'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 76 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
ஆசிரியர் சொக்கன்

கழகத்தின் முதல் விழாவிலிருந்து எங்களோடு இணைந்திருந்தவர் இவர்.
பெருந்தமிழ் அறிஞன், எழுத்தாளன், நாடக ஆசிரியன் என,
பல்துறை ஆற்றல் கொண்ட மரபறிஞர்.
தனது ஆற்றலால்  யாழ் இந்துக்கல்லூரிக்குப் பெருமை சேர்த்தவர்.
முதல் விழாப் பட்டிமண்டபத்திலேயே இவரோடு சிறு முரண்பாடு ஏற்பட்டது.
அதிலிருந்து இவருக்கு எங்களை அதிகம் பிடிக்காது.
ஒருமுறை இவர் பாராளுமன்ற உறுப்பினர் க.பொ. ரத்தினம் அவர்கள் நடாத்திய,
திருக்குறள் விழாவைப் பொறுப்பேற்று நடாத்தினார்.
அவ்விழா கல்வியங்காட்டில் நடந்தது.
அதுபற்றிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றிற்கு,
பாராளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் வீட்டிற்கு வரும்படி,
என்னையும், குமாரதாசனையும் கட்டாயப்படுத்தி அழைத்தார்.
அங்கு போனபோது வீட்டின் நடுக்கூடத்தில்,
எம்.பி. மார் இருவரும் கதிரையில் காலின் மேல் கால் போட்டு இருக்க, 
சொக்கன் மாஸ்ரர் உட்பட தமிழ் அறிஞர்கள் அனைவரும்,
கீழே உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள்.
எனக்கு அதில் உடன்பாடாகவில்லை.
விழா வேலைகளைப் பொறுப்பேற்கும்படி சொக்கன் எங்களைக் கட்டாயப்படுத்தினார்.
நான் உடன்படாமல் அவ்விழா வேலைகளிலிருந்து விலகிக்கொண்டேன்.
அடிமையாய்ச் சொக்கன் நடந்து கொண்டது எனக்குப் பிடிக்கவில்லை.
யாழ்ப்பாணத்தைவிட்டுக் கொழும்பு வந்ததும் அங்கு நடந்த கம்பன்விழாவில், 
சொக்கன் மாஸ்ரருக்குப் பின்னர் பாராட்டு நடத்தினோம்.
நெகிழ்ந்து கடிதம் வரைந்தார்.

🚩 🚩 🚩
காரை. சுந்தரம்பிள்ளை

இவரும் இந்துக்கல்லூரி ஆசிரியரே.
சிறந்த கவிஞர்.
ஆரம்பந்தொட்டு கம்பன் கழகத்தின் வளர்ச்சியில் பங்கேற்றவர்.
எங்களின் பெருமை கண்டு, தான் பெருமைப்பட்டவர்.
எளிமைக் கவிதைகளால் மக்களை ஈர்த்தவர்.
நாங்கள் கழகம் ஆரம்பிப்பதற்கு முன்னரே தன்னைப் புகழால் நிலைநிறுத்தி நின்றவர்.
பிற்காலத்தில் சோ.ப, முருகையன் போன்றோர் எம்மைக் கைவிட்டபோது,
கழகம் என் வீடு எனச் சொல்லி ஆதரவு தந்தவர்.
போர்க்காலத்தில் எங்கள் வீட்டில் சிலகாலம் வாழ்ந்தார்.
இன்று தெய்வமாகிவிட்டார்.

🚩 🚩 🚩
செட்டியார் சோமசுந்தரம்

இவர், பாரம்பரியமான பசுபதிச் செட்டியார் குடும்பத்தின் வாரிசு.
கடும் சைவப்பற்றாளர். சேக்கிழாரின் மேல் பேரன்பு கொண்டவர்.
அக்கால சேக்கிழார் மன்றத்தின் செயலாளராய் பணியாற்றினார்.
என்னுடைய கல்லூரி ஆசிரியர் இவர்.
கல்லூரிக்காலத்தில் இவரோடு எனக்குப் பெரிய நெருக்கம் இருக்கவில்லை.
ஆனால் கல்லூரியை விட்டு நாம் வெளிவந்தபின்பு,
கழகத்தின்மேல் மிகுந்த அக்கறை காட்டினார்.
பெருமதிமிக்க தன் குடும்பச் சொத்துக்களான கலைப்பொருள்கள் பலவற்றையும்,
கிடைத்தற்கரிய தனது நூல்கள் பலவற்றையும்தன் பிள்ளைகளுக்குக்கூடக் கொடுக்காமல், 
என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்.
என் வளர்ச்சி கண்டு மகிழ்ந்த மனிதர்.
இவர் மறைவுக்குப் பின்பு,
இவரது இடத்தை இவரது ஒரே புதல்வன் நிரஞ்சன் நந்தகோபன், 
நிறைவு செய்து வருகிறான்.

🚩 🚩 🚩
அருட்கவி விநாசித்தம்பி

தெய்வத்தன்மை கொண்ட தமிழறிஞர் இவர்.
இவரை யாழ்மண் ஓர் அருளாளராகவே பார்த்தது.
வரகவியாய்க் கவிதை பாடும் வரம் பெற்றவர்.
என்மேல் எல்லையற்ற பிரியம் கொண்டவர்.
கழகத்தின் முதல்விழாக் கவியரங்கில் இவர் பாடிய கவிதை பலரையும் பிரமிக்க வைத்தது.
எங்களது எந்த முயற்சியையும் மனதார வாழ்த்துவார்.
யாழ் விழா ஒன்றில் மூதறிஞராய் இவரைக் கௌரவித்திருக்கிறோம்.

🚩 🚩 🚩
புஸ்பா செல்வநாயகம்

ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தின் சிறந்த பெண் பேச்சாளர்களில் ஒருவர்.
நான் கல்லூரியில் நடத்திய கதம்பவிழாக்களிலும், 
வேறுபல விழாக்களிலும் கலந்து சிறப்பித்திருக்கிறார்.
யாழ் கம்பன்கோட்டத்திற்கு எதிரிலேயே இருந்தார்.
அவரிடம் பல உதவிகளை நாம் பெற்றிருக்கிறோம்.
அன்பும், கோபமும் இவரிடம் சரிசமமாய் விளையும்.
தமிழை நேசித்து வாழும் பெண்மணி.

🚩 🚩 🚩
முரசொலி சிவராஜா

யாழில் முரசொலி என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடாத்தியவர் இவர்.
பலரும் சேர்ந்து இவரை ஏமாற்றி அப்பத்திரிகையை நட்டப்படுத்தினர்.
தரத்தை எப்போதும் விரும்பும் இவர்,
அதைப் பத்திரிகையிலும் பேண வேண்டும் என நினைத்து,
முதலில் திருச்செல்வத்தை ஆசிரியராக நியமித்தார்.
பின்னர் அவர் விலக,
பண்டிதர் உமா மகேஸ்வரன், கவிஞர் சோ.ப. ஆகியோரையெல்லாம்,
பத்திரிகையின் ஆசிரியப்பொறுப்பில் அமர்த்திப் பார்த்தார்.
எதுவும் சரிவரவில்லை.
சோ.ப. வெளியிட்ட ஒரு செய்தியால்,
முடிவில் அப்பத்திரிகை புலிகளால் நிறுத்தப்பட்டது.
எதிலும் நூறு வீதத் தூய்மை விரும்புபவர். அதனால் சிரமப்படுபவர்.
உலகத்தை உண்மையாய்ப் பேணுபவர்.
பிழை பொறுக்கமாட்டாத இயல்புடையவர்.
கம்பன் கழகத்துடன் ஆரம்பத்தில் அதிக நெருக்கம் இல்லாதிருந்து,
பிற்காலத்தில் எங்களைக் குடும்ப உறுப்பினர்களாய் நேசித்தவர்.
எங்கள் பெருமைகண்டு பெருமைப்படுபவர்.
நாம் எதைச் செய்தாலும் சரியான விமர்சனம் செய்து, அதை ரசிப்பார்.
நல்லியல்புகளால் ஏமாந்த பெரியமனிதர்.
ஆனால் இறைவன் அவரை நல்லபடியே இன்று வாழ வைத்திருக்கிறான்.

🚩 🚩 🚩
வீரமணி ஐயர்

முத்தமிழும் கைவந்த பேரறிஞர்.
வரகவியாய்த் திகழ்ந்தவர். தமிழகத்திலும் பெயர் பதித்தவர்.
ரி.எம். சௌந்தர்ராஜன் பாடிய 'கற்பகவல்லி', இவர் இயற்றிய பாடலே.
ஆரம்பகாலத்திலிருந்து எங்கள் கம்பன் கழகத்தை நேசித்த பெரும்மனிதர்.
யாழில் நடந்த கடைசி விழாவில், கவியரங்கங்களில் கலந்து கொள்ளமாட்டேன் என 
முருகையன் விலகியபோது எங்களுக்குக் கைகொடுத்து உதவியவர்.
எங்களைக் கண்டால் அணைத்து முத்தமிட்டு மகிழும் மனிதர்.
தமிழே வாழ்வென வாழ்ந்தவர்.
இவரையும் பிற்காலத்தில் எமது கொழும்புக்கம்பன் விழாவில் கௌரவித்தோம்.

🚩 🚩 🚩
எழுத்தாளர் குணராஜா

கம்பன் கழகத்தை விரும்பிய அறிஞர்களில் இவரும் ஒருவர்.
எங்கள் கழக விழாக்களில் பலதரம் பேசியிருக்கிறார்.
அப்பேச்சுக்கள் துணிவு மிக்கவை.
அனைத்து ஆங்கிலச் சொற்களையும் 
தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என, புலிகள் முடிவு செய்து, 
தேவையற்ற மொழிபெயர்ப்புக்கள் சிலவற்றைச் செய்தபோது,
எங்கள் விழா மேடையில் அதைக் கடுமையாகத் துணிந்து எதிர்த்தார்.
1995 இடப்பெயர்வில் கம்பன் கழகத்தார் முழுப்பேரும்,
சாவகச்சேரியில் இருந்தபோது,
தனது உதவி அரசாங்க அதிபர் பதவியைப் பயன்படுத்தி,
அப்போது கிடைத்தற்கு அரியதாய் இருந்த 'பாணைத்'இ
தேடிக்கொணர்ந்து தந்து எங்கள் பசி தீர்த்தவர்.
தனது ஆற்றலாலும் அறிவாலும் ஆளுமையாலும்,
புலிகளைக்கூட எதிர்த்து நின்ற இவர்,
பல்கலைக்கழகப் பெரிய விமர்சகர்களிடம் பணிந்து போனதும்,
அவர்களின் பாராட்டை எதிர்பார்த்ததும் என்னை ஆச்சரியப்படுத்திய விடயங்கள்.

🚩 🚩 🚩
பேராசிரியர் நந்தி

மருத்துவப் பேராசிரியரான இவர்,
எம்மேலும் கழகத்தின்மேலும் பெரிய மதிப்பு வைத்திருந்தார்.
எங்கள் விழாக்களில் பலதரம் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.
பல்கலைக்கழகத் தமிழ்த்துறை எங்களோடு முரண்பட்டு,
கம்பன் விழாவுக்குப் பல்கலைக்கழகத்தார் போகக் கூடாது எனப் பிரச்சாரம் செய்தபோது,
அதை நிராகரித்து எங்கள் விழாவுக்கு வந்த கம்பீர மனிதர்.
எங்கள் விழாவில் இவர் பேசிய இரண்டு பேச்சுக்கள் மறக்க முடியாதவை.
பிரசாந்தனின் பேச்சை முதன்முதலில் கேட்டு,
அவனைக் 'குட்டி ஜெயராஜ்' எனச் சபைக்கு அறிமுகப்படுத்திய பேச்சு ஒன்று.
டீபை வுhiமெiபெ எனும் மேற்கு நாட்டு அறிஞர் ஒருவரது கொள்கையைச் சொல்லி,
ஒரு சிலருக்குத்தான் அந்த விரிவு வரும் என்றவர்,
ராஜராஜசோழனை அதற்கு உதாரணமாய்க் காட்டி,
கம்பன் கழகத்தினது முயற்சிகளும் அத்தகைய விரிவு கொண்டவை எனப் பாராட்டினார்.
'மகர யாழ் விருதுக்குப் பத்தாயிரம் கொடுத்தாலும்,
வாங்குகிறவர்கள் மகிழ்ந்திருப்பார்கள்.
இந்த கஷ்ரமான சூழ்நிலையில், ரூபா ஒரு லட்சம் கொடுக்கும் கம்பன் கழகத்தினது செயற்பாடு,
மேற்கூறிய விரிந்த செயற்பாடே' என்று பாராட்டிய பேச்சு மற்றொன்று.
அவர்மேல் பெரிய மதிப்பு வைத்திருந்தேன்.
புலிகளுடனான எங்களது முரண்பாடு முற்றியிருந்தபோது ஒருநாள்,
என்னைச் சந்தித்த அவர், 'ஐசே! அவங்களுக்கு கம்பனைத்தானே பிடிக்கேல.
நீங்கள் ஒண்டு செய்யுங்கோ!
கொஞ்ச நாளைக்கு கம்பன் கழகத்திட பேர,
பாரதி கழகம் எண்டு மாத்திவிடுங்கோவன்'
என்றார்.
எனக்குச் சப்பென்று போயிற்று.

🚩  🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்