று நிதானித்துத் திரும்பிப் பார்ப்பது, மக்களாகிய நமக்கு அறமாகும்.

கவனிக்க வேண்டிய அவர்களுள் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராகிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஆவார். அவரை நான் அறிவேன். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீட மாணவனாக நானிருந்தவேளையில், அவரும் அவர் துணைவியாரும் பொறியியல் பீடத்தின் பேராசிரியர்களாக விளங்கினார்கள். அவருடைய துணிவு அப்போதே பிரசித்தமானது. விடுதலைப் புலிகள் காலம் அது. அவர்களது ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக – ஜனநாயகத்துக்குச் சார்பாக அன்றே, - குரல் கொடுத்தவர் அவர். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலரும் புலிகளுடன் ஒத்தோடியபோது, துணிந்து நியாயங்களைச் சொன்னவர். இதனால், பலரதும் வெறுப்புக்கும் ஆளானவர். அதைஅவர் என்றும் பொருட்படுத்தியதில்லை.

ஹூலை பற்றித் தெரிந்தோ அல்லது தெரியாமலோ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அவர்கள், தேர்தல் ஆணைக்குழுவில் அவரை நியமித்துவிட்டார். இன்று, அரச குழுக்களில் நியமிக்கப்படும் சிறுபான்மை இன உறுப்பினர்களின் நிலைமை யாவரும் அறிந்ததுதான். அரச நியமனம் என்ற உடனேயே மகிழ்கின்ற அவ்வுறுப்பினர்களுடைய ஆளுமையின்மை, குழுவில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையின உறுப்பினர்களின் முடிவை அப்படியே வழிமொழிவதாகத்தான் இருந்து வருகிறது. மேலும் தம்மை நியமித்த ஆட்சியாளருக்கு விசுவாசம் காட்டும் முடிவுகளை எடுப்பது. இதன்மூலம் இனிவரும் எதிர்காலத்தும் வேறுவேறு பதவிகளுக்குத் தம்மைத் தகுதியானவராக்கிக் கொள்வது. என்பதாய்த்தான் அவர்தம் நடவடிக்கைகள் இருந்துவருகின்றன. இப்படித்தான் ஹூலும் இருப்பாரென எதிர்பார்த்து நியமித்தார்களோ என்னவோ தெரியாது. ஆனால், அந்த நியமனம், உண்மையில் ஜனநாயகத்துக்கு ஒரு எதிர்பாராத அதிர்ஸ்டமென்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.

கொரோனா பரவத் தொடங்கியபோது, அதன் கொடுமை உணர்ந்த ஆட்சியாளர்கள், முதலில், ஊரடங்கு, போக்குவரத்துத் தடை, சமூக இடைவெளி, தனிமைப்படுத்தல் சட்டம் என மிகக் கடுமை காட்டினார்கள். பழைய பாராளுமன்றைக் கூட்ட மறுத்துப் பிடிவாதம் பிடித்த அவர்கள் பின்னர் விரைவாகத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதும், அவர்களைப் பொறுத்தவரை கொரோனாவின் கொடுமை குறைந்துவிட்டது.

அதன் பின்னர் கொரோனாவின் கொடிய பிடிதளர்ந்து விட்டதைக் காட்டுவதிலேயே அவர்கள் அதிகசிரத்தை கொண்டார்கள். எத்தனை பேருக்கு நோய் தொற்றியது என்பதை முதற் செய்தியாகச் சொல்லி வந்த ஊடகங்களும் அவர்கள் வழியில் தம்மைமாற்றி, எத்தனைபேர் குணமடைந்தார்கள் என்பதை முதற் செய்தியாக வாசிக்கத் தொடங்கின. வெளியே வராதீர்கள், தொடாதீர்கள், தொட்டால் கை கழுவுங்கள் என்று மாறிமாறி அறிவுரை புகன்று நின்ற சுகாதாரசேவை அதிகாரிகள் கூட, பின்பு மெல்லமெல்லக் குரல் மாற்றி, தேர்தலை நடாத்தலாம் என்று வழிமொழியத் தொடங்கிவிட்டார்கள்.

தேர்தலை வைத்தால், எங்குவைப்பது, அதற்குப் பாடசாலைகளைப் பயன்படுத்தலாமா? வாக்குகளை யார் எண்ணுவது? ஒருவர் தொட்டு இட்டவாக்குச் சீட்டை எண்ணுபவர் தொடலாமா? பலர் இணைந்து எண்ணும் பணியில் இடைவெளி பேணுவது எப்படி? என்பன இன்னமும் கேள்விகளாகவே இருக்க, தேர்தலை வைக்கலாம் என்கிறது சுகாதாரத்துறை.

இந்நிலையிலேதான், அரசியல்வாதிகளை வழிமொழியும் இன்ன பிற திணைக்களங்கள் போல அல்லாமல், நின்று நிதானிக்கும் தேர்தல் ஆணைக்குழுவினைப் பாராட்டத் தோன்றுகிறது. ஆட்சியாளரின் பாட்டு மாறிய உடனேயே, ஒத்தூதத் தொடங்கிவிட்ட ஏனைய நிறுவனங்களையும், அவற்றின் நிர்வாகிகளையும்போல அல்லாமல், நோய்த் தொற்றின் கடுமை, அதிலிருந்து மீளும் வழிமுறை என்பவற்றை மேலும் அறியவென நிதானிக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் உண்மையில் இன்று இலங்கையின் ஜனநாயகத் தூண்களைப் பலப்படுத்துவதாகவே அமைகின்றன. ஜனநாயகத் தூண்கள் என்று வழமையாகச் சொல்லப்படுகின்ற ஊடகம் முதலிய பலவும் பலவீனப்பட்டு விட்ட நிலையில், இதைச் சற்று உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

தேர்தல் ஆணைக் குழுவினர் என்றாலே வழமையாகக் கவனமீர்ப்பவர் அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரியதான். ஆனால், இம்முறை அவரும் ஒருசில இடங்களில் தளர்ச்சிகாட்ட, நாயகனாகத் தன்னை நிமிர்த்தியிருக்கிறார் ரட்னஜீவன் ஹூல். ஆணைக்குழுவின் தலைவர் மே மாதம் 28 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானியை வெளியிட ஆவல் கொண்டிருந்துள்ளார். இதுகுறித்து உறுப்பினர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். ஆனால், இதற்கு ஹுல் உடன்படவில்லை.

அதற்கான நியாயப்பாடுகளை அவர் தலைவருக்குக் கடிதம்மூலம் தெளிவாகத் தெரிவித்தார். புதியதிகதியை அறிவிப்பது தற்போதைய நோய் நிலைமையை மேலும் கடினமாக்கும்.  தேர்தல் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்தவுடன் நோய் பரவும் நிலைமை மேலும் மோசமாகலாம் என உண்மையான சமூக அக்கறையோடு ஹூல் தன் பதிலில் தெரிவித்திருந்தார்.

ஆணைக்குழுவின் தலைவரது 'பேஸ்புக்' பக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் எழுந்த கருத்தாடல் குறித்தும் தன் கருத்தை ஹூல், அக்கடிதத்தில், உறுதிபட எடுத்துச் சொல்லியுள்ளார். தேர்தல்கள் ஆணைக் குழுவிற்குள் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்களை, அதற்கு முன்னதாக ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவது தக்கது அல்லவெனவும் தலைவருக்கு, அவர் சுட்டிக்காட்டினார். இவை, தலைமையையும் காத்து, ஜனநாயகத்தையும் காக்கின்ற ஓர் உண்மை உறுப்பினரின் நேரிய நடவடிக்கைகளுக்கு முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கன.

அதுமட்டுமல்லாமல் தேர்தலை வைக்கலாமா? என ஆராய்தவற்காக நடைபெற்ற கூட்டத்துக்கு, அதிகளவில் படைகளின் பொறுப்பதிகாரிகள் அழைக்கப்பட்டபோது, இவர்களுக்குச் சுகாதாரம் பற்றி என்ன தெரியும்?' எனக் கேட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார் அவர்.

'இரட்டைப் பிரஜாவுரிமையுடைய ஹூல் எப்படி தேர்தல் ஆணைக் குழுவில் அங்கம் வகிக்கலாம்' என, பொதுஜன பெரமுன கட்சியின் சட்டத்தரணி ஒருவர் கேட்க, 'அதை என்னை நியமித்த முன்னாள் ஜனாதிபதியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்' எனத் துணிந்து கூறினார் ஹுல்.

தமக்குச் சார்பாகச் செயற்படாமல், உண்மைக்குச் சார்பாகச் செயற்படும் நிர்வாகிகளைத் தமது வழிப்படுத்த முடியாத இடத்து இயலாமையுள்ள அரசியலாளர் கையிலெடுக்கும் அடுத்த ஆயுதம் அவர்களை வசைபாடுவதுதான். என்னவென்று இல்லாமல் எதையாவது சொல்வது, அதன் மூலம் அவ்வுறுப்பினரை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது. இதனால், உறுப்பினரைத்தாமாக ராஜினாமாச் செய்யவைப்பது என்பவையே அவ்வரசியல்வாதிகளின் வழமையான வழிமுறைகள்.

இதுதான் ஹூலுக்கும் நடந்தது. நடக்கின்றது. 'தேர்தல்கள் ஆணைக் குழுவின் சாபக்கேடுதான் ஹூல்' என முன்னாள் அமைச்சர் ஒருவர் சொன்னதாகச் செய்திகள் வந்தன. இவர் ஐக்கியதேசியக் கட்சியின் செல்லப் பிள்ளை, தமிழ்க் கூட்டமைப்பின் முகவர், என இவருக்கும் பலபட அர்ச்சனைகள் நடந்தேறின. கூடவே தனிமைப்படுத்தல் விதிகளை மீறினாரென, குற்றஞ்சாட்டப்பட்டு அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இந்நிலையில், சாதாரணமாக, சிறுபான்மை இனத்தின் பிரதிநிதியான அரசஆணைக்குழுக்களில் உள்ள எந்தவொரு உறுப்பினரும் மனச் சலிப்புற்று, விரத்தியடைந்து ஏன் நமக்கு வம்புஎன அடங்கிப்போய்விடுவதே சகஜம். இந்நிலையிலேதான் 'போலியான குற்றச்சாட்டுக்களுக்கு அஞ்சவே மாட்டேன். சட்டத்தை மதித்துச் சுயாதீனமாகத் தொடர்ந்து செயற்படுவேன்' என ஹூல் விட்டுள்ள அறிக்கை நல்லோர்க்கு மேலும் மனக் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

நம் தமிழ்த் தலைமைகளிடம் இன்று பெரும்பாலும் காணக் கிடைக்காத துணிவும் ஆளுமையும் ஒரு பேராசிரியரிடம் காணப்படுகின்றபோது மகிழ்ச்சி உண்டாகிறது. போலிமுகத்தோடுதன் தேவைக்காகக் கீழ்த்தரமான அரசியல் தன்னை எதிர்க்கின்றபோதும் அஞ்சாது நிமிர்கின்ற நம் இனம் சார்ந்த ஒற்றை மனிதனைக் காணும்போது, மனது நிம்மதியால் நிறைகிறது. போரினால் தமிழினத்தின் ஆளுமை முழுதுமாய் அறுபட்டு விடவில்லை எனும் சிறு ஒளிக் கீற்று நம்பிக்கை தருகிறது. அந்தக் கீற்று ஒளியைப் பாராட்டுதல் மானுட தருமம்.

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்