'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை' -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை' -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
(சென்றவாரம்)
வினாடி நேரத்தில் அவனுக்கு ஐயனாரைப் பிடித்துப்போக, அன்றுதொட்டு ஐயனார் அவன் உறவானார்.  பாடசாலைநேரம் தவிர்த்து, நாளெல்லாம் பைத்தியக்காரனாய் அங்கேயே படுத்துக்கிடந்தான். ஐயனாருக்குப் பூந்தோட்டம். ஐயனாருக்குப் பொங்கல். ஐயனாருக்குப் புளிக்காப்பு. ஐயனாருக்குப் பூமாலை. ஐயனாருக்குப் பிடியரிசி. இப்படி ஐயனார் ஐயனார் ஐயனார் என்றே, வாழத்தொடங்கினான்அவன்.
⬥ 
லகம் அவன் பக்தியைப் பைத்தியம் என்று பேசிற்று.
படிப்பில்லா அவனது பக்தி வீட்டில் பகைவளர்க்க,
அப்பகை ஒருநாள் தாயின் கோபமாய் வெடித்தது.
'எல்லாப்பெடியளும் படிச்சு நல்லா வர,
நீ கோயில் கோயில் எண்டு திரியிற,
படிக்காமல் திரிஞ்சா ஐயனார் சோறு போடுவாரே?'
முதுகில் அடியோடு தாயிடமிருந்து எழுந்த கேள்வி,
அவனை அதிர்விக்க,
அழுதபடி கோயிலுக்கு ஓடுகிறான்.
'நீ சோறு போடுவியா? இல்லையா?,
என்னையும் மற்றவர்கள் மதிக்கும்படியாய்ச் செய்'.
ஆவேசமாய் ஐயப்பனை நோக்கி அவன் அகத்தால் ஓலமிட,
அன்பனின் அழுகைகேட்டு ஐயப்பன் அருள் சுரந்தான்.
அன்று மாலையே ஓர் அதிசயம் நிகழ்ந்தது!

⬥ 


தொலைக்காட்சி வராதநேரம் அது
அப்போது வானொலிதான் அனைவரதும் பொழுதுபோக்குக் கருவியாய் இருந்தது.
கோயிலில் அழுது களைத்து வந்தவன்,
சற்றுச் சோர்ந்து கிடந்துவிட்டு இரவு எட்டுமணி போல்,
தனியே இருந்து வானொலியைப் போடுகிறான் அவன்.
அன்று ஒரு செவ்வாய்க்கிழமை,
திருச்சி வானொலி நிலைய ஒலிபரப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.
'அங்கும் இங்கும்' என அதில் ஒரு நிகழ்ச்சி.
அந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் நடைபெறும் இலக்கியக் கூட்டமொன்றினை தொகுத்து,
அரை மணித்தியாலம் ஒலிபரப்புவார்கள்.
அவன் வானொலியைப் போட அந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது.
அற்புதமான ஒரு கரகரத்த குரல்.
அக்குரல் தந்த ஈர்ப்பால் மயங்குகிறான் அவன்.
அது கண்ணனின் கீதோபதேசம் கேட்ட அர்ச்சுனனின் மயக்கம்.
வடிவமின்றி வந்த அந்த ஓசையே,
குருவாய் அவனை ஈர்க்க கிறு கிறுத்துப்போகிறான் அவன்.

⬥ 

'ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்ற,
அடியாரின் சிலிர்ப்பு அவன் உள்ளத்திலும் உண்டாகிறது.
வடிவமே தெரியாமல், இவரே தன் குருவென,
அவ்வோசைக்குரியவரை அவன் மனம் பற்றிக்கொள்கிறது.
என்ன அதிசயம்?
அவன் மனத்துள் எந்த இராமாயணவித்து ஏலவே விழுந்துகிடந்ததோ?
அதனையே அக்குரல் அன்று சொல்லத் தொடங்கியது.
இராமாயணப்பாடல் ஒன்றின் நுண்கருத்தை,
நினைத்தும் பார்க்கமுடியாத புதிய கற்பனையோடு,
அக்குரல் சொல்ல மயங்கிப்போகிறான் அவன்.
உரையின் முடிவில், அவ்வுரை ஆற்றியவர்,
பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன் என்று வானொலி அறிவிக்க,
நீலகண்டம் எனும் பெயரால் திருநீலகண்டநாயனார் ஈர்க்கப்பட்டதுபோல்,
அவனும் அப்பெயரையே பற்றிக் குருதரிசனம் பெறுகிறான்.

⬥ 

அது 1970 களின் ஆரம்பகாலம்.
அந்நிகழ்ச்சியின் பின் செவ்வாய் இரவு எட்டுமணி,
அவனது தவநேரமாயிற்று.
வானொலியை வைத்து உட்காருவான்.
'அங்கும் இங்கும்' எனும் அந்நிகழ்ச்சி தொடங்கியதும்,
வானொலி மறைந்து அவன் கண்களில் ஓர் இலக்கியமேடை மலரும்.
அம்மேடையின் நடுவில் அவன் குருவாய் வரித்துக்கொண்ட,
வடிவந்தெரியாத பேராசிரியர் இராதாகிருஷ்ணன்,
வெள்ளமாய்த் தமிழ் பொழிவார்.
அவர் பேச்சின் ஒவ்வொரு விடயத்தையும்,
ஒவ்வொரு சொல்லையும்,
ஏன் ஒவ்வொரு எழுத்தையும் கூட,
அவன் தன்உயிர்வரை பதித்துக்கொள்வான்.
அன்று அவர் பேசும் பாடல்,
அன்றே அவனுக்கு மனனமாகிவிடும்.
பாடல் மட்டுமா? அவர் சொல்லும் விதம்,
சொல்லும் சொல் அத்தனையும் கூடத்தான்.

⬥ 

நிகழ்ச்சி தொடங்கியதும்,
பேராசிரியரின் பெயரை வானொலி அறிவிக்காதா?
அவரின் உரை வராதா? என அவன் படும்பதற்றம்,
கருசுமந்த தாயின் பதற்றமாம்.
அவர் பெயர் அறிவிக்கப்பட்டு உரை ஒலிபரப்பப்படும்போது,
அவன் படும்ஆனந்தம்.
இறைதரிசனம் பெற்ற அடியவரின் ஆனந்தமாம்.
இவை அத்தனையும் சத்தியங்கள்.
இன்றைய தலைமுறைக்கு,
இவையெல்லாம் கற்பனைக் கதையாய்த் தெரியும்.
துரோணரை நினைந்து வில்வித்தை கற்ற,
ஏகலைவனது கதையை அவன் படித்திருக்கிறான்.
குருவின் நினைவே வித்தை தருமா?
படிக்கும்போது வியந்திருக்கிறான்.
அவன் வாழ்விலேயே அது வித்தை தந்தது.
வாராவாரம் ஓசைவடிவாய் குரு உட்புகுந்தார்.
அவரின் வார்த்தை கேட்காத வாரங்களில்,
தலைவனின் முகம்காணாத் தலைவியாய் வாடினான் அவன்.
குருவின் வார்த்தையோடு இராமாயணமும் அவனுள் புகுந்தது.
தானும் ஓர் பேச்சாளனாய் ஆவது தெரியாமலே,
அவன் வளர்ந்துகொண்டிருந்தான்.

⬥ 

குருவின் குரல்கேட்டே மயங்கிய அவனுக்கு,
அவர் வடிவங்காணும் ஆசைவர,
யாரிடம் கேட்டறிவது? எனத் தெரியாமல் தவித்தான்.
தனக்குத் தெரிந்த ஓரிரு தமிழறிஞரிடம் கேட்டுப்பார்த்தான்.
இலங்கையில் வாழ்ந்த அவர்களுக்கு அப்பெயர் அறிமுகமாயிருக்கவில்லை.
பின்னர், அக்காலத்தில் தமிழகத்திலிருந்து இலங்கை வந்த,
பேச்சாளர்களிடம் குருவைப் பற்றி அவன் விசாரிப்பான்.
அவரைத் தெரிந்தவர்கள் கூட அவனுக்கு அவர் பற்றிய விபரம் சொல்லவில்லை.
காரணம்,
அவர் வந்தால் தங்கள் வித்தை செல்லாதென்னும் பயம்.
பின்னர்தான் அது தெரியவந்தது.
அவரை அறியவேண்டும் என அவனுள் தாகம்.
அத்தாகம் அவனுள் தவமாய் வளர்ந்தது.

⬥ 

ஒருநாள்,
நூலகத்தில் அவன் எடுத்த கம்பகாவியநூல் ஒன்றின் முகவுரையில்,
ஓர் பேரறிஞர் அவன் குருவின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.
இன்று அவனுக்கு அந்நூலினதும், அவ்வறிஞரதும்,
பெயர்கள் ஞாபகத்தில் இல்லை.
அப்பேரறிஞர்,
இராமாயணத்துள் இன்று ஊறித்திளைத்த அறிஞர் இருவரெனவும்,
அவருள் மேடையிலும் ஆனந்தமழை பொழிபவர்,
திருச்சி 'நஷனல்' கல்லூரி பேராசிரியர் இராதாகிருஷ்ணன் எனவும்,
குறிப்பிட்டிருந்த செய்தி அவன் கண்ணிற்பட்டது.
மகிழ்ந்துபோனான்.
ஓசையாய் மட்டும் தானறிந்திருந்த குருவின்,
ஊரும், தொழில்செய்த இடமும் தெரிந்ததே.
மகிழ்ச்சிக்குக் காரணம்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்,
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்,
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்,
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்.
என்ற நாவுக்கரசரின் பாடல்,
அவனுக்காய்ப் பாடியது போல் ஆயிற்று.
அன்று அவன் பட்ட மகிழ்ச்சியை,
இன்றைய இளைஞர்களுக்கு விளக்கம் செய்யமுடியுமா?
வீண் முயற்சி,  வேண்டாம். விட்டுவிடுவோம்.

⬥ 

இப்போதும் அவனுக்கு அவர் வடிவந்தெரியாநிலை.
அவனது தேடல்த்தவம் தொடர்ந்தது.
அத்தவத்தின் பயன் விரைவில் விளைந்தது.
ஆனந்தவிகடன் சஞ்சிகையில்,
சென்னைக் கம்பன்விழாப் பற்றிய ஒரு தொகுப்பு வெளியாகியிருந்தது.
அக்கட்டுரையில்,
அவனது குருநாதரின் பெயர் குறிப்பிடப்பட்டு,
'குடுமியோடு மேடையேறிய அப்பேராசிரியரின் வடிவங்கண்டு சலித்தவர்கள்,
அவர் பேச்சைக்கேட்டு மயங்கிப்போனார்கள்.'- என்று எழுதப்பட்டிருந்தது.
அவனுக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி.
தன்குரு குடுமி வைத்தவர் என்னும் செய்தி தெரிய,
முதன்முதலாய் வடிவரூபத்தில் அக்குடுமியே,
குருவடிவாய் அவன் மனதில் பதிந்தது.

⬥ 

அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்தின் கண்ணே,
அவர் நினைந்த வடிவொடு விரைவிற் சேருவன் என,
பரிமேலழகர் எழுதியது அவன் அனுபவமாகியது.
குருவின் எந்தவடிவை அவன் முதலில் தெரிந்துகொண்டானோ?
அந்த வடிவே அவன் வாழ்வில் அனைத்து அருளையும் அவனுக்கு ஈந்தது.
மற்றவர்கள் நையாண்டி செய்யச்செய்ய அது பற்றிக் கவலைப்படாது,
பின்னாளில் தன்குருவை நினைந்து,
அவனும் குடுமி வைத்துக்கொண்டான்.
அக்குடுமியே அவனைப் பல பிழைகளிலிருந்து மீட்டெடுத்ததுவும்,
அதுவே பின்னாளில் அவனின் தனித்த அடையாளமாய் ஆகிப்போனதுவும்,
அவன் பேச்சாளனாய்ப் பிரபலமான பிறகு,
தமிழகத்தில் அக்குடுமியே பேராசிரியரின் மாணவனாய்,
அவனை விளக்கம் செய்ததுவும்,
அவன் வாழ்க்கையில் நடந்த ஆச்சரியங்கள்.

⬥ 

1980 இல் குருவை நேரில் தரிசிக்கும் வாய்ப்புப் பெற்றான் அவன்.
மதுரையில் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தநேரம்.
எத்தனையோ பாடுபட்டு அவனும் தன் நண்பர்களுடன் அங்கு சென்றான்.
அவன் அங்கு சென்றதுவும் அங்கு அவனைப்புகழ் சூழ்ந்ததுவும் தனிக்கதைகள்.
அப்பெரிய மாநாட்டில் உரையாற்றி,
அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரனிடம்,
பாராட்டுப்பெறும் அதிர்ஷ்டமும் அவனுக்குக் கிடைத்தன.

⬥ 

மற்றவர்கள் அவனுக்குக் கிடைத்த பெருமை கண்டு வியந்துநிற்க,
அவன் மனமோ அப்பெருங் கூட்டத்தில் தன்குருவைத் தேடியது.
அறிஞர்களால் மதுரை நிரம்பிக்கிடந்த நேரமது.
ஆனாலும் அங்கு அவன் குரு வரவில்லை.
நண்பர்களோடு குருவைக் காணலாம் எனும்விருப்பில் திருச்சி சென்றான்.
அவரது முகவரியும் அவனிடமில்லை.
எங்கு கேட்பது? யாரிடம் கேட்பது? ஒன்றும் புரியாத நிலை.
அன்றுகாலை திருவானைக்கா தரிசனம் கிடைத்தது.
குருவின் காட்சிக்காய் மனமுருகி வேண்டினான் அவன்.
கோயிலால் திரும்பும்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
அதுபற்றி அடுத்தவாரம் சொல்கிறேன்.

⬥ 

                                                                                      (அடுத்த வாரமும் என் குருநாதர் வருவார்)
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.