"பகல் வந்த நிலா" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யர்ந்தோர் சொல்லும் பெண்மையின் நாற்குணங்களுள்,
'மடத்தையும்' ஒன்றாய்ச் சேர்த்தனர் நம் புலவோர்.
மடம் என்பது அறிவீனமாம்.
அறிவின்மையை பெண்மையின் இலட்சணமாய்க் கொள்ளும் இக்கருத்தை,
பெரும் புலவர்களும் அங்கீகரிப்பதால்,
தமிழுலகம் பெண்மையை இழிவு செய்ததென இன்று பலரும் பேசுகின்றனர்.
மேற்கூறிய நாற்குணங்களும்,
பெண்மையின் அகம் சார்ந்த இயல்பு என்பதை உணரின்,
இக்குற்றம் வலிந்து கூறப்படுவதாம் என்பது இலகுவாய் அறியப்படும்.
 
🐒 🐒 🐒
 
அறிவு பெண்ணுக்கும் உரியதே.
தமிழ்ப் பாரம்பரியப் பிரதிநிதியாய் இதனை அங்கீகரிக்கின்றான் கம்பன்.
தன் கருத்தை அயோத்திப் பெண்களில் பொருத்திக் காட்டுகிறான்.
அப்பெண்கள் கல்வியறிவும், செல்வ உரிமையும் பெற்றிருந்தமையை,
தெளிவாய் அவன் பாடல் சுட்டுகிறது.
 
பெருந் தடங் கண் பிறை நுதலார்க்கு எலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்
விருந்தும்,அன்றி,விளைவன யாவையே?
 
🐒 🐒 🐒
 
இவ்வாறு பெண்கல்வியை அயோத்தியில் அங்கீகரிக்கும் கம்பன்,
பெண்களுக்கு கல்வி பொருந்தினும் அறிவு பொருந்தாது,
என்று உரைப்பாரை மறுத்து,
அறிவும் அவர்க்குப் பொருந்துமென உரைக்கு முகமாக,
கிட்கிந்தா காண்டத்தில்,
தாரையெனும் பாத்திரத்தை அமைத்துக் காட்டுகிறான்.
 
🐒 🐒 🐒
 
கிட்கிந்தையின் தலைவன் ஆற்றல் மிக்க வாலி.
இவன் மனைவியே தாரை.
சாதாரண அறிவுநிலை மட்டுமன்றி,
அரச நிர்வாக ஆளுமைத் திறனும் கொண்டவளாய்,
அறிமுகத்திலேயே அவளை நமக்குக் காட்டுகிறான் கம்பன்.
அவ்விடம் காண்பாம்.
 
🐒 🐒 🐒
 
இராமன் வாலியைக் கொல்வான் என்ற உறுதியில்,
அவன் ஆலோசனைப்படி வாலியைப் போருக்கு அழைக்கிறான் சுக்கிரீவன்.
பயந்தோடிய சுக்கிரீவன் தன் பெயர் சொல்லி அழைப்பது கேட்டு,
கொதித்தெழுகின்றான் வாலி.
சுக்கிரீவனைக் கொல்லும் முடிவோடு புறப்படுகிறான்.
அப்போது அவனின் அன்பு மனைவியாந் தாரை,
கொதித்தெழுந்த வாலியை இடைமறிக்கிறாள்.
 
ஆயிடை, தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேயிடைத் தோளினாள், இடை விலக்கினாள்
வாயிடைப் புகை வர, வாலி கண் வரும்
தீயிடை, தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்.
 
🐒 🐒 🐒
 
தாரையைக் கம்பன் அறிமுகம் செய்யும் இடம் இது.
கோபத்தால் உணர்ச்சி மேலிட,
அறிவு மழுங்கியவனான வாலியிடம்,
தாரை மிகத் தெளிவுடன் பேசத் தொடங்குகிறாள்.
'தோற்றோடிய சுக்கிரீவன் இப்போது நின்னைப் போருக்கு அழைக்கின்றான்.
அவன் நின்னினும் வலியனாதல் என்றும் சாத்தியமன்றாம்.
நின்னை வெல்லுதற்கருமை உணர்ந்தும் போருக்கு அழைப்பதால்,
இவ் அழைப்பு சிந்தனைக்குரியது.
அவனது இம்முரணான காரியம், காரணமின்றி நிகழ வாய்ப்பில்லை.
துணிந்த அவனது அழைப்பு,
அவனிற்கு நெடுந்துணை கிடைத்தமையை உணர்த்துகின்றதன்றோ?' என,
உண்மையை எடுத்துக் காட்டி,
உணர்ச்சி வயப்பட்ட வாலியை அறிவு வயப்படுத்த முயல்கிறாள் அவள்.
 
🐒 🐒 🐒
 
வாலியோ, தொடர்ந்தும் உணர்ச்சியின் பாற்பட்டு,
'தேவரும் அரக்கரும் என்னிடம் தோற்றபின் அவற்குத் துணை வருவார் யார்?
அவ்வாறே வரினும் என் வர பலத்தால், அவர் பலத்தின் பாதி என்னதாக மாற,
வந்தவரும் நலிவுற்று மடிவர், அஞ்சற்க,' எனக் கூறி.
மீண்டும் போருக்குச் செல்ல ஆயத்தமாகிறான்.
 
ஆற்றல் இல் அமரரும், அவுணர் யாவரும்,
தோற்றனர்  எனையவர் சொல்லற் பாலரோ?

கூற்றும், என் பெயர் சொலக் குலையும்  ஆர், இனி
மாற்றவர்க்கு ஆகி வந்து, எதிரும் மாண்பினார்?
 
பேதையர் எதிர்குவர் எனினும், பெற்றுடை
ஊதிய வரங்களும், உரமும், உள்ளதில்
பாதியும், என்னதால்  பகைப்பது எங்ஙனம்?
நீ, துயர் ஒழிக! என, நின்று கூறினான்.
 
🐒 🐒 🐒
 
தான் குறிப்பாலுணர்த்த வாலி உணராதது கண்டு,
தானறிந்த செய்தியை வெளிப்படையாகப் பேசத் தலைப்படுகிறாள் தாரை.
'சுக்ரீவற்கு, உன் உயிர் கோடலுக்குத் துணையாய்,
உடன் வந்தான் அயோத்தி இராமன்.
ஒற்றர் வாயிலாய் இஃதறிந்தேன்.'
என உரைக்கின்றாள் அவள்.
 
அன்னது கேட்டவள், அரச! ஆயவற்கு
இன் உயிர் நட்பமைந்து இராமன் என்பவன்
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் என
துன்னிய அன்பினர் சொல்லினார் என்றாள்.
 
🐒 🐒 🐒
 
இவ்விடத்திலே நாம் கவனிக்கத் தக்கதொன்று உண்டு.
இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சில மணி நேரம் முன்னரே,
இராமன் சுக்கிரீவனோடு நட்புறவு கொள்கிறான்.
இக் குறுகிய நேரத்தில் அந்நட்பு, தாரைக்குத் தெரிந்ததெனில்,
ஆற்றல்மிகு உளவுப் படையொன்றை,
அவள் தனக்கெனத் தனித்து வைத்திருந்தமை தெளிவாகின்றது.
இச்செய்தி அரசனாம் வாலிக்குத் தெரிவதற்கு முன் தாரைக்குத் தெரிந்தமை,
அவளது உளவுப்படையின் வன்மையையும் வெளிப்படுத்துகின்றது.
தன் அறிவாற்றலால் அந்தளவு அரசியலில் ஈடுபட்டிருந்தாள் தாரை என்பதை,
கம்பன் நமக்குக் குறிப்பால் உணர்த்துகின்றான்.
 
🐒 🐒 🐒
 
வாலியோ, அறிவு சார்ந்த தாரையின் கருத்தை நிராகரித்ததோடு அல்லாமல்,
அவளறிவைப் 'பெண்ணறிவு' என நையாண்டியும் செய்கின்றான்.
 
உழைத்த வல் இருவினைக்கு ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினிற்கு அறத்தின் ஆறெலாம்
இழைத்தவர்க்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய்?
பிழைத்தனை, பாவி! உன் பெண்மையால் என்றான்.
 
தாரையின் நுண்ணறிவைப் பெண்ணறிவு எனப் பேசிய வாலி,
காதையின் முடிவிலே மாண்டான் எனக் காட்டி,
தாரையின் அறிவுத் திறத்தை உறுதி செய்கிறான் கம்பன்.
 
🐒 🐒 🐒
 
இக்காட்சியில் தாரையின் நுண்ணறிவுத் திறம்,
அதனையும் விஞ்சி நின்ற வாலியின் உணர்ச்சித் திறத்தால் தோல்வியுறுகிறது.
அறிவிருப்பினும் ஆண்மையை மீறி பெண்மை வெற்றி காணல் அரிதென,
மறுப்பாளர் கூறுதல் கூடும் என உணர்ந்த கம்பன்.
ஆண்மையின் உணர்ச்சி நிலையை,
பெண்மையின் அறிவு வெற்றி பெறும் திறத்தை,
மற்றோர் காட்சியில் தாரை மூலமே எடுத்துக் காட்டுகிறான்.
 
🐒 🐒 🐒
 
மாரி காலம் முடிந்ததும் சீதையை மீட்டுத் தருவதாய்த் தந்த வாக்கினை,
போதையால் சுக்கிரீவன் மறக்க, 
கோபமுறுகின்றான் இராமன்.
வாலியைக் கொன்ற வில் இன்னும் என் கைவசமே உளது என உரைக்கும்படி,
இலக்குவனை அனுப்பி வைக்கிறான்.
கோபத்தை இயல்பாய்க் கொண்ட இலக்குவன்,
அண்ணனின் கோபங்கண்டு கொதித்து, 
கிட்கிந்தையையே அழிப்பான் போன்று பொங்கி வருகின்றான்.
 
🐒 🐒 🐒
 
எல்லையில் நின்ற காவற் குரங்குகள் அவன் கோபங் கண்டு,
அவனைத் தடுக்கும் நோக்குடன் பாறைகளாற் பாதையினை மறைக்க,
இலக்குவன் கோபம் மேலும் அதிகரிக்கின்றது.
அக்கோபத்தால் குரங்குகள் அந்தக் கற்தடுப்பை,
உதைத்துப் பொடியாக்கி முன்னேறுகிறான் அவன்.
செய்தி அறிந்த வாலியின் புதல்வன் அங்கதன்,
நிலைமை உணர்ந்து சுக்கிரீவனிடம் சென்று சேர்கிறான்.
போதையில் ஆழ்ந்திருந்த சுக்கிரீவனோ,
தனை மறந்து குரங்குப் பெண்களுடன்,
மைந்தன் காணக் கூடாத நிலையில் கிடக்கிறான்.
 
🐒 🐒 🐒
 
அச்சூழலிலே, சிறிய தந்தை பயன் செய்யான் என்பதறிந்து,
அறிஞனாம் அனுமனிடம் வருகிறான் அங்கதன்.
இலக்குவன் கோபத்தைத் தணிக்கக் கூடியவள் தாரையே என்பதுணர்ந்து,
இருவரும் தாரையிடம் சென்று நடந்தது உரைக்க,
வாலி மரணத்தால் ஏற்பட்ட தனது தனிப்பகை நோக்காது,
'நல்லாருடன் உறவு கொள்ளத் தக்கவர் அல்லீர் நீர்' என,
அவர்களைக் கடிந்த தாரை,
பின்னர் நாட்டு நலம் நோக்கி,
இலக்குவனைத் தடுக்கும் பொறுப்பேற்கிறாள்.
 
🐒 🐒 🐒
 
இவ்விடத்தில் ஒரு தேசத் தலைவியாய்,
தன் சொந்த உணர்ச்சிகளைப் புறந்தள்ளிய ஓர் அறிவுப் பெண்ணாய்,
கம்பனால் காட்டப்படுகிறாள் தாரை.
அக்கடுமையான சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாய், 
அறிவு சார்ந்து, மிக நுண்மையாகத் திட்டமிடுகிறாள் அவள்.
இலக்குவனைத் தடுக்கும் நோக்குடன் அழகிய இளம் குரங்குப் பெண்களை,
இலக்குவன் வரும் வழியை அடைத்து நிறுத்தி,
அவர் பின்னால் தான் மறைந்து நிற்கிறாள்.
 
🐒 🐒 🐒
 
தாரையின் அறிவாற்றலை அணு அணுவாய் எடுத்துக் காட்டி,
நம்மைக் கம்பன் இரசிக்கச் செய்யும் இடம் இது.
கோபமாய் வந்த இலக்குவன்,
பாதையை மறைத்துக் குரங்குப் பெண்கள் நிற்பது கண்டு,
சற்றுத் தயங்குகிறான், அவன் வேகம் குறைகிறது.
பெண்களை விலக்கிச் செல்லவோ, நேராய்க் காணவோ,
அவன் பண்பட்ட மனம் பின்வாங்குகின்றது.
நாண மேலீட்டினாலே கோபம் சற்றுத் தணிந்து விட,
காலாம் நிலம் கீறி முகம் சாய்த்து, நிற்கிறான் அவன்.
மாமியார்  கூட்டத்தில் வந்த மருகன் என நின்றான் இலக்குவன் என,
அவன் நிலையை உவமிப்பான் கம்பன்.
 
தாமரை வதனம் சாய்த்து,  தனு நெடுந் தரையில்  ஊன்றி,
மாமியார் குழுவின் வந்தானாம் என, மைந்தன் நிற்ப
பூமியில் அணங்கு அனார்தம் பொதுவிடைப் புகுந்து, மென் தோள்
தூமன நெடுங்கண் தாரை, நடுங்குவாள், இனைய சொன்னாள்
 
🐒 🐒 🐒
 
மனத்துள் நடுங்குவாளே எனினும்,
அவன் வேகம் சற்றுத் தணிந்தமை கண்டதால்,
மங்கையரை விலக்கி முன்வந்த தாரை,
இலக்குவனை நோக்கிப் பேசத் தொடங்குகிறான்
'பல்லாண்டு தவமியற்றினும்
நின் வருகையெனும் இப்பேறு
இந்திரற்கும் கிடைத்தற்கு அரியதன்றோ?
நின் திருவடி பட்டதால் எம்மனை வாழ்வு பெற்றது.
நாமும் வினை தீர்ந்து உய்வடைந்தோம்.
இதைவிட உறுதி எமக்குண்டோ?' என்கிறாள் அவள்.
 
🐒 🐒 🐒
 
அழிக்க வந்தவனை நோக்கி,
நின் வரவு வாழ்வு தந்தது  எனக் கூறுவதன் மூலம்,
அழிக்கும் எண்ணம் அவன் நெஞ்சில் இருப்பின்,
அதை நீக்க நினைக்கும் தாரையின் நுண்ணறிவு வியப்புத் தருகிறது.
 
🐒 🐒 🐒
 
அது மட்டுமன்றி, மகனே! என இலக்குவனை அழைத்து,
தாயன்பை அவனுள் தூண்டச் செய்கிறாள் அவள்.
தொடரும் அவளது பேச்சு,
அற்புதமாய், மிகுந்த அறிவாற்றலுடன் அமைகிறது 
 
அந்தம் இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி,
இந்திரன் முதலினோரால் எய்தலாம் இயல்பிற்று அன்றே?
மைந்த! நின் பாதம் கொண்டு எம் மனை வரப்பெற்று, வாழ்ந்தேம்
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம், உறுதி வேறு இதனின் உண்டோ?
 
🐒 🐒 🐒
 
தாரையின் பேச்சு இலக்குவனை மேலும் அமைதிப்படுத்த,
அவன் வந்த விபரம் தெரியாதவள் போல்,
'வீரனே!
கோபமான நில் வருகையின் காரணத் தெரியாது.
மயங்குகிறகு நம் சேனை.
நீ வந்த காரணம் உரைக்க வேண்டும்'-என வினவுகிறாள்.
வழியடைத்த குரங்குச் சேனையின் அறியாமையை,
அச்சத்தின் செயலென மறைமுகமாக உணர்த்தி மன்னிக்கச் செய்கிறாள்.
வெய்தின் நீ வருதல் நோக்கி, வெருவுறும் சேனை,வீர!
செய்திதான் உணர்கிலாது, திருவுளம் தெரித்தி என்றாள்.
 
🐒 🐒 🐒
 
இப்போது, இலக்குவன் கோபம் மேலும் தணிகின்றது.
ஆத்திரத்தின் பகை, அன்பன்றோ? அந்த அன்பு தூண்டப்படின்,
இலக்குவன் சினம் முற்றும் அழியும் என நினைந்த தாரை,
அதற்கான உபாயந் தேடுகின்றாள்.
இராமனைப் பிரியாதவன் எனும் பாராட்டு,
இலக்குவனை மகிழ்விக்கும் என்பதறிந்து,
'இராமனை விட்டு நிமிடமும் பிரியாத நீ,
அவனைத் தனியனாய் விட்டு இங்குற்றதென்ன?' என வினவுகின்றாள்.
ஐய! நீ அழி வேந்தன் அடியினை பிரிகலாதாய்
எய்தியது என்னை? என்றாளற் இசையினும் இனிய சொல்லாள்.
 
🐒 🐒 🐒
 
அவள் எண்ணப்படியே அக்கூற்று இலக்குவனை மகிழ்விக்கிறது.
இசையினும் இனிய சொல்லாள் என்னுந் தொடரால்,
அவன் மனப் பிரதிபலிப்பைக் கம்பன் சுட்டுதல் கவனிக்கத்தக்கது.
தாரையின் சொற்கள் மற்றோர் உணர்வையும் இலக்குவனிடம் தூண்டுகின்றன.
அயோத்தி விட்டுப் புறப்படும் போது இலக்குவன் தாயான சுமித்திரை,
இராமன் பின்னால் தம்பியெனச் செல்லாதே. அடியாளின் ஏவல் செய்தி, 
அவன் இந்நகர்க்கு வரின் இங்கு வா!
இல்லையேல் முன்னம் முடி என்றுரைத்த வார்தைகள்,
அவன் காதில் ஒலிக்கின்றன.
தளர்ந்திருந்த இராமனைத் தனியே விட்டு வந்த தன் தவறுணர்கிறான்.
தன் தாயே நேரில் வந்து,
இராமனைப் பிரிந்து வந்ததேன்? என்று கேட்குமாப் போலத் தோன்ற,
அத் தாய் நினைவால் மனதுள் அருள் சுரந்து சீற்றம் முற்றாய் அறுகிறது.
 
🐒 🐒 🐒
 
அன்பு உந்த, இத்துணை அன்போடும் அறிவோடும் பேசும் இவள் யார்?
எனக் காணும் எண்ணத்தோடு, மெல்லத் தலை நிமிர்ந்து பார்க்கிறான் இலக்குவன்.
வாலியைப் பிரிந்ததால் விதவைக் கோலம் பூண்டு,
சேலையால் உடல் போர்த்தி நிற்கும் தாரையைக் காண்கிறான்.
அவள் தோற்றத்தால் தாயாரின் நினைவு தூண்டப்பட,
பொங்கிய கண்ணீரோடு கோபமும் முற்றாய் வடிந்து விடுகிறது.
 
ஆர் கொலோ உரை செய்தார்? என்று அருள் வர, சீற்றம் அஃக
பார் குலாம் முழு வெண் திங்கள், பகல் வந்த படிவம் போலும்
ஏர் குலாம் முகத்தினாளை, இறை முகம் எடுத்து நோக்கி
தார் குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான்.
 
🐒 🐒 🐒
 
இவ்விடத்தில் தாரையின் பெண்ணறிவு,
ஆண்மையின் உணர்ச்சி நிலையை நெறிப்படுத்தி,
வெற்றி கொள்வதாய்க் காட்டி,
தன் எண்ணக் கருத்தை முற்றுவிக்கிறான் கம்பன்.
 
🐒 🐒 🐒
 
மேற் பாடலில், பகல் வந்த நிலா எனக் கம்பன் தாரையைச் சுட்டுவது,
நோக்கத்தோடு கூடிய உவமையாம்.
சூரியன் இல்லாவிடத்தில் மெல்லிய வெளிச்சம் தருவதே நிலவு.
சூரிய ஒளியின் முன் அதன் ஒளி இருப்பினும் வெளிப்படாது.
பெண்ணறிவும் ஆணறிவோடு ஒப்பிடும் போது,
சூரியன் முன் தோன்றிய நிலவே போல்,
வெளிப்படுதல் கடினம் என்பது பலர் கருத்தாயிருக்க,
அதை இந்த உவமையூடு மறுக்கிறான் கம்பன்.
 
🐒 🐒 🐒
 
இங்கோ, பெண்ணான தாரையின் அறிவு,
அனும, இலக்குவர் அறிவின் மேம்பட்டு ஒளிர்கிறது.
தனித்துத் தெரிகிறது.
சூரிய ஒளியில் மறையும் சந்திர ஒளிபோல மறையாது ஒளிவீசி நிற்கிறாள் அவள்.
சூரிய ஒளியை மழுங்கச் செய்து இந்;நிலவு பகலிலும் தன்னைத் தனித்துக் காட்டுகிறது.
இம் முரண் நிலையை உணர்த்தவே தாரையை,
பகல் வந்த நிலா எனச் சுட்டுகிறான் கம்பன்.
பெண்மையின் அறிவைப் போற்றும் கம்பனின் உயர்வு நினைந்து மகிழ்கிறோம் நாம்.
 
🐒 🐒 🐒
 
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்