'பிலவ வருடம் ஒளியுடன் வருகவே' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகெலாம் துயர் நீங்கிட நல் ஒளி
ஓங்கி எங்கும் உலகிருள் மாய்ந்திட
நலமெலாம் தளைத்தின்பம் பெருகிட
நல்லவர் மனம் நாளும் சுகித்திட
விலையிலா அறம் நின்று இம் மண்ணிடை
வெல்லும் தன்மையால் வீழ்ந்திட மறமதும்
பிலவ வருடம் ஒளியுடன் வருகவே 
பேறெலாம் இவ் வுலகினிற்கருள்கவே.
 
சின்ன 'நுண்மி'யின் செருவினிற் கஞ்சியே
செகமெலாம் இன்று சிதைந்து ஒடுங்கிடும்
வண்ண வண்ணமாய் வாழ்ந்த நம் வாழ்வெலாம்
வளமிழந்துமே வாடியே போயிடும் 
மண்ணை ஆண்டிட மற்றவர் வாழ்வினை
மாழச் செய்தவர் நாடெலாம் தோற்றுமே
எண்ணவும் முடியா நிலை எய்தியே 
இழிந்து வீழ்வதை எங்கு சென்றோதுவோம்?
 
இயற்கை அன்னையின் எழிலதைச் சிதைத்துமே
ஏற்றம் கொண்டிட நினைத்தவர் இன்றதன்
மயக்கும் மாயையில் மருண்டுமே நிற்கிறார்
மாண்டிடும் நிலைக்கஞ்சியே வாடுறார்
வியக்கும் நன்றதாம் இயற்கையின் ஆற்றலை 
வீணர்கள் பலம் வென்றிடக் கூடுமோ?
தயக்கமின்றியே தம் பிழை உணர்வரேல்
தாயென அவள் தாங்குவாள் அன்பினால்
 
உண்மையின் நல்லொளி உயர்ந்துமே தினம் தினம் 
ஓங்குக துன்பமும் ஒழிந்துமே உலகெலாம்
திண்மையும் அறமுமாய்த் திகழ்ந்துமே நிரம்புக
தேற்றமாய் அன்பது செகமெலாம் வளருக!
நன்மையும் தீமையை நலிந்திடச் செய்தலால்
நல்லவர் மனமெலாம் நாளுமே நிரம்புக!
வன்மையாம் துயர் நீங்கியே உலகெலாம் 
வாழ்ந்திடப் புத்தாண்டு வருகவே!
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்