அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் கொழும்புக் கம்பன் விழா-2017

அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் கொழும்புக் கம்பன் விழா-2017
மூத்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா
இவ் ஆண்டின் ‘கம்பன்புகழ்’ விருதினைப் பெறுகிறார்  
 
கொழும்புக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டுக் கம்பன்விழா எதிர்வரும் பெப்ரவரி 9,10,11,12 ஆம்  திகதிகளில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கையில் கம்பன்கழகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 37 வருடங்கள் பூர்த்தியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவ்வாண்டுக் கம்பன் விழாவின் முதல் நாளான பெப்ரவரி 09 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு இராமகிருஷ்ண தோட்டம், இல.12 இல் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய லஷ்மி கோயிலிலிருந்து கம்பன் திருவுருவப்படமும் சீதா இராம விக்கிரகங்களும் ஊர்வலமாக விழாமண்டபம் நோக்கி எடுத்து வரப்படவுள்ளன. இவ் ஊர்வலத்தில் நம் நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகைதரும் பிரமுகர்களும் இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரவுள்ள அறிஞர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இலங்கையின் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்களின் மங்கள இசையும், கல்லூரி மாணவர்களின் கீழைத்தேய வாத்திய இசையும், மங்கையர்களின் நிறைகுட பவனியும் ஊர்வலத்தை அலங்கரிக்கவுள்ளன.
 

  தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருக்கேதீஸ்வரர் ஆலயத் திருப்பணி அறங்காவலர் சபைத் தலைவர் வி. கயிலாசபிள்ளை தம்பதியர் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைக்க, யாழ். மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் கொழும்புக் கம்பன்கழகப் பெருந்தலைவருமான மாண்புமிகு ஜெ. விஸ்வநாதன் தலைமையில் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் கொழும்புக் கம்பன்கழகத் தலைவர் திரு.தெ. ஈஸ்வரன் அவர்கள் தொடக்கவுரையாற்றி சிறப்பிக்கவுள்ளார். 
 
 
விழாவில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள்:
 
மலேசிய நாட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சரான மாண்புமிகு டத்தோ எம். சரவணன் அவர்களும், புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய அம்மாநில சட்டசபை சபாநாயகருமாகிய கௌரவ வெ. வைத்திலிங்கம் அவர்களும், புதுச்சேரி சட்டசபையின் துணைச் சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து அவர்களும் இம்முறை விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளார். 
 
விழாவில் கலந்துகொள்ளும் நம்நாட்டு அரசியல் பிரமுகர்கள்:
 
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன், மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன்;, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மாண்புமிகு மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ம. சுமந்திரன்;, வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சி.தவராசா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 
 
நூல் வெளியீடும், இறுவட்டு வெளியீடும்:
 
இவ்வாண்டுக் கம்பன் விழாவில் ‘கம்பனில் அரசியல்’ எனும் நூலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கொழும்பு, யாழ் கம்பன் விழா, இசைவிழா நிகழ்ச்சிகளின் இறுவட்டுக்களும் வெளியிடப்படவுள்ளன. இவற்றின் முதற் பிரதிகளை இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர்  மற்றும் தெகிவளை ஆஞ்சநேய தேவஸ்தான அறங்காவலர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள், தினக்குரல் நிறுவுனர் திரு. எஸ்.பி.சாமி, ரவி ஜூவலர்ஸ் உரிமையாளர் திரு. ஆர். மகேஸ்வரன், கொழும்பு மனவளக்கலைத் தலைவர் திரு.ஏ. மதுரைவீரன்  ஆகியோர் பெற்றுக்கொள்ளவுள்ளனர். 
 
சமூக நிதியுதவி:
 
நிறுவனம் ஒன்றிற்கும் குடும்பம் ஒன்றிற்குமாக இரண்டு நிதியுதவி அறக்கட்டளைகளை கழகம் வழங்கிவருகிறது. இவ்வாண்டு தமிழ்நாட்டு பிரபல வர்த்தகர் ஏ.எல். சிதம்பரம் அவர்கள் நிறுவிய அமரர் எல். அலமேலு ஆச்சி ஞாபகார்த்த அறக்கட்டளை நிதியை மட்டக்களப்பு யோகர் சுவாமி மகளிர் இல்லத்தாரும், அமரர் சி.கே. இலங்கைராஜா ஞாபகார்த்த அறக்கட்டளை நிதியை மருத்துவத்தேவைக்காக செல்வி சுப்பையா மகேஸ்வரி அவர்களும் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
 
‘கம்பன்புகழ் விருது’ பெறும் மூத்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா
 
கொழும்புக்கம்பன் கழகம் உலகளாவித் தமிழ்ப்பணி செய்த சான்றோர் ஒருவருக்கு “கம்பன் புகழ் விருதினை”  ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. 'வி.ரி.வி. பவுண்டேஷன்’ நிறுவியுள்ள வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை நினைவு அறக்கட்டளை வழங்கும் இக் ‘கம்பன்புகழ் விருது’, இவ்வாண்டு  புகழ்பெற்ற மூத்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. விருதுக் கேடயம், பொன்னாடை, ரூபா ஒரு இலட்சம் பொற்கிழி ஆகியவற்றுடன் கூடிய இவ்விருதினை, கம்பன்விழாவின் நிறைவு நாளன்று மாலை கழகப்பெருந் தலைவர் நீதியரசர் கௌரவ ஜெ.விஸ்வநாதன் அவர்கள் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.
 
சான்றோர் கௌரவம் பெறும் நம்நாட்டுப் பெருமக்கள் அறுவர்:
 
தம் சுயநலமற்ற செயற்பாடுகளால் நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் அறுவரை ஆண்டுதோறும் கொழும்புக் கம்பன்கழகம் கௌரவித்து வருகிறது. அவ்வரிசையில் இவ்வாண்டு கௌரவத்துக்குரியவர்களாக, திருமறைக்கலாமன்ற நிறுவுனர் வண. மரியசேவியர் அடிகளார், புகழ்பெற்ற எழுத்தாளர் அருள் சுப்ரமணியம், நாடறிந்த சிங்களப் பத்திரிகையாளர் திரு. விக்டர் ஐவன், தென்கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம் நாஜிம், மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி தேவஸ்தான அறங்காவலர் பி. சுந்தரலிங்கம், யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ரி. சத்தியமூர்;த்தி ஆகியோர்; தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருதுக்குரியவர்களுக்கான கௌரவங்கள் விழாவின் நிறைவு நாளில் சகல மரியாதைகளுடனும் வழங்கப்படவுள்ளன.
 
இவ்வாண்டுக்கான அறக்கட்டளை விருதுகள் பெறுவோர்
 
கம்பன் விழாவில் வருடாந்தம் ஐந்து அறக்கட்டளை விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இவ்வாண்டு நாவலர் நற்பணி மன்றத்தின் தலைவர் என். கருணைஆனந்தன் நிறுவியுள்ள ‘நாவலர் விருதினை’ புகழ்பெற்ற அறிஞரான சைவப்புலவர் மு. திருஞானசம்பந்தபிள்ளை அவர்களும், தமிழ்நாடு திருக்குவளை இராமஸ்ரீனிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளையினர், நிறுவியுள்ள ‘விபுலாநந்தர் விருதினை’ புகழ்பெற்ற இசையறிஞர் சங்கீத பூஷணம் கலாநிதி நா.வி.மு நவரத்தினம் அவர்களும், தமிழ்நாடு ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் அவர்கள நிறுவிய ‘மகரந்தச்சிறகு விருதினை’ இலங்கையின் சிறந்த கவஜஞர்களில் ஒருவரான இலக்கிய சாகரம் அல் அஸ_மத் அவர்களும், புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களின் நினைவாக குடும்பத்தினர் நிறுவியுள்ள ‘நுழைபுலம் ஆய்வு விருதினை’ மூத்த எழுத்தாளர் தமிழ்மணி அகளங்கன் அவர்களும், புகழ்பெற்ற தமிழகப் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் நிறுவியுள்ள ‘ஏற்றமிகுஇளைஞர்’ விருதினை சிறந்த இளம் நாதஸ்வர வித்துவான்  கே.பி.குமரன் அவர்களும் பெற்றுக் கொள்கின்றனர். கேடயம், பொன்னாடை, ரூபா இருபதாயிரம் பொற்கிழி ஆகியவற்றுடன் கூடியதாக விருது அமையும்.
 
இளையோர் ஊக்குவிப்புப் போட்டிகளுக்கான பரிசளிப்பு: 
 
அமரர் துரை. விஸ்வநாதன், அமரர் பொன். பாலசுந்தரம், அமரர் இலக்கிய வித்தகர் இ. நமசிவாய தேசிகர் ஆகியோரின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட பேச்சு , கவிதை, மனனப் போட்டிகளில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் பரிசில்களும் விழாவின் முதல் நாளன்று வழங்கப்படவுள்ளன.
 
கம்பன் விழா நிகழ்ச்சிகள்:
 
இவ்வாண்டுக் கம்பன்விழாவில்;  பட்டிமண்டபம், தனியுரை, இலக்கிய ஆணைக்குழு, கவியரங்கம், நாடக அரங்கம், விவாத அரங்கம், உரையரங்கம், மேன்முறையீட்டுப் பட்டிமண்டபம், சிந்தனை அரங்கு, வழக்காடு மன்றம், அஞ்சலியரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
 
விழாவில் கலந்துகொள்ளும் பிறநாட்டு, நம்நாட்டு அறிஞர்கள்:
 
இவ்வாண்டு விழா நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்களான பேராசிரியர் சாலமன் பாப்பையா, புலவர் தா.கு. சுப்ரமணியம், பேராசிரியர் வி. அசோக்குமாரன், பட்டிமண்டபம் எஸ். ராஜா, திருமதி பாரதி பாஸ்கர், பேராசிரியர் ரி. ரெங்கராஜா ஆகியோரும், அவுஸ்திரேலியக் கம்பன்கழகம், மதுரைக் கம்பன் கழகம், புதுவைக் கம்பன்கழகம், இராமேஸ்வரம் கம்பன் கழகம், கோவில்பட்டி கம்பன் கழகம், சிங்கப்பூர் கம்பன் கழகம், மலேசிய கண்ணதாசன் மன்றம் ஆகியவற்றின் உறுப்பினர்களும், நம்நாட்டைச் சார்ந்த பிரபல பேராசிரியர்கள், அறிஞர்கள், நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள், வர்த்தகப் பெருமக்கள் முதலிய பெரியோர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
 
புத்தகக்கண்காட்சி :
  
விழா நடைபெறும் நான்கு நாட்களிலும் மண்டபவாயிலில் அகில இலங்கைக் கம்பன்கழகம் மற்றும் பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகியன புத்தகக் கண்காட்சி ஒன்றினை நடாத்தவுள்ளன. இக் கண்காட்சியில் சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் மற்றும் இறுவட்டுக்கள் விற்பனை செய்யப்படும்.
 
இரசிகர்களுக்கு வேண்டுகோள் : 
   
கம்பன் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேர ஒழுங்கின்படி நடாத்தப்படவுள்ளதால் இரசிகர்கள் குறித்த நேரத்தில் வருகைதந்து விழாவைச்சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கழக முகவரிப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டோருக்கு அழைப்பிதழ்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. மற்றைய தமிழ் இரசிகர்களுக்கு ஊடகங்கள் மூலம் விழாவிற்கான அழைப்பினை கம்பன்கழகம் மனமகிழ்வுடன்  விடுக்கிறது. 
 
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.