திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 6: "போன திசை பகராய்!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 6: "போன திசை பகராய்!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
 
ற்புதனாம் சிவனவனின் அரும்பெரிய புகழ் பாடி,
எற்புருக நங்கையர்கள் ஏங்கும் மனத்தோடு,
ஆறாம் வீட்டவளின் அருள் நிறையும் நன்முன்றில்,
மங்கையவள் வருகைக்காய் மகிழ்வோடு காத்திருந்தார்.
நங்கையவள் வீட்டு நற்கதவம் திறக்கவிலை.
மங்கையர்க்கோ கடுங்கோபம். மனமுருக நேற்றிவளும்,
அஞ்சாதீர்! தோழியரே அருக்கன் எழுமுன்னர்,
துஞ்சாது விழித்திருந்து துயில் எழுப்ப வருவேன் நான்,
என்றுரைத்துச் சென்றதனை எண்ணி மனம் கொதித்தார்.
மானே நீ நென்னலை நாளை வந்(து) உங்களை
நானே எழுப்புவன் என்றலும்
 
 
 
எல்லாத்திசைகளிலும்  எங்களது பாட்டோசை,
சென்று, உறக்கத்தில் சேர்ந்திருந்த அனைவரையும்,
தட்டியெழுப்பிடவும் தாழ்திறவா துள்ளிருந்தாய்.
போனதிசை பகராய்! இன்னும் புலன்தின்றோ?
நாணமிலாப் பெண்ணவளே! நம் சிவனார் வானோர்க்கும்,
மானுடர்க்கும் வாழுகிற மற்றவர்க்கும் அறிவறியான்.
அத்தகைய ஈசனவன் அருள் தன்னால் எம்தம்மை,
தானே வந்தாட்கொள்ளும் தகுதிதனை அறியாயோ?
நாணாமே போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்(து) எம்மைத் தலையளித்(து) ஆட்கொண்டருளும்
 
  ✠
 
நெஞ்சம் உருக்குகிற நெடிதான திருவடியை,
மாலயனும் காணாத மாபெரிய திருவடியை,
வீரக்கழல் அணிந்த வெற்றிதரும் திருவடியை,
ஈரக்கண்சோர எல்லோரும் சேர்ந்துரைத்து, 
வந்தோம்நாம் உன்இல்லின் வாசலிலே, எம்தமக்காய்,
வாய்திறந்து சிவன்நாமம் வளம்பொங்க உரைத்திடுவாய்!
ஊனோடு உந்தன்னின் உளமுருக நின்றிடுவாய்!
வான்வார் கழல்பாடி வந்தோர்க்(கு) உன் வாய் திறவாய்
 
  ✠
 
என்றும் இறைநாமம் ஏந்துகிற மனத்தாளே!
உனக்கன்றி யார்க்கிங்கு உறுமாம் இப்பெருந்தொண்டு.
எமக்கும் இவ்வுலகுள்ள ஏனோர்க்கும் கோனாகி,
ஆண்டருளும் எம்மானை அன்போடு நெஞ்சுருகி,
ஏற்றித்தான் புகழ்பாடு! எம்முடைய விருப்பமதை,
ஏற்றிடுவாய்! ஓர்ந்திடுவாய்! எம்முடைய விழியதனின்,
பாவையினை ஒத்தவளே! பாவாய் என மொழிந்தார்.
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கு(ம்) தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.
 
  ✠
 
என்றார்கள் நங்கையர்கள். எப்போதும் சிவன்தன்னை,
நெஞ்சுருக நெஞ்சுருக நினைத்திருந்த பெண்ணவளும்,
தன்னையறியாது தான் துயின்ற பிழை உணர்ந்தாள்.
துள்ளியெழுந்தாள். பின் தூயவளாய்  வெளிவந்தாள். 
வெள்ளி முளைத்தும் அவ் விடிவதனை அறியாது,
கண்துயின்ற நாணமதும் கனலாக உள்ளெரிக்க,
மருண்டவளும் நோக்கினாள். மானே! என்றவர் அழைத்த,
வார்த்தைக்குப் பொருந்துகிற வடிவோடு வெளி வந்தாள்.
தோழியர்கள் அவள்தன்னின் தூயதாம் மனமறிந்து,
அன்போடு அணைத்தார்கள். அரணவனின் புகழ்பாடி,
என்புருக மங்கையர்கள் எல்லோரும் நடந்தார்கள்.
 
மானே நீ நென்னலை நாளை வந்(து) உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்(து) எம்மைத் தலையளித்(து) ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்(கு) உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கு(ம்) தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.
 
 
வாசகனார்  உரைத்திட்ட வளமான இப்பாடல்,
நேசமனம் உடையார்தம்  நெஞ்சுருக்கும் நினைவழிக்கும்,
ஆசையுடன் அப்பாடல் அடி உறைந்த நற்பொருளை
பாசமுடன் கண்டேதான் பரவசத்தில் மூழ்கிடுவோம்.
 
  ✠
 
தவறுணர்ந்து வருதற்குத் தயங்குகிற பெண்ணவளின்,
மருட்சிதனை உள்ளுணர்ந்து மங்கையர்கள் அவள் தன்னை,
மானே! என்றழைப்பதுவாய் மாண்புடனே வாசகரும்
வார்த்தைதனைச் சேர்த்திட்ட வடிவழகை என் சொல்ல?
மருட்சிதனை விழியுரைத்தல் மானின் இயல்பன்றோ,
அருட்புலவர் அவ் அழகை அமைக்கின்றார் பாடலிலே.
 
  ✠
 
இறைப்பெருமை பாடிடவே இனிதாக எம்மவர்க்கு,
காலங்கருகியதை கருத்தினிலே கொண்டே நீ,
வேகமொடு மான்போல விரைந்தேதான் வந்திடுவாய்,
என்ற குறிப்புணர்த்த ஏந்திழையார் மானென்று,
சொன்னார்கள் என்றேதான் சொன்னாலும் பொருந்துவதாம்.
 
  ✠
 
மூலமல இருள் நீங்கி  முக்திநிலை அடைந்தார்க்கே,
நீளஅருள் சுரக்கும் நெடியவனின் அருள் கிடைக்கும்,
பக்குவத்தார் எல்லோரும் பண்போடு ஒன்றிணைந்து,
மாய இருள் தன்னில் மயங்கித்தான் கிடக்கின்ற,
ஆன்மாவை மெல்லத்தான் அருட்டி வெளிக்கொணரும்,
நோக்கோடு அழைக்கின்ற நுண்மை உரைக்கின்ற,
அக்கருத்தே பாவைதனின் அடிக்கருத்து என உணர்வீர்.
 
  ✠
 
பாசங்கலைந்தும், பின் பக்குவத்தைத் தானடைந்தும்,
வாசனையால் மலங்கடந்து வருவதற்கு முடியாது,
எல்லையிலே நிற்கின்ற இனிமைமிகு ஆன்மாவை,
சீவன்முத்தரெலாம் சேர்ந்தே அழைக்கையிலே,
இருண்நீங்கிப் போயிற்றாம் ஏனோ நீ அறியாது,
எழுதற்கு முடியாமல் இயலாது கிடக்கின்றாய்.
என்னே! உந்தனக்கு இன்னும் புலன்தின்றோ?
என்றே உரைப்பதுவாய் இப்பாடல் தன்னில்வரும்,
இன்னும் புலன்தின்றோ என்னும் தொடரதற்கு,
பொருளுரைத்தால் பாடல்தனில் புலவர்க்கு மனம்பதியும்.
 
  ✠
 
காலமதும் தூரமதும் கடந்தவனாம் எம்முடைய,
நீளப்பெருமைமிகு நிர்மலனார் எனவுணர்த்த,
முன்பாடல் தன்னின் முகப்பினிலே ஓர் தொடரை,
ஞாலமே, விண்ணே, பிறவே அறிவறியான்.
என்றே அமைத்தார் நம் ஏற்றமிகு வாசகனார்,
இப்பாடல் தன்னில் இக்கருத்தை மீட்டொருக்கால்,
வானே நிலனே பிறவே அறிவறியான்,
என்றுரைக்கும் நோக்கம் இயம்பிடுவேன் கேட்டிடுவீர்!
கீழிருந்து மேலாகக் கிளர்ந்த வகையதனால்,
முதற்பாடல் தனிலேதான் முற்றாக மேலுலகைச்
சொன்ன மணிவாசகனார் சோராமல் இங்கே தான்
மேலிருந்து கீழாக மீண்டும் வலியுறுத்தி
கீழுலகம் முழுவதையும் கிளர்கின்றார் என உணர்வீர்,
 
  ✠

குருந்தமர நிழலின்கீழ் குருவாக இறையவனார்,
தானே வந்தாட்கொண்ட தனிக்கருணை நினைந்தேதான்,
வாசகனார் இப்பாடல் வரியினிலே அக்கருத்தை,
தானே வந்தெம்மை தலையளித்தாட் கொண்டருளி,
என்றே உரைத்தெங்கள் ஏக்கம் தவிர்க்கின்றார்.
 
  ✠
 
இறையவனின் திருவடியின் ஏற்றம் உரைப்பதற்காய்,
நிறைந்திடவே சொற்கள் பல நேராய் இடுகின்றார்.
காணற்கு அருமையினைக் காட்டிடவே வானென்றும்,
என்றும் உயர்ந்த அவன் இயல்புரைக்க வார் என்றும், (வார்-நெடுமை)
ஆணவத்தார் அனைவரையும் அழிக்கின்ற அவன் வீரம்,
சொல்லுதற்காய் கழல் என்றும் சுவையோடு பொருள் சேர்த்து,
வாசகனார் உரைத்திட்ட வழமைதனை என் சொல்வேன்?
 
  ✠
 
வாய் திறவாய் என்பதனால் வாக்கதனின் வழிபாடும்,
ஊனே என்றுரைத்ததனால் உடலதனின் வழிபாடும்,
உருகாய் எனும் சொல்லால் உளமதனின் வழிபாடும்,
ஒன்றாக உரைத்தேதான் ஒருபாடல் தனில் அந்த 
மனம், மொழி, மெய்  அதனாலே மாட்சியுறும் வழிபாட்டை,
வாசகனார் உரைத்திட்ட வளம் நினைந்து உருகிடலாம்.
 
  ✠
 
எந்தமக்கு அருள் செய்யும் ஏற்றமிகு சிவமதுவே
எல்லோர்க்கும், எப்போதும் எங்கிருந்தும் அருள் செய்யும்.
இக்கருத்து வாசகனார்க்கேற்ற ஒரு கருத்தாகும்.
தென்னாடு உடையவனாய்ச் சிவனவனைப் போற்றியவர்
எந்நாடு உடையவர்க்கும் இறைவனென இனிமையுடன் 
வாசகனார் உரைத்ததனை வாஞ்சையுடன் மனங்கொள்வோம்.
எமக்கென்று இயம்பியபின் எங்கள் மணி வாசகனார்,
ஏனோர்க்கும் தங்கோனை என்றேதான் இனிமையுடன், 
அக்கருத்தை இப்பாடல் அடிவரியில் சேர்க்கின்ற,
வழமையினை நெஞ்சுணர்வோம். வாருகிற கண்சோர,
எல்லா மதத்தவரும் எமையாளும் சிவனாரின்,
புத்திரரே எனவுணர்ந்து புன்மை தவிர்த்திடுவோம்.
 
  ✠
 
மானே நீ நென்னலை நாளை வந்(து) உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்(து) எம்மைத் தலையளித்(து) ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்(கு) உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கு(ம்) தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.
 
  ✠   ✠
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.