பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 08: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-
ஆலயங்களில் பஞ்சாமிர்தம் போடுகிறார்களே. அதுபற்றி உங்களுக்கு ஏதாவது விபரம் தெரியுமா?
பதில்:-
என்ன கிண்டலா? 'இதுதான் உமக்குரிய விடயம்' என்று 
சொல்லாமல்ச் சொல்ல வருகிறீர்களா? தாராளமாய்ச் சொல்லிவிட்டுப் போங்கள். 
இதுவும் எனக்குரிய விடயம் தான்!
'குமாரதந்திரம்' என்கின்ற ஆகம நூலின் 21 வது படலத்தில் 
பஞ்சாமிர்த விதி என்ற ஒன்று சொல்லப்படுகிறது.
அதில் வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், மாதுளம்பழம், இளநீர் எனும் 
ஐந்தும் சேர்ந்தவையே பஞ்சாமிர்தம் என்று எழுதியிருக்கிறார்கள்.
ஐந்து பொருட்கள் சேர்ந்திருப்பதாலேயே பஞ்சாமிர்தம் என 
அதற்குப் பெயர் வந்தது. 
ஆனால் இப்போது நம் ஆலயங்களில் 
அப்பிள், பேரீச்சம்பழம், விளாம்பழம் எனப் பலதையும் சேர்த்தே
நம்மவர்கள் பஞ்சாமிர்தம் செய்கின்றனர். 
பஞ்சாமிர்தம் 'றிச்' சாக இருக்கவேண்டுமாம். 
நல்ல கூத்துத்தான் போங்கள்! 
இப்போது கோயில்களில் நடப்பதெல்லாம் 'புறூட்சலட்' அபிஷேகம் தான்.
கேட்டால் 'புதியன புகுதல்' என்பார்கள். 
அப்படியானால் பிரமாண நூல்களை 
இனி, குப்பையில் தூக்கிப் போடவேண்டியதுதான்.
         

🤭உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'சாமிக்குக் கொத்துரொட்டி படைக்காதவரைக்கும் சரிதான்.'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை சம்பந்தமான பிரேரணையை அங்கத்துவநாடுகள் ஆதரிக்கவேண்டுமெனக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விடுத்த வேண்டுகோளைத் தாங்கள் ஏற்கவில்லை எனவும், அப்பிரேரணையோடு தமக்கு உடன்பாடில்லை எனவும், தம்மோடு ஆலோசிக்காமல்த்தான் அந்தக் கோரிக்கையை அவர் வெளியிட்டுள்ளார் எனவும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 'ரெலோ' அடைக்கலநாதன் ஊடகங்களூடு விடுத்த கண்டனச் செய்தியைக் கேட்டீர்களா? 

பதில்:-
இவருக்கு இதே வேலையாய்ப் போய்விட்டது. 
இந்த ஒப்பாரியைக் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது. 
தமிழரசுக்கட்சி உலக 'ஒப்பாசாரத்திற்காக' 
வேண்டா வெறுப்பாய் சாப்பிட உட்காருங்கள் என
'முழங்கையில் பிடித்து இழுப்பதைத்' தெரிந்து கொண்டும்
பலகாலமாக இவர்கள் இதே முறைப்பாட்டை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
தாம் மதிக்கப்படவில்லை என்பது தெரிந்தால் வெளியேற வேண்டியது தானே! 
வெளியேறத் தயங்குவதிலிருந்து இவர்களும் ஏதோ இலாபம் கருதித்தான்
தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறதல்லவா.
'கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி தனக்குத் தரப்படாவிட்டால் 
கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவேன்' என 
சிலநாட்களுக்கு முன்பு அடைக்கலநாதன் பகிரங்கமாக அறிக்கை விட்டிருந்தார். 
இன்றுவரை அவருக்கு அந்தப்பதவி கிடைத்ததாயும் தெரியவில்லை, 
அவர் கூட்டமைப்பைவிட்டு வெளியேறியதாயும் தெரியவில்லை. 
சபையில் சாப்பாடு காலியாகிவிட்டது என்பதை 
தமிழரசுக்கட்சி பலதரம் குறிப்பால் இவர்களுக்கு உணர்த்திவிட்டது.
பாவம், இவர்கள் தமக்குப் போட்ட இலையில் ஓட்டை இருக்கிறது என்று 
இன்னும் முறைப்பாடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்றமுறை அரசுக்குச் சொன்ன அதே செய்தியைத்தான் 
இவர்களுக்கும் சொல்லவேண்டியிருக்கிறது. 
தேவை இல்லாமல் நிமிர்ந்து காட்டக் கூடாது.
நிமிர்ந்தபின்பு தாழ்ந்து போகக் கூடாது. 
இவை இரண்டாலும் மானம் போய்விடும். 
பெரும்பாலும் இவர்களுக்கு அது போய்விட்டதாகவே கருதவேண்டியிருக்கிறது.

😡உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'தெய்வம் தந்த வீடு 'வீதி' இருக்கு' 
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
தமிழ்நாட்டு தேர்தல்களம் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதிமையம், நாம் தமிழர் கட்சி என்பவற்றின் நான்குமுனைப் போட்டியால் சூடுபிடித்திருக்கிறதே. உங்கள் வாக்கு யாருக்கு? (வாக்குரிமை இருக்குமாயின்)
 
பதில்:-
ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க எந்தக் கட்சி உண்மையாய் முன் வருகிறதோ 
அந்தக் கட்சிக்குத்தான் நான் வாக்களிப்பேன்.
 
  • அ.தி.மு.க. மத்திய அரசின் கைப்பொம்மை. அவர்களால் சுயமானமுடிவு எதனையும் எடுக்க முடியாது. எடுக்க முடிந்திருந்தால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பிறகும் ராஜீவ்காந்தியின் கொலையோடு சம்பந்தப்பட்டதாய்ச் சொல்லப்படும் எழுவரையும் விடுவித்திருக்கமாட்டார்களா? ஆகவே அவர்களுக்கு என் வாக்கு இல்லை!
     
  • முன்பு மத்திய அரசை மிரட்டுகிற அதிகாரம் இருந்தபோது அவ்வதிகாரத்தை வைத்துத் தம்குடும்பத்தார்க்குப் பதவிகள் வாங்கியதன்றி வேறெதுவும் செய்யாமல், கதறக்கதற ஈழத்தமிழர்கள் கொல்லப்படுகையில், வெறுமனே பெயருக்கு அரைநாள் உண்ணாவிரதம் இருந்துவிட்டு நம்மவரைச் சாகவிட்ட கட்சிதான் தி.மு.க. ஆகவே அவர்களுக்கும் என் வாக்கு இல்லை!
     
  • சீமான் உணர்ச்சி பொங்க நன்றாகத்தான் பேசுகிறார். அவ்வளவுதான்! அவர் பேச்சில் சத்தியம் இல்லை. சில காலங்களுக்கு முன்பு அகதியாய் அங்கு வந்த ஓர் ஈழப்போராளிப் பெண்ணைத்தான் தான் திருமணம் செய்வேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர் பிறகு எம்.ஜி.ஆர் அரசில் அமைச்சராய் இருந்த  காளிமுத்து அவர்களின் புதல்வியை வசதி கருதி திருமணம் செய்து கொண்டார். அதனால் அவர் பேச்சில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே அவருக்கும் எனது வாக்கு இல்லை!
     
  • பெரிய ஞானியர்கள் தோன்றிய தமிழ்நாட்டு மண்ணில் கடந்த அரைநூற்றாண்டாக நாத்திகத்தை வளர்த்துச் சேதம் செய்த திராவிடக் கட்சிகள் இப்போது வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மெல்ல, மெல்ல ஆன்மீகப் பாதைக்கு மாறத்தொடங்கிவிட்டன. இந்நிலையில்  பிராமணக்குடும்பத்தில் பிறந்தும் இறைநம்பிக்கையையும்ஒழுக்கத்தையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் இதுவரை வாழ்ந்துவந்த (வாழ்ந்தவருகிற) கமலஹாசனை நம்பி எப்படி வாக்களிப்பதாம்?அவர் அளவுக்கதிகமாகப் புத்திசாலித்தனம் பண்ணுகிறார். அதி புத்திசாலிகள் நேர்மையாளர்களாய் இருப்பது கடினம். அதனால்மக்கள் நீதி மையக்கட்சிக்கும் நான் வாக்களிக்கப் போவதில்லை!
நிறைவாக ஒன்று! இத்தலைவர்கள் ஈழத்தமிழர்களை ஏமாற்றினால் பரவாயில்லை. 
தமது மக்களையேனும் ஏமாற்றாமல் இருந்தால் சரிதான்!
😛உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
கொரோனாத் தடுப்பூசிபற்றி முன்பு பல ஐயங்களைக் கிளப்பியிருந்தீர்கள். இப்போது நீங்களும் அதனைப் போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். உண்மையா?
பதில் :-
வேறு வழி? 'ஊரோடு ஒத்தோடு' என்று பழமொழியும் சொல்கிறதே.
படித்தமனிதர்கள் எல்லோரும் பெரும்பாலும் போட்டுவிட்டார்கள். 
ஊசியால் பிற்காலத்தில் ஏதாவது பாதிப்பு வருமானால் 
உலகில் உள்ள பெரும்பான்மையான படித்தவர்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். 
நான் மட்டும் போடாமல் இருந்து அப்பாதிப்பிலிருந்து தப்பினால் 
என்னைப் படிக்காத மனிதன் என்று சொல்லிவிடமாட்டார்களா? 

😒உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'ஓகோ! இப்படியும் ஒரு நியாயம் இருக்கிறதோ? 
        ஊசி போட மறுத்த பல பேராசிரியர்கள் இதைக் கேட்டுவிட்டு 
        ஊசி போட ஓடப் போயினம்.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:-
சர்வதேச நீதிமன்றத்திடம் இலங்கையைப் பாரப்படுத்த முடியாது என்று பிரிட்டன் வெளிப்படையாகக் கூறிவிட்டதே. 
பதில் :-
இதைத்தான் சுமந்திரன் தலைதலையாய் அடித்துப் பலதரம் சொன்னார். 
மக்களின் உணர்ச்சியைக் கிளறி இலாபம் அடைவதற்காகவும் 
சுமந்திரனைக் குற்றவாளியாய்க் காட்டுவதற்காகவும்தான்
சட்டம் படித்த முன்னாள் முதலமைச்சரும் கஜேந்திரகுமாரும் 
அந்தப் பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  
நம்மவர்க்கும் உண்மையைவிடப் பொய்தான் அதிகம் பிடிக்கிறது. 
அதனால்த்தான் இத்தனை அழிவுகளை நாம் கண்டோம். 
ஐ.நா. பாதுகாப்புச்சபையில் 'வீட்டோ' அதிகாரத்துடன் இருக்கும் 
ஐந்து நாடுகளில் ஒருநாடுதானும் மறுக்கும் பட்சத்தில், எந்த நாட்டையும் 
சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியாது என்பது வெளிப்படை. 
அந்த ஐந்து நாடுகளில் சீனாவும் ஒன்று. 
அதற்குமேல் இதுபற்றிப் பேசவும் வேண்டுமா? 
இனி, இலங்கையை எப்படி சர்வதேச நீதிமன்றத்திடம் 
கொண்டுபோகப் போகிறார்கள் என்பதைப் பற்றி 
இந்த இரண்டு பெரிய மனிதர்களும் (?) மக்களுக்குச் சொல்வார்களா?

🙏உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்குத்தான்.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 06:-
இந்தமுறையும் ஐ.நா. சபையில் தோற்றுவிடுவோம் போல் தெரிகிறதே?
பதில் :-
பெரும்பாலும் அப்படித்தான் இருக்கப் போகிறது.
அதற்கான காரணங்கள் பல. 
ஈழத்தமிழர்களுக்கு இன்னும் நல்லவிதி வராதது.
இத்தனை அழிவின் பின்னும் நம் தலைவர்கள் சுயநலத்தால் ஒன்றுபடத் தயாராய் இல்லாதது.
யதார்த்தம் அறியாமல் நம்மக்கள் கற்பனையிலேயே காலம் கடத்துவது.
உருப்படியாய்ச் சிந்திக்கின்ற தலைவர்களைச் சுதந்திரமாய்ச் செயற்படவிடாதது.
நம் இனத்தில் ஏமாற்ற நினைக்கும் தலைவர்களும் ஏமாற நினைக்கும் மக்களும் தொடர்ந்து இருப்பது.
இப்படிப் பல சொல்லலாம். 'செய் அல்லது செய்யவிடு!' என்று 
பொய்மைத் தலைவர்களை நோக்கி 
நம் தமிழினம் எப்போது துணிந்து சொல்லப் போகிறதோ, 
அன்றுதான் நம் இனம் உருப்படும்.
 
🤠உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 அப்ப இந்தமுறையும் 'அம்பேல் தானா?'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்