'யாரே முடியக் கண்டார்?'-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகில் சமயங்கள் பலவானாலும்,
தெய்வம் என்பது என்றும் ஒன்றேயானதாம்.
மனித மனப் பிரிவுகளால்த்தான்,
உலகெங்கும் தெய்வம் பலவாய்ப் பேசப்படலாயிற்று.
ஒருவர்க்கொருவர் தொடர்பின்றி தேசங்களாற் பிரிவு பட்டு,
தனித் தனியிருந்த மனிதக்  குழுக்கள்,
தத்தம் அறிவெல்லைக்கு உட்பட்டு,
இறை எனும் பொதுச் சிந்தனையை ஏற்றுக் கொண்டதும், நாடியதும்,
நினைக்கவொண்ணா ஆச்சரியமேயாம்.

🐦 🐦 🐦

தனித்தனியாய் இருந்தும் உலகில் வாழ்ந்த,
அத்தனை பிரிவினரிடமும் இறை என்னும்,
இவ் ஒருமித்த சிந்தனை தோன்றியது எங்ஙனம்?
இச்சிந்தனை எவராலும் ஊட்டப்பட்ட செயற்கைச் சிந்தனையா? 
அன்றி தானாய் அனைவரிடமும் எழுந்த இயற்கைச் சிந்தனையா?
ஆராயப்பட வேண்டிய கோள்வி இது.

🐦 🐦 🐦

தொடர்பில்லாத அனைவரிடமும் ஒருமித்துக் கிளம்பியதால்,
இச்சிந்தனை இயற்கையே! என்பது தெளிவாகிறது.
இந்த, எல்லோர்க்கும் பொதுவான ஒரே பரம்பொருளை,
தத்தம் பழக்கவழக்கம், நாகரிகம், அறிவு வளர்ச்சி, 
ஆன்ம முதிர்ச்சி போன்ற பேதங்களால் வேறுபடுத்தி,
வௌவேறாய்க் கண்டு அனைவரும் வழிபடத் தொடங்கினர்.
பின்னாளில், அவரவர் வகுத்த வழிபாட்டு முறைகள் சமயங்களாயின.
இனப்பிரிவுகளின் பெருக்கத்தால் சமயங்களும் பெருகின.
கால வளர்ச்சியால் அவ் இனக் குழுமங்களுக்குள் தொடர்புகளேற்பட,
தத்தம் சமயமே உயர்ந்ததெனும் சாதிப்பு,
பிடிவாதமாகிப் பின் பூசல்களாயிற்று.

🐦 🐦 🐦

தாம் வகுத்த இறையையே முழுமையாய் விளங்க முடியாதோர்,
பிறரின் கொள்கையைப் பிழையென மறுத்து நின்றனர்.
மோதியவர்களின் உலகியல் வெற்றி அவர்களின் சமய வெற்றியாயிற்று.
சமயத்தால் உள்ளொடுங்க வேண்டியவர்கள், 
அச்சமய வெற்றிக்காக எண்ணங்களால் வெளி விரிந்து,
மீண்டும் உலகியல் வயப்பட்டார்கள், மாயை வென்றது!

🐦 🐦 🐦

இம் மோதல்களைக் கடந்து,
இறையென்னும் பொருள் தொடர்ந்தும் சிந்தனைக் கெட்டாமலே நின்றது.
அப்பொருளை, ஒன்றியவர் உணர்ந்தனர்.
தேடியவர் காணாமல் திகைத்தனர்.
உணர்ந்தவர் இருந்ததால்,
அப்பொருளை இல்லையென்று சொல்லவும் முடியவில்லை.
தேடியவர் காணாததால்,
அப்பொருளை உளதெனச் சொல்லவும் முடியவில்லை.
இதனால் இறை எனும் சிந்தனை அறிவு கடந்து ஆச்சரியம் தந்தது.

🐦 🐦 🐦

மணிவாசகர் போன்ற ஞானியரே,
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க.
நூலறிவுணரா நுண்ணியோன் காண்க
என,
அப்பொருளின் தேடற்கருமையை ஒப்புக்கொண்டனர்.
மொத்தத்தில்,
முழுமையாய் இறைவனை அறிந்து விட்டேன் என்பான்,
எந்த மதத்திலும் இல்லாது போயினன்.

🐦 🐦 🐦

அப் பொருளைக் காணாத் தலைப்பட்டவர்,
தாம் தாம் கண்ட அளவிலேனும்,
அதனை முழுமையாய்க் காண முடியாமல் தவிர்த்தனர்.
இன்று வரை இதுவே இறைத்தேடலின் முடிவாம்.

🐦 🐦 🐦

கம்பநாட்டாழ்வான்
காணொணாதது தெய்வம் எனும் இக் கருத்தை 
தனது இராமகாதையின் பால காண்டத்தின் உலாவியற் படலத்தில் வரும்,
ஓர் காட்சியில் அழகுற எடுத்துக்காட்டுகிறான்.
அக்காட்சியினைக் காண்பாம்.

🐦 🐦 🐦

மிதிலை,
வில்லொடித்த பின் உலாவரும் இராமனை,
மாடங்களில் நிற்கும் பெண்கள் கண்டு களிக்கின்றனர்.
இராமனின் தோள் கண்ட ஒருத்தி,
அதன் வலிமை கண்டு மயங்கி, அதனையே தொடர்ந்தும் கண்டு நிற்கிறாள்.
தன் கண்பார்வையில் நின்;று இராமன் மறைந்ததும்
தோள் கண்டு மயங்கிய அவள்,
இராமனது மற்றைய அவயவங்களைக் காணத் தவறினேனே என வருந்துகிறாள்.
இஃதே போல்,
இராமனின் தாளினைத் தனியே கண்ட ஒருத்தியும்,
தடக்கையைத் தனியே கண்ட ஒருத்தியும்,
அவனது மற்றைய அவயவங்கள் காணாது மயங்கி வருந்தியதாய்,
கவிதை தொடங்குகிறது.
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே

🐦 🐦 🐦

தாடகையை வதைத்த தோள்கள்,
அகலிகைக்குச் சாப விமோசம் கொடுத்த தாள்கள்,
சீதைக்காகச் சிவதனுசு ஒடித்த கைகள் என,
இம்மூன்றும் பெண்களால் குறிப்பாய்க் கவனிக்கப்பட்டனவாம்.
இஃது உரையாசிரியர்களின் இரசனை விளக்கம்.

🐦 🐦 🐦

இவ்வாறு தாம் தாம் கண்ட, 
இராமனின் ஒவ்வோர் அங்கத்தை மட்டுமே 
அப்பெண்கள் கண்டு நின்றனராம்.
அதனால் இராமனை முழுமையாய்க் கண்டவர்,
எவருமிலர் என்கிறான் கம்பன்.
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?

🐦 🐦 🐦

அப்பெண்கள் இராமனை முழுமையாய்க் காணாமைக்குக் காரணம்,
அவர்களின் கண்ணின் குறைபாடோ? கேள்வி பிறக்கிறது.
அல்ல என்று பதில் தருகிறான் கம்பன்.
வாள் கொண்ட கண்ணார் என்று பெண்களை அவன் குறிப்பது,
நோக்கத்தோடு கூடிய வர்ணனையாம்.
வாளைப் போன்ற கூர்மையுடைய கண்களை உடையவர்கள் என்பது,
மேல்த் தொடருக்காம் பொருள்.
எத்துணைக் கூர்மையிருப்பினும், 
பரம்பொருளான இராமனைக் காணும் தொழில்,
கடைபோகாதன்றோ?
இப்பெண்களின் காணாமையை
மேற்சொன்ன சமய உண்மை கொண்டு உவமித்து,
பாடலை முடிக்கிறான் கம்பன்.
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்

🐦 🐦 🐦

தனித் தனி முறைமையைக் கொண்ட மதங்கள் கூறும்,
பலவான வடிவங்களுள் ஒன்றினையே காணும்,
குறித்த ஒரு மதத்தினரைப் போன்றனர் அப்பெண்கள் என்கிறான் கம்பன்.
இங்கு ஓர் கேள்வி பிறக்கிறது.
அப்பெண்கள் தோள், தாள், தடக்கை ஆகியவற்றைக் கண்டது,
தத்தம் சமயம் காட்டும் கடவுளின் உருவைக் கண்டதோடு ஒக்கும் என,
கம்பன் கூறுதல் பொருந்துமோ?
தோளும், தாளும், தடக்கையும் இராமனின் அங்கங்கள்தான் எனினும்,
அப்பெண்களால் அவை முழுமையாய்க் காணப்பட்டவை.
சமயங்களால் வகுக்கப்பட்ட அளவிலேனும்,
அவரவர் தெய்வத்தை முழுமையாய்க் காணுதல் இயலுமா? இயலாதன்றோ!
பரம்பொருளின் ஒரு பகுதியையேனும் நாம் முழுமையாய்க் காணின்,
சிற்றறிவால் அறியப்பட்டதாய மாசு இறைக்கு உண்டாகும்.
இஃது உண்மை விரோதம்.
எனவே, கம்பனின் உவமை பிழைக்குமன்றோ?
இதுவே கேள்வியாம்.

🐦 🐦 🐦

உரையாசிரியர்களிடமிருந்து பதில் பிறக்கிறது.
தோளும், தாளும், தடக்கையும் கண்ட பெண்கள்
அவ்வவ் அவயவத்தை முழுமையாய்க் கண்டதாய்
கம்பனின் சொற்கள் காட்டினும்,
அவற்றையும் அவர்கள் முழுமையாய்க் காணாமையையும்,
அச்சொற்கள் சுட்டியே நிற்கின்றன.
எங்ஙனம்?
தோளே கண்டார், தாளே கண்டார் எனும்
தொடர்களில் வரும் ஏகாரங்களுக்கு வினாப்பொருள் கொண்டால்,
அவற்றையும் அவர்கள் முழுமையாய்க் கண்டாரோ?
எனும் பொருள் பிறக்கின்றதன்றோ.
எனவே தோள், தாள், தடக்கை தாமும்,
அப்பெண்களால் முழுமையாய்க் காணப்படவில்லை எனும்,
பொருள் வெளிப்பட,
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்
எனும் கம்பனின் உவமை,
தத்துவத்தோடு முற்றாய்ப் பொருந்தி
இறையின் நிறையையும், காண்போர் குறையையும்
தெளிவுபட விளக்கி நிறைவு தருகிறது.

🐦 🐦 🐦

சாதாரண ஓர் காட்சியின் வர்ணனையில்,
இறை தத்துவத்தை நுட்பமாய் விளக்கம் செய்யும் கம்பனின் ஆற்றல் கண்டு,
நம் நெஞ்சம் மகிழ்ந்து போகிறது.

🐦 🐦 🐦

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்