'உள்ளும் புறமும்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

யர்வு நோக்கிய நாட்டம் மனிதனுக்கு இயல்பானது.
மனித முயற்சிகள் யாவும் இவ்வுயர்வு நோக்கியனவே.
இன்றைய நவீன மனிதன்,
பல வழிகளாலும் உயர்வு நோக்கி முயற்சிக்கிறான்.
அம் முயற்சிகள் ஆயிரம் ஆயிரமாய் விரிந்துள்ளன.
ஐம்பதாண்டுக்கு முன்னுள்ள நிலையோடு ஒப்பிடும் பொழுது,
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி ஐம்பதாயிரம் மடங்கு உயர்ந்திருக்கின்றது.
எனினும், அவ் வளர்ச்சி அமைதியையும் நிறைவையும் தந்ததாய்த் தெரியவில்லை.
காரணம், அவை புறத்தே மட்டும் வளர்ந்ததேயாம்.

🦋 🦋 🦋

மனித வளர்ச்சி,
அகவளர்ச்சி, புறவளர்ச்சி என இரு கூறுகளை உடையதாம்.
மேலைத்தேய அறிவியலாளர்கள் இவ்விரு வளர்ச்சியையும்,
தனி நிலைப்பட்டவையாய்க் கருதினர்.
நம் பாரம்பரியத் தமிழறிஞர்களோ,
இவ்விரு வளர்ச்சிகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன என
உறுதி கொண்டிருந்தனர்.
அக வளர்ச்சியற்ற புறவளர்ச்சி, நிறைவு தராது என்பதால் 
புறத்தே வளர விரும்பும் ஒருவன் அகத்துள்ளும் வளர்தல் அவசியம் என்பது
அவர்தம் கருத்தாய் இருந்தது.

🦋 🦋 🦋

வள்ளுவனும் இக் கருத்தை உறுதி செய்கிறான்.
குளம் ஒன்றில் நீரின் மட்டத்தினதாய் எப்போதும் இருப்பது ஆம்பல் பூ,
அதனை உயர்த்த எண்ணி மேல்  இழுப்பின்
கொடியினின்றும் அது அறுந்து போம்.
ஆனால் அதே பூ, நீர்மட்டம் உயர உயர
அவ்வுயர்வுக்கு ஏற்பத் தானும் உயர்ந்து
நீர்மட்டத்தின் மேலதாய் நிலைத்தல் கண்கூடு.
இவ்வியல்பினை மனிதனின் அகப்புற வளர்ச்சிக்கு,
உவமையாக்குகிறார் வள்ளுவர்.
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

இஃது அவர்தம் குறளாம்.

🦋 🦋 🦋

மனிதனும்,
அகத்தே வளராமற் புறத்தே வளரின் வீழ்வனாம்.
ஒருவன் அகத்தே மட்டும் வளர்வானாயின் கூட
அவனது புறவளர்ச்சி தானாய் அமைந்துவிடும் என்பது
தமிழர்தம் பாரம்பரியச் சிந்தனை.
மேற்சொன்ன உவமை கொண்டு
இக் கருத்தை விளக்கம் செய்கிறார் வள்ளுவர்.
உயர்வு நோக்கிய இந்த வள்ளுவ இலக்கணத்தை
இலக்கியமாக்குகிறான் கம்பன்.
அக வளர்ச்சியால் ஓரு பாத்திரம், புறத்தே வளர்ச்சியுறுந் தன்மையை
பரதன் பாத்திரத்தினூடு கம்பன் வெளிப்படுத்துவது,
எண்ணி எண்ணி நயக்கத்தக்க செய்தியாம்.

🦋 🦋 🦋

இராமாயணம் பாலகாண்டம், திரு அவதாரப்படலம்.
யாகத்தால் பிறந்த தசரத குமாரர்களுக்குப்
பெயரிட வருகிறார் வசிட்ட முனிவர்.
கோசலை மைந்தனுக்கு இராமன் எனப் பெயரிட்டவர்,
கைகேகயின் புதல்வனது அருகிலே வந்து
தன் தவ வலிமையால் அப் பிள்ளையின் அக நிலை உணர்ந்து 
பெயரிடுகிறார்.

கரதலம் உற்று  ஓளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப்பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன் உதித்திடு மற்றைய ஓளியை
பரதன் எனப் பெயர் பன்னினன் அன்றே

🦋 🦋 🦋

இப்பாடலில், கைகேயியின் புதல்வனை
கரதலம் உற்றுஒளிர் நெல்லியை ஒத்தவன் என, 
கம்பன் உரைத்ததை உரையாசிரியர்கள் அழகுற விளக்கம் செய்வர்.
உள்ளங்கை நெல்லிக்கனி எனும் மரபுத்தொடர்,
ஒரு பொருள் வெளிப்பட்டுத் தோன்றுதலை மாத்திரம் குறிப்பதன்றாம்,
அங்ஙனம் உரைப்பின் அஃது உள்ளங்கையிலிருக்கும் எக் கனிக்கும் பொருந்தும்
இத் தொடரில் நெல்லிக்கனி குறிப்பாய்ச் சுட்டப்படுவதன் காரணம் யாது?
கற்போர் மனதில் கேள்வி பிறக்கும்.
நெல்லிக்கனியின் புறத்தே உள்ள கோடுகள்,
அதன் உள்ளே உள்ள  வித்தின் கோடுகளோடு பொருந்தியனவாய் இருக்கும்.
இச் சிறப்பு மற்றைக் கனிகளுக்கு இலவாம்.
அகமும் புறமும் ஒன்றாய் இருக்கும் இத் தன்மையை உணர்த்தவே
உள்ளங்கை நெல்லிக்கனி எனும் மரபுத் தொடர் பாவிக்கப்படுகிறது.
 🦋 🦋 🦋

இவ்வாறு,
அகமும் புறமும் ஒத்திருக்கும் தன்மை நோக்கியே
பரதன் அக் கனியோடு ஒப்பிடப்படுகிறான்.
இஃது உரையாசிரியர் தரும் விளக்கம்.
இவ்வுவமையால் அகமும் புறமும் ஒன்றானவன் பரதன் எனச் சுட்டி
பரதனின்  புறவளர்ச்சி அவன் அக வளர்ச்சியால் அமைந்ததே என
நிரூபணம் செய்கிறான் கம்பன்.
அக வளர்ச்சியால் படிப்படியாய்ப் பரதன் புறத்தே வளர்வதை
அவன் காட்டுமாறு காண்பாம்.

🦋 🦋 🦋

ஒப்பீட்டளவில் உணரப்படுவது வளர்ச்சி.
காவிய நாயகன் இராமன். திருமாலின் அவதாரமான தெய்வ புருஷன்.
அத் தெய்வ புருஷன் இராமனோடு ஒப்பிட்டு,
பரதனின் வளர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்த கம்பன், 
அவ்வொப்பீட்டின் முதல் நிலையை மிதிலையில் ஆரம்பிக்கிறான்.

🦋 🦋 🦋

மிதிலை,
ஜனகனின்  அரண்மனை.

இராம இலக்குவர்களது வசீகரத்தால் ஈர்க்கப்பட்டு,
அழைத்து வந்த விசுவாமித்திரரிடம்
இவர்கள் யார்? என வினவுகிறான் ஜனகன்.
ஜனகனின்  கேள்விக்குப் பதில் உரைக்கும் முகமாக,
இராம இலக்குவர்களது வரலாற்றை,
உரைக்கத் தொடங்குகிறார் முனிவர்.
நீண்ட அவ்வறிமுகத்தில் விசுவாமித்திரரின் பார்வையூடு
பரதன் இராமனோடு ஒப்பிடப்படுகிறான்.

தள்ள அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையானை, பரதன் எனும் பெயரானை
எள்ள அரிய குணத்தாலும் எழிலாலும் இவ் இருந்த
வள்ளலையே அனையானை, கேகயர்கோன் மகள் பயந்தாள்

🦋 🦋 🦋

இம் முதல் நிலை ஒப்பீட்டில்
எள்ள அரிய குணத்தாலும் எழிலாலும் இவ் இருந்த
வள்ளலையே அனையானை,
என்று
பரதனை இராமனுக்குச் சமனானவனாய்க் காட்டும் கம்பன்,
அயோத்தியா காண்டத்தில்
பரதனை இராமனிலும் உயர்ந்தவனாய்ப் பேசத் தலைப்படுகிறான்.

🦋 🦋 🦋

அயோத்தியா காண்டம்.
கைகேயி சூழ்வினையால் காடேகப் புறப்படும் இராமன்,
விடைபெற, கோசலையிடம் வருகிறான்.
இராமனின் தலையில் முடியில்லை.  
அவனது தலைமுடி, மஞ்சனப் புனித நீரால் நனையவில்லை.
அவனுக்கு முன்னாலும் பின்னாலும் கவரியும், வெண் குடையுமில்லை.
தனித்து வரும் இராமனின் இந்நிலை கண்டு
ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்ததை உணர்ந்த கோசலை,
நெடுமுடி புனைதற்கு இடையூறு உண்டோ?
என இராமனை வினவுகிறாள்.

🦋 🦋 🦋

தாயின் மனம் அதிரா வண்ணம்
இராமனிடமிருந்து பதில் பிறக்கிறது.
நின் காதல் திருமகன்
பங்கமில் குணத்து எம்பி பரதனே
துங்க மாமுடி சூடுகின்றான்.
இராமனின் பதில் கேட்டு அதிராமல்
தன்னை நிதானித்துக் கொண்டு,
கோசலை பேசத் தொடங்குகின்றாள்.

🦋 🦋 🦋

மூத்தவன் முடிசூடல் வேண்டும் எனும் குலமுறை தவறும்,
அஃது ஒன்றே குறை,  அது தவிர்த்தால்
பரதன், நிறை குணத்தவன் நின்னினும் நல்லனேயாம்.
கோசலையிடமிருந்து உறுதியாய்ப் பதில் பிறக்கிறது.

முறைமை அன்று என்பது ஒன்று உண்டு, மும்மையின்
நிறை குணத்தவன், நின்னிலும் நல்லனால்,
குறைவு  இலன் எனக் கூறினள், நால்வர்க்கும்
மறுஇல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள்.

🦋 🦋 🦋

விசுவாமித்திரர் பார்வையில்
பரதனை, இராமனுக்குச் சமனாய்ப் பேசிய கம்பன்
கோசலை வாயிலாக
இராமனிலும் உயர்ந்தவனாக அவனைப் பதிவு செய்து,
பரதனை மேலும் உயர்த்துகிறான்.
கோசலை, இராமன் உரையாடலில் 
பரதனின் அகத்ததாய குண உயர்வை
பங்கமில் குணத்து எம்பி என்றும்
நிறை குணத்தவன் என்றும்  பேசவைத்து
பரதனின் புறவளர்ச்சி அக வளர்ச்சியாலே தீர்மானிக்கப்படுவதை,
தெளிவுபட எடுத்துக் காட்டுகின்றான் கம்பன்.
இவ்வொப்பீட்டைக் கங்கை காண் படலத்திலே தொடர்கிறான் கம்பன்.

🦋 🦋 🦋

கங்கைக் கரை.
இராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் செல்வதற்காய்,
அயோத்தி மக்கள் அனைவரும் சூழ, நிற்கிறான் பரதன்.
இலக்குவன் தந்த பிழையான அபிப்பிராயத்தால்,
அவன் வருகையை ஐயுறுகிறான் குகன்.
இராமன் மேற் படையெடுத்து வருகிறான் பரதனெனத் தவறாக விளங்கி,
தன் படையினரை ஊக்கப்படுத்தி போர்க்கான ஆயத்தநிலை கொள்கிறான் அவன்.
தன் மேல் அம்பு போடத் தயராக நிற்கும் குகனைக் கவனியாது,
அண்ணன் சென்ற பாதை நோக்கியபடி,
நிகழப் போகும் விபரீதம் அறியாது நிற்கிறான் பரதன்.

🦋 🦋 🦋

வரும் பொருளுரைத்தல் மந்திரிக்கு அழகன்றோ?
மந்திரி சுமந்திரன் நிலைமையை உணர்த்த பரதனிடம் வருகிறான்.
எதிரில் நிற்கும் குகன் பற்றிய விபரங்களை அடுக்கி,
அவன் பலத்தையும் எடுத்துக் கூறி,
குகனின் பகை நிலையைப் பரதன் மனதிற் பதிக்க நினைக்கிறான்.

'கங்கை இரு கரை உடையான், கணக்கு இறந்த  நாவாயான்,
உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன், உயர் தோளான்
வெங்கரியின் ஏறு அனையான், வில் பிடித்த வேலையினான்,
கொங்கு அலரும் நறுந் தண் தார்க் குகன் என்னும் குறி உடையான்,

கல் காணும் திண்மையான், கரை காணாக் காதலான்,
அற்கு ஆணி கண்டனைய அழகு அமைந்த மேனியான்,
மல் காணும் திரு நெடுந்தோள் மழை காணும் மணி நிறத்தாய்!
நிற் காணும் உள்ளத்தான், நெறி எதிர் நின்றனன்' என்றான்.

🦋 🦋 🦋

உள்ளத் தூயனாம் பரதன் மனதில்
சுமத்திரனின் அறிமுக வார்த்தைகளில்
உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன்-எனும்
ஒரேயொரு விடயம் மாத்திரம் பதிகிறது.
குகன், இராமனின் நண்பன் எனும் செய்தியால்
பரதன் மனதில் அவன் மேல் அன்பு சுரக்கிறது.
உன்னை ஓரு கை பார்ப்பதற்காய் எதிரியாய் நிற்கிறான்
எனும் பொருளில் சுமந்திரன் சொன்ன
நிற்காணும் உள்ளத்தான் நெறி எதிர் நின்றனன்-எனும் வார்த்தைகள்,
உன்னைக் காணுகின்ற ஆர்வத்தோடு, 
எதிர்த் திசையில் நிற்கிறான் எனப் பொருள் தர
போர் எனக் கோபங் கொள்வதற்குப் பதிலாய்
அன்பினால் நெகிழ்கிறான் பரதன்.

🦋 🦋 🦋

அண்ணனின் துணைவரெனின்
முன்சென்று நானே அவரைக்காண்பேன்
எனக்கூறி, மறுகரையில் நிற்கும் குகனை நோக்கி வணங்குகின்றான்.

தன் முன்னே, அவன் தன்மை, தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலாத் திருமனத்தான்,
'மன் முன்னே தழீஇக் கொண்ட மனக்கு இனிய துணைவனேல்,
என் முன்னே அவற் காண்பென், யான் சென்று' என எழுந்தான்.

பகையற்ற பரதனின் நடத்தைக்கு
மாசற்ற அவனது மனமே காரணம் என்கிறான் கம்பன்.
பரதனை துரிசிலாத் திருமனத்தான்-எனக் கம்பன் விளிப்பது,
மனத்துக் கண் மாசிலனாதல் எனும் வள்ளுவனின் குறளடியோடு பொருந்தி,
நம் மனதை மகிழ்விக்கிறது.

🦋 🦋 🦋

பரதன் நிலை கண்ட குகன் தன் தவறுணர்கிறான்.
கங்கையைக் கடந்து வந்து அவனடி வணங்கி
பரதன் கானகம் வந்த காரணத்தை வினவ,
தந்தை செய்த தவறை நீக்கி,
இராமனை மீண்டும் அரசனாக்கி முடிசூட்டுதற்கு
அழைத்துச் செல்லவே வந்தேன்-எனப் பதில் உரைக்கிறான் பரதன்.

தழுவின புளிஞர் வேந்தன் தாமரைச் செங்கணானை,
'எழுவினும் உயர்ந்த தோளாய்! எய்தியதுஎன்னை?' என்ன,
'முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும்
வழுவினன், அதனை நீக்க மன்னனைக் கொணர்வான்' என்றான்.

🦋 🦋 🦋

பரதனின் உயர்ந்த மனநிலை கண்டு, விம்மித் திகைத்த குகன்
மனந்திறந்து அவனைப் பாராட்டுகிறான்.
உனக்கு ஆயிரம் இராமரும் நிகராவரோ? என உரைக்கும்
குகனது, அப்பாராட்டில், 
மீண்டும் பரதனை இராமனோடு ஒப்பிட்டுப் பேசுகிறான் கம்பன்.

தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணி தன்னை,
தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்ற போழ்து, புகழினோய்! தன்மை நோக்கின்,
ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ, தெரியின் அம்மா!

🦋 🦋 🦋

விசுவாமித்திரன் மூலம்  பரதனை இராமனுக்குச் சமனாக்கி,
பின் கோசலையூடு பரதனை இராமனிலும் உயர்ந்தவனாக்கிய கம்பன்,
குகனை ஆயிரம் இராமர்களும் உனக்கு ஒப்பாவர்களோ? எனப் பேசவைத்து
பரதனின் தகுதியை மேலும் உயர்த்துகிறான்.
முடிவாக, பரத பாத்திர உயர்ச்சியைக் கம்பன் காட்டுமிடம் காண்போம்.

🦋 🦋 🦋

யுத்த காண்டம் மீட்சிப் படலம்.
பதினான்காண்டுகள் முடிந்தும் இராமனின் வரவு நிகழவில்லை.
குறித்த நேரத்தில் அவன் வருகை தராததால்
எரிபுகத் தயாராகிறான் பரதன்.
அச்செய்தி கேட்டு அவனைத் தடுக்கும் நோக்குடன்
ஓடிவந்த கோசலை,
அவன் செய்கையை நிறுத்துமாறு வேண்டுகிறாள்.
அவள் கருத்தை ஏற்க மறுக்கும் பரதனோ
தாய் சொற் கேட்டலும் தந்தை சொற் கேட்டலும்
ஈசற்கே கடன் யான் அஃது இழைக்கிலேன் எனக்கூறி
மாசற்றேன் இது காட்டுவன் மாண்டு-என முனைந்து நிற்கிறான்.
உயிர் துறந்து உளத் தூய்மையை உணர்த்த முனையும்
பரதனின் அகத்தூய்மை கண்டு சிலிர்த்த கோசலை
அவனை வியந்து பாராட்டுகிறாள்.

எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்,
அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்,
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?

இவ்விடத்தில்
பரத,இராம ஒப்பீட்டின் உச்ச நிலையைக் காட்டி
நிறைவு கொள்கிறான் கம்பன்.
பரதனை இராமனுக்குச் சமனாக்கி,
பின் அவனிலும் உயர்த்தி,
பின் ஆயிரம் இராமரும் ஒப்பாவரோ?எனக் கேட்பித்து,
முடிவில் கோடி இராமர்களும் உனது அருளுக்கு ஒப்பாகார்கள்
எனவும் கோசலையைப் பேச வைத்து, 
பரதனின் உயர்வை நிறைவு செய்கிறான் கம்பன்.

🦋 🦋 🦋

பிற பாத்திரங்களைக் கொண்டு
பரதனைப் படிப்படியாக உயர்த்திக் காட்டிய அவன்,
இவ்வுயர்ச்சிகள் அனைத்தும்
பரதனின் அகவுயர்வால் ஏற்பட்டவை என்பதையும்,
தவறாது சுட்டி நிற்கின்றான்.
பரதன் இராமனைப் போல, 
துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் எதையும் செய்யவில்லை. 
ஆனாலும் அவன்  இராமனை விட உயர்ந்து கொண்டே போகிறான்.
இதற்காம் காரணம் என்ன?
ஆராயத் தலைப்படுகிறது நம் அறிவு.

🦋 🦋 🦋

பரதனின் பிறப்பின் போதே அவனை 
உள்ளும் புறமும் ஒத்த நெல்லிக்கனியோடு ஒப்பிட்டு
அவன் அகமும் புறமும் ஒத்திருந்தவன் எனக் காட்டி,
அந்த ஒத்திசைவால், அகத்தில் அவன் மெல்ல மெல்ல வளர 
புறச் செயல் ஏதும் செய்யாமலே 
ஒப்பீட்டில் இராமனை விட அவன் உயர்ந்ததை எடுத்தக்காட்டி
உள்ளத்தனையதே உயர்வு என்னும்
நம் பாரம்பரியச் சிந்தனையை  நிரூபணம் செய்து,
நிறைவு கொள்கிறான். கம்பன்.

🦋 🦋 🦋

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்