இரங்கற்பா எத்தனைதான் எழுதுவோமோ? -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

12.05.21அன்று அமரராகிய முனைவர் ரெங்கராஜன் அவர்களுக்கான இரங்கற்பா!
🪔 🪔 🪔
லகமெல்லாம் இருண்டேதான் போயிற்றம்மா!
உயிர் அன்பன் பிரிவதனைக் கேட்டதாலே
உளமதனில் தமிழாலே என்னைச் சார்ந்த 
ஒப்பற்ற நேசனையும் கொடிய நுண்மி
பலியெடுத்துப் போயிற்றாம் பதறுதெந்தன் 
பாசமிகு நெஞ்சமதும் பண்பால் தேர்ந்து
நிலமகற்குத் திலகமென வாழ்ந்த ஐயன்
நேசர்களை விட்டெங்கே போயினானோ?
 
இரங்கற்பா எத்தனைதான் எழுதுவோமோ
இரக்கமிலா விதியதுவும் வென்றே சென்றால்
தரித்திடுமோ எம்நெஞ்சு தரணி போற்றும் 
தலைவன் எமைக் காக்கானோ தனியே நின்று
நிர்கதியாய் மனிதகுலம் அழிந்தே போமோ?
நேசமிகு அன்பரெலாம் நிலத்தில் வீழ
வருத்தமுடன் நின்றதனைப் பார்க்கும் துன்பம்
வர வேண்டாம் எதிரிகட்கும் வரமாய்க் கேட்டேன்
 
வற்றாத பேரறிவின் வளத்தால் நல்ல
வாஞ்சையுடன் மாணவரை உயர்த்தி வைத்தோன்
சற்றேயும் பிறர் துன்பம் பொறுக்கமாட்டா
சாற்றரிய பெரும்பண்பன் தமிழைத் தன்னின்
பற்றாக வாழ்ந்திருந்தோன் அறிஞர் போற்ற
பல மேடை தனில் ஏறிப் புகழும் கொண்டோன்.
முற்றாத வயதினிலே இரக்கமின்றி 
மூதறிஞன் தனைப் பறித்த முறைமை என்னே?
 
குற்றேவல் செய்யாத குணத்தைக் கொண்டோன்
குறையேதும் இல்லாத மனிதப் பண்பன்
வற்றாத பேரன்பால் என்னை ஈர்த்து
வணங்கித்தான் உறவாக்கி ஆண்ட அன்பன்
சற்றேனும் தமிழ் செவியில் வீழ்ந்தால் ஆய்ந்து
சடசடெனப் பெரும் பொருளைக் காணும் ஐயன்
பற்றேதும் இல்லாது பலரும் வாட 
பார் விட்டுப் போனானோ? பதறும் நெஞ்சு
 
ஈழத்தில் கம்பனது கழகந்தன்னை 
என்வீடு எனச் சொல்லி மகிழும் ஐயன்.
ஆழத்துத் தமிழ் அன்பால் எம்மோடிந்த
அகிலமெலாம் சுற்றியவன் அழைத்தபோது
நீளத் தன் அன்பாலே நெகிழ்ந்து வந்து
நேசத்தால் எம் அவைகள் நிறையச் செய்தோன்
காலத்தான் செய் கொடுமைக்(கு) அளவோ இல்லை
கண்ணுதலான் காலெடுத்து உதைத்திடானோ 
 
இரங்க ராஜன் என்னும் அறிஞன் போனான்
எம் இதயம் பதிந்திருந்த ஏந்தல் போனான்
இரங்கி நல் மாணாக்கர் தன்னை ஏற்றி
எழிலடையச் செய்த பெரும் ஏந்தல் போனான்
திறமுடனே அறிவுலகம் காத்து நின்ற
தெளிந்த பெரும் நல் ஆசான் தீர்ந்து போனான்
அறமதனைக் காக்கின்ற தெய்வம் தானும் 
அடி வைத்து இவ்வுலகைக் காத்திடாதோ!

🪔 🪔 🪔
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்