'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 75 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
நிறைவில் சிலர் பற்றிய எண்ணங்கள்.....
ஆதரவு தந்த மதத் தலைவர்கள்

எமது கழக முயற்சிகளை அங்கீகரித்து,
பல மதத்தலைவர்களும் எமக்குப் போதிய ஆதரவினை நல்கினர்.
அவர்தமைப்பற்றியும் ஓரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும்.
மணி ஐயர் என்று முன்பு சொல்லப்பட்டவரான,
நல்லை ஆதீனத்தின் ஸ்தாபக குருமுதல்வரான சமாதி அடைந்த, 
ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரம்மாச்சாரிய சுவாமிகள் அவர்கள்,
கழகத்திற்குத் தந்த பேராதரவினைப் பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன்.
அவரின் பின் ஆதீனப் பொறுப்பை ஏற்று நடாத்திவரும்,
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானதேசிக பரம்மாச்சாரிய சுவாமிகள் அவர்களும்,
எமது விழாக்களுக்கான ஆதரவினை மனமுவந்து நல்கினார்.
அதுபோலவே கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்களாய் இருந்த,
பேராயர் தியோகுப்பிள்ளை அவர்களும், 
பேராயர் சௌந்தரநாயகம் அவர்களும்,
தென்னிந்தியத் திருச்சபையின் தலைவர்களாய் இருந்த,
பேராயர் அம்பலவாணர் அவர்களும், பேராயர் ஜெபநேசன் அவர்களும்,
எங்கள்மேல் அன்பும், அக்கறையும் காட்டியதோடு,
பலதரம் எமது கம்பன்விழாக்களிலும் கலந்து உரையாற்றி,
கழகத்தைப் பெருமைப்படுத்தினர்.
அப்பெரியோர்கள் தந்த ஆதரவினையும் மறக்க முடியாது.

🚩 🚩 🚩

துணை செய்த துணைவேந்தர்கள்

பேராசிரியர் க. கைலாசபதி

யாழ். பல்கலைக்கழகம் ஆரம்பத்தில்
கெம்பஸ் ஆகவே இருந்தது.
அப்போது துணைவேந்தர் என்ற பதவி இருக்கவில்லை.
தலைவர் என்றிருந்த அப்போதைய பதவியை,
பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் வகித்தார்.
ஈழத்தின் தமிழுலகத்தை தமது விமர்சனப் பார்வையால்
உலக அரங்கில்  ஏற்றியவர் இவர்.-பெரும் படிப்பாளி.
கழகம் வளர்ச்சியுறாக் காலத்திலேயே எமது முயற்சிகளை ஊக்குவித்தவர். 
அவருடனான தொடர்புபற்றி முன்பே சொல்லியிருப்பதால்,
இவ்விடத்தில் அதைத் தவிர்க்கிறேன்.
🚩 🚩 🚩

பேராசிரியர் சு. வித்தியானந்தன்

கம்பன் கழகம் யாழ். பல்கலைக்கழகத்தின் நான்கு துணைவேந்தர்களைச் சந்தித்தது.
கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது பல்கலைக்கழக துணைவேந்தராய்,
பேராசிரியர் சு. வித்தியானந்தன் இருந்தார்.
அவருடனான எமது தொடர்பு 
அதிக நெருக்கமானதாய் இருக்கவில்லை.
ஆனாலும், அந்த ஆரம்ப நிலையிலேயே எம்மை அவர் கணித்து நடந்தார்.
எமது கம்பன் கோட்ட கட்டிடத்தின் அடிக்கல்லை
நாட்டியவர் இவரே.

🚩 🚩 🚩

பேராசிரியர் துரைராஜா

பேராசிரியர் வித்தியானந்தனின்
மறைவிற்குப் பின்பு,
பொறியியலாளரான பேராசிரியர் துரைராஜா அவர்கள்
யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராய் வந்தார்.
மிகப் பெரிய சான்றோர் அவர்.
எளிமையும், பணிவும் நிறைந்தவர் அவர்.
பெரும் ஆற்றலாளர்.
அவரது பெயரில் ஓர் 'தியரி'யே இருப்பதாகச் சொல்வர்கள்.
வாகனப் போக்குவரத்து இல்லாத அந்தக் காலத்தில்,
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு
தினமும் சைக்கிளில் வந்து மற்றவர்களை
வியக்க வைத்தார் இவர்.
எங்கள் கழகத்தின்மீது பெரு நம்பிக்கையும்,
மதிப்பும் வைத்திருந்தார்.
எங்களின் விழாவில் முதல் நாளன்று,
பட்டமளிப்பு அங்கியுடன் வந்து,
விருதாளர்களுக்கு விருது வழங்கி
எங்கள் கழகத்தின் பெறுமதியை 
மிக உயர்த்தினார்.
கழகத்தின் எந்த அழைப்பையும் அவர்
என்றும் நிராகரித்ததில்லை.
எனது ஆலய தொடர்சொற்பொழிவு ஒன்றின்
இறுதிநாளில் தனிப்பட்ட ரீதியில் வந்து 
என்னை வாழ்த்தினார்.
அவரது திடீர் மறைவு எங்களுக்குப் பேரிழப்பாயிற்று.
அவர் மறைவுக்குப் பின்னர் அவருக்கு 'மகரயாழ்' விருதினை 
1994ஆம் ஆண்டு விழாவில் வழங்கினோம்.

🚩 🚩 🚩
பேராசிரியர் கே.  குணரட்ணம்

பேராசிரியர் துரைராஜாவுக்குப் பின் பதவியேற்ற 
விஞ்ஞானப் பேராசிரியரான இவரும்
மரபு ரீதியாக எங்கள் கழக விழாக்களை 
ஆரம்பித்தும், விருதுகளை வழங்கியும்
எங்களுடனான உறவை நல்லபடி பேணினார்.
எங்களது ஒரு விழாவில் கழகம் வழங்கும்
மகரயாழ் விருதினை, 
'யாழ்ப்பாணத்தின் நோபல் பரிசு' என்று பேசி எமக்கு மதிப்பளித்தார்.
இவர் காலத்தில்தான் பல்கலைக்கழகத்தார் பலர்
எம்மோடு பகைக்கத் தலைப்பட்டனர்.
கழக விழாக்களுக்குத் துணைவேந்தரின் வருகையை, 
அவர்கள் நிறுத்த முற்பட்டபோதும்,
அவர்கள் கோரிக்கையை ஏற்காது துணிவோடு எங்கள் விழாக்களுக்கு 
வந்த பெருமனிதர் இவர்.

🚩 🚩 🚩
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை

அடுத்து துணைவேந்தராய் வந்த
புவியியல் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
அவர்கள் ஆழ்ந்த கல்விச் சிந்தனை உள்ளவர்.
1995இல் யாழை இராணுவம் கைப்பற்றியபின்பு
பல பிரச்சினைகளுக்கு மத்தியில்
யாழ். பல்கலைக்கழகத்தை இயங்கச்செய்த பெருமை 
இவரைச் சார்ந்தது.
வெளிநிலை மாணவர்களும் பல்கலைக்கழகப் பயன் பெற
வழி வகுத்தவரும் இவரே.
எனது அண்ணனுக்குப் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைக்க
இவர் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது.
கழகத்துடனான இவரது உறவு நீண்டது.
எமது மற்றைய துணைவேந்தர்கள் போலவே
கழகத்திற்கான பங்களிப்புக்கள் அனைத்தையும் 
இவரும் செய்தார்.
பேசினாற் போதாது, எழுத்தாக்கங்களைச் செய்யவேண்டுமென
என்னை முதன் முதலில் தூண்டியவர் இவரே.
பல்கலைக்கழகத்தார் பலபேரும்,
எங்கள் கழகத்தின் பெருமையைக் குறைக்க நினைத்தபோது,
கழகத்தின் முக்கியத்துவத்தை 
ஊரறிய துணிந்து சொன்ன பெரிய மனிதர் இவர்.
இன்றும் கழக வளர்ச்சியில் அக்கறையோடு இருக்கும் இவருக்கு,
கழகம் நிறையக் கடமைப்பட்டிருக்கிறது.

🚩 🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்