கேள்விக்கு என்ன பதில்?

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!
கம்பவாரிதியின் கட்டுரைகளுக்குப் பின் இடுகை செய்து திட்ட விரும்புவோர், பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைத் தந்துவிட்டு அடுத்த பதிவை இடுங்கள் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-பிரதம ஆசிரியர், உகரம்-

❓டித்த மனிதரான சி.வி.விக்னேஸ்வரன் ஏதாவது உருப்படியாய்ச் செய்வார் எனும் நம்பிக்கையில், இனத்திற்காக எப்பணியும் செய்யாத இவரது கையில், மாகாண முதலமைச்சர் பதவியைத் தூக்கிக்  கூட்டமைப்பு கொடுத்தது. அப்பதவியை வைத்து முன்னாள் முதலமைச்சர் சாதித்தது எதனை?

❓முன்னாள் ஜனாதிபதியின் முன்பாக, சத்தியப்பிரமாணம் செய்யக் கூடாது என உரைத்து மற்றவர்களைத் தூண்டிவிட்டு, பின்னர் தான்அதைக் கடைப்பிடிக்காததோடு, இன அடையாளத்திற்காக ஒருவரைக் கூட அழைத்துச் செல்லாமல், குடும்ப சமேதராய்ச் சென்று அதே ஜனாதிபதியின் முன் சத்தியப்பிரமாணம் செய்தது சரியா?

❓சுரேஷின் தம்பிக்கு ஆரம்பத்தில் பதவி கொடுக்க மறுத்துவிட்டு, கூட்டமைப்போடு தனக்குப் பகை வந்தபின்னர் பிடிவாதமாய் அவருக்கே பதவி கொடுத்தது நியாயமா?

❓தீவிரவாத அமைப்புக்களுடன் என்னால் சேர்ந்து இயங்க முடியாது என்று கூறிவிட்டு, இன்று அவர்களுடனேயே கூட்டுச்  சேர்ந்து கட்சி அமைத்திருப்பது முறையா?

❓மாகாணசபையினூடு மாகாணத்தின் வளர்ச்சிக்காய் ஏதும் செய்யாமல் தேசிய அரசியலில் ஈடுபட்டு இனப்பிரச்சினையில் தலையிட்டவர், இனநன்மை நோக்கி ஒரு துரும்பைத்தானும் இதுவரை அசைத்தாரா?

❓திடீரென ஒருநாள் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து, அரசியல் குற்றவாளிகளை மீட்கவெனத் தொடங்கிய அவரின் முயற்சி பின்னர் என்னாயிற்று?

❓தன்னைச் சார்ந்த அமைச்சரைக் காப்பதற்காக, சுன்னாக நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்த விடயத்தை மறைக்க முயன்று தனது மக்களின் உயிராபத்தைக் கூடப் பொருட்படுத்தாமல், பொய்யுரைத்த அசிங்கத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

❓தானே அமைத்த விசாரணைக்குழு தன் எண்ணத்திற்கு மாறாகத் தீர்ப்பளிக்க, அக்குழுவின் நேர்மையில் இவர் ஐயப்பட்டது சரிதானா?

❓தனது ஆதரவாளரான அமைச்சரின் ஊழலை மறைப்பதற்காக, மற்றைய அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்து, இன்று நீதிமன்றத்தால் 'குட்டுப்பட்டு' நிற்கும் அவலத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

❓தனக்குத் தேவையான அமைச்சரில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, 'அவர் ஒரு பனங்காட்டு நரி! அவர் எந்தச் சலசலப்புக்கும் அஞ்சமாட்டார்' எனப் பகிரங்கக் கூட்டத்தில் இவர் பேசியது முறையா?

❓'உரிமைகோரி நிற்கும் நாங்கள், அரசாங்கத்திடம் எந்தச் சலுகைகளையும் எதிர்பார்க்காமல், வாழப் பழக வேண்டும்'  என்று மக்களுக்கு உரைத்துவிட்டு, பதவி முடியும் கடைசி நேரத்தில் தனக்கான வாகனத்தை அரசாங்கத்திடம் இரந்து நின்ற, அசிங்கத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

❓தன்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர்களை, சரியான காரணம் சொல்லாமல் பகைத்ததன் காரணம்  என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?

❓தான் சார்ந்த கட்சிக்கு அறிவிக்காமல், தமிழ்மக்கள் பேரவைக் கூட்டத்தில் இவர் கலந்து கொண்டது சரியா?

❓அதற்கான காரணம் கேட்டபோது 'மாவையின் தொலைபேசி இலக்கம் தன்னிடம் இல்லை' என்று உரைத்தது உங்களுக்கு நகைச்சுவையாய்ப் படவில்லையா?

❓எமது அரசியல் கைதிகள் சிறையில் வாடி நிற்க, எங்கோ இருந்த, நீதிமன்றத்தால் கொலைக்குற்றம்  சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட, தனது குருநாதரின் சீடர்களின் விடுதலைக்காக இந்தியப் பிரதமரிடம்  வேண்டுகோள் விடுத்ததுதானா இவரின் இனப்பற்று?

❓'வீட்டை விட்டு வெளியேறிச் சைக்கிளில் சென்று வாக்களியுங்கள்' எனக் கடந்த தேர்தலில் தான் சார்ந்திருந்த கட்சிக்கு எதிராக, மறைமுகமாய் அறிக்கை விட்டது சரியா?

❓பின் அந்தச் சைக்கிள் கட்சியோடும் பகைத்து, இன்று அவர்களை வசைபாடி நிற்பது சரியா?

❓தமிழ் மக்கள் பேரவை அரசியல்சாரா அமைப்பு என்று அறிவித்து விட்டு, அப்பேரவைக் கூட்டத்திலேயே தனது புதிய கட்சியை ஆரம்பித்தது முறையா?

❓தமிழ் மக்களின் உரிமையை முற்றுமுழுதாக எதிர்த்து நிற்கும் தனது சம்பந்தியான வாசுதேவ நாணயக்காராவின் இனத்துவேசக் கருத்து ஒன்றைத்தானும் மறுத்து அவர் அறிக்கை விடாதது ஏன்?

❓கூட்டமைப்பின் போக்குத் தவறு எனச் சொல்லத் தொடங்கியவர், உடனேயே அக்கட்சியிலிருந்து பதவி விலகாமல் அவர்கள் தந்த அப்பதவியில் கடைசி நிமிடம்வரை ஒட்டிக் கொண்டு இருந்தது முறையாகுமா?

❓இவருக்கு முட்டுக்கொடுக்கவென முண்டியடித்து நிற்கும் அதிபர் அருந்தவபாலன் கடைசிப் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரும் கூட, கூட்டமைப்பின் உறுப்பினராய்த்; தன்னைக் காட்டி நின்றவர். கடைசி நிமிடம்வரை கூட்டமைப்பிடம் பதவி எதிர்பார்த்து நின்ற இவர்தானா இக்கட்சியின் உண்மைத் தொண்டராய் இருக்கப் போகிறார்?

❓சர்வதேசத்தின் உதவியுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தமிழ்மக்களின் உரிமையைப் பெறுவேன் என்று கூறுபவர், அதனை எப்படிச் சாதிப்பேன் என்பது பற்றியோ, சாதிக்க முடியாத பட்சத்தில் தான் என்ன செய்வேன் என்பது பற்றியோ இதுவரை ஏதும் சொல்லாதிருப்பது எதனால்?

❓கடுமையான போர்க்காலத்தில், இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்போடு கொழும்பில் வாழ்ந்த காலத்தில் பிரபாகரனுடைய பெயரைத்தானும் சொல்லாதவர், இப்போது பிரபாகரனைத் தம்பி என்று அழைப்பதில் இருக்கும் பொய்மையைக் கூடவா உங்களுக்குத் தெரியவில்லை?

❓மேலிருக்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டு கம்பவாரிதியைத் திட்டுவதுதான் நியாயம் என்று உகரம் கருதுகிறது. நிறைவாக, முதலமைச்சருக்காக உணர்ச்சிவசப்படுவோரிடம் ஒரு கேள்வி. பத்தாண்டுகளாகப் பாராளுமன்றம் சென்று கூட்டமைப்பு என்ன சாதித்தது? என்று கேட்பவர்கள், ஐந்தாண்டுகளாக முதலமைச்சர் பதவியிலிருந்து இவர் சாதித்தது எதனை? என்று சொல்ல முன்வருவார்களா?

'விநாசகாலே விபரீத புத்தி'

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்