கொழும்புக் கம்பன் விழா | இம்மாதம் 24ஆம் திகதி தொடங்குகிறது

கொழும்புக் கம்பன் விழா | இம்மாதம் 24ஆம் திகதி தொடங்குகிறது
அகில இலங்கைக் கம்பன் கழகம் ஆண்டுதோறும் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்குப் பெருவிழா எடுத்துவருகிறது. முப்பத்தியேழாவது ஆண்டினைக் கடக்கும் கம்பன்கழகத்தின் இவ்வாண்டுக்குரிய கம்பன்விழா, இம் மாதம் 24, 25, 26, 27 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கொழும்பு இராமக்கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் காலை, மாலை நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ளது. வழமைபோலவே இவ்வாண்டும் நம்நாட்டு, தமிழ்நாட்டு, பிறநாட்டு அறிஞர்கள் பலர் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 
விழாவானது 24ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோவிலிருந்து, கம்பன்பட ஊர்வலத்துடன் ஆரம்பமாகவுள்ளது. யாழ் மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும். கொழும்புக் கம்பன் கழகப் பெருந்தலைவருமான மாண்புமிகு ஜெ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெறவுள்ள அன்றைய விழாவில், கழகத் தலைவரான தெ.ஈஸ்வரன் வரவேற்புரையையும், பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் மலேசிய இளைஞர், விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ எம். சரவணன் தொடக்கவுரையையும் ஆற்றவுள்ளனர். 
தொடர்ந்து, இராமாயணத்துள் நரசிம்ம அவதாரத்தைக் கம்பன் சித்திரித்துள்ள திறத்தை வியக்கும் கட்டுரைகளின் தொகுப்பான “காவியத்துள் காவியம்”  என்ற நூலும், கம்பவாரிதி இ. ஜெயராஜ் எழுதிய அகில இலங்கைக் கம்பன் கழக யாழ் வரலாற்றுத் தொகுப்பான ‘உன்னைச் சரணடைந்தேன்’ என்ற நூலும், கடந்த 2015ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணக் கம்பன் விழா நிகழ்ச்சிகளின் இறுவட்டுகளும் வெளியிடப்படவுள்ளன. மேலும் வழமைபோலவே ‘நாவலர் விருது’, ‘விபுலானந்தர் விருது’ ‘நுழைபுலஆய்வு விருது’,‘மகரந்தச்சிறகு விருது’, ‘ஏற்றமிகுஇளைஞர் விருது’, முதலிய விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
தொடரும் பரிசளிப்பு அரங்கில்,  இவ்வாண்டும் அமரர் துரை.விஸ்வநாதன் நினைவுப் பேச்சுப்போட்டி, அமரர் பொன்.பாலசுந்தரம் நினைவுக் கவிதைப்போட்டி, நாவலர் நற்பணி மன்றம் அமைத்துள்ள அறக்கட்டளை ஆதரவில் நடைபெற்ற இலக்கணவித்தகர் இ. நமசிவாய தேசிகர் நினைவுத் திருக்குறள் மனனப் போட்டி என்பவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு   நடைபெறும். மேலும், இவ்வாண்டு சமூகசேவை செய்யும் நிறுவனம் ஒன்றுக்கும், உதவி அவசியப்படும் குடும்பம் ஒன்றுக்கும், கழகத்தின் சார்பில் நிதியுதவியும் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்திலிருந்தும், மலேசியாவிலிருந்தும், அவுஸ்திரேலியாவிலிருந்தும் நம்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்களும், பேச்சாளர்களும் கலந்து கொள்ளவுள்ள இவ்வாண்டுக் கம்பன் விழாவில் நாட்டியார்ப்பணம், பட்;டிமண்டபம், வழக்காடுமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம், சிந்தனைஅரங்கம், சுழலும் சொற்போர், இலக்கியப் பேருரை, அஞ்சலியரங்கு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இவ்வாண்டு, கொழும்பு விழாவின் புதிய நிகழ்ச்சியாக, கம்பனை இராமாயணப் பாத்திரங்கள் சந்தித்துப் பேசுவதான நாடகத்தன்மை மிக்க, படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் எனும் நிகழ்ச்சி 26.03.2016 அன்று மாலை அரங்கில் நடைபெறவுள்ளது. விழாவின் நிறைவுநாளான 27.03.2016 ஞாயிறு அன்று மாலை விழாவில் நம்நாட்டைச்சேர்ந்த ஆறு துறைசார்ந்த அறிஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளதோடு, வழமைபோலவே தாம் சார்ந்த துறையினூடு உலகளாவிய நிலையில் சாதனை புரிந்த ஒருவருக்கு கம்பன்புகழ் விருதும் வழங்கப்படவுள்ளது.  
கம்பன் விழாவினையொட்டி, விழா மண்டபத்தில் பூபாலசிங்க புத்தசாலையினரால் புத்தகக் கண்காட்சியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனவும், கம்பன் விழாவில் கலந்து தமிழ்ச் சுவைப்பருக அனைவரையும் வருகை தரும்படியும் கம்பன் கழகத்தினர் வேண்டியுள்ளனர்.
இவ்விழாவில் மாணவர்களைக் கலந்து கொள்ளவைக்க விரும்பும் கல்லூரிகள் இல.12, இராமக்கிருஷ்ண தோட்டம், கொழும்பு-06 (No 12, Ramakrishna Garden, Colombo 06) எனும் முகவரிக்கு கல்லூரியின் பெயர், கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களின் வகுப்பு, மாணவர்களின் தொகை என்பவற்றைக் குறித்து எழுதினால் விழா மண்டபத்தில் அவர்களுக்கான இட ஒழுங்கும், உணவு ஒழுங்கும் செய்து தரப்படும். விழாவில் கலந்து கொள்ள விரும்பும் தனியாரும் முன்தொடர்பு கொண்டால் அவர்களுக்கும் இவ்வசதிகள் செய்து தரப்படும். அழைப்பிதழ் பெற விரும்புவோர் தமது முகவரியை மேற்குறித்த முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும். 
 
 

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.