பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 12: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-
வரவர உங்கள் பதில்கள் நீநீநீநீநீநீநீளமாய்ப் போவது ஏன்? 
 
பதில்:-
வரவர உங்கள் கேள்விகள் ஆஆஆஆஆஆழமாய்ப் போவதால்.         

🥱உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'ஆஆஆஆஆ ....வ்' (இது கொட்டாவி)
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
புற்றுநோயை வருவிக்கத்தக்க நஞ்சுப்பொருள் தேங்காயெண்ணெயில் கலந்திருக்கிறதாமே?​
 
பதில்:-
அந்த அநியாயத்தை ஏன் கேட்கிறீர்கள்? 
முகநூல்க்காரர்கள் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பொருளை
விஷம் என்று சொல்லி வேறு வெருட்டியபடி இருக்கிறார்கள். 
அதுபோதாதென்று இது வேறு. 
நம் எதிர்காலத்தை நினைக்கப் பயமாகவிருக்கிறது. 
உணவில், நஞ்சில்லாதது எது? எனத் தெரியவில்லை.
பாலைக் குடித்து வாழலாம் என்றால் பால்மாவும் நஞ்சென்கிறார்கள்.
பச்சைத் தண்ணீரையாவது குடிக்கலாமா? என்றால், 
சில ஊர்களில் தண்ணீராலேயே பலபேருக்குக் 'கிட்னி' பழுதாகிவிட்டதாம். 
காற்றையாவது சுவாசித்து வாழலாமோ? என்றால், 
வளியிலும் மாசு அதிகரித்து விட்டதாய் ஆய்வுகள் சொல்கின்றன. 
சுத்தமாய் எஞ்சி இருப்பது நெருப்பு மட்டும்தான்.
அதைத் தின்னத் தீக்கோழியாக அல்லவா பிறக்க வேண்டும். 
(உண்மையிலேயே தீக்கோழி தீயைத் தின்னுமா?) 
இந்த இலட்சணத்தில் தேங்காயெண்ணெயில் நஞ்சு கலந்தால் என்ன? 
கலக்காமல் விட்டால் என்ன?

🤣உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!'
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
முன்பு இவ் அரசைக் கடுமையாய் ஆதரித்த மகாநாயக்க தேரர்களெல்லாம் இப்போது அரசுக்கு எதிராய்த் திரும்புமாப் போல் தெரிகிறதே?

பதில்:-
சீனத் தொடர்பில் அரசு காட்டும் அதீத அக்கறை 
அவர்களையும் பயமுறுத்துகிறது என்று நினைக்கிறேன். 
'சீனத்துணிவால்' ஒருவேளை இராணுவ ஆட்சி இங்கும் அமைந்து போனால்
காலாகாலமாக இலங்கையில் 'நிழல்' அரசாங்கம் நடத்தி வரும் 
தமது கதி என்னாகும் என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் போல. 
முன்பு அரசை எதிர்த்த மாணவர்களை இரத்தவெறியோடு சீனா கையாண்ட விதத்தை 
யார்தான் மறக்கப் போகிறார்கள்?
🙃உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'அவளைத் தொடுவான் ஏன்? கவலைப்படுவான் ஏன்?' 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
பேராயர், கர்தினால் மால்கம் ரஞ்சித் அவர்கள், ஏப்ரல் 21 தாக்குதல்பற்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை நேரடியாகக் குற்றஞ்சாட்டி உள்ளதோடு 'வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஆடை அணிந்துகொண்டுதான் அவர் கூறுகிறாரா?' போன்ற கடும்வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியிருக்கிறாரே. பார்த்தீர்களா? அதுமட்டுமல்லாமல் காலக்கெடு விதித்து வீதியில் இறங்கப் போவதாக அரசுக்கு எச்சரிக்கை வேறு விடுத்திருக்கிறார். அவரது துணிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

பதில் :-
இதில் சில விடயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.
பேராயரின் துணிவு அவரது ஆத்மபலத்தால் வந்ததல்ல. 'வத்திக்கானின்' உலகபலத்தால் வந்தது. 
நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்னால் மைத்திரி பற்றிய அவரது கண்டனத்தில் நியாயம் இருப்பதாய்த் தெரியவில்லை. 
நிர்வாணமாய் வாக்குக் கேட்கப் போவாரா? என்ற குறிப்போடு சொல்லப்பட்ட அவரது கேள்வியில், ஒரு துறவிக்குரிய கண்ணியத்தன்மை 'மிஸ்ஸிங்'  
இவ்வளவு கடுமையான வார்த்தைகளை அவர் பேசியும் அரசு 'பம்மிக்' கொண்டிருப்பது பல ஐயங்களையும் கிளப்புகிறது.
இத்தகைய கடும்வார்த்தைகளை ஒரு இந்து மதத்தலைவரோ, இஸ்லாமிய மதத்தலைவரோ பேசியிருந்தால் பேரினவாதிகள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்?

😒உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'பூணூல் அறுந்திருக்கும். தொப்பி கழண்டிருக்கும். 
                எல்லா வீரமும் செல்லுமிடத்தில்த்தான் போல.ஹி...ஹி...'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:-
வாரத்தில் குறித்த சிலநாட்களுக்கு கட்டணம் பெற்று இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்பரப்பில்  மீன்பிடிக்க அனுமதிக்கப் போகிறார்களாமே? மீனவர் பிரச்சினைக்கு இதுதான் தீர்வா?

பதில் :-
நிச்சயம் இது தீர்வில்லை! 
பிராந்திய வல்லரசு திரைக்குப் பின்னால் மிரட்டுகிறதோ! யார் அறிவார்?
அங்ஙனமாயின் அரசுக்கும் வேறுவழியில்லை என்பது போக, 
அவர்களுக்கு வடக்கின் நஷ்டத்தில் 
உள்ளூர ஒரு மகிழ்வு இருக்குமாப் போலவும் தெரிகிறது. 
அதுமட்டுமல்லாமல் அங்கும் இங்கும் உள்ள தமிழினத்தாரை மோதவிட்டு
'மித்திரபேதம்' செய்ய அவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைத்,
தக்கபடி பயன்படுத்தப் பார்க்கிறார்கள்போல. 
இந்தத் தீர்வை நீதியாக்கவேண்டுமானால் ஒன்று செய்யலாம். 
அவர்களுக்கு இங்கு அனுமதி வழங்கப்படுவது போல, 
எமது மீனவர்களுக்கும் அவர்களது கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிக்க
அனுமதி வழங்க வேண்டும்.
டக்ளஸ் முயற்சிப்பாரா?

🥱உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'வல்லான் வகுத்ததே வழி'
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 06:-
எமது தொலைக்காட்சிச்  செய்திகளைப் பார்ப்பதுண்டா?
  

பதில் :-
பார்க்கிறேன். 
எமது இளைய அறிவிப்பாளர்களின் சுத்தமான தமிழ் உச்சரிப்பு மகிழ்வு தருகிறது.
தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பில்கூட
உச்சரிப்புப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் இல்லை.
'பெய்த மழையால் சென்னைக்குள் வெல்லம் புகுந்தது' என்று
கூச்சம் இல்லாமல் வாசிக்கிறார்கள். 
'வெல்லம் புகுந்தால் நல்லது தானே' என்று சொல்லத் தோன்றுகிறது. 
இப்படி இன்னும் பல தமிழ்க்கொலைகள் அங்கு. 
எங்கள் செய்தி வாசிப்பாளர்களும்கூட ஒரு தவறைத் தொடர்ந்து செய்கிறார்கள். 
செய்திகளின் இடையிடையே 'எது எவ்வாறாயினும்' என்ற ஒரு தொடரை, 
ஏனென்று தெரியாமல் அவர்கள் காரணமின்றிப் பாவிப்பது சலிப்புத் தருகிறது. 
இப்பிழையைத் திருத்த ஒரு வழி இருக்கிறது. 
வாசிக்கும் செய்தியிலிருந்து இந்தத் தொடரை நீக்கிவிட்டுப் பார்த்தார்களானால் 
அதன் தேவை இருக்கிறதா? இல்லையா? என்று தெரிந்து கொள்ளலாம். 
பயன் இல்லாத சொற்களை எதற்குப் பாவிக்க வேண்டும்? 
பயனில சொல்லுதலை வார்த்தைக் குற்றங்களில் ஒன்றாய் 
உரைக்கிறார் வள்ளுவர்.
  
 
😃உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
 'எது எவ்வாறாயினும் வாரிதியார் சொல்வது சரிதான்.'
        விட்டிட்டுப் பார்த்தாலும் பொருள் சரியாத்தான் இருக்கு.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 07:-
தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சரின் தாயையே இழிவுபடுத்தி தி.மு.க அணியின் முக்கியஸ்தர் ஒருவர் பேசியிருப்பதைப் பார்த்தீர்களா?  

பதில் :-
பார்த்துத் தலைகவிழ்ந்தேன். 
ஒருவரையொருவர் எல்லைமீறித் தரக்குறைவான வார்த்தைகளால் தூற்றுவதை
ஒரு நாகரீகமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 
'யுரியுப்பைத்' தட்டினால் இவர்களின் அநாகரிகப் பேச்சுக்கள் 
காதைக் கூசச் செய்கின்றன. 
தலைவர் எவ்வழி மக்களும் அவ்வழி என்று போனால் 
நாளை தமிழ்நாடு என்னாகப் போகிறதோ? 
மக்கள்தான் இத்தகையவர்களைத் தண்டிக்க வேண்டும். 
வாக்குக்குப் பணம் வாங்கப் பழகிவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு 
அந்தத் துணிவு வருமா?
 
🤠உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
'நிலத்திற் கிடந்தமை கால் காட்டும் காட்டும் 
குலத்திற் பிறந்தார் வாய்ச் சொல்'
இவர்கள் தலைவரின் 'குறள்ஓவியத்தைத்'  தானும் படிக்கமாட்டார்களா?

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 08:-
வடமாகாணசபையின் வருங்கால முதலமைச்சர் பதவிக்கு வரவேண்டுமெனத் தமிழரசுக்கட்சித்தலைவர் மாவைசேனாதிராஜா, பத்திரிகையாளர் வித்தியாதரன், மாகாணசபையின் முன்னாள் சபைமுதல்வர் சி.வி.கே. சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் போன்ற பலரும் காத்திருக்கிறார்கள், என்று பேசப்படுகிறதே. இவர்களுள் யாரை அப்பதவியில் நியமித்தால் சிறப்பாக இருக்கும்?
 
பதில்:-
மாகாணசபைத் தேர்தல் நடக்குமா? என்பதே ஐயமாக இருக்கிறது. 
நடந்தால்த்தான் உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லவேண்டி வரும். 
நடக்கும் என்று வைத்துக் கொண்டு வேண்டுமானால் பதில் சொல்லுகிறேன்.
கஷ்டப்பட்டு, 'பிகு' பண்ணி, விருப்பின்றி வருபவர்போல வந்து, 
பதவி சுகத்திற்காகக் கட்சியையும் இனத்தையும் பிரித்து, 
தமிழினத்தைப் பலவீனப்படுத்தியதோடு, 
மாகாண வளர்ச்சிக்காக வந்த பணத்தில் அரைவாசிக்கு மேல் திருப்பி அனுப்பிய, 
(அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் இச்செய்தியைச் 
சென்றவாரம் யாழ்ப்பாணத்தில்நின்றே துணிவாகச் சொல்லியிருக்கிறார்.)
இறந்தகால முதலமைச்சரோடு ஒப்பிட்டால் 
இவர்களுள் எவர் வந்தாலும் சிறப்பாய்த்தான் இருக்கும் போல் தெரிகிறது.       

😝உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'இனியேனும் தமிழர்கள் 'தேராத் தெளிவு' கொள்ளாமல்         இருந்தால் சரி.​
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 09:-
சென்ற முறை நீங்கள் சொன்னது உடனேயே நடந்துவிட்டதே. முன்னாள் பேராயர் இராயப்பு யோசப்புக்காக நாடளவில் துக்கம் அனுஷ்டிக்க, பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தும் அரசு அதற்குச் செவிசாய்க்காமல் விட்டுவிட்டதே? 
 
பதில்:-
போர்க்காலத்தில், மறைந்த பேராயர் தமிழ்மக்களின் நிலைமையை உணர்த்தி
உலகத்திற்கு விட்ட அறிக்கைகளைக் கண்ட பின்னும் 
அவரை உயிரோடு இருக்கவிட்டதே, 
சிங்கள அரசுகள் அவருக்குச் செய்த மரியாதைதானே.
         
😉உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'கூட்டமைப்பு அல்லவா கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
 
ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்