நெஞ்சிருக்கும் வரைக்கும் - பகுதி 10: 'பழையன கழிதல்....' -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

ள்ளத்திற்குள் நானே சிரித்துக் கொள்கிறேன்.
நாங்கள் சின்னப்பிள்ளைகளாய் இருந்த போது எங்கள் ஊர் மூத்தவர்கள்,
தங்களது பழைய வாழ்க்கையைப் பற்றி,
ஆச்சரியப்படத்தக்க பல செய்திகளைச் சொல்வார்கள்.
ஐந்து சதத்தைக் கொண்டுபோய் காலை, மதிய உணவு உண்டுவிட்டு,
மிகுதிப் பணம் கொண்டுவந்த கதையும்,
நூற்றிஐம்பது ரூபாய்க்குக் காணி வாங்கிய கதையும்,
நானூறு ரூபாய்க்குத் தாலிக்கொடி செய்த கதையும் என,
அவர்கள் வாயூறி, வாயூறிக் கதைகள் சொல்ல,
முடிவில் 'யாவும் கற்பனை' என்று எழுதவேண்டுமோ என எண்ணத்தோன்றும்.
ஆனால் அவர்கள் சொன்னது அத்தனையும் நிஜமேயாம். 
 
🏺  🏺  🏺
 
காலமாற்றம் எத்தனை புதுமைகளைச் செய்துவிடுகிறது.
இன்று, எனது இளமைக்காலச் செய்திகளை நான் சொன்னால்,
இன்றைய இளைஞர்கள், என் கதைக்கும் 'யாவும் கற்பனை' எனத் தலைப்பிடத் தயாராகிறார்கள்.
எந்தக் கோயிலில் நான் சத்தியம் பண்ணினாலும்,
நான் சொல்கிற செய்திகளை அவர்கள் நம்பத் தயாராயில்லை.
அப்படி நான் சொன்னவை என்ன செய்திகள் என்கிறீர்களா?
வாருங்கள் ஒவ்வொன்றாய்ச் சொல்கிறேன்.
நீங்களாவது அவற்றை நம்பினால் நிரம்பச் சந்தோஷப்படுவேன்.
 
🏺  🏺  🏺
 
நான் சொல்லப்போகும் செய்திகள் யாவும்,
பெரும்பாலும் எனது 'சிலாப' வாழ்க்கையில்த்தான் நடந்தன.
நாம் அந்த ஊரில் இருந்தபோது என் அறிவுக்குத் தெரிய,
ஒரு தங்கப்பவுண் தொண்ணூறு ரூபாய்க்கு விற்றது.
என்ன? கொடுப்புக்குள் சிரிக்கிறீர்கள்.
'இவர் டூப்பு விடத் தொடங்கிவிட்டார்' என நீங்கள் நினைப்பது தெரிகிறது.
ஆனால் நான் சொல்வது அத்தனையும் உண்மையாக்கும்.
பாரதியார் சுயசரிதையில் சொன்னாற்போல,
வேண்டுமானால் இவ் உண்மையை,
நாற்பதாயிரம் கோயிலிலும் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்.
அவற்றை நம்புவதும் நம்பாததுவும் இனி உங்கள் இஷ்டம்.
 
🏺  🏺  🏺
 
இந்த இடத்தில் கொஞ்சம் தற்புகழ்ச்சி அடித்தால் என்ன? என்று தோன்றுகிறது.
தற்புகழ்ச்சி சான்றோர்க்கு அழகா? எனக் கேட்பீர்கள்.
அக்கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன.
முதலாவது பதில் நான் சான்றோன் இல்லை என்பது.
இரண்டாவது, இருந்து இழக்கப்பட்ட பெருமையை,
கழிவிரக்கமாய் உரைப்பது தற்புகழ்ச்சி ஆகாது என்பது.
எனவே நான் சொல்லப்போகின்றவற்றைக் கொஞ்சம் கேளுங்கள்!
 
🏺  🏺  🏺
 
சிலாபத்தில் நாங்கள் வாழ்ந்த வசதியான வாழ்க்கை பற்றிப் பலதரம் சொல்லியிருக்கிறேன்.
அதை நிரூபிக்கும் இன்னொரு செய்தியை இவ்விடத்தில் சொல்கிறேன்.
தொண்ணூறு ரூபாய்க்குப் பவுண் விற்ற அந்தக் காலத்தில்,
பிள்ளைகளாகிய எங்கள் நால்வரின் 'பேத்டேக்கும்',
(அப்போது தங்கை பிறந்திருக்கவில்லை.)
அப்பா, ஆளுக்கு 50 ரூபா பணமும் தந்து,
ஒன்றரை அடி அகலச் சதுரமான எங்கள் பெயர் எழுதிய,
பெரியரோசாப் பூக் கொத்து வைத்த 'ஐசிங்கேக்கும்' வாங்கித்தருவார்,
அக் காலத்தில் அந்தக் 'கேக்கின்' விலை 20 ரூபா தான்.
 
🏺  🏺  🏺
 
செலவழிப்பதில் எங்கள் அப்பாவுக்கு நிகர் அப்பாதான்.
எங்கள் வீட்டு 'பிரிட்ஜில்' எப்போதும் 24 'கன்டோஸ் சிலாப்' அடங்கிய பெட்டி இருக்கும்.
'சிலாப்பை' தகடு என்று தமிழில் எழுதி உங்களைக் குழப்பாமல்,
அப்படியே ஆங்கிலத்தில் எழுதுவது நல்லது என்றுபட்டதால் எழுதியிருக்கிறேன்.
தமிழ்ப்பிரியர்கள் என்னை மன்னிப்பார்களாக!
ஒவ்வொரு நேர உணவின் பின்னும் நாங்கள் ஆளுக்கொரு 'சிலாப்' எடுத்து,
வாழைப்பழம் உரித்துத் தின்பது போல தனித்தனி உண்போம்.
வீட்டுக்கு முட்டை வாங்கி வருவதானால், 
ஒவ்வொரு முறையும் 100 முட்டைகள்தான் வாங்கிவருவார்.
நண்டு, இறைச்சி, இறால் என்பவற்றை அவர் வாங்கிவரும் தொகைகளைச் சொன்னால்,
ஒன்று 'சைவக்காரன் கதைக்கிற கதையைப்பார்!' என்பீர்கள்.
அல்லது 'அண்டப்புளுகன்' என எனக்குப் பட்டம் சூட்டுவீர்கள்.
அதுவும் இல்லாவிட்டால் 'ஆளைப் பார்த்தாலே அது தெரிகிறது' என்பீர்கள்.
நீங்கள்; என்னவும் சொல்லிவிட்டுப் போங்கள்! என்னைப் பொறுத்தவரை,
எங்களுக்கு அது ஒரு கனாக்காலம்.-அதைத்தான் சொல்லவந்தேன்.
 
🏺  🏺  🏺
 
அப்போதெல்லாம் 'டெலிபோன்' என்பது,
அபூர்வமாய் ஒருசில வீடுகளில் மட்டுமே இருந்தது.
மற்றையவர்கள், 'போஸ்ட் ஒபீசுக்குப்' போய்த்தான் 'கோல்' எடுக்கவேண்டும்.
அதுவும் வெளியூர் 'கோல்கள்' என்றால் 'கோல் புக்' பண்ணிவிட்டு,
மணித்தியாலக் கணக்கில் காத்திருக்கவேண்டும்.
'புக்' பண்ணுகிறபொழுதே எத்தனை நிமிடக் 'கோல்' என்பதையும் சொல்லி 'புக்' பண்ண வேண்டும்.
திடீரென 'போஸ்ட்; மாஸ்ரர்' 'நம்பர்' சொல்லிக் கூப்பிட்டு 'ரிசீவரைத்' தருவார்.
அவசர அவசரமாக நாம் பேசவேண்டும்.
குறித்த நிமிடம் முடிந்துவிட்டால் 'கோல்' தானாக நின்றுவிடும்.
திரும்பவும் பேசவேண்டுமானால் மேற்சொன்ன அத்தனை நடைமுறையும் மீண்டும் தொடரும்.
 
🏺  🏺  🏺
 
அப்பா, தன் வசதியால் எங்கள் வீட்டிற்கே 'டெலிபோன்' எடுத்திருந்தார். 
அப்போதெல்லாம் வெளிநாடுகளில் உறவு என்பது மிக அருமையாய் இருந்தது.
எனக்குத் தெரிந்து லண்டனுக்குப் படிக்கப்போன மோகன் மச்சான் மட்டும்தான்,
அப்போது எங்களுக்கிருந்த ஒரே வெளிநாட்டு உறவு.
எங்கள் வீட்டு 'போனி'லிருந்து அக்காலத்தில் வெளிநாட்டுக் 'கோல்' பேசியதாக ஞாபகமில்லை.
சிலாபத்தில் இருந்த நாங்கள், யாழ்ப்பாணத்தில் இருந்த,
பெரியமாமி வீட்டுக்கு மட்டும் 'டெலிபோன்' பேசுவோம்.
பெரியமாமி பற்றிய கட்டுரை,
என்னுடைய முன்னைய அதிர்வுகள் கட்டுரைத் தொடரில் இருக்கிறது.
மாமா 'எஞ்சினியராக' பெரிய பதவியில் இருந்ததால்,
அவர்கள் வீட்டிலும் 'டெலிபோன்' இருந்தது.
எப்போதாவது ஒருநாள் வீட்டில் இருந்தபடி,
'போஸ்ட்; ஒபீசில்' 'கோல்' பதிவு செய்து காத்திருப்போம்.
அரைமணி, ஒருமணி என நேரம் தாமதமாகும்.
'சரி சாப்பிடலாம்' என்று சாப்பிடத்தொடங்க, திடீரென 'போன்' அடிக்கும்.
சாப்பாட்டைப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு அப்பா ஓட,
அவருக்குப் பின்னால் நாங்களும் வரிசையாய் ஓடுவோம்.
 
🏺  🏺  🏺
 
அக்காலத்தில் இப்போது இருப்பது போன்ற கைபேசிகளெல்லாம் கிடையவே கிடையாது.
அம்மியும் குழவியும் போல 'போனும் ரிசீவரும்' 'வயர் கனெக்ஷனுடன்' தனித்தனி இருக்கும்.
அதன் பாரமே ஒன்று, ஒன்றரைக் கிலோ வரும்.
கொண்டு திரிந்து பேசுகிற வேலைகளையெல்லாம் நினைத்தும் பார்க்க முடியாது.
இப்போதைய காதலர்கள் கட்டிலில் படுத்தபடி 'பெட்சீற்றால்' தலைவரை மூடி,
பெற்றோர்க்குத் தெரியாமல் 'ஹான்போனில்' குசுகுசுத்துப் பேசுகிற வேலையெல்லாம்,
அப்போதைய 'போனில்' சாத்தியமேயில்லை.
தொண்டை கிழியும் வரை கத்திப்பேசினால்த்தான் மறுமுனையில் இருப்பவர்க்குக் கேட்கும்.
அதுவும் இடையிடையேதான்.
இங்கு இருந்து நாங்கள் கத்துகிற கத்து,
நேராக யாழ்ப்பாணத்திற்கே கேட்குமோ என எண்ணும் படியாக இருக்கும்.
பெரும்பாலும் 'ஹலோ' சொல்லிப் பலதரமாய்க் கூப்பிடுவதன் முன்னரே,
'புக்' பண்ணிய நேரம் முடிந்து போய்விடும்.
அதுமட்டுமில்லை, யாழ்ப்பாணத்திலிருந்து திடீரென வீட்டுக்குக் 'கோல்' வந்தால்,
ஒரு செத்தவீட்டுச் செய்தியை எதிர்பார்க்கும் பரபரப்பு வீட்டுக்குள் தொற்றிக்கொள்ளும்.
இந்த அளவுக்கு 'டெலிபோன் கோல்' அருமையிலும் அருமையாக இருந்தது.
அந்த விடயத்தில், ஓர் ஐம்பது வருட வித்தியாசத்திற்குள் நிகழ்ந்திருக்கும்,
தற்போதைய மாற்றத்தை நான் உங்களுக்குச் சொல்லத்தேவையில்லை.
நினைத்துப் பார்க்கப் பெரிய ஆச்சரியமாய் இருக்கிறது.
 
🏺  🏺  🏺
 
அப்போது நாங்கள் சிலாபத்திலிருந்து,
குருநாகல் அல்லது கொழும்புக்குச் சென்றுதான் யாழ்ப்பாண ரயிலைப் பிடிக்கவேண்டும்.
பெரும்பாலும் அப்பா வாடகைக் கார் பிடித்து எங்களைக் குருநாகல் கொண்டுபோய் ஏற்றிவிடுவார்.
அதுகூட அம்மாவும், நாங்களும் தனியே போவதானால்த்தான்.
அப்பாவும் எங்களுடன் வருவதானால் நேராக வாடகைக் காரிலேயே யாழ்ப்பாணப் பயணம் நடக்கும்.
சிலாபத்திலிருந்து யாழ் செல்ல அப்பொழுது ஒரு வாடகைக் காருக்கான செலவு 250 ரூபாதான்.
அப்போதைய கார்களில் 'ஏசி' என்ற பேச்சுக்கே இடமில்லை.
கண்ணாடியைப் பதித்துவிட்டு காற்றோட்டமாகக் காரில் சென்ற 'குசி',
இப்பொழுதும் நினைவில் இருக்கிறது.
யாழ்ப்பாணம் போய் இறங்கியதும் 'அண்ணைக்கு காசு கூடிப்போச்சுது போல' என்று,
பெரியமாமியின் பேச்சு ஒவ்வொரு முறையும் எங்களை வரவேற்கும்.
 
🏺  🏺  🏺
 
எப்போவாவது அப்பாச்சியும், மாமிமார் குடும்பமும் விடுமுறை கழிக்க சிலாபத்திற்கு வருவார்கள்.
மதிய உணவுக்காக ஐயா எல்லோரையும் கொழும்புக்கு அழைத்துச் செல்வார்.
அப்போது 'மருதானையில்' இருந்த 'புகாரி' ஹோட்டல்தான்,
அப்போது கொழும்பில் பெரிய ஹோட்டலாய்க் கருதப்பட்டது.
அது ஒரு இஸ்லாமிய ஹோட்டல்.- அசைவ 'புரியாணி'க்குப் பெயர் போனது.
அப்பா, முன்னரே எத்தனைபேர் வருவோம் என்று 'புக்' பண்ணிவிடுவார்.
அங்கு, எங்களுக்காக பெரிய அறை ஒன்று ஒழுங்கு செய்து வைக்கப்பட்டிருக்கும்.
ஒரே கொண்டாட்டம் தான்.
 
🏺  🏺  🏺
 
தட்டுத்தட்டாக கோழி புரியாணி, முட்டை, இறால், மீன் என,
கொண்டு வந்து குவிப்பார்கள்.-அப்பா காசைப் பற்றிக் கவலையே படமாட்டார்.
அப்பாச்சியும் பெரியமாமியும் உணவுகளைப் பங்கிட்டுத்தர நாங்கள் வெளுத்து வாங்குவோம்.
உணவின் பின் 'ஐஸ்கிறீம்' வகைகள் வரும். - அங்கு அதிசயமான ஒரு கோப்பியும் தருவார்கள்.
பெரிய கண்ணாடி 'கிளாஸில்' கீழே கோப்பி 'டிகாசன்' தனியே நிற்க,
மேலே பால் தனியே பிரிந்து அர்த்தநாரியாய்க் காட்சி தரும்.
பார்க்கும் போதே அதன் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.
எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் அப்பாச்சி வீட்டுப் பழக்கத்தில்,
தட்டுகளை ஒழுங்காக்கி மேசையைச் சுத்தம் பண்ணத் தொடங்கி,
அப்பாவிடமும் மாமியிடமும் பேச்சு வாங்குவார்.
இன்று அப்பா, அப்பாச்சி, மாமி யாரும் இல்லை.
ஆனால் அன்றைய நினைவுகள் மட்டும் பசுமையாக உள்ளத்துள் இருக்கின்றன.
 
🏺  🏺  🏺
 
இப்போதைய பிள்ளைகளுக்கு 'கே.எப்.சி'யும், 'பீட்சா'வும்,
நின்று தின்னும் நித்திய விருந்தாகிவிட்ட நிலையில்,
உறவு சூழ்ந்திருந்து உண்ட அன்றைய விருந்தின் அருமை தெரிய வாய்ப்பேயில்லை.
ஐம்பது வருட மாற்றத்தின் அநியாய விளைவு இது.
 
🏺  🏺  🏺
 
இன்னொரு செய்தியை மட்டும் சொல்லி,
கட்டுரையை முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.
நாங்கள் சிலாபத்தில் இருந்த காலத்தில்தான்,
அந்த ஊருக்கு 'டேப்றெக்கோடர்' முதல்முதலில் வந்தது.
எங்கள் வீடுதான் அந்தப் பாக்கியத்தை அங்கு முதன்முதலில் பெற்றுக் கொண்டது.
இப்பொழுது போல 'சிடி' என்ற வடிவம் வராத காலமது.
இரண்டு பக்கம் இரண்டு கண்ணாடிச்; உருளைகள் இருக்கும்.
ஒன்றில் இருக்கும் நாடாவை இழுத்து மற்றதில் சொருகவேண்டும்.
அந்தச் உருளைகளுக்கு 'ஸ்பூல்' என்று பெயர்.
 
🏺  🏺  🏺
 
அப்பா முதல் முதல் புதிய 'டேப்றெக்கோடரை' வீட்டுக்குக் கொண்டுவந்த அன்று,
எங்கள் வீடு பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளுள் அடக்க முடியாது.
முதலில் அது என்ன சாமான் என்றே எங்களுக்குத் தெரியவில்லை.
அம்மாவையும் எங்களையும் அழைத்து அந்தக் கருவிக்குப் பக்கத்தில் அமரவைத்த அப்பா,
ஆளுக்கொரு பாட்டுப்பாடும்படி உத்தரவிடுகிறார்.
அன்றைக்கு அம்மா பாடிய பாடல் இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கிறது.
'ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு 
ஒன்று அன்னை தந்தது ஒன்று காவல் நின்றது 
ஒன்று கண் மலர்ந்தது, கண் மலர்ந்தது'
சென்ற வருடம் அம்மா மரணப்படுக்கையில் கிடந்தபோது,
அவருக்குப் பக்கத்தில் இருந்து அந்தப் பாடலைப் பாடினேன்.
அவர் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கியது.
 
🏺  🏺  🏺
 
எண்ணங்கள் எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன.
அப்பா ஏன் எங்களைப் பாடச்சொன்னார் என்று எங்களுக்குத் தெரியவேயில்லை.
நாங்கள் எல்லோரும் பாடி முடித்தபிறகு,
அப்பா அந்தக் கருவியில் எதையெதையோ தட்டுகிறார்.
திடீரென நாங்கள் பாடிய பாடல்கள் அந்தக் கருவிக்குள் இருந்து ஒலிக்கத்தொடங்குகின்றன.
நாங்கள் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிட்டோம்.
நாங்கள் சென்றதென்ன? அன்று மாலையே வேறொரு புதினம் நடந்தது.
 
🏺  🏺  🏺
 
எங்கள் அப்பாவுக்கும் சைவத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை.
ஆனாலும் அப்பாவின் வசதியைத் தகுதியாய் வைத்து,
முனீஸ்வரம் கோயிலுக்கான சைவமகா சபைக்கு அப்பாவைத் தலைவராக்கி இருந்தார்கள்.
அன்று மாலை அந்த சபையின் கூட்டம் எங்கள் வீட்டில் நடந்தது.
அப்பா அந்தக் கருவியைக் கூட்டம் நடக்கும் இடத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டார்.
வந்தவர்கள் அது 'றேடியோ' என நினைத்து அதனைக் கவனிக்கவில்லை.
கூட்டத்தில் பல விடயங்களும் பேசப்பட்டன.
கூட்டம் முடிந்து சிற்றுண்டிகள் பரிமாறிக் கொண்டிருந்த பொழுது,
அப்பா அதன் 'சுவிச்சை'த் தட்டிவிட,
அதுவரை அவர்கள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் மீளவும் ஒலித்தது.
கூட்டத்தில் இருந்தவர்கள் அன்றுபட்ட ஆச்சரியத்தை நீங்கள் பார்த்திருக்கவேண்டும்.
எங்களுக்குச் சைவம் படிப்பித்த சுப்பிரமணியம் என்ற ஆசிரியர்,
ஆச்சரியத்தின் எல்லையில் எழும்பி ஓடித்திரியத் தொடங்கிவிட்டார்.
(அவர் பற்றியும் தனிக்கட்டுரை எழுத இருக்கிறேன்.)
 
🏺  🏺  🏺
 
இன்றைக்குச் சின்னக்குழந்தையும் டெலிபோனை கையில் வைத்துக் கொண்டு,
அதற்குள்ளேயே தொலைக்காட்சி, டெலிபோன், டேப்றெக்கோடர், கேம்ஸ் என,
சர்வசாதாரணமாக இயக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு,
அந்த ஞாபகங்கள்தான் நினைவுக்கு வரும்.
ஐம்பது வருடங்களுக்குள் எத்தனை மாற்றங்கள்.
விரும்புகிறோமோ இல்லையோ மாற்றங்களை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
வெறுமனே பழமை பேசி என்ன பயன்?
 
🏺  🏺  🏺
 
நம் நாட்டுத் தலைவர்களோ,
ஒருநாளுக்கு, ஆளுக்கு 3000 ரூபா உணவை உண்டு கொண்டு,
சான்றுகள் இல்லாத 1000 வருடத்திற்கு முந்திய வரலாற்றை வைத்து,
மூத்தகுடி தமிழ்க்குடியா? சிங்களக்குடியா? எனப் போராடிப் பகை வளர்க்கிறார்கள்.
ஐம்பது வருட காலமாற்றம் சொல்லியிருக்கிறேன்.- ஆயிரம் வருட காலமாற்றம்?
நினைத்தேனும் பார்க்கமுடியுமா?
வேடிக்கை மனிதர்கள்!
 🤣
 
🏺  🏺  🏺
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்