'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 77 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
பண்டிதர் வீரகத்தி

இவர் பெரும் இலக்கணப் புலமையாளர்.
மற்றவர்களைக் கிண்டல் செய்வதில் மன்னர்.
தன்னை ஒரு முற்போக்காளராய்க் காட்டிக் கொள்வார்.
மற்றைத் தமிழ்ப் பண்டிதர்கள்போல,
பிற்போக்கு எண்ணங்கள் அதிகம் இல்லாதவர்.
தன் வாழ்விலும் அக்கொள்கையைக் கடைப்பிடித்தவர்.
அவர் வாயில் எந்த நேரமும் சிகரெட் இருக்கும்.
ரகுபரனால் இவரது தொடர்பு கழகத்திற்குக் கிடைத்தது.
என்மேல் பெரிய மதிப்பு வைத்திருந்தார்.
எங்களோடு நெருங்கிப் பழகினார்.
ஊரெழுவில் நடக்கும் எனது பேச்சுகளையெல்லாம் வந்து கேட்பார்.
பேச்சின் முடிவில் அவர் சொல்லும் விமர்சனங்கள்,
என்னைப் பெரும்பாலும் சங்கடப்படுத்தும்.
அவர், இரசிப்பதாய்ச் சொல்லும் இடங்கள்,
உயர்வான இடங்களாய் இராது.
எங்கள் கழகத்தைச் சேர்ந்த நண்பன் தணிகாசலம்,
தமிழ்மேல் கொண்ட அன்பால், அவருக்குப் பெருந்தொண்டு செய்வான்.
அவன் கஷ்ரம் கருதாது, அவனைச் சைக்கிள் ஓட்டுவித்து,
எங்கெங்கெல்லாமோ செல்வார்.
அவனைக் கொண்டு நிறைய வேலை வாங்குவார்.
அவனில்லாத நேரத்தில் அவனைத் தாழ்த்திப் பேசுவார்.
அவரது அந்தப் போக்கால் மிகவும் சங்கடப்படுவேன்.
ஒருமுறை எனது குருநாதர் யாழ் வந்திருந்தார்.
விழா மேடையை விட்டு அவர் பேசியிறங்கும்போது,
அருகில் சென்ற பண்டிதர்,
தனது மகளுக்கு இந்தியாவில் படிக்க,
'அட்மிஷன்' வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குருநாதரும் சம்பிரதாயமாய்,
'அதற்கென்ன வாருங்கள், பார்க்கலாம்!' என்று சொல்லிச் சென்றார்.
அவரது அந்த வார்த்தையை உறுதியாய் எடுத்துக்கொண்டு,
பண்டிதர் தனது மகளையும் அழைத்துக்கொண்டு 
திருச்சி சென்றுவிட்டார்.
அங்கு சென்று அவர், குருநாதருக்குக் கொடுத்த தொல்லைகள் ஏராளம்.
எங்களுக்காக அவரை ஹோட்டலில் தங்க வைத்தாராம்.
மதிய உணவுகூட குருநாதர் வீட்டிலிருந்து வருமாம்.
அதில் குறைகள் சொல்லி, சிலவேளை பண்டிதரும் மகளும் நிராகரிப்பார்களாம்.
அதேபோல,  எடுத்துக்கொடுக்கப்பட்ட கல்லூரி அட்மிஷன்களையும்,
அது சரியில்லை, இது சரியில்லை என்று,
மகளின் விருப்பத்திற்கேற்ப பண்டிதர் தட்டிக்கழிப்பாராம்.
புதுக்கோட்டையில் தனது நண்பரான,
ஒரு புடைவைக்கடை முதலாளியை அட்மிஷனுக்காகச் சந்திக்க,
குருநாதர் அழைத்துச் சென்றாராம்.
அங்கு குருநாதரும் அந்த முதலாளியும் அமர்ந்திருக்க,
கால்மேல் கால்போட்டு, பண்டிதர் சிகரட் பிடிக்கத் தொடங்கினாராம்.
இவற்றையெல்லாம் பின் மாது சொல்ல அறிந்துகொண்டேன்.
இப்படிப் பல துன்பங்களைக் கொடுத்துவிட்டு,
இறுதியில் அட்மிஷன் எடுக்காமல் அவர்கள் இலங்கை வந்து சேர்ந்தார்கள்.
இங்கு வந்ததும், எனது குருநாதர் அட்மிஷன் எடுத்துத் தரவில்லை என்று,
பலரிடமும் பண்டிதர் குறைசொல்லித் திரிந்ததை அறிந்து வருந்தினேன்.
அதுபோலவே, எங்கள் கம்பன் கோட்டம் நிறைவுறாது இருந்த வேளையில்,
அதை, தானும் மகளும் வந்து தங்கியிருக்கத் தரும்படி,
எம்மை அவசரப்படுத்திப் பெற்றுக்கொண்டார்.
பின்னர், அது மகளுக்குப் பிடிக்கவில்லையென்று,
கட்டிடத்தில் பல குறைகளைச் சொல்லி விட்டுச் சென்றார்.
பண்டிதர் நல்லவர்தான்.
ஆனாலும், பிள்ளைப் பாசம் அவரது பலவீனமாய் இருந்தது.
இவரது தொடர்பும் எம்மால் மறக்க முடியாதது.

🚩 🚩 🚩

சிவமகாராஜா

மிகுந்த அமைதியும், அடக்கமும், செயல் திறனும் உள்ளவர் இவர்.
ஆரம்பத்தில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும்,
பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
இவர், எங்கள் கழகத்தின் மேல் பெருமதிப்பு வைத்திருந்தார்.
எங்களது விழாக்கள் அனைத்திலும் நிச்சயமாகப் பிரசன்னமாகியிருப்பார்.
தன்னால் முடிந்த அளவு கழகத்திற்கு நிதி உதவியும் செய்து வந்தார்.
கம்பன் கோட்டம் கட்டியபோது, 
தனது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தால்,
சீமெந்து பைக்கற்றுக்கள் பலவற்றைத்தந்து எங்களுக்குத் துணை புரிந்தார்.
தெல்லிப்பழை துர்க்கை அம்மனின் கடும் பக்தர்.
கடைசிவரை அவர் எங்கள்மேல் கொண்ட அன்பு நிலைத்திருந்தது.
பிற்காலத்தில் பேராளிகளால் சுடப்பட்டு இறந்தார்.

🚩 🚩 🚩
பேராசிரியர் க. நாகேஸ்வரன்

இவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலந்தொட்டு 
இவரை நான் அறிவேன்.
தமிழ்மேல் எல்லையற்ற பிரியம் கொண்டவர். பேச்சாற்றல் உடையவர்.
தமிழின் எல்லாத்துறைகளிலும் உள் நுழைய முயல்பவர்.
வெகுளியான மனம் கொண்டவர்.
பலகாலம் பல்கலைக்கழகத்தாரால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.
பின்னர் சப்ரகமுகப் பல்கலைக்கழகத்தில் நிரந்தர விரிவுரையாளர் ஆனார்.
நிறையப் படித்திருந்தும் ஒருமுகப்படாத இவரது தன்மையால்,
இவரது பேச்சுக்கள் வரைவின்றி இருக்கும்.
எனது தனிப்பட்ட பட்டிமண்டபங்களிலும்,
கழகப்பட்டிமண்டபங்களிலும் கலந்து சிறப்பித்தவர்.
மற்றவர்களை நேசிக்கவும், தூசிக்கவும் தயங்காதவர்.
அண்மைக்காலமாகக் கழகத்தில் ஊடலோடு இருக்கிறார்.

🚩 🚩 🚩

பேராசிரியர் சிவலிங்கராஜா

எங்களோடு நெருக்கமானவர்.
இவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே எனக்கு அறிமுகமாகியிருந்தார்.
தமிழ்மேல் விருப்புக் கொண்டவர்.
விதி, இவரை எங்கெல்லாமோ கொண்டு சென்று,
இறுதியில் தமிழ்த்துறையில் இறக்கியது.
மரபுத்தமிழ்தான் இவரது பலம்.
ஆனால் கைலாசபதி, சிவத்தம்பி காலத்தின் வீச்சால்,
தன்னை நவீன தமிழ் அறிஞராய்க் காட்ட முயன்றார்.
அதனால் ஒருமித்த கொள்கையில் 
இவரால் தொடர்ந்து நிற்க முடியவில்லை.
ஆழ் மனதில் எங்களை நேசித்தார்.
ஆனால் இவரது புறமனது கழகத்தை ஏனோ வெறுக்கவும் செய்தது.
இவர் தமிழ்த்துறைத் தலைவராய் இருந்தபொழுது,
ஆற்றலுள்ள கழக இளைஞர்களை அங்கீகரிக்கத் தவறினார்.
பலதரம் இவரோடு நான் முரண்பட்டிருக்கிறேன்.
ஆனாலும் எங்கள் இருவருக்கும் இடையிலான நேசம் நிஜமானதே.
வஞ்சனை இல்லா மனதுடையவர்.
அதனால் இவரது எச்சங்கள் ஏற்றங்கொண்டன.
இவரது ஒரே மகன் தந்தையைத் தாண்டி என்னை நேசிப்பவன்.

🚩 🚩 🚩

பேராசிரியர் இ. பாலசுந்தரம்

பல்கலைக் கழகத்தாருள் என்னை மதித்து நேசித்தவர் இவர்.
கழகத்தின் பல விழாக்களிலும் கலந்து கொண்டார்.
எங்களோடு புதுவைவிழாவுக்கு இரண்டுதரம் வந்திருக்கிறார்.
என்னைக் காணும் போதெல்லாம்,
நானே சங்கடப்படும் அளவிற்கு மரியாதை தருவார்.
இப்பொழுது அவரது வாழ்க்கை கனடாவில்.

🚩 🚩 🚩

சர்வோதயம் திருநாவுக்கரசு

சர்வோதயத்தின் மூலம் பெரும் தொண்டாற்றி வந்த மனிதர் இவர்.
சுயமும் ஆளுமையும் செயல்திறனும் 
தொண்டு மனப்பான்மையும் கொண்டு
அக்காலத்தில் அற்புதமாய்ப் பணியாற்றிவந்தார்.
அழகுணர்ச்சி மிக்கவர்.
நல்லூர்த்திருவிழாவிற்கென இவர் போடும்
அழகான தண்ணீர்ப்பந்தலைப் பார்க்கவே மக்கள் கூடுவார்கள்.
எவருக்கும் அஞ்சாமல் தன்வழி நடந்த மனிதர்.
எங்கள் கழகத்தின்மேல் பெரும் மதிப்புக் கொண்டிருந்தார்.
எங்கள் விழா ஊர்வலத்தில் தனது சர்வோதயத் தொண்டர்களை
சீருடையில் கலக்கச்செய்து விழாக்களைப் பெருமைப்படுத்தினார்.
எங்கள் விழாக்களில் கலந்து கொள்ளும்
அன்பர்களுக்குப் பலதரம் உணவிட்டார்.
எங்கள் விழா நிகழ்ச்சிகளிலும் கலந்து உரையாற்றி இருக்கிறார்.

🚩 🚩 🚩

சந்திரபோஸ்

கழகத்தின்மேல் கொண்ட அன்பால் எங்களைப் பேணியவர் இவர்.
அக்காலத்தில் வர்த்தகத்துறையில் ஈடுபட்டு வந்தார்.  
கழக முயற்சிகளுக்குத் தானாய் முன்வந்து கைகொடுப்பார்.
கழகத்தில் நாங்கள் தனித்திருப்பதைக் கருதி இரங்கி,
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முட்டைச்சோறு செய்து
நடுவெயிலில் அன்போடு கொண்டு வந்து தரும் மனிதர்.
அவர் தொடர்பும் கழகத்தைப் பலம் செய்தது.

🚩 🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்