கொழும்புக் கம்பன் கழகம் நடாத்தும் கவிதை, பேச்சுப் போட்டிகளும் திருக்குறள், இராமாயண மனனப்போட்டியும்

கொழும்புக் கம்பன் கழகம் நடாத்தும் கவிதை, பேச்சுப் போட்டிகளும் திருக்குறள், இராமாயண மனனப்போட்டியும்
 
அகில இலங்கைக் கம்பன்கழகம் ஆண்டுதோறும் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலுமாகக் கம்பன் விழாக்களை நடாத்திவருகிறது. அவ்விழாக்களின் வரிசையில் 2017 ஆம் ஆண்டுக்கான கொழும்புக் கம்பன்விழாவினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9,10,11,12 ஆம் திகதிகளில் நடாத்தவுள்ளது.  இவ் விழாவை முன்னிட்டுக் கழகம் ஆண்டுதோறும் நடாத்திவரும் அமரர் துரைவிஸ்வநாதன் ஞாபகார்த்தப் பேச்சுப்போட்டி, அமரர் பொன். பாலசுந்தரம் ஞாபகார்த்த கவிதைப் போட்டி, நாவலர் நற்பணி மன்றம் அமைத்துள்ள அறக்கட்டளை ஆதரவில் நடாத்தவுள்ள இலக்கணவித்தகர் நமசிவாய தேசிகர் ஞாபகார்த்த திருக்குறள், இராமாயண மனனப் போட்டி, என்பவை பற்றிய விபரங்களைக் கொழும்புக் கம்பன்கழகம் அறிவித்துள்ளது.
 
 

 

 
மேற்படி பேச்சுப் போட்டி 02 பிரிவுகளாக இடம்பெறும். மத்திய பிரிவுப் போட்டிகளில் 13-16 வயதுக்குட்பட்ட மாணவர்களும், மேற்பிரிவு போட்டிகளில் 17-30 வயதிற்குட்பட்ட போட்டியாளர்களும் கலந்து கொள்ளலாம். கவிதைப் போட்டி ஒரே பிரிவாக மட்டுமே இடம்பெறும். இதில் 15-30 வயதிற்குட்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ளலாம். திருக்குறள், இராமாயண மனனப்போட்டி இருபிரிவுகளாக இடம்பெறும்.  பாலர் பிரிவில் ஐந்தாம் வகுப்புவரை கல்வி கற்கும் மாணவர்களும் கீழ்ப்பிரிவில் தரம் 6 முதல் 8 வரையான வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம். சென்றவிழாக்களில் தங்கப்பதக்கப் பரிசில்களைப் பெற்றோர் தவிர்ந்த, மற்றையோர் மேற்படி போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
 
போட்டியாளர்கள் சுயமாகத் தயாரிக்கப் பெற்ற விண்ணப்பப் படிவத்தில் தமது முழுப் பெயர், வயது, பிறந்ததிகதி, முகவரி, தொலைபேசி இலக்கம், மாணவராயின் பாடசாலையின் பெயர், வீட்டு முகவரி, கலந்து கொள்ளவுள்ள போட்டி முதலிய விவரங்களைக்; குறிப்பிட்டு, இல. 12, இராமகிருஷ்ண கார்டன், கொழும்பு - 6 (Secretary, Colombo  Kamban Kazhakam, 12, Ramakrishna Garden, Colombo - 06.) எனும் முகவரிக்கு அல்லது kambanlanka@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். ஒருவர் மூன்று போட்டிகளிலும் கலந்துகொள்ள முடியும். போட்டி நடைபெறும் திகதி போட்டியாளர்களுக்குத் தனித்தனியே அறிவிக்கப்படும். பாடசாலை மாணவர்களது விண்ணப்பங்களைத் தமிழ் மன்றம் ஒரே தொகுதியாக அதிபரின் உறுதிப்படுத்தலுடன் அனுப்பி வைக்கலாம்.
 
பேச்சு மற்றும் கவிதை போட்டிகளில் கலந்து கொள்வோர் உடன் தரப்படும் தலைப்புகளில் தம் ஆற்றலை வெளிப்படுத்தவேண்டும்.  தலைப்புக்கள் இலக்கியம், கலை, வாழ்வியல் தொடர்பில் அமைந்திருக்கும். திருக்குறள், இராமாயண மனனப் போட்டியாளர்க்கு மனனம் செய்யவேண்டிய பாடல்கள் அனுமதி அட்டையுடன் அனுப்பி வைக்கப்படும் எனவும் கொழும்புக் கம்பன்கழகம் அறிவித்துள்ளது. 
 
தரமான நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள கம்பன் விழாவில் தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், பரிசில்களும் வழங்கப்படும் எனவும் போட்டிகளில் இயல்பாளுமையை வெளிப்படுத்தும் போட்டியாளர்கள் கம்பன் விழா நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ளப்படுவர் எனவும் கொழும்புக் கம்பன்கழகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.