கம்பன் சேவையால் காலம் வென்றவன்! -கம்பவாரிதி.இ ஜெயராஜ்-


 ஐம்பது அகவை காணும் அகில இலங்கைக் கம்பன் கழகத்
தலைவர் கவிஞர் த.சிவசங்கர் அவர்களுக்கான பொன் விழா வாழ்த்துப் பா!

உலகமெலாம் போற்றுகின்ற உயர்ந்த கம்பன்
  ஒப்பற்ற சேவையிலே தன்னை ஆக்கி
வளமிகுந்த ஈழத்தார் கழகம் தன்னில் 
  வாழ் நாளைச் செலவழித்து வளமே செய்யும்
நலமிகுந்த பண்பாளன் நமக்கு வாய்த்த
  நன்மைமிகு அருந்தலைவன் நயந்து நல்ல
அழகுமிகு  கவிதை பல ஆக்கும் அன்பன்
  அகவையதால் பொன்விழவை கண்டே நின்றான்

போட்டியிலே கலக்கவெனக் கழகம் தன்னில் 
  புகுந்தவனும் உறவாகி உள்ளம் ஈர்த்து
வீட்டினிலே ஒருவன் என மாறிப் போனான்
  விரைந்தெங்கள் குடும்பத்தில் கரைந்து போனான்
நாட்டமுடன் நல்லவைகள் தேடிச் சேர்த்து
  நலமுறவே அனைவரதும் இதயம் ஈர்த்தான்
வாட்டமிலா உச்சாக வடிவம் கொண்டு
 வலம் வந்து கழகத்தின் உயர்வு காத்தான்

மேடையிலே ஏறி அவன் நின்று பேச
  மேன்மையுறு சபையோர்கள் மகிழ்ந்து போவார்
கோடையிலே வீசுகிற தென்றல் போல 
  குளிரோடு வெம்மையுமே கலந்து நிற்க
சாடையிலே அரசியலார் தலைவன் போல
   சடசடனப் பதில் உரைத்து உள்ளம் ஈர்ப்பான்
ஆடவர்க்கு அணிகலனாய் ஆண்மை கொண்ட
  அற்புதமாம் குரலதனால் அவையைச் சேர்ப்பான்

எந்தனது மகவாக எங்கள் வீட்டில்
  இருந்தினிமை பயந்திடவே இணைந்து அன்பாய்
வந்தவளாம் சிவதேவி தன்னை ஏற்று
  வாழ்க்கையதன் துணையாக்கி  வளமும் கொண்டான்
விந்தைமிகு உலகியற்கை என்னவென்பேன் ?
  விதியதனால் கம்பனுமே பெண்ணும் தந்தான்
உந்தனது வாழ்வுயரும் உண்மை தன்னை
   உரைப்பதற்கு வேறுளவோ ? ஒன்றே போதும்
  
பந்தமுறச் சயந்தவியும் மதுவும் உந்தன் 
  பாசமிகு குழந்தைகளாய்ப்; பண்பில் தோய்ந்து
செந்தமிழும் பொருளும் போல் சேர்ந்து நின்று
  சிறப்புடனே உன் பெருமை செகத்துக்கோதி
விந்தைமிகு தம் அன்னை அருளும் கொண்டு
  விளக்கமுறச் செய்வார்கள் உலகம் தன்னை
அந்த ஒரு பெருமையினால் ஐய உந்தன்
  அறுபதொடு நூறையுமே கடந்து நிற்பாய்

தன் பொருளைப் பிறர்க்காற்றும் தன்மை தன்னில்
  தரணியிலே வள்ளல்களின் வரிசை வந்தாய்
உன் பெரிய கொடையியல்பால் உள்ளம் ஈர்த்து
   உறவெல்லாம் உனதாக்கி உயர்ந்து நின்றாய்
எண்ணரிய நற் குணங்கள் உனக்கு ஈந்த
ஈன்றவரின் திசை நோக்கி வணங்கும் நெஞ்சம்
அன்னையொடு தந்தையையும் உளத்தில் கொண்டு
  அன்போடு அறிவதனை நிலைக்கச் செய்தாய்

நேற்றுப் போல் இருக்கிறது உன்னைக் கண்டு
  நின்தனக்கு ஐம்பதுவா ? வியக்கும் நெஞ்சம்
ஏற்றியதாம் குன்றின் மேல் விளக்காய் நின்று
  எல்லோர்க்கும் துணை செய்து ஏற்றம் கொள்வாய்!
மாற்றமதால் தன் இயல்பு மாறா ஐய !
  மனமதனின் ஒருமையதால் உயர்வு கொண்டோய்!
ஏற்றமுற எம் கம்பன் அருளும் செய்வான்
  எப்போதும் துணைகளுடன் உயர்ந்து வாழி!

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்