'இராமன் அவதாரபுருஷனே!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

'இராமன் அவதாரபுருஷனே!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகறிந்த இவ்வுண்மைக்கு ஒரு கட்டுரையா?
சிலர் மனதில் கேள்வி எழும்.
காலம் இக்கட்டுரையை எழுதவைக்கிறது.
கம்பகாவியத்திற்கு ஏற்பட்டிருக்கும் உலகளாவிய சிறப்பினால்,
அக்காவியத்தில் குறித்த ஒரு மதச்சாயல் படிவதை விரும்பாத சிலர்,
இராமனை அவதார புருஷனாய் அன்றி,
மானிடனாய் மக்கள் மனதில் பதிவாக்க விரும்புகின்றனர்.
கம்பகாவியத்தை உலகனைத்துக்கும் உரிமையாக்க விரும்பும்,
அவர்தம் நோக்கத்தில் தவறில்லையாம்.
அதே நேரத்தில் ஓர் புலவன் இயற்றிய காவியத்தில்,
அப்புலவனால் தெளிவுற உரைக்கப்பட்ட செய்தியை,
முற்றாக மறுக்கும் உரிமையும் எவர்க்கும் இல்லையாம்!

✠✠✠✠✠

 


கம்பன், தன் காவிய நாயகனாகிய இராமனை,
தெய்வீகம், மானுடம் எனும் இரண்டு தடங்களில்,
ஒன்றுக்கொன்று முரணாகாவண்ணம்,
அற்புதமாய் அமைத்து வெற்றி கொண்டவன்.
இராமன் அவதாரமா? மானுடமா? எனும் கேள்வியை எழுப்பி,
அவன் அவதாரமும் இல்லை, மானுடனும் இல்லை,
இவையிரண்டுக்கும் அப்பாற்பட்ட அதிமானுடன் என்றுரைத்து,
இராமனை பெருமைப்படுத்த நினைக்கின்றனர் வேறு சிலர்.
அவர்களது நோக்கமும் சிறந்ததாயினும்,
அவர்தம் கருத்தும் உண்மைக்குப் புறம்பானதாம்.

✠✠✠✠✠

தன் காவியநாயகனாகிய இராமன்,
அவதார புருஷனே என்று ஆணித்தரமாய் கம்பன் உரைக்கின்றான்.
அதற்கான ஆதாரங்கள் காவியம் முழுவதுமாகப் பல இடங்களில்,
நேரடியாகவும் குறிப்பாகவும் கம்பனால் உரைக்கப்படுகின்றன.
அவற்றைப் புறந்தள்ளினாற்கூட,
தன் காவிய நாயகன், திருமாலின் அவதாரமே என்று,
பாலகாண்டத்தின் திருஅவதாரப்படலத்தில்,
கம்பன், வெளிப்படையாய் உரைக்கும் செய்தியை,
எவராலும் மறுத்தல் ஆகாது.
அங்ஙனம் மறுப்பின் அஃது காவிய முரணாம்.

✠✠✠✠✠

தசரதச் சக்கவர்த்தி தனக்குப் புதல்வர்கள் இல்லாத குறையை,
தன் குலகுருவான வசிட்டரிடம் எடுத்துரைக்கிறான்.

'அருந்தவ முனிவரும் அந்தணாளரும்
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்:
இருந் துயர் உழக்குநர் என் பின் என்பதோர்
அருந் துயர் வருத்தும், என் அகத்தை' என்றனன்.


உலக நன்மைக்காய்ப் புதல்வரை வேண்டி உழலும்,
தசரதச் சக்கரவர்த்தியின் மனத்துயர் அறிந்த வசிட்டமாமுனி,
தனது ஞான திருஷ்டியினால்,
முன் வைகுண்டத்தில் நடந்த சம்பவத்தை நினைவு கூறுகிறார்.

முரசு அறை செழுங் கடை, முத்த மாமுடி,
அரசர்தம் கோமகன் அனைய கூறலும்,
விரை செறி கமல மென் பொகுட்டு மேவிய 
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான்.

(பொகுட்டு-தாமரை, சரோருகன்-பிரமன்)

அலைகடல் நடுவண், ஓர் அனந்தன் மீமிசை,
மலை என விழி துயில் வளரும் மாமுகில்,
கொலை தொழில் அரக்கர்தம் கொடுமை தீர்ப்பென் என்று
உலைவுறும் அமரர்க்கு உரைத்த வாய்மையை. 


பாற்கடலின் நடுவில் பாம்பனையில் கிடக்கும் திருமால்,
அரக்கர்தம் கொடுமையைத் தீர்ப்பேன் என்று,
தேவர்க்கு முன்பு சொன்ன வாக்குறுதியை,
தன் மனதில் நினைகிறான்,
பிரம்மனின் புதல்வனாகிய வசிட்டன்.

✠✠✠✠✠

வசிட்டனது மனதில்,
வைகுண்டத்தில் நடந்து முடிந்தகாட்சிகள் விரிகின்றன.
அரக்கர்களால் துன்புற்ற அமரர்கள்,
தம் துன்பத்தை சிவபெருமானிடம் சென்று உரைக்கின்றனர்.
சிவனார், இனி யான் அரக்கருடன் போர் புரியமாட்டேன் என மறுத்துரைத்து,
அத்தேவர்களுடன் பிரம்மன் இருப்பிடம் நோக்கிச் செல்கிறார்.

சுடு தொழில் அரக்கரால் தொலைந்து, வான் உளோர்
கடு அமர் களன் அடி கலந்து கூறலும்
படு பொருள் உணர்ந்த அப் பரமன், 'யான் இனி
அடுகிலேன்' என மறுத்து அவரொடு ஏகினான்.


✠✠✠✠✠

தேவர்கள் அனைவருமாக பிரம்மன் இருப்பிடம் சென்று,
அவர் அடிகளைப் பணிந்து,
ராவணனாதியரின் கொடுமைகளை உரைக்க,
பிரம்மனும் அவனை அடக்கும் காரியம் தன்னாலாகாது என்று உரைத்து,
அச்செயலை திருமாலே செய்தல் வேண்டும் என்கிறார்.
அதுகேட்டு தேவர்களும் உருத்திர, பிரம்மனாதியரும்,
தம் மனம் மொழி மெய்களால் திருமாலைப் பணிய,
அடியவர்க்கு இரங்கும் திருமால்,
கருமை நிறமான மேகம் ஒன்று,
தாமரை மலர்த் தொகுதியை மலர்த்திக்கொண்டும்,
சூரிய, சந்திரராகிய நீண்ட இரு சுடர்களை,
இருபுறத்தும் ஏந்திக்கொண்டும்,
பொன்னாலாகிய மேருமலைமேல் ஏறி வருவதைப்போல்,
இலக்குமிதேவியோடு கருடன் மேல் வந்து காட்சி தருகிறான்.

கருமுகில் தாமரைக் காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏந்து அலர்ந்த
திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவபோல், கலுழன்மேல் வந்து தோன்றினான்.


✠✠✠✠✠

திருமால் வருகையால் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட தேவர்கள்,
அரக்கர் வீழ்ந்தனர் என்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
வந்த திருமாலுக்கு அமரர்;கள்,
அரக்கர்களால் தாம்படும் கொடுமைகளை உரைக்க,
அவர்தம் துயரம் கேட்ட திருமால்,
அஞ்சற்க! அவ்வரக்கன் தம் தலைகளை அறுத்து,
இடர் தணிப்பேன் என்றுரைத்து,
அப்பணி சிறக்க அமரர்களாகிய நீங்களும் குரங்குகளாக,
காடுகளிலும் மலைகளிலும் சோலைகளிலும்,
சென்று பிறந்திருப்பீர்களாக! எனப் பணித்த பின்,
யான் தசரதன் புதல்வனாய் தரணியில் வருவேன் என்றும்,
எனது படைக்கலங்களான சங்கு, சக்கரமும்,
வடமுகாக்கினியையே தீய்ந்து போகச் செய்யும் ஆற்றல் மிக்க,
எமது படுக்கையான ஆதிசேடனும்,
எனக்கு இளையவர்களாக வந்து அவதரிப்பர் என்றும் உரைக்கிறார்.

'வான் உளோர் அனைவரும் வானரங்கன் ஆய்,
கானினும், வரையினும் கடி தடத்தினும்,
சேனையோடு அவதரித்திடுமின் சென்று' என
ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான்.


மசரதம் அனையர் வரமும், வாழ்வும் ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய யாம்,
கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்
தசரதன் மதலையாய் வருதும் தாரணி.

'வளையொடு திகிரியும், வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்,
இளையர்கள் என அடி பரவ ஏகி, நாம்,
வளைமதில் அயோத்தியில் வருதும்' என்றனன்.

(வளை-சங்கு, திகிரி-சக்கரம், பாயல்-படுக்கையான ஆதிசேடன்)

✠✠✠✠✠

திருமாலின் அருள் வார்த்தை கேட்டு மகிழ்ந்த தேவர்கள் ஒவ்வொருவராய்,
தம் அவதார நிலையை உரைக்கின்றனர்.
கரடிகளுக்கு அரசனான சாம்பவானாக,
நான் முன்னரே அவதரித்து விட்டேன் என்கிறான் பிரம்மன்.
வாலியும் அங்கதனும் என் அவதாரங்கள் என்கிறான் இந்திரன்.
சுக்கிரீவன் எனது அவதாரம் என்கிறான் சூரியன்.
நீலன் என் அவதாரம் என்கிறான் அக்கினி.
மாருதி எனது அவதாரம் என்கிறான் வாயு.
அதே மாருதியில் என் அவதாரத்தையும் பதிக்கிறேன் என்கிறார் உருத்திரன்.
அவர்களோடு மற்றைத்தேவர்களும் குரங்குகளாக உருமாறி,
பூமியைச் சென்று சேர்கின்றனர்.

என்னை ஆளுடைய ஐயன், கலுழன்மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கி, பிதாமகன் பேசுகின்றான்
'முன்னரே எண்கின் வேந்தன் யான்' என, முழுகினேன் மற்று
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின்' என்றான்.

(என்கு-கரடி)

தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான், 'எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்' என்ன
இரவிமற்று எனது கூறு அங்கு அவர்க்குஇளை யவன் என்று ஓத
அரியும், 'மற்று எனது கூறு நீலன்' என்று அறைந்திட்டானால்.

(தரு-கற்பகதரு, கடவுள் வேந்தன்-இந்திரன், மருவலர்-பகைவர், அசனி-இடி, அரி-அக்கினி)

வாயு, 'மற்று எனது கூறு மாருதி' எனலும், மற்றோர்,
'காயும் மற்கடங்கள் ஆகி, காசினி அதனின்மீது
போயிடத்துணிந்தோம்' என்றார், புராரி, 'மற்று யானும் காற்றின்
சேய்' எனப் புகன்றான், மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ
(மற்கடம்-குரங்கு, புராரி-உருத்திரன்)

✠✠✠✠✠

ஞான திருஷ்டியால் முன் நடந்த இச்சம்பவங்கள் மனதில் வர,
மகிழ்ந்தவராகிய வசிட்ட மாமுனிவர் புத்திரகாமேஷ்டி யாகத்தைச் செய்தால்,
உனக்குப் புதல்வர்கள் பிறப்பார்கள் என்று,
தசரதனுக்கு வாக்கால் வரம் தருகிறார்.

ஈது, முன் நிகழ்ந்தவண்ணம் என, முனி, இதயத்தெண்ணி,
மாதிரம் பொருத திண்தோள் மன்ன! நீ வருந்தல் ஏழேல்
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி,
தீதற முயலின், ஐய! சிந்தை நோய் தீரும் என்றான்.


✠✠✠✠✠

தொடர்ந்து,
கல்வி கேள்விகளால் நிறைந்து,
நீதி நூல்களையும் வேதங்களையும் ஓதி உணர்ந்து,
பிரம்மதேவனுக்கு நிகரானவனாக இருக்கும்,
கலைமான் கொம்பினை முகத்தில் உடையவரான சிருங்கி முனிவர்,
இவ்வேள்வியை நடத்த இங்கு வரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் வசிட்டர்.

வரு கலை பிறவும், நீதி மனுநெறி வரம்பும், வாய்மை
தரு கலை மறையும், எண்ணின், சதுமுகற்கு  உவமை சான்றோன்,
திருகலை உடைய இந்தச் செகத்து உளோர் தன்மை தேரா
ஒருகலை முகச் சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும்.

(வருகலை- வழங்கி வரும் சாஸ்திரம், தருகலை- வேதம், ஒருகலை-ஒற்றைமான் கொம்பு)

✠✠✠✠✠

திரு அவதாரப்படலத்தில் வரும் இச்செய்திகளால்,
இராமன் திருமாலின் அவதாரமே என்றும்,
பரத, லட்சுமண, சத்துருக்கர்கள்,
சங்கு, சக்கரம், ஆதிசேடன் ஆகியவற்றின் அவதாரங்கள் என்றும்,
வானரங்களும் கரடிகளும் மற்றைய தேவர்களின் அவதாரங்கள் என்றும்,
கம்பன் தெளிவுபடச் சொல்லியிருப்பதால்,
இராமனை மானுடன் என்றோ? அதிமானுடன் என்றோ?
தனித்துப் பேசுதல் பொருந்தாவாம்.

✠✠✠✠✠

இவைதவிரவும்,
இராமனை தன்கூற்றாகவும், பாத்திரங்களின் கூற்றுகளாகவும்,
வேறுபல இடங்களிலும் அவதார புருஷனாய்,
கம்பன் உரைத்து மகிழ்கிறான்.
இராமனை திருமாலாய் உரைக்கும்,
கவிக்கூற்றாய் வரும் பாடல்களுக்கு,

ஒருபகல் உலகெலாம் உதரத்துள் பொதித்து
அருமறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உறப்பயந்தனள் திறம் கொள் கோசலை

கரா மலைய தளர் கைக் கரி எய்த்தே
அரா-அணையில் துயில்வோய்! என, அந் நாள்,
விராவி, அளித்தருள் மெய்ப்பொருளுக்கே
'இராமன்' எனப் பெயர் ஈந்தனன் அன்றே.


இது போன்ற,
காண்டங்கள் தோறும் அமைந்து கிடக்கின்ற பற்பல பாடல்களை,
உதாரணமாய்க் காணலாம்.

✠✠✠✠✠

இராமனை அவதார புருஷனாய் உரைக்கும்,
கம்ப பாத்திரங்களின் கூற்றுக்களுக்கு,

இராவணன்
'சிவனோ? அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம்
அவனோ? அல்லன் மெய்வரமெல்லாம் அடுகின்றான்.
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரனல்லன்.
இவனோதான் அவ்வேத முதற்காரணன்? என்றான் 

மண்டோதரி
ஆரா வமுதா அலைகடலிற் கண்வளரும்
நாராயணன் என்றிருப்பேன் இராமனை நான்

விராதன்
'ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி,
மாயாத வானவர்க்கும், மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும்,
நீ ஆதி முதல் தாதை,

இந்திரன்
நாழி, நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்தாமே
ஊழி பலபலவும் நின்று அளந்தால், என்றும் உலவாப் பெருங் குணத்து எம் உத்தமனே! 

கவந்தன்
ஆதிப் பிரமனும் நீ ஆதிப் பரமனும் நீ!
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ!

வீடணன்
தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனித் தலைவன்
அன்ன மானுடன் ஆகி வந்து, அவதரித்து அமைந்தான்

கருடன்
எழுவாய், எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி, எங்கும் உளையாய்
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை  அவரால் வரங்கள் பெறுவாய்
மேற்கூறிய பாடல்களை உதாரணமாய்க் கொள்ளளலாம்.


✠✠✠✠✠

இங்ஙனமாய் பலவிதத்தாலும்,
இராமனை, இவன் திருமாலின் அவதாரபுருஷனே என உறுதிசெய்கிறான் கம்பன்.
அங்ஙனமிருக்க,
இராமனை இவன் மானுடன் அல்லன் என்று உரைத்து,
தம் நோக்கம் நிறைவேற்ற நினைப்பது பெருந்தவறாம்.

✠✠✠✠✠

இதே நேரத்தில் மற்றொரு கேள்வி எழுகிறது.
அங்ஙனமாயின் இராமனையும் இராமாயணத்தையும்,
வேற்றுமதத்தார் உரிமை கொண்டாடுதல் இயலாதோ?
என்பதே அக்கேள்வி.
முடியும் என்பதே அக்கேள்விக்கான பதிலாம்.
அதனையும் நாம் விளங்குதல் அவசியம்.

✠✠✠✠✠

இராமனை, திருமாலின் அவதாரமாய்க் காட்டத் தொடங்கிய கம்பன்,
போகப் போக அவனை, பரம்பொருளாய் உணர்த்துவிக்கிறான்.
முதல்நாள் போரில் இராவணன் விடுத்த சூலத்தை,
இராமன் ஊங்காரத்தால் அழிக்க,
அதுகண்ட இராவணன் வியந்து,
இவன் யாரோ? என உரைக்கும் பாடலில்,
இராமனை, இவன் திருமால் அல்லன்,
பரம்பொருளே என உரைப்பதாய் கம்பன் பதிவு செய்கிறான்.

'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்? என்றான்


✠✠✠✠✠

மேலான பொருள் என்பதே பரம்பொருள் என்பதன் அர்த்தமாம்.
மேலான பொருள் என்று சொல்லப்படும் பரம்பொருள்,
நம் சிற்றறிவுக்கு அப்பாற்பட்டது.
அதனால்த்தான் அப்பரம்பொருளை பாடுகையில்,

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் 
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொனாதே

என்றும்,
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம்
திரு நாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ 

என்றும்,
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்றும்,
அடியவர்கள் அழுத்தி உரைத்தனர்.
பரம்பொருளுக்கு இது வடிவம், இது நாமம் என்று உரைத்தல்,
எவர்க்கும் ஆகாதாம்.
உலகை இயக்கும் மூல சக்தியைக் குறிக்கும் பெயர் அது.
அறிவுகடந்த அப்பரம்பொருளையே,
வெவ்வேறு சமயத்தவர் வெவ்வேறு வடிவும் பெயரும் கொடுத்து உரைக்கின்றனர்.
அதனால் கம்பனால் பரம்பொருள் என்று உரைக்கப்பட்ட இராமனை,
எம்மதத்தாரும் தம் மதக் கடவுளாய் நினைந்து வழிபடுதல் ஆகுமாம்.
அந்நோக்கில், கம்பகாவியத்தை தமது மதத்தோடு பொருத்தி உரைக்கும் உரிமை,
எம்மதத்தாருக்கும் உண்டாம்.

✠✠✠✠✠

காவியத்தின் சுவை கருதியும்,
பரம்பொருள் கொள்கையால் வரும் உரிமை கருதியும்,
எம்மதத்தவரும் இந்நூலைப் படித்தலும் உரிமை கொண்டாடுதலும் தவறன்றாம்.
எனினும் காவியப் புலவனான கவிச்சக்கரவர்த்தி கம்பனால்,
காவியத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை,
வெளிப்படையாகவும் குறிப்பாகவும் திருமாலே இவன் என,
இராமன் உரைக்கப்படுவதால்,
திருமாலின் அவதாரபுருஷனே இராமன் எனும் உண்மையை ஒப்பிய பின்பே,
தமது கருத்துக்களை அந்நூலில் பதிவு செய்தல் வேண்டும்.
அஃதே இலக்கிய, சமய நேர்மையாம்.
 

✠✠✠✠✠

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.