இலக்கிய மணம் பரப்பிய இன்ப விழா | 2017-கம்பன் விழா ஒரு கண்ணோட்டம்:

இலக்கிய மணம் பரப்பிய இன்ப விழா | 2017-கம்பன் விழா ஒரு கண்ணோட்டம்:
 
கடந்த வாரம் பெப்ரவரி மாதம் 9 10 11 12 ஆகிய நான்கு தினங்களிலும் நாம் இதமான இலக்கிய காற்றை சுவாதித்தோம் என்றால் நம்புவீர்களா? ஆமாம் தலைநகராம் கொழும்பினிலே வெள்ளவத்தை இராமகிருஷ்ணன் மண்டபத்திலே இலக்கிய மணம் பரப்பிய இன்ப விழாவான  2017-கம்பன் விழாவைப்பற்றித்தான் நான் இங்கு குறிப்பிட விழைகிறேன். எனது அன்றாட அலுவல்களை எல்லாம் மூட்டைக் கட்டி விட்டு நான்கு நாள் நிகழ்வுகளிலும் பங்குபற்றி பயன் பெற்றேன்-இலக்கிய பழம் உண்டேன்.
மண்டபம் நிரம்பி வழிந்த சனக்கூட்டம் கண்களுக்கு  காதுகளுக்கு கருத்துக்கு மட்டுமல்ல வயிற்றுக்கும் விருந்து படைத்த ஒரு மகத்தான விழாதான் இந்த 2017-கம்பன் விழா என்றால் அது மிகையாகாது.
தலைநகராம் கொழும்பு மாநகரினிலே மாபெரும் வெற்றி விழாவாக இந்த கம்பன் விழாவை நடத்தி முடித்த கொழும்பு கம்பன் விழா அமைப்பாளர் “கம்பவாரிதி” இ.ஜெயராஜ் ஐயா அவர்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை எனலாம். அந்தளவுக்கு இந்த கம்பன் விழாவை நடத்தி முடித்த ‘சாதனை மன்னன்’ என்றே அன்னாரை சொல்லத்தோன்றுகிறது.
 

 

 
பார்ப்போரை வியக்க வைக்கும் வண்ணம் வருடாவருடம் மிகவும் சிறப்பான முறையில் மெருகூட்டப்பட்ட நிலையில் இந்த கம்பன் விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறுவது உள்நாடடு பேரறிஞர்களை மட்டுமல்ல- வெளிநாட்டு பேரறிஞர்களையும் பிரமிக்க வைக்கிறது எனவே இந்த வெற்றி விழா பற்றிய எனது மனப்பதிவுகளை  ஏனையோருடனும் பகிர்ந்துக் கொள்ளும் ஆவல் மேலீட்டால் எனது கண்ணோட்டத்தினை இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.
 
கம்பன் விழா அழைப்பிதழிலிருந்தே எனது கருத்துக்களை பரிமாறிக்காள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு தமிழ் மூதறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா பேராசிரியர்களான வீ.அசோக்குமாரன், சீ.ரெங்கநாதன், புலவர் தா.கு.சுப்ரமணியம் சர்வதேச புகழ் பட்டிமன்ற பேச்சாளர்களான எஸ்.ராஜா திருமதி பாரதி பாஸ்கர் -மலேசியா இளைஞர் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன்  புதுச்சேரி சட்ட சபை துணை சபாநாயகர் வீ.பீ .சிவகொழுந்து  அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கை பேரறிஞர்களும் கலந்து கொள்வர் என்ற தகவல்களுடன் கூடிய அழைப்பிதழே அசத்தலாக இருந்தது. 
அமைச்சரகளான எம்.டி.சுவாமிநாதன், மனோ கணேசன், ருவன் விஜேவர்தன, எதிரக்கட்சித்தலைவர் ஆர்.சம்பந்தன் உட்பட பிரமுகர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர். 
 
அழைப்பிதழில் குறிப்பிட்டபடி பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி  மாலை 5.00 மணிக்கு ஆலய முன்றலிலிருந்து கம்பன் திருவுருவப்படம் ஊர்வலம் ஆரம்பமானது. முதல் நாள் மாலை நிகழ்வுகள் கொழும்பு கம்பன் விழா பெருந்தலைவர் ஜெ.விஸ்வநாதனின் தொடக்கவுரையுடன் ஆரம்பமானது. கடந்ந 2016ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடைபெற்ற கம்பன் விழா மற்றும் இசை விழா ஆகியவற்றின் இறுவட்டுக்களும். “கம்பனின் அரசியல்” என்ற நூலும் வெளியிடப்பட்டன வழமைப் போல் ஈழத்தின் இலக்கியப்புரவலரான அல்-ஹாஜ் ஹாசீம் உமர் ஆஞ்சநேயர் கோயில் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர் சுவாமிகள் தினக்குரல் ஸ்தாபகர் எஸ்.டி.சாமி,  ரவி ஜுவலரி அதிபர் ஆர்.மகேஸ்வரன் ஆகியோர் இந்த முதற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். 
சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை சங்கீத பூசணம் கலாநிதி நா.வீ.மு.நவரத்தினம் தமிழ்மணி அகளங்கன்,  ‘இலக்கிய சாகரம்’ அல் அஸ_மத்    நாதஸ்வர வித்துவான் கே.பீ.குமரன் ஆகியோர்  இந்த விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 
“பெரிதும் ஆச்சரியம் தரும் அனுமனின் அறிவுத்தடுமாற்றம் எது?”என்ற தலைப்பில் பட்டிமன்றமும் இடம் பெற்றது.
2ஆம் நாள் நிகழ்வுகள் கொழும்பு தமிழ் சங்க தலைவர் தம்பு சிவாவின் தலைமையுரையுடன் ஆரம்பமானது. தொடக்கவுரை நிகழ்த்திய வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவரான கவிமணி .என்.நஜ்முல் ஹ{சைன் ‘இந்த சிங்களத்தீவினிலே தமிழ் விழாது என்பதை உறுதிச்செய்யும் விழாவாக இந்த கம்பன் விழா அமைவதாக கூறி கம்பன் விழாவுக்கு புகழாரம் சூட்டி சுவையாக உரை நிகழ்த்தி சபையோரை மகிழ்வித்தார். அடுத்து “மாறியது நெஞ்சம்” என்ற தலைப்பில்  புலவர் தா.கு.சுப்ரமணியத்தின் தனியுரை இடம்பெற்றது. அவரும் தனக்கே உரிய பாணியில் சுவைபட பேசி சபையோரைக கவர்ந்தார். நகைச்சுவை பாணியில் அமைந்த இவரது உரை என்னை மட்டுமல்ல சபையோரையும் கவர்ந்தது.
 
மாலை நிகழ்வுகள் வட மாகாண எதிரக்கட்சித் தலைவர் சி.தவராஜா தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொடக்கவுரை நிகழ்த்தினார். அடுத்து எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த கவியரங்கம் “வேற்றுமை ஒழிய கம்பன் விளம்பிடும் செய்தி கேட்போம்” என்ற தலைப்பில் கவிஞர் சிதம்பரம்பிள்ளை சிவகுமாரன் தலைமையில் இடம் பெற்றது. கவிஞர்களான நாக சிதம்பரம் த.ஜெயசீலன், அலி அக்பர் -த.சிவசங்கர்- ஸ்ரீபிரசாந்தன் ஆகியோர் கவி பாடினர். கவிதைகள் அனைத்துமே காரமானதாக கனதியாகத் தான் இருந்தன. ஆனால் கடந்த வருடம் குறியீடுகளை வைத்து பாடிய கவிதைகளுடன் ஒப்பிடுகையில ஏனோ ஒருவகை தொய்வு நிலை காணப்பட்டதாக சபையோர்கள முணுமுணுத்தனர். ஒருவேளை ஒரு சில கவிஞர்கள் கவிதைகளை வெளிப்படுததிய விதத்தில் சுறுசுறுப்பு கம்மியாக காணப்பட்டமை இதற்கு காரணமாக இருக்கலாம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
அதையடுத்து இடம்பெற்ற நாடகம் சபையோரை கலகலப்பில் ஆழ்த்தியது. நாடகத்தில வெவ்வேறு பாத்திரமேற்று நடித்த ஒவ்வொருவரும் தமக்குரிய பாத்திரங்களை  வெகு சிறப்பாக நடித்து சபையோரை மகிழ்வித்தனர்.
3ஆம் நிகழ்வுகளில் தமிழ்நாடு பட்டிமன்ற பேசசாளர்களான எஸ்.ராஜா தலைமையில் மிகவும் சிறப்பான விவாத அரங்கு ஒன்று இடம்பெற்றது. இங்த அரங்கினிலே வாதிட்டோர் அனைவருமே காத்திரமான கருத்துககளை முன் வைத்தனர். 
 
அஞ்சலி அரங்கில் எம்மை விட்டு பிரிந்த சான்றோர்கள் பலர் நினைவு கூரப்பட்டனர். இன மத பேதமின்றி இந்த அஞ்சலி இடம்பெற்றமையையும் பாராட்டுக்குரிய விடயமே. அதைத்தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளர்களான எஸ்.ராஜா பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்துக்கொண்ட உரையரங்கு இடம்பெற்றது. தமிழ்நாடு தமிழ் மூதறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் மேல் முறையீட்டுப்பட்டிமன்றம் மிகவும் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இடம்பெற்றது.
 
இறுதி நாள காலை அமர்வில் பட்டிமன்ற பேச்சாளரான திருமதி பாரதி பாஸ்கர் தலைமையில் “எண்களும் எண்ணங்களும்”என்ற  தலைப்பில் சிறபபான சிந்தனை அரங்கு ஒன்று இடம்பெற்றது.
இந்த அரங்கிலே செந்தமிழ் சொற்களால் எம் சிந்தை குளிப்பாட்டிய திருமதி பாரதி பாஸ்கர் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவே  மிளிர்ந்தார் மடை திறந்த வெள்ளம் போல் அவரது வாயில் தமிழ் கொஞ்சி விளையாடியது. இலங்கையின் கம்பன் விழா  மிக மிக அற்புதமாக நடைபெறுவதாகவும் இதனைச் சிறப்பாக ஏற்பாடு செய்த  இ.ஜெயராஜ் ஐயாவுக்கு நல்லதொரு இளைஞர் படை இருப்பதாகவும்- ஐயா கண்ணசைத்தாலே இயங்கும் படைகளாக அவர்கள் இருப்பதாகவும் வர்ணித்த திருமதி பாரதி பாஸ்கர் இலங்கையின் கம்பன் விழாவைப்போல் இவ்வளவு நேர்த்தியாக நடைபெற்ற ஒரு விழாவை தான் காணவில்லை என்றும் கூறி விழா  நாயகனான இ.ஜெயராஜ் ஐயாவை புகழ்ந்துரைத்தார் விழாவின் வெற்றிக்காக எறும்பைபபோல சுறுசுறுப்பாக இயங்கும் இந்த இளைஞர் படையை நாமும் பாராட்டியே ஆக வேண்டும்.
இறுதியாக “கம்பவாரிதி” இ.ஜெயராஜ் ஐயாவை நீதியரசராக கொண்ட வழக்காடு மன்றம் இடம் பெற்றது. இங்கு  பேராசிரியர் வீ.அசோககுமாரன் புலவர் தா.கு.சுப்ரமணியம் ஸ்ரீ பிரசாந்தன் ஆகியோர் சபையோரை கவரும் விதத்தில் தமது வாதங்களை முன்வைத்தனர்.இவர்களது வாதப்பிரதி வாதங்கள்  கம்பராமாயணத்தை கரைத்துக் குடித்தவர்கள் போலவே இருந்தது. விடிய விடிய கேட்கலாம் போலிந்தன இவர்களது சுவையான வாதங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக “கம்பவாரிதி” இ.ஜெயராஜ் உயர் நீதிமன்ற நீதியரசராகவே எமக்குக் காட்சி தந்தார். அவர் சட்டத்தரணிகளின் வாதங்களின் போது நிகழ்ந்த பலயீனங்களை சுட்டிக்காட்டிய விதமும் அற்புதம்! அபாரம் !. அவ்வாறே  இறுதியில் அன்னார் அளித்த தீர்ப்பும் சபையோரை வியக்க வைத்தது. “கம்பவாரிதி” இ.ஜெயராஜ் ஐயா எந்த சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றாரோ?  எந்தெந்த நீதிமன்றங்களில் சட்டப்பயிற்சி பெற்றாரோ? ஏன்று எம்மை வியக்க வைத்தார்?சிறந்த நீதியரசராக மட்டுமல்ல வருடாவருடம் கம்பன் விழாவை ஒரு வெற்றி விழாவாக நடத்தி முடிக்கும்  சாதனை மன்னராகவும் “கம்பவாரிதி” இ.ஜெயராஜ் ஐயா முடி சூடிக்கொள்கிறார் என்றால் அது மிகையாகாது.
கம்பன் விழா நிகழச்சிகளை தொகுத்தளித்த கம்பன் கழகத்தைச சேர்ந்த சொபிசன் -சிவசங்கர் ஆகிய  இருவரும் இலங்கை வானொலி தொலைககாட்சி அறிவிப்பாளரகளுக்கெல்லாம் முன்னுதாரணமாக தமிழை மிகவும் தெட்டத்தெளிவாக  உச்சரித்து அழகாக அமைதியாக எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அறிவிப்புச் செய்த விதம்  காதுகளுக்கு குளிர்ச்சியாக இருந்தது அந்த அறிவிப்பாளர் இருவருக்கும் எமது பாராட்டுக்கள்! 
 
விழா அரங்கின்  நுழைவாயிலினிலே தமிழ் கலாசார முறைப்படி மஞ்சள் குங்குமம் மற்றும் வாழைபபழங்களுடன் கற்கண்டும் பரிமாறபபட்டன. அரங்கினில் நிகழ்ச்சியை சுவைக்கும் போது தான் இந்த கற்கண்டும் பரிமாறபபட்டதன் பின்னணி விளங்கியது. “உள்ளே எங்களுக்கு கற்கண்டு சொற்கொண்டு இலக்கிய விருந்து  பரிமாறப்படும்” என்பதை நுழைவாயினிலே முன்கூட்டியே சொல்லியிருக்கிறார்கள் என்று.
வர்ணக்குடைகள் புடை சூழ கண்கவர் விதத்தில் அமைந்திருந்த வுpழா மேடை அலங்காரமும் மிக மிக அற்புதமாக அழகாக இருந்தது. கௌரவிப்பு நிகழ்வும் இந்திய பேராளர்கள் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாகவே  இடம் பெற்றது. ராவய பததிரிகை ஆசிரியரான விக்டர் ஐவன் எழுத்தாளர் அருள் சுப்ரமணியம் தென்கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் எம்.எச்.எம்.நாஜிம் அறங்காவலர் வீ.சுந்தரலிங்கம் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி ஆகியோரும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். .2017ஆம் ஆண்டுககான கம்பன் உயர்விருது இம்முறை தமிழ்நாடு தமிழ் மூதறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுடன் வி.டி.வி.தேவநாயகம்பிள்ளை அறக்கட்டளை நிறுவனத்தினால் ஈஸ்வரன் ஐயா சார்பில் அன்னாரின் புதல்வரினால் இந்திய ரூபாய் ஒரு லட்சம் நிதி பொற்கிழியாக சாலமன் பாப்பையாவுக்கு  வழங்கப்பட்டது. சபையோர் பிரமித்துப்போயினர் சாலமன் பாப்பையாவுக்கு  உயர் ளெரவம் இடம் பெற்ற போது மிக ஆவலுடனும் அதிசயத்துடனும் படம் பிடித்துக்கொண்டிருந்த பட்டிமன்ற பேச்சாளரான திருமதி பாரதி பாஸ்கர் அம்மையார் கௌரவிப்பு முடிவில் மகிழ்ச்சி மேலீட்டால் அழுதே விட்டார். அவரது கைக்குட்டையால் தனது கண்களை துடைத்துக்கொண்டமையே  இதற்கு சாட்சி.  அடுத்து இந்த உயர் கௌரவத்துக்கு நன்றி தெரிவித்து உரை நிகழ்ச்சிய சாலமன் பாப்பையா  இலங்கையின் கம்பன் விழாவையும் அதன் நாயகனான“கம்பவாரிதி” இ.ஜெயராஜ் ஐயாவையும் வாயார மெச்சினார். நெஞ்சார வாழ்த்தினார்.
 
இங்கு கண்டிப்பாக  மற்றொரு விடயத்தை பதிவிட்டே ஆக வேண்டும். அதாவது “பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்”என்பது பழமொழி. இந்த பழமொழியையே பொய்யாக்கும் வகையில் சாலமன் பாப்பையா அவர்கள்  தனக்கு அன்பளிப்பாக வழங்கிய இந்த ஒரு லட்சம் ரூபா பணத்தை இலங்கையில ஏதாவது ஒரு நல்ல காரியத்துக்கு பயன்படுத்துமாறும் தானும் இந்திய ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் தானும் இந்திய ஒரு லட்சம் ரூபாய் பணம் கொண்டு வந்திருப்பதாகவும் அதனை இலங்கையின் கம்பன் கழக வளர்ச்சிககாக வழங்குவதாகவும கூறி உடனே அந்த பணத்தை சபைமுன்னிலையில் கையளித்தார் .இதை கேட்டதும் சபையோர் கண்கள் குளமாகின. ஆம். சாலமன் பாப்பையா அனைவருக்கும் ஆனந்த கண்ணீரையே வரவழைத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். கம்பன் விழா அரங்கினிலே அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த சாலமன் பாப்பையா அவர்கள் அங்கே கூடியிருந்த சபையோரின இதய சிம்மாசனத்திலும் இடம் பிடித்துக்கொண்டார் .இந்த நல்ல மனம்வாழ வேண்டும் என எல்லோரும் வாயார வாழ்த்தினர். இந்த நிகழ்வும் எம் நெஞ்சங்களை நெகிழச்செய்தன. 
விழா நிகழ்வுகளின்  காலை அமர்வுகளில் சபையோருக்கு ‘நறுக்’கென்று கடிப்பதற்கு ‘முறுக்கு’ம் ‘ஜில்’லென்று குடிப்பதற்கு மோரும் பரிமாறப்படுகின்றமை வரவேற்கததக்கது.ஆனால் மாலை நிகழ்வுகளின் போது எதுவும் பரிமாறப்படாமையால் சபையோர் சிறிது சங்கடப்படுவதுமுண்டு. எழுந்து போய் வெளியே ஏதும் அருந்தி வட்டு வரலாம் எனறால் மீணடும் வரும் போது சங்கீத கதிரைப்போல தமக்கு அமர  கதிரை கிடைக்காது என்ற அச்சம். எனவே யாராவது ஒரு அனுசரணையாளரை அணுகி ஒரு குளிர் பானத்தையாவது பரிமாறினால சபையோரின் தாகத்துக்கு சிறந்த ஒளதடமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
அத்தோடு கௌரவிப்பு நிகழ்வின் போது அவர்களின் ஆளுமைகளை அறிவிப்புச் செய்து அதன் பின்னர் அந்த கௌரவத்தினை வழங்குவது சிறந்த கைங்கரியம் தான். ஆனால் மிக நீண்ட நேர அறிவிப்பினால் நின்ற நிலையில் இருக்கும் கௌரவம் பெறுநர் களைத்து விடக்கூடாது என்பதற்காக விழாவில்  வெளியிடப்படும் நினைவு மலரில் இவர்களின் விபரங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் மேடையில் அதனை சுருக்கமாகவும் இறுக்கமாகவும் செய்தால் நல்லது என்பதும் எனது தாழ்மையான கருத்தாகும. இம்முறை சிங்கள பத்திரிகை ஆசிரியர் கௌரவத்தின் போது அவருக்கு தமிழ் மொழி அறிப்பு விளங்காததால் ஆங்கில மொழியிலும் அறிவிப்பு செய்ய வேணடிய நிர்பந்தம். எனவே இத்தகைய சமயங்களில்  எனது ஆலோசனை ஆரோக்கியமானது தானே?
இம்முறை மற்றுமொரு சிறப்பம்சத்தையும் கண்டு மகிழ்ந்தேன். இலங்கையில் முதற்பிரதிகளை வாங்கி சாதனை படைத்து வரும் எமது இலக்கியபபுலவர் ஹாசிம் உமரின் பெயர் கம்பன் விழா விருந்தோம்பல் அழைப்பிதழிலும் இருந்தது கண்டு இறும்பூதெய்தினேன். அன்னாரின் தாராள மனதை போற்றுகிறேன்.
எத்தனையோ புலவர்கள் பல்வேறு காப்பியங்களையும் புராணங்களையும் எழுதிய போதிலும் கம்பனின் கம்பராமாயணத்துக்குத்தான் இலங்கையில் வருடா வருடம் விழா எடுக்கப்படுகிறது. எனவே என்ன இருந்தாலும் கம்பன் கொடுத்து வைத்தவன் என்றே கூறத்தோன்றுகிறது. 
இறுதியாக இலங்கையில் வருடா வருடம் நடைபெறும் இந்த கம்பன் விழாவை இலக்கிய சுவைஞர்கள் அனைவரும் கட்டாயமாக கண்டு களிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை விடுத்து ஒரு வெற்றி விழாவாக இந்த கம்பன் விழாவை நடத்தி முடிக்கும் “கம்பவாரிதி” இ.ஜெயராஜ் ஐயாவையும் , கம்பன் கழகத்தினரையும் மனமார வாழ்த்தி விடைபெறுகிறேன்.
 

 

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.