பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 10: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-
தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றியும் தனிஈழம் அமைப்பது பற்றியும் சொல்லியிருப்பதைப் பார்த்தீர்களா?​ 

பதில்:-
பார்க்காமல் என்ன? அ.தி.மு.க வெறுமனே சுழலும் பம்பரம்தான். 
தேர்தலில் அதனோடு கூட்டுச் சேர்ந்திருக்கும் பாரதீய ஜனதாக்கட்சிதான் 
அதனைச் சுழற்றிவித்துக் கொண்டிருப்பதாய், அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். 
எனவே மேற்கருத்தை இந்திய அரசின் கருத்தாகவே கொள்ள வேண்டும். 
இதனை நம் ஆட்சியாளர்கள் விளங்கியிருப்பார்கள். 
அதனால் இந்திய அரசை, சமாதானம் செய்யும் முயற்சிகள் 
திரைக்குப் பின்னால் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். 
அம்முயற்சிகள் வென்றதா? இல்லையா? என்பதை 
ஐ.நா. மனிதஉரிமைகள் சபையில் 
இந்தியா எடுக்கப்போகும் நிலைப்பாட்டில் இருந்துதெரிந்து கொள்ளலாம். 
நீங்கள் இதனைப் படித்துக் கொண்டிருக்கும்போது
அந்நிலைப்பாடு தெரியவந்திருக்கும். 
எது எப்படியோ? தேவையேற்பட்டால் தமிழ்நாட்டின் உணர்வைக் காரணம் காட்டி
மீண்டும் நம் நாட்டினுள் நுழையும் சுருக்குக் கயிற்றை 
இந்தியா இன்னும் தன் கைவசம் வைத்திருக்கிறது என்பதை 
நம் ஆட்சியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 
இந்தியாவின் சுருக்குக் கயிற்றில் 
நம்மவர்கள் மீண்டும் சிக்கப்போகிறார்களா? இல்லையா? என்பதை 
விரைவில் காலம் நமக்கு உணர்த்தும்.
         

😝உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 இடையன்ட கையில கயிறு கிடப்பது தெரியாமல் 
        தன் இஷ்டத்துக்குத் துள்ளின ஆட்டிட கதைதான் போல..
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
பதினைந்து பேரின் உயிரைப் பலிகொண்ட பசறை பஸ் விபத்துக் காட்சியைப் பார்த்தீர்களா? அந்த விபத்திற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
 
பதில்:-
பார்க்காமல் என்ன? உஉவஎ கமராக்களின் உபகரிப்பால் 
இத்தகைய அநியாயக்காட்சிகள் பலவற்றைப் பார்க்கவேண்டியிருக்கிறது. 
பலபேர் அக்காட்சிகளை ரசித்து வேறு பார்க்கிறார்கள். 
மனித மனங்கள் வக்கிரப்பட்டுவிட்டன. 
முகப்புத்தகத்தைத் தட்டுகிறபொழுது தற்செயலாய் அக்காட்சியைப் பார்க்கவேண்டி வந்தது. 
எதிரில் வந்த வாகனத்தை வந்த வேகத்தோடு தாண்ட முனைந்து 
அந்த பஸ் பாதாளத்தில் கவிழ்ந்த காட்சியைப் பார்த்துப் பதறிப்போய்விட்டேன். 
எத்தகைய கொடுமை. 
அவ்விபத்திற்கு, பாதையில் விழுந்து கிடந்த பாறைதான் காரணம் என்றும், 
ஓட்டுனரின் அக்கறையீனம் தான் காரணம் என்றும் 
பலரும் பல காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 
எனக்கென்னவோ விதிதான் அவ் விபத்தின் காரணம் என்று தோன்றுகிறது. 
இல்லாவிட்டால் அந்த பஸ்ஸைத் தவறவிட்ட தம்பதியர்கள்  
ஓட்டோபிடித்து துரத்தி வந்து அதனுள் ஏறி விபத்தில் இறந்திருப்பார்களா? 
விதி வலியது!

🤣உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 ஐயாவுக்கு அடுத்த பிரசங்கத்துக்கு விஷயம் கிடைச்சுப்போச்சு போல....
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை வென்றால் அல்லது தோற்றால் அதன் பாதிப்பு நம் நாட்டைப் பொறுத்த அளவில் எப்படி இருக்கப்போகிறது?

பதில்:-
இரண்டாலும் நம் தேசத்திற்குத் தீமை விளையும் என்பதுதான் என் கருத்து. 
பிரேரணை வென்றுவிட்டால் உலகின் நெருக்கடிக்கு ஆளாகி 
நம் தேசம் பாதிப்புறப் போகிறது.
தோற்றுவிட்டால் ஏற்கனவே நடுநிலையின்றி 
இனங்களுக்குள் பகை வளர்த்துக் கொண்டிருக்கும் இன்றைய அரசு 
இன்னும் துணிவு கொண்டு மேலும் பிழையான பாதையில் பயணித்து 
ஏதோ வகையில் இந்தத் தேசத்தின் அழிவுக்கு வித்திடப் போகிறது. 
இனப்பகை ஒழியும் மட்டும் இந்த நாடு உருப்படப் போவதில்லை.
 
🤨உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 எப்பிடியும், துள்ளுற மாடு பொதி சுமக்கத்தான் போகுது என்கிறார் போல...
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
உலகளாவி கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாமே?

பதில் :-
மூன்றாவதென்ன? நான்கு, ஐந்து, ஆறு என 
எத்தனையாவது அலையும் தொடங்கித் தொலையட்டும். 
போட்டஊசிக்குப் பயன் இருக்குமா? இல்லையா?
'பிளீஸ்' அதை யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்......

😒உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 '
கிழவி கஞ்சிக்கு அழ, குமரி கல்யாணத்துக்கு அழுதாளாம். ஹி.... ஹி....
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:-
கச்சதீவை இந்தியா மீளப்பெறப்போவதாய் இந்திய அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது பற்றி?

பதில் :-
'நீ தடி எடுத்தால் நானும் தடி எடுப்பேன்' என்ற கதைதான். 
ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தை மீறப் போவதாய் இவர்கள் விடும் வாய்ச்சவடாலுக்கு, 
எதிர் வாய்ச்சவடாலாய் இந்திராகாந்தியுடன் செய்த ஒப்பந்தத்தைத் தான் 
மீறப்போவதாய் இந்தியா சொல்லத் தொடங்கியிருக்கிறது. 
நினைத்துப் பார்த்தால் அதில் நியாயம் இருப்பதாய்த்தான் தெரிகிறது. 
வாக்குச் சுத்தம் எல்லோருக்கும் அவசியமேதானே.

🥱உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  '
'நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரப் பெண்ணே
நீ அழுதால் நான் அழுதேன் மங்காத பொன்னே'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 06:-
தமிழ்நாட்டுத் தேர்தலில் யார் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில் :-
நம்மூதாதையர்கள் காலாகாலமாய்ப் போற்றி வளர்த்த 
அறத்தையும் பண்பாட்டையும் இறை நம்பிக்கையையும் 
மொழிப்பற்றையும் சத்தியத்தையும் இந்தியாவின் ஒருமைப்பாட்டையும்
காக்க வல்லவர் எவரோ, அவரே வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
 
🤫உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
அடிக்கடி அங்க போறதால, 'ஸ்ரெயிற்றா' பதில் சொல்லப் ப..ய..ப்..பி..டுறார் போல

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 07:-
புலிகளதும் மற்றைய போராளிக்குழுக்களதும் மனிதஉரிமை மீறல்கள் பற்றியும் ஐ.நா. மனிதஉரிமைகள் சபையில் ஆராய வேண்டும் எனக்கேட்டு ஒரு குழுவினர் நல்லூரில் உண்ணாவிரதம் இருப்பதைப் பற்றியும் அதனை யாழ் மாநகரசபை மேயர் தடுக்க முனைந்திருப்பது பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :-
சங்கடமான கேள்வி. ஆனாலும் நடுநிலைமையாய் 
பதில் சொல்லவேண்டியது என் கடமையாகிறது.
ஒரு ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் 
எல்லா உரிமையும் இருக்கத்தான் செய்கிறது. 
தத்தம் கருத்தை வெளியிடும் உரிமையை மறுப்பது ஜனநாயகம் ஆகாது. 
அதனை அரசு செய்தாலும் பிழைதான், நாம் செய்தாலும் பிழைதான். 
மாநகரசபைக்குச் சொந்தமான இடத்தில் அனுமதி பெறாமல் 
பந்தல் இட்டதையே மேயர் தவறென்று அறிவித்திருக்கிறார். 
அந்த அறிவிப்பில் கடும்'தொனி' இருந்ததைக் கவனிக்க முடிந்தது. 
அதனைத் தவிர்த்திருக்கலாம். 
சில நாட்களின் முன் இதேபோல நடந்த வேறொரு உண்ணாவிரதப் பந்தலை
உதாரணம் காட்டி அதை அனுமதித்தது எப்படி? என, 
இந்த உண்ணாவிரதக்காரர்கள் கேட்டதை ஊடகங்களில் காணமுடிந்தது. 
அக்கேள்வியிலும் நியாயம் இருப்பதாகவேபடுகிறது. 
முன்பு உண்ணாவிரதம் இருந்தவர்கள் 
அனுமதி பெற்றார்கள் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டிவிட்டால் 
மேயர்பக்கத்து நியாயம் உறுதிப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். 
போராளிக்குழுக்கள் மனிதஉரிமைகளை மீறியமை 
எவரும் மறுக்கமுடியாத உண்மையே. 
உலகம் சொல்லும் மனிதஉரிமைகள் முழுவதையும் கடைப்பிடிப்பதானால் 
ஆயுதப் போராட்டத்தை எவராலும் நடத்த முடியாது என்பது அதைவிடப் பெரிய உண்மையாம். 
பாதிப்புற்றவர்கள் தமக்கான நியாயத்தைக் கோருவதைத் தவறென்று சொல்லமாட்டேன். 
ஆனால் இவ்வளவு காலமும் இப்பாதிப்புக்கள் பற்றி 
வெளிப்படப் பேசாத இவர்கள் ஐ.நா. மனிதஉரிமைகள் சபையில் 
இலங்கையின் மனிதஉரிமைகள் மீறல்பற்றிப் பிரேரணை வந்திருக்கும் இந்நேரத்தில் 
உண்ணாவிரதம் இருப்பதுதான் எங்கோ இடிக்கிறது.
உண்ணாவிரதிகள் இவ் உண்ணாவிரதத்தைத் தாங்களாக நினைந்து செய்கிறார்களா? 
எவரதும் தூண்டுதல்களால் செய்கிறார்களா? எனும் கேள்வி 
மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
 
🤠உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 இவர்,  தட்டிக் கொடுக்கிறாரா? தட்டிக் கேட்கிறாரா?
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 08:-
ஏப்ரல் 21 தேவாலயக் குண்டுவெடிப்பு?

பதில் :-
வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி தருவனவாய் இருக்கின்றன. 
யாரோ ஒரு தீவிரவாதக் கும்பலால் நிகழ்த்;தப்பட்ட தாக்குதலாய்த்தான் 
இதனை நினைத்திருந்தோம். 
ஆராய ஆராய வெளிவரும் செய்திகள், போன நல்லாட்சி (?) அரசாங்கத்தின் 
அதி உயர் பதவியாளர் வரை ஐயப்பட வைத்திருக்கின்றன. 
முஸ்லிம்களைக் குற்றவாளிகளாய்க் காட்டுவதன் மூலம் 
அவர்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடலாமென 
சிலர் நினைத்திருக்கிறார்கள் போல்த் தோன்றுகிறது. 
அதனால் அங்ஙனம் நினைத்தவர்களே இத்தாக்குதல்களைத்  
திட்டமிட்டிருப்பார்களோ? எனும் ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 
அமைக்கப்பட்ட விசாரணைக் 'கமிஷன்', விடயங்களை 
முழுமையாய் ஆராய விரும்பவில்லை என்பதை, ஆண்டகட்சியும் ஆளுங்கட்சியும் 
ஒருவர்மேல் ஒருவர் சாட்டும் குற்றங்களை வைத்து ஊகிக்கமுடிகிறது. 
சரியான உண்மை வெளிப்படுகிறபோது (வெளிப்படவிடுவார்களா?) 
நம் நாடு மட்டுமல்ல உலகமும் அதிரத்தான் போகிறது போல.
 
⛪️உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'இயேசுவே பாவிகளை மன்னிப்பீராக. ஆமென்!'
 
ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்