'எங்களது வேல்முருகன் ஏறிநிற்கும் ஏற்றமிகு ரதம்ஓட வினைகள் ஓடும்'! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உலகமெலாம் காக்கின்ற நல்லூர்க் கந்தன் 
ஒப்பற்ற திருவிழவும் வந்தால் மக்கள்
நிலமதனை விண்ணாக்கி மகிழ்வர் தங்கள்
நினைவெல்லாம் கந்தனது அழகுக் காக்கி
பலபலவாய் விரதங்கள் பிடித்தே வாடிப் 
பக்தியினால் நெஞ்செல்லாம் உருக நின்று
மலமறவே உயிர் வளர்த்து மாண்பு கொண்டு
மங்கலங்கள் கண்டேதான் மகிழ்ந்து நிற்பர்

வள்ளியொடு தெய்வானைத் தாய்மார் சூழ
வலம் வருவான் வேல் வடிவாய் கந்தன் தானும்
நல்லவர்கள் மனம் குளிர்ந்து நடுங்கி ஐயன்
நாடரிதாம் திருவுருவின் நலங்கள் கண்டு
தள்ளரிய பெருவரத்தைப் பெற்றாற்போல
தமக்குள்ளே மெய்யுருகித் தளர்ந்து நிற்பார்
வெல்லரிய வேல் வடிவாய் தோன்றும் வேலன்
விளங்கிடவே விண்ணவரும் பணிந்து நிற்பார்

மஞ்சத்தில் ஏறிடுவான் மற்றை நாளில்
மயில் அதனில் ஏறித்தான் வலமும் செய்வான்
நெஞ்சத்தை அள்ளுகிற குதிரை ஏழில்
நிமிர்வோடு நின்றேதான் அருளைப் பெய்வான்
வஞ்சத்தான் இராவணனை அழுத்தி நிற்கும்
வளமான கைலையதாம் ரதத்தில் ஏறி
விஞ்சத்தான் அழகினிலே இவனை ஒப்பார்
வேறெவரும் இல்லை என வியக்க வைப்பான்.

வான் எட்டும் சப்பரத்தில் முருகன் ஏற
வாய் பிளந்து அடியவர்கள் வணங்கி நிற்பர்
ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வும் கெட்டு
ஒன்றிடுவர் முருகனவன் அழகுதன்னில்
நான் கெட்டு உயிர் உருக நனையும் நெஞ்சால்
நல்லையிலே கந்தனவன் வடிவைக் காண்பார்
தேன் சொட்டும் மலர்க்கிடையில் முருகன் தோன்றும்
தெவிட்டாத அற்புதமாம் காட்சி என்னே!

மாம் பழத்துப் போட்டியிலே கந்தன் தானும்
மாண்பான வெற்றி பெற உலகைச் சுற்ற 
தாம் அதனைத் தாய் தந்தை அவரைச் சுற்றி
தருக்கோடு தமையனுமே பெற்று நிற்க
ஏமமதால் துயர் கொண்டு அணிகள் நீக்கி
எம் முருகன் கொள்ளுகிற ஆண்டிக் கோலம்
மாம் பழத்துத் திருவிழவில் காண என்று
மகிழ்ந்தே தான் சிறுவர் குழாம் கூடி நிற்கும்

நல்லூரான் தேர் ஏறி வலங்கள் செய்யும்
நயப்பான காட்சியினை என்ன சொல்ல
உள்ளூரார் வெளியூரார் பலரும் கூடி
ஊரதனில் மண்ணதனை மறைத்து நிற்பார்
பல்லோரும் வடம் அதனைப் பிடிக்கத் தேரும்
பார் தவிர்த்து தலைகளிலே வருமாற் போல
எல்லோரும் முருகா! என்றோலம் இட்டு
இழுத்திடவே அசைந்து வரும் அழகு என்னே!

நீறு நிறை நெற்றியுடன் நிமிர்ந்து நீயும்
நினைவெல்லாம் உனதாக்கி நேராய் வந்து
வீறுடனே தேரேறும் காட்சி என்னே!
விண்ணவரும் அதைக்காண விரைவார் இங்கு
தேர் அதனில் நீ ஏற மணிகள் தாமும்
திக்கெட்டும் தம் நாவால் ஒலிகள் கூட்டும்
ஆர் அதனில் மயங்காதார் ஐய! உந்தன்
அழகினிற்கும் நிகருண்டோ? அருமையோனே!

சில்லுருள மணிகளெலாம் சிலுசிலிர்த்து
சேர்ந்தரற்றும், அடியரெலாம் சிரங்கள் கூப்பி
வெல்லுகிற வேல்முருகா! என்று உன்னை
விருப்புடனே விண்ணதிரப் போற்றி நிற்பார்
துள்ளுகிற இளையரெலாம் துடித்தே நின்று
துவழாது தேங்காய்கள் உடைக்க அங்கு
மல்லதுவும் விழைந்ததுவோ? என்றே மக்கள்
மருண்டிடவே தேரசைந்து மண்ணில் ஓடும்

மங்களத்து இசை முழங்கும் ஒருபால் நல்ல
மனமுருக்கும் பஜனைகளும் இனிதாய்க் கேட்கும்
தங்களது உருமாறித் தெய்வம் ஏற
தாண்டவமும்  புரிவார்கள் சிலரும் அங்கே
வெங்கலத்து நாதமெனக் குழல்கள் ஊதி
விரைவதற்கு வழிகாட்டி நிற்பார் தொண்டர்
சங்கமதில் தமிழ் வளர்த்த முருகா! உந்தன்
சாற்றரிய தேர் உருள வினைகள் தீரும்

தங்கமென மின்னுகிற தேரில் ஏறி
தழலுருவாய் கந்தனவன் ஊஞ்சலாட
பங்கமெலாம் இனித்தொலையும் என்றே எண்ணி
பக்தரெலாம் கண் அருவி சோர நிற்பர்
பொங்குகிற பகை அனைத்தும் ஒழித்தே கந்தன்
பொசுக்கிடுவான் தீமைகளை என்னச் சொல்வர்
எங்களது வேல் முருகன் ஏறி  நிற்கும்
ஏற்றமிகு ரதம் ஓட வினைகள் ஓடும்!

இச்சை தரும் தேர் அசைந்து இருக்கை சேர
எழில் மிகுந்த கந்தனவன் ஆடை மாற்றி
பச்சையதைச் சாற்றி வரும் அழகு என்னே!
பார்த்தவர்கள் கண் அசையாச் சிலைகள் ஆவர்
விச்சையெலாம் தூசாகி விழுந்து போகும்
வேலவனின் வெல்லுகிற அழகின் முன்னே
கச்சையொடு நின்றாலும் கவனம் ஈர்க்கும்
கந்தனையே அலங்கரித்தால் காணப்போமோ?

தீர்த்தமதில் நல்லூரான் திகழ்ந்தே வந்து
தேவியர்கள் உடன் இருக்க ஆடும் காட்சி
பார்த்தவர்கள் வினை அகற்றும் பாவம் போக்கும்
பற்றறுத்து உயிர் உயர வழிகள் செய்யும்
ஆர்த்தடியார் அக்காட்சி கண்டு தங்கள்
ஆசையெலாம் தீர்த்திடுவர் அவர்கள் நெஞ்சம்
வேர்த்துருகித் திருவிழவும் முடிந்ததென்று
விதிர்விதிர்க்கும் வேல் நினைந்து அமைதி கொள்ளும்

எல்லோரும் போற்றுகிற முருகா! உந்தன்
ஏற்றமிகு விழவெல்லாம் காணமாட்டா
உள்ளூர அழுகின்றோம் உடைந்து போனோம்
ஒப்பற்ற நல்லூரா! உன்னைக் கூட 
பொல்லாத நோய் வந்து அடக்கப் போமோ?
பொன்றித்தான் சூரனையே அடக்கி வென்றோய்!
நல்லோர்கள் மனங்குளிர விரைவில் உந்தன்
நலம்மிகுந்த விழவினையே காணச் செய்வாய்

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்