நெஞ்சிருக்கும் வரைக்கும் பகுதி 08: 'இங்கு இப் பரிசே!' -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

லகில் ஒருவர் மனதை அதிகம் மகிழ்விக்கும், பெறுமதிமிக்க பரிசுப் பொருள் எது?
உங்கள் மனதில் தங்கம், வைரம், கார், வீடு எனப் பல பதில்கள் இப்போது வந்திருக்கும்.
இவற்றையெல்லாம் நான் நிராகரித்து, அப்பரிசுப்பொருள் ஒரு கோழிக்குஞ்சுதான் என்றால்,
நீங்கள் நம்பவா போகிறீர்கள்? அதுபற்றித்தான் இம்முறை சொல்லப்போகிறேன்.
 
🎀 🎀 🎀
 
பரிசுப்பொருட்களை நாடாத மனித மனம் உண்டா? உண்டு என்றால் அது பொய்.
சிறுவயது முதல் பரிசுப்பொருள்கள் விடயத்தில் நான் ஒரு துரதிர்ஷ்டசாலி.
பரிசுப்பொருள்களை எதிர்பார்த்துப் பலதரம் நான் ஏமாந்திருக்கிறேன்.
அங்ஙனம் ஏமாந்து ஏங்கிய முதல் அனுபவத்தைச் சொல்கிறேன்.
நாங்கள் சிலாபத்தில் வாழ்ந்த காலம் அது.
எங்கள் வீட்டிற்குப் பின்னால் இருந்த வேலையாட்கள் தங்கும் 'லயத்தில்',
பல குடும்பங்கள் தங்கியிருந்தது பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன்.
அங்கு 'சுப்பிரமணியம்', 'பெத்தா' என்னும் இரு சகோதரர்கள் இருந்தார்கள்.
அண்ணனான சுப்பிரமணியம் பொறுப்புள்ள குடும்பஸ்தன். 
தம்பியாகிய பெத்தா ஒரு 'பிளேபோய்' பிரம்மச்சாரி.
அந்த 'லயத்தில்' அவ்விருவரும் முக்கியம் பெற்றிருந்தனர்.
சுப்பிரமணியத்திற்கு என் அண்ணனையும், பெத்தாவுக்கு என்னையும் பிடிக்கும்.
 
🎀 🎀 🎀
 
ஒரு வருடப்பிறப்புத் தினத்தில் புத்தாடை அணிந்து நானும் அண்ணனும் நிற்கிறோம்.
அப்போது அங்கு வந்த சுப்பிரமணியத்தின் கையில் ஒரு பை நிறையப் பட்டாசுகள்.
வந்தவன் அந்த பையை அப்படியே என் அண்ணனின் கையில் கொடுத்தான்.
எனக்கு ஏதும் தரவில்லையே என என் மனதில் பெரிய ஏக்கம்.
பெத்தா எனக்கு ஏதும் கொண்டு வருவான் என்று மனதிற்குள் எதிர்பார்ப்புப் பொங்க,
காத்திருந்த எனக்கு அவன் வெறுங்கையோடு வந்தது பெரிய ஏமாற்றமாய் இருந்தது.
வந்த பெத்தா அப்பாவிடம் கைவிஷேடம் வாங்கிக்கொண்டு போய்விட்டான்.
சுப்பிரமணியத்தின் அன்புக்கு நான் ஆளாகவில்லையே என மனம் ஏங்கிப்போயிற்று.
இது 'பரிசுகெட்ட' எனது முதல் அனுபவம்.
சில நாட்களிலேயே இளைஞனான பெத்தா தார் தகரம் வெட்டி ஏற்பு வைத்து,
இறந்துபோன கதை இக்கட்டுரைக்குத் தேவையில்லாதது.
 
🎀 🎀 🎀
 
யாழ் இந்துவில் படித்தபோது 'பரிசுகெட்ட' இரண்டாவது அனுபவம் ஏற்பட்டது.
அப்போது அங்கு ஒரு பேச்சாளனாய் நான் பதிவாகியிருந்தேன். 
இந்துக்கல்லூரி என்று இல்லை, யாழ்ப்பாணத்துக் கல்லூரிகள் அனைத்திலும் கூட,
பேச்சாளனாய் எனக்கொரு தனி அடையாளம் இருந்தது.
அப்போது கல்லூரிகளுக்கிடையில் நடந்த பேச்சுப்போட்டி ஒன்றில்,
அதிமேற்பிரிவுப் போட்டியில் நானும் கலந்து கொண்டேன்.
முதல் பரிசு எனக்கு, நான் முதல்முதலாக வாங்க இருந்த பரிசு அது.
என் மனநிலை எப்படியிருந்திருக்கும், நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
 
🎀 🎀 🎀
 
போட்டி நடந்து மூன்று மாதங்களின் பின்னர்தான் பரிசளிப்பு விழா நடந்தது.
நமது அரசாங்க நிர்வாக ஆமை வேகத்தின் அடையாளம் அது.
யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியில் நடந்த அந்த பரிசளிப்புவிழாவில், 
பரிசு பெறும் எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட, ஆர்வத்தோடு கலந்திருந்தேன்.
விழா மேடையின் நடுவில் போடப்பட்டிருந்த மேசையில்,
ஏழெட்டு வெற்றிக் கேடயங்கள் அடுக்கப்பட்டிருந்தன.
நடந்த போட்டிகளில் தரம்கூடிய போட்டி நான் கலந்து கொண்டதாதலால்,
அவற்றில் பெரிதாய் இருந்த ஒன்றை எனக்குரியதாய் நினைந்து உள் மகிழ்ந்தேன்.
நிகழ்ச்சி தொடங்க ஒவ்வொரு கேடயமாய்ப் போகத் தொடங்கியது.
நான் பார்த்திருந்த கேடயமும் இன்னொருவருக்கு வழங்கப்பட உள்ளம் அதிர்ந்தது.
அதுவல்ல கொடுமை, கடைசியாக எனக்கு ஒரு புத்தகப் பார்சல் பரிசாகத் தரப்பட்டது.
'சீன கொமியுனிஸ்டுகளால்' அக்காலத்தில் வெளியிடப்பட்டு வந்த, 
ஒன்றுக்கும் உதவாத சில புத்தகங்கள் அதனுள்ளே இருந்தன.
பரிசு எதிர்பார்த்து நான் தோற்ற இரண்டாவது இடம் இது.
 
🎀 🎀 🎀
 
இனி சொல்லவந்த விடயத்திற்கு வருகிறேன்.
சிறுவயது முதல் பிராணிகளை வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்.
ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோதே வீட்டில் சில கோழிகளை வளர்த்தேன்.
அவை போடும் முட்டைகளை என்னுடையதாய் உரிமை கொண்டாடுவேன்.
கோழியில் உரிமைபேசி முட்டைகளை அம்மாவுக்கே விற்றுவிட்டு,
அம்மாவில் உரிமைபேசி இரவில் அம்முட்டைகளை நானே உண்டுவிடுவேன்.
பாடசாலைக்கு நான் போனபிறகு கோழிகள் முட்டை இட்டால்,
அவை எனது கோழிகளின் முட்டையா? அம்மாவின் கோழிகளின் முட்டையா? என,
தெரியாமல் போய்விடும் என்பதற்காக, காலையில் எழுந்ததுமே எனது கோழிகளைப் பிடித்து,
அதன் பின்பக்கம் வழியாக விரலை விட்டு முட்டை இருக்கிறதா? என்று பார்த்தபின்தான்,
பாடசாலைக்குச் செல்வேன். (எத்தனை அசிங்கங்களைத் தாண்டி வந்திருக்கிறேன்.
இப்போ நினைக்க எனக்கே அருவருப்பாய் இருக்கிறது.)
 
🎀 🎀 🎀
 
அவ்வப்போது முட்டைகளைச் சேர்த்து 'அடைக்கு' வைப்பதும் உண்டு.
கோழி அடைகாக்கும் அந்த இருபத்தொரு நாட்களில்,
ஏதோ நானே கர்ப்பம் தரித்தது போலப் பதற்றப்படுவேன்.
இருபத்தோராவது நாள் பொரித்த குஞ்சுகள் தாயின் செட்டைகளுக்கூடாக,
சின்னச்சின்ன பஞ்சுப்பொதிகள் போல் எட்டிப் பார்ப்பதைக் காண என் உயிர் உருகும்.
 
🎀 🎀 🎀
 
கோழிகளெல்லாம் எங்கள் வீட்டில் நின்ற ஒரு மரத்தில் தான் இரவில் தங்கும்.
ஒருமுறை அச்சம்பவம் நடந்தது.
சில நாட்களாக என்னுடைய சாம்பல் நிறக்கோழி இரவில் தங்க வருவதேயில்லை.
விடிந்ததும் எங்கிருந்தோ வந்து மற்றக்கோழிகளுடன் அது உணவு உண்ணும்.
எனது கோழியை யாரோ பிடித்து வைத்து முட்டையை எடுக்கிறார்களோ என்று,
என் மனதுக்குள் ஐயம், எவ்வளவோ முயன்றும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதனால் எனக்கோ சொல்லமுடியாத கவலை.
 
🎀 🎀 🎀
 
எங்கள் வீட்டில் சொந்த மாட்டுவண்டில் நின்றது பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன்.
மாட்டுக்கு மிக வசதியான ஒரு தொழுவத்தை அமைத்திருந்தார் அப்பா.
கீழே மாடு நிற்க வசதி. மேலே மாட்டுக்கான வைக்கோல் பட்டறை.
அதைச் சுத்தம் செய்ய ஒரு வேலையாள் நியமிக்கப்பட்டிருந்தான்.
ஒருநாள் அதிகாலை அந்த வேலையாள் பதட்டமாய் ஓடி வந்தான்.
அவன் கையில் அழகான ஒரு கோழிக்குஞ்சு.
மாட்டுத் தொழுவத்துக்குள் அது கிடந்ததாய் அவன்சொல்ல,
ஏதாவது காகம் கொண்டுவந்து போட்டிருக்கும் என்றார் அம்மா.
ஆனாலும் ஒரு சிறு சந்தேகத்தில்,
அவனை வைக்கோல் பட்டறையில் ஏறிப் பார்க்கச் சொன்னோம்.
மேலே போனவன் சந்தோஷத்தில் கூக்குரல் இட்டான்.
பட்டறைக்குள் என்னுடைய சாம்பல் நிறக்கோழி ஏழு குஞ்சுகள் பொரித்திருந்தது.
இருபத்தொருநாள் காத்திருந்து கோழிக்குஞ்சைக் காணும் எனக்கு,
திடீரென என் சாம்பல் கோழி ஏழு குஞ்சுகளைக் கூட்டிவர,
நான்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.-அன்று முழுவதும் வானத்தில் மிதந்தேன்.
 
🎀 🎀 🎀
 
இன்று எனக்கு பல நாடுகளிலிருந்தும் கூட எத்தனையோ பரிசுகள் கிடைத்துவிட்டன.
எதிர்பார்த்த அப்பரிசுகள் தந்த மகிழ்ச்சியைவிட,
எதிர்பாராமல் கிடைத்த இந்த கோழிக்குஞ்சுப் பரிசை என்னால் மறக்கவேமுடியவில்லை.
என் வாழ்நாள் முழுவதும் அந்தப் பரிசை நினைத்துக் கொண்டேயிருப்பேன்.
கோழியின் நிறம், குஞ்சுகளின் நிறம், குஞ்சை எடுத்துத் தந்த வேலையாளின் தோற்றம் என,
அத்தனையும் இன்றும் என் மனதில் பதிவாகிக் கிடக்கின்றன.
ஆரம்பத்தில், மனதை அதிகம் மகிழ்விக்கும் பெறுமதிமிக்க பரிசுப் பொருள் எது? 
என்று கேட்டேன் அல்லவா?-சந்தேகமேயில்லை.
சிறிதானாலும் எதிர்பார்க்காத வேளையில் கிடைக்கும் பரிசொன்றே பெறுமதிமிக்க பரிசாம்.
அதனால்த்தான் தற்செயலாய்க் கிடைத்த அக் கோழிக்குஞ்சுகளை மறக்கவே முடியவில்லை.
 
🎀 🎀 🎀
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்