நீதித்தராசில் கூட்டமைப்பு: பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

நீதித்தராசில் கூட்டமைப்பு: பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 

(சென்றவாரம்)
இங்ஙனமாய் அவர் பெற்ற வெற்றிகள், அவரின் சட்ட அறிவுக்காம் சான்றுகளாய்த் திகழ்கின்றன. அதில் சந்தேகமில்லை. ஆனால் இச்சாதனைகள் அவரை ஓர் சட்டவல்லுனராய் நிரூபித்திருக்கின்றனவே யன்றி, அவரை ஒரு மக்கள் தலைவனாய் நிரூபித்ததாய்ச் சொல்லமுடியாது. தன் அறிவுச் சக்தியை வைத்தே மேல் விடயங்களை அவர் சாதித்திருக்கிறார். மக்கள் சக்தியை வைத்து அவர் சாதித்த விடயங்கள் மிகமிகக் குறைவுதான். மேல் விடயங்களால் ஓர் வக்கீலாய் வெற்றி பெற்றிருக்கும் சுமந்திரன், அவற்றைக் கடந்து ஒரு மக்கள் தலைவனாய்ச் சாதிக்கவேண்டிய  விடயங்கள், வரிசையில்  காத்திருக்கின்றன.

✠✠✠✠✠✠

லகம் அறிய  அண்மைக்காலத்தில்,
ரணிலின் ஆதரவாளராகத் தன்னை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார் சுமந்திரன்.
அவ் ஆதரவுத்தன்மையால் நம் இன நன்மை நோக்கி,
அவர் பெற்ற பலன்கள் எவை? எனும் கேள்விக்கு பெரும்பாலும் பூச்சியமே விடையாகிறது.
அரசியல் கைதிகள் விடுவிப்பு, நில விடுவிப்பு, கல்முனை நிர்வாகம் எனப் பலவிடயங்களிலும்,
ரணில் ஆதரவுக் கொள்கையை வைத்து,
வெளிப்பட்ட வெற்றிகள் எதனையும் சுமந்திரனால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

✠✠✠✠✠✠

அது மட்டுமல்லாமல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியாளர்களாய்க் குதித்த,
ரணில், கோத்தபாய, சஜித் ஆகிய மூவரில்,
கோத்தபாய, சஜித் ஆகியோரை நிராகரித்து ,
வெளிப்படையாக ரணிலுக்குக் காட்ட நினைத்த ஆதரவு என்பது,
இன நன்மை நோக்கிய தீர்க்க தரிசனமுள்ள ஒருமுடிவாய்க் கருதப்பட முடியாமலே இருக்கிறது.

✠✠✠✠✠✠

பெரும்பான்மை இனத்தாரின் ஆதரவைப் பொறுத்தவரை,
ஜனாதிபதித் தேர்தலில் முன்னிற்பவர்கள் சஜித், கோத்தபாய அணியினரே என்பது வெளிப்படை.
இந்நிலையில் இவர்களில் ஒருவரை ஆதரிக்காமல்,
ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்த நினைத்தமை,
வருங்காலத்தில் தமிழினத்தின் மீதான மற்றவர்களின் வெறுப்புக்கு வழிகோலும் என,
பலரும் கருதுகின்றனர்.
வெளிப்பட ரணிலுக்கான ஆதரவை சுமந்திரன் தெரிவிக்காவிட்டாலும்,
வெளிவந்த அவரது அறிக்கைகள் பல ரணில் ஆதரவு வாசனையோடு இருந்தது,
மறுக்கமுடியாத உண்மையேயாம்.
கடந்த பாராளுமன்ற காலப்பகுதியில் ரணில் ஆதரவால்,
தமிழர் சார்பான சாதனைகள் எதுவும் நிகழ்த்தப்படாத நிலையில்,
சுமந்திரனின் இவ் ஆதரவு எது நோக்கியது? என்பதான கேள்விக்கணைகள்,
பலரிடம் இருந்தும் ஏவப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

✠✠✠✠✠✠

ஏற்கனவே மஹிந்த அணி பாராளுமன்றக் கலைப்பில்,
ரணிலுக்கு ஆதரவளித்த சுமந்திரன்மேல் பெருங்கடுப்பில் இருப்பது உண்மை.
அவர்கள் வெற்றிபெற்றால் சுமந்திரன்மீது ஏற்பட்ட அந்தக் கடுப்பினை,
நிச்சயம் தமிழினம்தான் பெறவேண்டியிருக்கப் போகிறது.
மஹிந்த அணியின் வெற்றியும் ஓரளவு எதிர்பார்க்கப்படும் ஒன்றாகவே இருக்கும் நிலையில்,
சுமந்திரனின் மேற் சாதனைகள் அவரது பெருமைக்கன்றி,
தமிழினத்தின் நன்மைக்கு எவ்விதத்திலும் உதவப் போவதில்லை என்பது உறுதி.

✠✠✠✠✠✠

நடந்து முடிந்த இறுதிப்போரில் மஹிந்த அணியினரால் விளைந்த பாதிப்புகள்,
கடந்தகால அரசியல் வரலாற்றில் தன் தூய்மையை நிறுவத்தவறிய,
ரணிலின் அரசியல் போக்கு என்பவற்றால்,
வெறுப்புற்றிருக்கும் தமிழ் மக்களுக்கு,
கடந்தகால அரசியல் வரலாற்றுப் பாதிப்பு ஏதும் இல்லாமல்,
புதியவராய் பெரும் மக்கள் ஆதரவோடு,
ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் சஜித் பிரேமதாசாவையே,
ஜனாதிபதிக்கான உகந்த தேர்வாய்ப் பல தமிழர்களும் கருதுகிறார்கள்.
இந்த மக்கள் உணர்வினை உள்வாங்காமல்,
ரணிலை ஆதரித்து  அவர் பக்கம் நிற்க நினைந்த சுமந்திரனின் கருத்தில்,
அரசியல் தீர்க்கதரிசனம் இல்லை என்பது நிதர்சனமாம்.
ஆதரவு கேட்டு யாழ் மக்களைத் தேடி வந்த சஜித்தை,
கூட்டமைப்பு கையாண்டவிதம் ரசிக்கத்தக்கதாய் இல்லை எனவும் பலரும் கருதினர்.
இவ்விடயத்தில் முஸ்லிம் தலைவர்கள் காட்டிய நிதானத்தையும் நிதர்சனச் செயற்பாட்டையும்,
பலரும் வியந்து நிற்கின்றனர்.
அவ்விடயத்தில் சுமந்திரனின் தூரப்பார்வையற்ற பக்கச்சார்புள்ள செயற்பாடு தவறென்பதே,
பலரதும் முடிவாய் இருக்கிறது.

✠✠✠✠✠✠

வருகின்ற ஜனாதிபதித்தேர்தல் என்பது,
தமிழினத்தின் பலத்தைக் காட்ட மீண்டும் கிடைத்திருக்கும் ஓர் சந்தர்ப்பமாம்.
இனத்தின் ஏகப்பிரதிநிதிகள் என தம்மை அறிவித்துக் கொண்ட கூட்டமைப்பினர்,
இந்தச் சந்தர்ப்பத்தை சரிவரப் பயன்படுத்தும் கடமை பெற்றுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையிலாவது,
தனிப்பகைகள், கட்சிப்பகைகள், போர்க்கால அரசியல் என்பவற்றைக் கடந்து,
தமிழ்த் தலைமைகளை ஒன்றுபடுத்தி,
ஒட்டுமொத்தத் தமிழர்களினதும் வாக்குகளை ஒன்று திரட்டி,
அப்பலத்தை வைத்து தமிழின உரிமை பற்றிய பேரம் நிகழ்த்தி,
இனத்திற்கான நன்மை பெறவேண்டியது மிக மிக அவசியமாம்.
கூட்டமைப்பின் எழுதப்படாத தலைவராய் இயங்கும் சுமந்திரன்,
அவ் உண்மையை உணர்ந்து இதுவரை செயற்படத் தொடங்காதது,
பலருக்கும் வருத்தம் தந்துள்ளது.

✠✠✠✠✠✠

மேற் சொன்னவை எல்லாம் சம்பந்தன், சுமந்திரன் பற்றிய எதிர்க்கருத்துக்கள்.
ஆதரவுக்கருத்துக்களும் இல்லாமலில்லை.
சம்பந்தனின் அரசியல் அனுபவம்,
பாராளுமன்றில் அவரது ஆளுமைமிக்க உரைகள்,
பிரச்சினைகளின் போது அவர்காட்டும் நிதானம்,
பேரினத்தலைவர்களாலும் மதிக்கப்படும் தன்மை,
வெளிநாட்டுத் தலைவர்களின் மரியாதையைப் பெறும் தகுதி,
இன்றைய நிலையில் அவருக்கு ஒப்பான ஒரு தலைவர் கட்சிக்குள் இல்லாமை என்பவை

சம்பந்தனைப் பொறுத்தவரை,
இன்றைய நிலையில் நிராகரிக்க முடியாத தகுதிகளாய்க் கருதப்படுகின்றன.

✠✠✠✠✠✠

அதுபோலவே சுமந்திரனின் ஆதரவாளர்களால்,
இன்றைய நிலையில் வெறுமனே உணர்ச்சி அரசியல் பேசி மக்களை கிளரச் செய்யாமல் யதார்த்தம் உணர்ந்து அரசியல் செய்யும் ஆற்றல்,
உலகநாடுகளின் அங்கீகரிப்பைத் தன்வயப்படுத்தி இயங்கும் தன்மை,
தேசிய அரசியலிலும் காட்டும் அறிவு வலிமை,
தனது சட்ட ஆற்றலால் நம் இனத்தார்க்கு மட்டுமன்றி பேரினத்தார்க்கும் பயன் விளைக்கும் பெருமை,
தமிழ்த்தலைவர்களுள் சம்பந்தனுக்கு அடுத்தபடியாய் பாராளுமன்றில் மதிப்புப் பெற்றிருக்கும் நிலை,
கூட்டமைப்புக்கான உலக நாடுகளினதும் பேரினத்தாரினதும் இன்றைய அங்கீகரிப்பிற்கு, வழிகாட்டும் ஆற்றல்
என்பவை சுமந்திரனின் தனித்தகுதிகளாய் எடுத்துக் காட்டப்படுகின்றன.
அவர்தம் கருத்தில் உண்மை இல்லாமலில்லை.

✠✠✠✠✠✠

மேற்சொன்னவை கூட்டமைப்புப் பற்றிய ஓர் பருந்துப்பார்வை.
தமக்கு எதிரியாய் வளர்ச்சிபெற்ற முன்னாள் முதலமைச்சரின் ஆதரவாளர்களால்,
அண்மையில் நடத்தப்பட்ட 'எழுகதமிழ் ஊர்வலம்',
பெரிய அளவில் வெற்றி பெறாததில் கூட்டமைப்பினர் இன்று,
சற்று மகிழ்ந்திருக்கின்றனர்.
ஆனால் அது அவர்களுக்கான மகிழ்ச்சிச் செய்தி இல்லை என்பதே நிஜம்.
கஜேந்திரகுமார், சுரேஷ் ஆகியோர்க்கு இடையிலான முரண்பாட்டில்,
அவர்தமக்குள் ஏற்பட்டிருக்கும் உட்பகையின் விளைவே,
'எழுகதமிழின் தோல்வியாமேயன்றி,
அத்தோல்வி கூட்டமைப்பின் ஆதரவுப் பெருக்கத்தால் விளைந்ததொன்றில்லை என்பது,
சர்வ நிச்சயமாம்.
இந்நிலையில்,
தமது கட்சியின் வளர்ச்சி நோக்கி அவர்கள் இன்னும் வேகமாய் இயங்க வேண்டும் என்பது நிதர்சனம்.

✠✠✠✠✠✠

கூட்டமைப்பைப் பொறுத்தவரை,
அவர்கள் அவசரமாய் விடைகாண வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.
அவற்றைக் கீழே வரிசைப் படுத்துகிறேன்.
தமிழரசுக்கட்சியினர் வருங்காலத்தில் தனித்து இயங்கப் போகின்றனரா? அன்றேல் பல கட்சிகளின் இணைப்பாகத் தொடர்ந்து இயங்கப் போகின்றார்களா? என்பதற்கான விடை தேடல்.
கட்சியின் தலைமையை வலிமையுள்ள ஒரு தலைமையாய் மாற்றுதல்.
தனி ஒரு மனிதனின் ஆற்றலை மட்டும் நம்பி, ஒரு கட்சி இயங்குவதின் குறைபாடு பற்றி ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்தல்.
கட்சியில் இணையும் அடிமட்டத் தொண்டன் ஒருவன் உயர்மட்டத் தலைவனாய் மாறுதற்கான சரியான படிமுறையுற்ற வழியை கட்சிக்குள் அறிமுகம் செய்தல்.
கட்சிக்குள் தகுதி கருதிய தரவரிசையை (list of rank) நிர்ணயித்தல்.
கட்சிக்குள் வெளிப்படையாக ஜனநாயகத்தன்மையைப் பேணுதல்.
பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சி உறுப்பினர் தேர்வுகளில் தியாகம், திறமை, தொண்டு மனப்பான்மை, இனப்பற்று ஆகியவற்றின் அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல்.
ஒரு பதவிக்காலத்தில் சாதனைகள் ஏதும் செய்யாதவர்களின் இடத்துக்கு புதியவர்களைக் கொணர்தல்.
பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சிசபை ஆகியவற்றில் அடுத்தடுத்த இரண்டு பதவிக்காலத்திற்கு மேல் ஒருவர் பதவிவகிக்காத வண்ணம் யாப்பினை சரிசெய்தல்.
கட்சிக்கு மாறாய் செயற்படும் உறுப்பினர்களை விசாரித்து தண்டிக்கும் குழு ஒன்றினைத் தெரிதல்.
கூட்டமைப்பாய் இயங்கப்போகும் பட்சத்தில் மாற்றணியினருடன் பேசி கொள்கை விடயத்தில் தெளிவான முடிவெடுத்தல், உண்மையாய்  அதைப் பின்பற்றுதல்.
கூட்டமைப்பாய் இயங்கப்போகும் பட்சத்தில் பதவிப்பங்கீடு பற்றிய உறுதியான ஓர் முடிவெடுத்து அதனைக் கடைப்பிடித்தல்.
ஒட்டுமொத்த தமிழினத் தலைவர்களாய் அன்றி மதம் சார்ந்த, பிராந்தியம் சார்ந்த தலைவர்களாய் இயங்குவதைத் தடைசெய்தல்.
தமிழ்ச்சமூகத்தின் அறிவுமிக்க நேர்மையான, சமூக உணர்வுள்ள ஓர் குழுவை நியமித்து, தமது செயற்பாடுகளை அக்குழுவோடு ஆராய்தல், மத்திய அரசுடனான உறவுநிலை பற்றி அக்குழுவின் கருத்தைப் பெற்று இயங்குதல்.
கல்வி, பண்பாடு, பொருளாதாரம் போன்ற முக்கிய விடயங்களுக்கான ஆலோசகர்களை உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தேர்ந்து நியமித்தல்.
சமயப்பிரச்சினைகள் எழும்போது அவற்றைத் தீர்க்க தகுதி மிக்க பல் சமயம் சார்ந்த நடுநிலையான குழு ஒன்றை நியமித்தல்.
புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைப் பெற்று, பொருளாதாரம், கல்வி, சமயம், பண்பாடு, சமூக வளர்ச்சி ஆகிய விடயங்களில் தீர்க்க தரிசனமிக்க திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்தல்.
போரால் பாதிப்புற்றவர்களுக்கான திட்டமிடுதலில் இறந்தகால, நிகழ்கால ஆதரவளிப்பதோடு நின்றுவிடாமல் வருங்கால வாழ்வுக்கான திட்டமிடுதலையும் நிர்ணயித்தல்.
கட்சி, இனம் ஆகியவற்றின் முன்னேற்றம் நோக்கிய பணிகளுக்கான நிதி அமைப்பொன்றை பெரிய அளவில் உருவாக்குதல்.

இங்ஙனமாய் கூட்டமைப்பினர் தம்மை வலிமைப்படுத்த,
பலகாரியங்களைச் சாதிக்கவேண்டியிருக்கிறது.

✠✠✠✠✠✠

போர் முடிந்ததன் பின்னான கடந்த பத்து ஆண்டு காலகட்டத்தில்,
தமது கட்சி வளர்ச்சி நோக்கியோ, இனவளர்ச்சி நோக்கியோ,
இவர்கள் திட்டமிட்டு செயற்படவில்லை என்பது,
வெட்கப்படவேண்டிய விடயமாம்.
இக்காலகட்டத்தை வெறுமனே பதவிப்போட்டிகளுக்கும் கட்சிப் போட்டிகளுக்கும்,
தேவையற்ற சண்டைகளுக்குமாய் மட்டுமே கூட்டமைப்பு பயன்படுத்தியிருக்கிறது.
இப்போக்கு உடனடியாக மாறவேண்டும்.
இன்றைய நிலையிலும் தமிழ்மக்களின் ஆதரவுப் போட்டியில்,
தமிழர் விடுதலைக் கூட்டமைப்பே முதல் நிலை பெற்றிருப்பதாய் ஊகிக்கப்படுவது உண்மையே.
அதன் உண்மைத்தன்மையை அடுத்துவரும் தேர்தலே நிச்சயப்படுத்தவேண்டும்.
அதற்கு முன்பாக கூட்டமைப்புத் தலைவர்கள்,
தமக்குள்ளும் தமது கட்சிக்குள்ளும் சீர்திருத்தங்களைக் கொணரத் தவறுவார்களேயானால்,
முயல்களை ஆமைகள் வெல்லும் வாய்ப்பும் இருக்கவே செய்கிறது.

✠✠✠✠✠✠

(அடுத்தவாரம் நீதித்தராசின் நிறுவையில் தமிழ்மக்கள் கூட்டணி)
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.