பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 09: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-
இந்த நூற்றாண்டின் பெரிய அதிசயமாய் வெளிக்கிரகவாசிகளின் தொடர்புதான் இருக்கப் போகிறது என்று முன்பு பதில் சொல்லியிருந்தீர்கள். இதுபற்றிச் சொல்ல நீங்கள் என்ன விண்வெளி ஆராய்ச்சியாளரா? அறிவியல் சார்ந்த இந்த விடயத்தையும் உங்கள் இராமாயணம் என்று நினைத்துவிட்டீர்களா? 
பதில்:-
விஞ்ஞானம் படித்தவன் தமிழ் பற்றிப் பேசினால் எல்லோரும் புகழ்கிறீர்கள். 
தமிழ் படித்தவன் விஞ்ஞானம் பற்றிப் பேசினால்த்தான் 
உங்கள் எல்லோருக்கும் கோபம் வருகிறது. 
இப்போதான் உலகத் தகவல் களஞ்சியமான
'இணையம்' நம் கையில் இருக்கிறதே! 
அதற்குள் சென்றால் அவரவர் தத்தமக்கு விருப்பமான துறைகளில் 
அடி வேரிலிருந்து நுனி இலைவரையும் விடயங்களைத் தேடமுடிகிறது. 
வெளிக்கிரகவாசிகள் பற்றிய செய்திகளும் 
அங்கு தாராளமாய்த் தமிழிலும் பதிவாகியுள்ளன. 
அங்கிருந்துதான் மேல் விடயம் சம்பந்தமான செய்திகள்பற்றி 
நான் அறிந்து கொள்கிறேன். 
அச்செய்திகள் பெரும் ஆச்சரியம் ஊட்டுவனவாய் இருக்கின்றன.
வெளிக்கிரகவாசிகள் பற்றிய பல செய்திகளும் தரவுகளும் சான்றுகளும் 
ஏற்கனவே நம் பூமிக்கு நிறையவே கிடைத்துவிட்டனவாம். 
வழமையான தம்முடைய மேலாதிக்கப் போக்கின்படி 
வல்லரசுகள் அச்செய்திகளைத் தமதாக்கிக் கொண்டு 
உலகிற்கு வெளியிடாமல் வைத்திருக்கின்றனவாம். 
வெளிக்கிரகவாசிகளை ஆங்கிலத்தில் 'ஏலியன்கள்' என்கிறார்கள். 
(ஆங்கிலம் தானா?) ஏலியன்களில் ஓரிருவரை 
நம்மவர்கள் பிடித்து வைத்திருப்பதாகவும், 
வெளிக்கிரகவாசிகளோடு தொடர்பினை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூட 
ஊகச்செய்திகள் பல வெளியாகியிருக்கின்றன.
அதுபோலவே நமது பூமியைச் சார்ந்த மனிதர்களையும் 
வெளிக்கிரகவாசிகள் இங்கு வந்து பிடித்துச் செல்கிறார்கள்
என்றும் சொல்லப்படுகிறது. 
உலகில் ஒவ்வோர் ஆண்டும் காணாமல் போவோர் தொகையில்
கணிசமான அளவினர் எப்படிக் காணாமல் போகின்றனர் என்பது பற்றி 
ஒருவருக்கும் தெரியாமலே இருப்பதாய் ஆய்வுகள் கூறுகின்றன. 
அத்தகையவர்களும் ஆங்காங்கே  ஏலியன்களால்த்தான் 
பிடித்துச் செல்லப்படுவதாகவும் ஆய்வாளர்கள் மத்தியில் ஒரு கருத்து உண்டு. 
(இலங்கை அரசுக்கு இது தெரிந்தால், காணாமல் போனவர்களை 
ஏலியன்கள்தான் பிடித்துச் சென்றுவிட்டனர் என்று சொல்லிவிடப் போகிறார்கள்.) 

சில ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான பயணிகளுடன் காணாமல் போய், 
இன்றுவரை எதுவித செய்தியும் தெரியாமல் இருக்கின்ற 
மலேசிய விமானத்தைக் கூட வெளிக்கிரகவாசிகள்தான்
கடத்திச் சென்றுவிட்டதாகவும் சில அறிஞர்கள் 
சத்தியம் பண்ணிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் இப்படி எத்தனையோ சொல்லலாம். 
'ஹிலாரி கிளிங்ன்டன்' அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் நின்றபோது
தான் வெற்றிபெற்றால் வெளிக்கிரகவாசிகள் பற்றிய செய்திகளை 
வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.
(அதனால்த்தான் தோற்றாரோ என்னவோ?) 

நமது பூமியை ஏலியன்களுடைய கரங்கள் சுற்றி வளைக்கத் தொடங்கிவிட்டன 
என்பது மட்டும் உண்மை.
திடீர் திடீரெனப் பூமியைத் தாக்கும் 
எயிட்ஸ், கொரோனா போன்ற கிருமிகள் கூட
வெளிக்கிரகவாசிகளின் உபயமாயும் ஏன் இருக்கக் கூடாது? 
என்ற கேள்வியும் எழுகிறது.
(இச்செய்தியால் சீனா மகிழ்ந்து எனக்கு விருதளிக்கவும் வாய்ப்பிருக்கிறது.) 

உங்களுக்கு ஒன்று தெரியுமா?
நமது சங்க இலக்கியக் காலத்திலிருந்தே 
தமிழ் இலக்கியங்களில் 'ஏலியன்கள்' பற்றிய செய்திகள் பல பதிவாகியிருக்கின்றன. 
அதை நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?
         

🤭உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'அட! குடுமியர் அடிச்சார் பார் ஒரு சிக்ஸர்!'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
இந்தியத்தூதரின் வடக்குக் கிழக்குப் பயணம்பற்றிப் பேரினவாதிகள் பலர் கொதிக்கின்றார்களே?

பதில்:-
பிராந்தியத்தில் இந்தியா பெற்றிருக்கும் பலத்தால் 
வந்த அதிகாரத்தைத் தூதர் காட்டுகிறார்.
அதைப் பார்த்துப் பிழையென்று கொதிக்கும் பேரினவாதிகள் 
இலங்கை அளவில் தம் அதிகாரத்தை வைத்து 
சிற்றினத்தார்க்கு தாம் செய்த அதிகார மீறல்களை நினைத்துப் பார்க்க வேண்டும். 
'வலியார் முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லுமிடத்து' என்ற 
வள்ளுவரின் ஆலோசனையை இவர்களுக்கு யாரும் சொல்ல வேண்டும்.

😡உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன்குடமா?'
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
வேலன்சுவாமி இல்லாத அரசியல் ஊர்வலங்களும் கூட்டங்களும் இல்லை எனும்படி ஆகிவிட்டதே. அவர் அரசியலில் நிலைக்கப் போகிறாரா? ஆன்மீகத்தில் நிலைக்கப் போகிறாரா?

பதில்:-
இரண்டிலுமே நிலைக்காமல் விட்டுவிடப் போகிறார் 
என்பதுதான் என் கவலை.
 
😛உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
அம்பிகா செல்வகுமாரின் லண்டன் உண்ணாவிரதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :-
நினைக்கிற அளவுக்குப் பெரிதாய் ஒன்றும் நடக்கவில்லை. 
கோரிக்கை வைத்து ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதம்
அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலே முடிந்திருக்கிறது. 
வெறும் உணர்ச்சிவயப்பாட்டால் நடந்த செயற்பாடு. 
உண்ணாவிரதம் என்பது இலேசான விடயமில்லை.
அது உடல்பலத்தால் நிகழ்த்தப்படுவதன்று ஆன்மபலத்தால் நிகழ்த்தப்படுவது. 
எல்லோரும் காந்தியாகிவிட முடியாது. 
விளம்பரத்திற்கு மட்டுமே அம்மையாரின் உண்ணாவிரதம் பயன்பட்டிருக்கிறது. 
ஆனாலும் இத்தனை நாள் பசிதாங்கிய 
அம்மையாரின் இனப்பற்றை மட்டும் பாராட்டலாம்.

😒உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'சோழியள் குடுமி ஒன்றும் சும்மா ஆடவில்லையாக்கும் ஹி..ஹி..'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:-
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கமுடியுமென்றால் பசில் ராஜபக்ஷவை ஆதரிப்போம்  எனச் சுமந்திரன் பேசியது பற்றி?
பதில் :-
இதுவரை பேரினத்தார்தான் 'மித்திரபேதம்' செய்து 
எம்மைப் பிரித்தாண்டார்கள். 
இப்பொழுது துணிந்து சுமந்திரன் அந்த வேலையை 
அவர்களுக்குள் செய்யப் பார்க்கிறார் போல. 
இது அவரது சொந்த முடிவா? அல்லது பெரிய இடங்கள் ஏதும் சொன்ன முடிவா? 
யார் அறிவார் பராபரமே!

🙏உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'அவர் என்ன செய்தாலும் இவர் பாராட்டத்தான் செய்வார்.'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 06:-
காணி ஆவணங்களை மின்சாரத்தை நிறுத்தி யாழிலிருந்து அனுராதபுரம் கொண்டுபோகப்பட்டதன் இரகசியம் என்ன?
பதில் :-
இரகசியத்திற்கு இதில் எங்கே இடம் இருக்கிறது? 
வெற்றுக் காணிகளை இனங்கண்டு 
வேற்றவரை இங்கே குடியமர்த்த நினைக்கிறார்கள் என, 
பலரும் சொல்லியிருக்கிறார்கள். 
மின்சாரம் நிறுத்திய கதையில் எனக்கு நம்பிக்கை இல்லை. 
எந்த அட்டூழியத்தையும் எவருக்கும் பயப்படாமல் செய்து வரும் அவர்கள் 
இந்தச் சிறிய காரியத்திற்கா இவ்வளவு முன் ஜாக்கிரதை பண்ணுவார்கள்? 
அது 'குருடன் பெண்டிலுக்கு அடித்த கதையாக'த்தான் இருக்கும் என்று நம்புகிறேன். 
கடந்த 30 ஆண்டுப் போர் அழிவின் அனுபவத்தை 
நம்மவர்கள் மட்டுமல்ல அவர்களும் இன்னும் பெறவில்லை என்றே தோன்றுகிறது. 
 
🤠உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'பகைவர்களை அழித்தவர்களுக்குப் பகையை அழிக்கத்         தெரியவில்லையே.'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 06:-
கொரோனா தடுப்பூசியால் பலபேருக்கு இரத்தம் உறைகிறதாமே?
பதில் :-
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதாலேயே
பல பேருக்கு இரத்தம் உறையப் போகிறது. 
 
🤠உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'மரத்தால விழுந்தவன மாடேறி மிதிச்ச கதைதான்....'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்