பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 14: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-
எல்லோருமாய் அழைத்தால் அடுத்தமுறையும் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடத் தயார் என்று முன்னாள் முதலமைச்சர் கூறியிருக்கிறாராமே? ​  
 
பதில்:-
ம...று...ப...டி...யு...மா..மா..மா..மா..மா...? (வடிவேலுக்கு நன்றி) 

😜உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'வாரிதியார் நல்லாப் படம் பார்க்கிறார் போல'.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
தன்னை ஜனாதிபதி தொலைபேசியில் மிரட்டியதாக அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினரே முறைப்பாடு வைத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
பதில்:-
கோத்தபாயா அவர்கள், தான் பாதுகாப்புச் செயலாளர் பதவியைக்; கடந்து, 
மாண்புமிகு ஜனாதிபதி பதவிக்கு வந்துவிட்டதை 
அடிக்கடி மறந்து போகிறார் போல் தெரிகிறது. 
அது அவருக்கும் நல்லதல்ல நாட்டிற்கும் நல்லதல்ல.

🤣உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
 'கங்கையில் மூழ்கி, மூழ்கிக் குளித்தாலும் காகம் அன்னமாகாது' சாமியோவ்வ்வ்வ்!'
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
வழமையான இலங்கையின் பல சட்டங்களிலிருந்து துறைமுக நகரத்திற்கு விதிவிலக்களித்து 99 வருடக் குத்தகைக்குக் கொடுக்கப் போகிறார்களாமே? 

பதில்:-
நாமும் வடக்கையும் கிழக்கையும் 99 வருடக் குத்தகைக்கு எடுத்தால் 
இனப்பிரச்சினை தானாகத் தீர்ந்துவிடுமோ?
 
👨‍🏭உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'அது நடந்தால் மேயர் மணிவண்ணன் பயப்படாமல் எந்தக் கலரிலும் யூனிபோம் கொடுக்கலாம்'.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
மிருகவேள்வியை இந்துமதம் ஏற்றுக் கொள்கிறதா?

பதில் :-
நீங்கள் எதிர்பார்க்கும் பதிலைச் சொல்லமுடியாமைக்காக வருந்துகிறேன். 
நான் சொல்லப்போகும் விடை உங்களுக்குப் பெரும்பாலும் பிடிக்காது. 
ஆனால் உண்மையைச் சொல்லவேண்டியது என் கடமையாகிறது. 
ஏற்றுக்கொள்கிறது! என்பதுதான் உங்கள் கேள்விக்கான சரியான பதில்.

😛உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'யாரங்கே? வாரிதியாரை இந்துமத்திலிருந்து உடன் வெளியேற்றுங்கள். ஹி.. ஹி..'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:-
'கவுன்சிலிங்' பற்றி முடிந்தால் ஏதாவது சொல்லுங்களேன் பார்க்கலாம்?

பதில் :-
தாராளமாகச் சொன்னால் போச்சு! நான் சொல்லப் போகின்றவை 
நமது தத்துவ அடிப்படையிலான உண்மைகள். 
மனம், புத்தி எனும் இரண்டு கருவிகள் சார்ந்தே மனித இயக்கம் நடக்கிறது. 
மனம் சார்ந்த செயற்பாட்டை 'உணர்வு' என்றும், 
புத்தி சார்ந்த செயற்பாட்டை 'அறிவு' என்றும் சொல்கிறோம்.
இந்த மனமும், புத்தியும் ஒன்றோடொன்று தொடர்புபட்டு இயங்கவேண்டியவை. 
புத்தித் தொடர்பற்று மனம் இயங்கத் தொடங்கினால், 
அவன் பைத்தியக்காரன் ஆவான். 
மனத் தொடர்பற்று புத்தி மட்டும் இயங்கினால் அவன் வக்கிர மனிதனாவான். 
மனதைப் புத்தியும், புத்தியை மனமும் கட்டுப்படுத்தி இயங்குதலே சமநிலை இயக்கமாம்.
பேரதிர்ச்சி, பெருந்துன்பம், பெரும்ஏமாற்றம் போன்ற 
சில அதிர்வுதரும் செயற்பாடுகளால் மனதினதும் புத்தியினதும் தொடர்பு 
சிலவேளைகளில் அறுந்து போகிறது. 
அறிவின் தொடர்பு அறுந்து போவதால் மனம் வரையறையின்றி இயங்கத் தொடங்குகிறது.
அந்நிலையையே இன்று 'டிப்பிறஷன்' என்கிறார்கள். 
இந்தப் பாதிப்பு வந்தால் அறிஞன் முட்டாளாகவும், 
வீரன் கோழையாகவும் போய்விடுவான்.
இந்நிலையுற்றவர்களின் புத்தியை மீண்டும் வலிமையுறச்செய்தால், 
அது அவர்களின் மனதைப் பழையபடி அறிவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்.
பாதிப்புற்றவருடன், வலிமையான புத்திசாலி ஒருவர் பேசிப்பேசி 
தன் புத்திப்பலத்தை நோயாளியின் புத்திக்குப் பகிர்ந்தளித்து, 
அவரது புத்தியைப் பலப்படுத்துவதே அந்நோயாளியை மீட்டெடுக்கும் வழியாகும்.
அங்ஙனம் நிகழ்ந்தால் நோயாளி மன அழுத்தத்திலிருந்து மீண்டு வருவார். 
பலம் பெற்ற புத்திசாலி ஒருவர் இங்ஙனம் நோயாளியின் புத்தியைப் பலப்படுத்தும் முயற்சியையே
'கவுன்சிலிங்' என்று இன்றைக்குச் சொல்கிறார்கள்.
இந்தக் 'கவுன்சிலிங்' மேற்கு நாட்டு வழிப்படுத்தலில்த்தான் 
நமக்குத் தெரியவந்தது என்று பலரும் நினைக்கிறார்கள். 
அக்கருத்துத் தவறானது. 
எனக்குத் தெரிந்து உலகில் முதன்முதலாக வந்த 'கவுன்சிலிங்' 
நூலாகப் பகவத்கீதையைத்தான் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
மிகப்பெரிய வலிமையாளனான அர்ச்சுனன் 
போர்க்களத்தில் தன் நெருங்கிய உறவினர்களையெல்லாம் 
கொல்லவேண்டிவரும் என்ற அதிர்ச்சியில் 
'டிப்பிறஷன்' என்ற மனஅழுத்தத்திற்கு ஆளாகிறான். 
அதனால் வீரனான அவனால் தனது வில்லைத் தூக்கவோ
தேர்த்தட்டில் எழும்பி நிற்கவோகூட முடியாமல் போகிறது. 
அந்நிலையில் புத்தி வலிமை மிக்க கண்ணபிரான் பகவத்கீதை எனும் உபதேசத்தால் 
அவனை மீண்டும் பலசாலியாக்கிப் போர் புரிய வைக்கிறார். 
எனக்குத் தெரிந்து இதுதான் முதன்முதலில் நடந்த 'கவுன்சிலிங்.'
ஒன்றைக் கட்டாயமாகச் சொல்லி முடிக்க வேண்டும். 
இன்றைக்குச் சில மதங்கள்,  மதமாற்ற முயற்சியாகக்
'கவுன்சிலிங்கை'ப் பயன்படுத்த முயல்கின்றன. 
அதற்காகச் சிலபேருக்கு 'கவுன்சிலிங்' பயிற்சி வகுப்புகளும் நடத்துகின்றன. 
அது முட்டாள்த்தனமான முடிவாகும்.
இயற்கையான அறிவுப்பலமற்றவர்கள் 'கவுன்சிலிங்' செய்ய முற்பட்டால் 
அவர்கள் தம் அறிவுப்பலத்தை இழந்து மனநோயாளிகளாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

😍உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'இந்த விடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?'
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 06:-
வேலன் சாமியாரை முதலமைச்சர் பதவிக்கு நிறுத்தலாம் என முன்னாள் முதலமைச்சர் கூறியது பற்றி? 
  
பதில் :-
இந்த மனிதர், நம் இனத்தை அழிக்காமல் விடமாட்டேன் என
யாருக்கோ சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறார் போல. 
என்ன தகுதியை வைத்துச் சாமியாரை 
முதலமைச்சர் பதவிக்குச் சிபார்சு செய்கிறாரோ தெரியவில்லை. 
நடைபயணத்தில் முன்னால் நடப்பது மட்டுமே முதலமைச்சர் பதவிக்கான தகுதியாகுமா? 
இப்படி நினைத்துத்தானே இவரிடமும் ஏமாந்தோம். 
விரும்பினால் தன் கட்சியின் சார்பாகச் சாமியாரைத் தாராளமாக அவர் நிறுத்தலாமே. 
'நான் கட்சி அரசியலுக்குள் வரமாட்டேன்' என்று 
சாமியார் சொல்லிவிட்டது பெரிய நிம்மதி. 
 
😃உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
 'அந்த மனுஷனும் திருந்தப் போறதில்லை, இந்த மனுஷனும் விடப்போவதில்லை'.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 07:-
கொரோனா இந்தப் பூமியை விட்டு முற்றாகப் போய்த்துலையவே மாட்டாதா? 

பதில் :-
இது இயற்கைக்கும் மனிதனுக்கும் நடக்கிற போர். 
இவ்வுண்மை உணர்ந்து சுயநலத்தைக் கைவிட்டு 
மனிதன் அடங்கினால் இயற்கை அடங்கும். 
அது நடந்தாலே ஒழிய கொரோனா நம்மைவிட்டுப் போகப் போவதுமில்லை. 
துலையப்போவதும் இல்லை.
 
☺️உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
'சத்தியவார்த்தை!'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 08:-
அமெரிக்காவில் கறுப்பினத்தவரான 'ஜோர்ஜ் பி(F)ளொயிட்டை' வன்முறையாய்க் கொன்ற காவல்த்துறையைச் சார்ந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த 'டெரிக் சாவின்' என்ற பொலிஸ்காரரின் செயல் குற்றம் என்று மரணத்தை விசாரித்த நீதிமன்றம்  தீர்ப்பளித்திருப்பதையும் அதனை வெள்ளை இன அமெரிக்க ஜனாதிபதி வரவேற்றிருப்பதையும் பார்த்தீர்களா?
 
பதில்:-
அதனால்த்தான் அமெரிக்கா ஜனநாயகத்தின் காவலனாய்க் கருதப்படுகிறது. 
முன்னர் நடந்து முடிந்த எத்தனையோ இனக்கலவரங்களில் 
கொல்லப்பட்ட தமிழர்களின், ஆதாரங்களுடன் கூடிய கொலைகளை, 
நம் நாட்டின் எந்த நீதிமன்றமுமோ எந்த ஜனாதிபதியோ கண்டிக்கவேயில்லை. 
அதனால்த்தான் உலக அரங்கில் இன்று நம் நாடு தலைகவிழ்ந்து நிற்கிறது.

😝உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'நீதிக்குத் தலைவணங்கு'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 09:-
சிங்களக் கல்வியாளர்களும் துறைமுகநகரப் பிரச்சினையைக் கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறார்களே. நீதி மன்றமும் கைவிட்டால் நாடு என்னாகப் போகிறது?

பதில்:-
வேறு என்னாகப் போகிறது? 
மண்ணாகப் போகிறது. அவ்வளவுந்தான்!
         
😡உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'முன்னை இட்ட தீ மூழ்க மூழ்கவே!'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
 
ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்