நெஞ்சிருக்கும் வரைக்கும் - பகுதி 09: 'பிறப்பா? வளர்ப்பா?'-கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

யிர்களின் படைப்பு ரகசியம் பற்றிய ஒரு விபரத்தை,
இம்முறை உங்களோடு பகிர்ந்து  கொள்ளப் போகிறேன்.
அது என்ன ரகசியம் என்கிறீர்களா?
ரகசியங்களை அறிந்து கொள்வதில்,
யாருக்குத்தான் ஆர்வம் இல்லாமல் இருக்கப் போகிறது.
'சிதம்பர ரகசியம்' என்று சொல்லப்படுவதால்,
அந்த ரகசியத்தை அறியவேண்டும் என்பதற்காகவே,
சிதம்பரத்திற்குச் செல்வதாய்ச் சொல்லும் பலபேரை நான் சந்தித்திருக்கிறேன்.
சரி, சற்றுப் பொறுமையாக உள்ளே வாருங்கள்!
நான் சொல்லப் போகும் ரகசியத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
 
🌼  🌼  🌼
 
ஒரு உயிரினது குணம் பிறப்பால் வருகிறதா?
அல்லது வளர்ப்பால் வருகிறதா?
இக் கேள்விகளுக்குப் பலரும் பலவிதமாக விடையளித்து வருகின்றனர்.
'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே' என்று
மேற் சொன்ன கேள்விக்கு கவிஞர் கண்ணதாசன்,
ஓர் சினிமாப் பாடலில் பதிலுரைத்திருக்கிறார்.
இன்றைய அறிவியல் உலகமும் ஆரம்பத்தில் மேற் கருத்தைத்தான் கொண்டிருந்தது.
ஆனால், இன்று அறிவு வளர்ச்சி ஏற்பட, ஏற்பட பிறக்கும் போதே மனித 'ஜீன்களுக்குள்',
அவனது இயல்பு புதைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
 
🌼  🌼  🌼
 
எனக்கு கண்ணதாசன் சொன்ன பதிலை விட,
அறிவியலாளர் சொல்லும் இன்றைய இரண்டாவது பதிலிலேதான் உடன்பாடு உண்டாகிறது.
நல்லவன், கெட்டவன், அறிஞன், முட்டாள், வீரன், கோழை போன்ற மாறுபட்ட இயல்புகள் எல்லாம், 
ஒருவனுக்கு பிறவியிலேயே அமைந்து விடுகின்றன என்பதாகவே நானும் கருதுகிறேன்.
சூழலும், வளர்ப்பும் ஒருவனது சொந்த இயல்பினில்,
சிறிய அளவிலான மாற்றத்தையே உருவாக்கமுடியும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
 
🌼  🌼  🌼
 
'எதனை வைத்து இப்படிச் சொல்லுகிறீர்?' என்று கேட்பீர்கள்.
என் வாழ்வனுபவத்தை வைத்துத்தான் இதனை உறுதிபடச் சொல்லுகிறேன்.
'அதென்ன வாழ்வனுபவம் என்கிறீர்களா?'
கொஞ்சம் பொறுமையாகத் தொடருங்கள், விரிவாகச் சொல்கிறேன்.
 
🌼  🌼  🌼
 
இன்றைய ஜெயராஜை நினைத்ததும்,
உங்கள் மனதில் வரும் எண்ணங்களைச் சற்றுத் தொகுத்துப் பாருங்கள்.
கம்பன் விழா, இசைவிழா, நாட்டியவிழா நடத்துபவர்!
ஆங்காங்கு அறிஞர்களை கௌரவித்து பாராட்டுவிழா நடத்துபவர்!
மறைந்த அறிஞர்களுக்கு அஞ்சலி விழா நடத்துபவர்!
புத்தக வெளியீட்டு விழா நடத்துபவர்!
பட்டிமண்டபம், கவியரங்கம், வழக்காடு மன்றம் போன்ற தனி நிகழ்ச்சிகளை நடத்துபவர்!
இப்படியாய்த்தான் உங்கள் மனதில் என்னைப் பற்றி ஓர் வரைபடம் விழப்போகிறது.
அதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது? அது உண்மைதானே?
அதுதானே உம்முடைய செயற்பாட்டு வடிவம் என்கிறீர்களா?
உங்கள் கருத்தை மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன்.
 
🌼  🌼  🌼
 
கம்பன் கழகம் என்ற ஒன்றைத் தொடங்கி,
விழாக்கள் எடுக்கப் பழகியதால் வந்த சுயரூபம் இது என,
நீங்கள் நினைப்பீர்கள், அதுதான் இல்லை!
விழாக்கள் எடுக்கும் இயல்பு என் இரத்தத்திலேயே ஊறி இருந்திருக்கும் போல் தெரிகிறது.
63 வயதைக் கடக்கும் இன்றைய நிலையில் என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன்.
தனிமை கிடைக்கும் போதெல்லாம்,
விழாக்கள் நடத்துகிற எனது இவ் இயல்பின் 'மூலம்' எங்கு தொடங்கிற்று என்று தேடுவேன்.
அங்ஙனம் தேடிய போதுதான் அவ் இயல்பு என் இரத்தத்தில் ஊறிக் கிடந்த உண்மை புலனாயிற்று.

🌼  🌼  🌼
 
சிலாபத்தில் நான் படித்துக்  கொண்டிருந்த காலமது.
சிறுவயதில் நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன் என்று,
முன்னரே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
அங்கு நான் படிக்கும்போதும் அப்படித்தான் இருந்தேன்.
நான் படித்தது ஒரு கிறிஸ்தவப் பாடசாலையில்.
தாடி வைத்த ஒரு பாதிரியார்தான் அப்பாடசாலையின் அதிபராய்  இருந்தார்.
'பெரியபாதர்' என்றுதான் அவரை நாம் அழைப்போம்.
தர்க்கம் படித்தவர்கள் 'பெரியபாதர்' என்ற அந்தப் பெயரை வைத்தே,
அங்கு வேறு சில சிறிய'பாதர்'களும் இருந்ததைத் தெரிந்து கொள்வார்கள்.
அந்தப் பாடசாலையில் நான் பெற்ற அனுபவங்கள் பற்றியும் உங்களுக்குச் சொல்லவேண்டும்.
இங்கு அதைச் சொன்னால் 'மற்றொன்று விரித்தல்' எனும் குற்றத்திற்கு ஆளாகிவிடுவேன்.
அதனால் அவை பற்றி இன்னொரு கட்டுரையில் சொல்கிறேன்.
 
🌼  🌼  🌼
 
இனி விட்ட இடத்திற்குத் திரும்பி வரலாம்.
எங்கள் பாடசாலையில் வேறு இரண்டு 'பாதர்'களும்  கற்பித்தார்கள்.
அவர்களில் ஒருவருக்குச் 'செபஸ்ரியான் பாதர்' என்று பெயர்.
மற்ற 'பாதர்' பற்றி தனியே ஒரு கட்டுரை எழுத இருக்கிறேன்.
'செபஸ்ரியான் பாதர்' அன்பானவர், எப்போதும் சாந்தமாயிருப்பார்.
நான் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது,
'பாதரு'க்கு வேலை மாற்றம் வந்தது.
அவர் மாற்றலாகிப் போவதற்கு முதல்நாள்,
அவருக்கு ஒரு பிரியாவிடை நிகழ்ச்சி நடாத்த நான் முடிவு செய்தேன்.
அப்போது எனக்கு வயது பதினொன்று.
 
🌼  🌼  🌼
 
கூச்ச சுபாவம் உள்ள எனக்கு விழா என்றால் உற்சாகம் வந்துவிடும்.
அந்த நிகழ்விலும் அப்படித்தான் ஆனேன்.
அப்போது எங்கள் வீட்டின் 'வசதி' பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
அப்பாவின் வேலையால் செல்வம் கொழித்த காலமது.
நான் கேட்டுக் கொள்ள,  'சான்விச்',' பற்றிஸ்', 'கேக்' என,
பல சிற்றுண்டிகளையும் வீடு செய்து தந்தது.
இந்த ஒழுங்குகளை பாடசாலைக்குத் தெரியாமலேயே நடாத்தினேன்.
மறுநாள் 'பாதர்' பாடசாலை விட்டுப் போகப்போகிறார்.
நானாகத் துணிந்து போய் 'பாதரி'டம்,
'பாடசாலை முடியும் நேரத்தில் எங்களுடன் சிறிது நேரம் நிற்கவேண்டும்' என,
கேட்டுக் கொண்டேன்.
'பாதரு'க்கு ஆச்சரியம்! ஆனாலும் சம்மதித்தார்.
 
🌼  🌼  🌼
 
எங்கள் வகுப்பாசிரியர் ஒருசிலருக்கும் அழைப்பு விடுத்தேன்.
அவர்களும் ஆச்சரியத்துடன் சம்மதித்தனர்.
11 வயது பிள்ளை ஒன்று ஓர் நிகழ்ச்சிக்கு அழைத்தால் யாருக்குத்தான் ஆச்சரியம் வராது?
அவர்களை அழைத்த பின்பு வகுப்பு மாணவர்களை வேகவேகமாகத் தயார் செய்தேன்.
எப்படி நிகழ்ச்சி மண்டபத்தை ஒழுங்கு செய்வது!
எப்படி சிற்றுண்டிகளைப்  பரிமாறுவது!
எப்படி வரிசையாய் நிற்பது!
எப்படி ஒவ்வொருவராய் 'பாதரி'ன் காலில் விழுந்து கும்பிடுவது!
எப்படி எல்லோருமாக அவர் கையில் பரிசினைக் கொடுப்பது! என,
ஓரிரு மணித்தியாலத்திற்குள்  மாணவர்களை ஒழுங்குபடுத்தினேன்.
பாடசாலை விட்டதும் நிகழ்ச்சி தொடங்கியது.
 
🌼  🌼  🌼
 
'பாதரு'க்கும் ஆசிரியர்களுக்கும் பெரிய ஆச்சரியம்.
நிகழ்ச்சியில் இருந்த நேர்த்தியே அவர்களின் ஆச்சரியத்திற்கான காரணமாயிற்று.
மாணவர்கள் ஒருமித்து ஓர் ஒழுங்கின் கீழ் இயங்கினார்கள்.
எல்லாம் நான் கொடுத்த 'ரெயினிங்கின்' விளைவாக்கும்!
சிற்றுண்டிகள் மாணவர்களால் மிக அமைதியாகப் பரிமாறப்பட்டன.
பிரமுகர்கள் நடத்தும் ஒரு தேநீர்விருந்து போல அது நடந்தது.
பின்னர் மாணவர்கள் ஒன்று கூடி நின்று பாதருக்கு வாழ்த்துக் கூறி பரிசளித்தோம்.
'பாதரும்', ஆசிரியர்களும் எங்களின் நிகழ்ச்சி அமைப்பைக் கண்டு வியந்து போய் நின்றார்கள்.

🌼  🌼  🌼
 
நிகழ்ச்சி முடிந்துவிட்டதாய் நினைந்து ஆசிரியர்களும், 'பாதரு'ம் புறப்பட,
அவர்களைத் தடுத்து மீண்டும் இருக்கையில் உட்கார வைத்தேன்.
நான் முன்னரே பயிற்றுவித்தது போல,
மாணவர்கள் எல்லோரும் கடகடவென 'பாதரி'ன் முன், வரிசையாக வந்து நின்றார்கள்.
அந்த வரிசையின் கடைசியில் நான் நின்றேன்.
இன்றுகூட கம்பன் கழகத்தில்,
செயலுக்கு முன் நின்று புகழுக்குப் பின் நிற்கும் பழக்கத்தை,
அந்த நிகழ்ச்சி தான் உண்டாக்கித் தந்தது.
மாணவர்கள்  ஒருவர்பின் ஒருவராக,
'பாதரி'ன் காலில் விழுந்து கும்பிடத் தொடங்கினார்கள்.
 
🌼  🌼  🌼
 
'பாதர்' வியப்பின் உச்சத்தைத் தொட்டு நின்றார்.
வந்திருந்த ஆசிரியர்களும் தான்!
அந்தப்  பாடசாலையில் இத்தகு செயல்கள் எல்லாம் இதற்கு முன் நடந்ததேயில்லை.
அதனால் இந்த நடைமுறைகளை அவர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அவர்களின் வியப்பு, அனைத்தையும் ஒழுங்கு செய்த எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
மெல்ல மெல்ல எல்லா மாணவர்களும் வணங்கி முடிய,
கடைசியாய் நான் 'பாதரு'க்கு அருகில் சென்றேன்.
 
🌼  🌼  🌼
 
நான் தான் இந்த நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தேன் என்பது,
'பாதரு'க்கு எப்படியோ தெரிந்திருந்தது.
என்னைக் கண்டதும் அவர் மகிழ்ந்து சிரித்தார்.
அந்த சிரிப்பு என்னை நெகிழ வைத்தது.
அருகில் போய் நான் அவரின் காலில் விழுந்தேன்.
என்ன நடந்தது என்று எனக்கே தெரியவில்லை.
என்னை அறியாமல் விம்மிவிம்மி அழத் தொடங்கிவிட்டேன்.
ஆசிரியர்கள் எல்லாரும்கூட திகைத்துப் போனார்கள்.
பதினொரு வயது மாணவனுடைய அந்த உணர்ச்சிவயப்பாடு,
அவர்களையும் கலங்கடித்திருக்கும் போல.
 
🌼  🌼  🌼
 
விழுந்து வணங்கி விம்மி அழுத என்னை,
இரண்டு கரங்கள் தோள்பிடித்து நிமிர்த்தின.
அக்கரங்கள் 'பாதரி'னுடையவை. 
நான் மெல்ல நிமிர்ந்து பார்க்கிறேன். 
'பாதரி'ன் கண்களிலிருந்தும் கண்ணீர் வெள்ளம் பாய்கிறது.
ஒரு சிறுபிள்ளையின் உருக்கம் அவரை கலங்கடித்துவிட்டது என நினைக்கிறேன்;.
என்னை அணைத்துக் கொண்டு அவரும் விம்மிவிம்மி அழத் தொடங்குகிறார்.
அவர் அழுகை என்னை மேலும் அழவைக்க,
எனதழுகை அவரை மேலும் அழவைக்க,
அன்றைய நிகழ்ச்சி உருக்கத்தின் உச்சத்தைத் தொட்டது.
 
🌼  🌼  🌼
 
அடுத்தநாள் இந்தச் செய்தி பரவி,
நான் பாடசாலையின் 'ஹீரோ' ஆனேன்.
அங்கும் நான் படிப்பில் சுமார் மாணவன்தான்.
விளையாட்டுப் போன்ற வேறு எந்த ஆற்றலும்கூட எனக்கு இருந்ததில்லை.
ஆனாலும் திடீரென நான் ஒழுங்கு  செய்த அந்த நிகழ்ச்சி,
எனக்கு பாடசாலைக்குள் பெரிய 'மவுசை' உருவாக்கித்  தந்தது.
இதுதான் நான் முதல் முதலில் நடத்திய நிகழ்ச்சி.
நீங்களே சொல்லுங்கள்! ஒரு பதினொரு வயது பிள்ளையால்,
இவ்வளவு நேர்த்தியாக ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்ய முடியுமா?
 
🌼  🌼  🌼
 
இன்று நான் நடத்தும் பெரிய விழாக்கள்,
என்னை உலக அளவில் பிரசித்தமாக்கி இருப்பது போல,
அன்று நான் நடத்திய இந்த சிறு நிகழ்ச்சி,
என்னைப் பாடசாலை அளவில் பிரசித்தமாக்கிற்று.
நிகழ்ச்சிகளை நடாத்த என்னை யாரும் பயிற்றுவிக்கவில்லை.
பின்னர் எப்படி என்னால் அதனை அந்த வயதில் சாதிக்க முடிந்தது?
அதை வைத்துத்தான்,
ஒரு மனிதனின் ஆற்றல் பிறப்பிலேயே வருகிறது என்று சொல்கிறேன்.
அழுது அடி அடைந்த அடியவர்கள் பலர் இருக்கிறார்கள்.
அழுது புகழடைந்தவனாய் நான் மட்டும்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
 
🌼  🌼  🌼
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்