பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 15: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-
முதலமைச்சர் விவகாரத்தில் 'வித்திக்கும்', 'விக்கிக்கும்' மாவை வெளியிட்ட அறிக்கையைப் படித்தீர்களா?  ​  
 
பதில்:-
படித்தேன்! அதுபற்றி மனதில் எழுந்த சில எண்ணங்கள் கீழே.
மாவை பற்றிப் பேச 'விக்கி'யாருக்கு எந்த உரிமையோ, தகுதியோ இல்லை.
தன்னிடம் தரப்பட்ட மாகாணசபையை எந்தப் பயனுமின்றி (தனக்கான வாகனத்தைக் கேட்டுப் பெற்றதைவிட்டால்) ஐந்து ஆண்டுகளாக நாசமாக்கிய அவர், இந்த விடயத்தில் வாய்திறப்பதே தவறு.
மாகாணசபைத் தேர்தலில் வென்றபோது, 'மாவை விட்டுத் தந்ததால்த்தான் நான் இப்பதவிக்கு வந்தேன்' எனவும், 'எனக்கு அனுபவம் ஏதும் இல்லை மாவையின்; ஆலோசனையைப் பெற்றே நான் நடப்பேன்' எனவும் பேசிய செய்திகள் பத்திரிகைகளிலேயே வெளிவந்தன. இன்று வெட்கமில்லாமல் மாவையை விமர்சிக்கத் தலைப்படுகிறார் அவர். 
அப்படிப்பட்டவரின் வெற்றுச் செய்திக்காக, பல்லாண்டு அரசியல் அனுபவம்மிக்க மாவை இந்த அளவுக்கு அதிர்ந்திருக்கத் தேவையில்லை. 
வருடப்பிறப்பன்று செய்தி வெளியிடப்பட்டிருப்பதைப் பற்றி, மாவை அதிகம் கவலைப்பட்டிருக்கிறார். அது தேவையற்றது. பத்திரிகைக்காரர்கள் பரபரப்பான செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது இயல்பே.
வருடப்பிறப்பன்றே எதிர்வினையாகவேனும் அந்தச் செய்தியின் மூலம் தான் முக்கியப்படுத்தப்பட்டிருப்பதை மாவை ரசித்திருக்க வேண்டும். 
மாவையையும் அவர் அரசியல் வாழ்க்கையையும் அனைவரும் அறிவார்கள். பதவிநோக்கிய தகுதிக்காகத் தனது தியாகங்களைத் திரும்பத் திரும்ப மாவை வரிசைப்படுத்துவது தேவையற்றது.
தமிழரசுக்கட்சிக்குள் பல்லாண்டு காலம், மாவை போன்ற மூத்தவர்கள் பல பதவிகளைத் தாராளமாக வகித்துவிட்டனர். இனி மற்றவர்கள் விமர்சிப்பதற்கு முன்பாக, ஆற்றலுள்ள இளையோரில் ஒருவரை இனங்காட்டி (அது அவரது மகனாய் இல்லாமலிருப்பது நல்லது) தான் ஒதுங்கி, மூத்த தியாகி எனும் புகழை நிலைநிறுத்திக் கொள்வது அவருக்கு நல்லது. இச்செய்தி, கட்சிக்குள் பலகாலமாய்ப் பதவியில் இருக்கும் மூத்தவர்கள் அனைவர்க்குமாக நான் சொல்ல விரும்பும் செய்தியாம். 
நிறைவாக, 'காலைக்கதிர்' ஆசிரியர் 'வித்தி', மேற்படி செய்தியை எதுவித நோக்கமுமின்றி வெளியிட்டாரா? என்பதை அவர்தான் அறிவார். அப்படி வெளியிட்டிருந்தால் அதில் தவறேதும் இல்லை. பழைய காயங்களின் வலியால் அவர் மேற்படி செய்தியைப் பழிவாங்கும் நோக்கோடு எதிர்வினையாய்ப் பயன்படுத்தியிருந்தால் அது பத்திரிகாதர்மம் ஆகாது. இந்த விடயத்தில் வித்தியின் மனச்சாட்சிதான் உண்மையை உரைக்க வேண்டும். 

😜உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'யாரங்கே? கம்பவாரிதியின் கேள்வி பதிலைக் காலைக்கதிரில்  உடன்  நிறுத்துங்கள். ஹி..ஹி..'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
சுமந்திரனைக் கட்சியிலிருந்து வெளியேற்றும்படி ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா சம்பந்தனுக்கு எழுதிய கடிதம்பற்றி?
 
பதில்:-
பாவம்! இவ்வளவு பெரிய சட்டத்தரணி, 
உலகம் தெரியாமல் பேசுகிறாரே என்று கவலையாயிருக்கிறது. 
கட்சிக்குள்ளும், சம்பந்தனார் மனதிலும் சுமந்திரன் பெற்றிருக்கும்
முக்கியத்துவத்தை அறிந்திருந்தால் அவர் இப்படி அறிக்கை விட்டிருக்கமாட்டார். 
அவர் அறிக்கைவிட்டு ஓரிரு வாரங்கள் ஆகின்றன. 
அதுபற்றிச் சம்பந்தனாரிடமிருந்து எதுவித 'அசுமாத்தத்தையும்' இதுவரை காணவில்லை.
அதனால், அவர் மீண்டும் போர்க்குரல் எழுப்ப வேண்டும். 
இல்லாவிட்டால் தான் கட்சியிலிருந்து வெளிவந்துவிட வேண்டும். 
அதுதான் மரியாதை. 
நிலைமை விளங்காமல் இப்படியே இயங்கினால் 
சம்பந்தன் இவரையே வெளியேற்றிவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

🤣உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
 'சும்மா இருப்பதே சுகம்.'
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
சாத்வீகம் நிறைந்த நம் சைவசமயத்தில் மிருகபலியா? தேவை இல்லாமல் நம் சமயத்தின் பெருமையைக் குறைக்கப் பார்க்கிறீர்! 

பதில்:-
நமது சமயம் சாத்வீகம் நிறைந்த சமயம் என்பதில் எந்த ஐயமுமில்லை. 
அதுபோலவே ராஜச, தாமச செய்திகளும் அங்கு பதிவாக்கப்பட்டிருப்பதையும் 
யாரும் மறுக்க முடியாது.
இறைவடிவங்களிலேயே காளி, வீரபத்திரர் போன்ற தெய்வ வடிவங்கள் 
தாமச, ராஜச வடிவங்களாகவே கருதப்படுகின்றன. 
பிள்ளையை வெட்டிக்கொடுத்தவர், கண்ணைக் குத்திக்கொடுத்தவர் என
மேற்படி குணாம்சங்களைக் கொண்டிருந்தும் 
இறைவனை அடைந்த அடியார்கள் பற்றியும் நம் சமயம் பேசுகிறது.
இனி, மிருகபலி பற்றிய கேள்விக்கான விடையைச் 
சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். 
நம் சமயத்தின் முதல் நூலாகிய வேதங்களில், 
யாகங்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறதாம். 
அந்த யாகங்கள்; பலவகைகளாகக் கூறப்பட்டிருக்கின்றன என்கிறார்கள். 
அவற்றில் நெய்ச்சாதத்தை ஹோமம் செய்வது, 
நெய்யை மட்டும் ஹோமம் செய்வது, 
பக்குவமான தானியங்களை ஹோமம் செய்வது, 
மாவில் செய்த பலகாரங்களை ஹோமம் செய்வது, 
பாலை ஹோமம் செய்வது, அர்ச்சதையை ஹோமம் செய்வது, 
சுள்ளியை மட்டும் ஹோமம் செய்வது என பலவகைகள் உண்டாம்.
யாகங்களை 'பாகயாகம்', 'ஹவிர்யாகம்', 'ஸோமயாகம்' எனப் பிரித்து 
அவை ஒவ்வொன்றிலும் ஏழுவிதமான யாகங்களை அமைத்து, 
மொத்தமாய் இருபத்தொரு யாகவகைகள் சொல்லப்பட்டிருக்கிறதாம். 
இவற்றில் பாகயாகங்கள் ஏழிலும் மிருகபலி இல்லையாம். 
ஹவிர்யாகத்தின் முதல் ஐந்திலும் மிருகபலி இல்லையாம். 
ஆறாவதான 'நிரூட பசுபந்தம்' என்ற யாகத்திலிருந்துதான் 
மிருகபலி ஆரம்பிக்கிறதாம். 
ஸோமயாகத்தில் ஸோமபானத்தை (மது) ஹோமம் செய்வார்களாம். 
இந்தச்செய்தியை மூத்த காஞ்சிப்பெரியவரே 
தன்னுடைய 'தெய்வத்தின்குரல்' நூலில் எழுதியிருக்கிறார்.
நமது சமயத்தின் முதல்நூலான வேதங்களே சொல்லியிருக்கின்ற ஒரு விடயத்தை 
இல்லை என்று சொல்லச் சொல்கிறீர்களா? 
இங்கே நான் சொல்லியிருப்பது யாகங்களில் மிருகபலி செய்யப்படுவதைப் பற்றியே.
நம் ஊரில் சிலகோயில்களில் வேள்வி என்ற பெயரில் 
கண்டபடி ஆடு வெட்டுவதை அல்ல.
👨‍🏭உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'அர்த்தமுள்ள இந்துமதம் என்ன சொன்னது?'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
கொரோனா, பாடசாலைகளை மீண்டும் மூடிவிட்டதே? 

பதில் :-
மாணவர்களின் படிப்பையே மூடிவிடுமோ? என்பது தான் இப்போது எழுந்திருக்கிற கேள்வி.

😛உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'கற்றது கைம்மண் அளவு.'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:-
இந்தியாவில் அச்சமூட்டுகிற கொரோனா வீச்சைப் பார்த்தீர்களா? 

பதில் :-
அதையும் பார்த்தேன். 
கும்பமேளாவில் மக்களைக் குவியவிட்டதையும் பார்த்தேன்.
'அஞ்சுவது அஞ்சாமை பேதைமை' என்ற குறள்தான் ஞாபகத்திற்கு வந்தது. 
ஒன்று, நோய்க்கு அஞ்சி நடக்க வேண்டும். 
அல்லது மரணத்திற்கு அஞ்சாமல் இருக்க வேண்டும். 
இரண்டிற்கும் ஆசைப்பட்டால் எப்படி? 

😍உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.'
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 06:-
'ஷூமில்' வகுப்புகள் நடத்துகிறீர்களே. தமிழ் இலக்கியங்களில் எல்லாம் இருக்கிறது என்று 'பீத்தும்' உங்களிடம் ஒரு கேள்வி. 'ஷூம்' பற்றியும் உங்கள் இலக்கியங்களில் இருக்கிறதா? 
  
பதில் :-
ஏன் இல்லாமல்? 
சிவன், பார்வதி திருமணத்தைப் பார்க்கப் பலரும் கூடியதால் 
வடக்கு தாழத் தொடங்கியதாம். 
அதனால் எல்லோரும் அச்சப்பட சிவனார் அகத்தியரைக் கூப்பிட்டு
'நீ தெற்கு நோக்கிச் சென்றால் பூமி சமப்படும் என்றாராம். 
அதற்கு அகத்தியர் 'அப்படியானால் நான் உங்கள் திருமணக் காட்சியைக் காணமுடியாதா?' என்று 
கேட்டதற்கு, 'நீ அங்கிருந்தே அதைக்காண ஒழுங்கு செய்கிறேன்.' 
என்று கூறி ஒழுங்கு செய்தாராம். எப்படி என்கிறீர்களா? 
'ஷூம்' முறையிலாய்த்தான் இருக்கும்.
 
😃உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
 'இது உங்களுக்கே கொஞ்சம் 'ஓவராய்'ப் படவில்லையா?'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 07:-
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறாரே? 

பதில் :-
மணியோசைதான் வந்திருக்கிறது. யானை எப்போ வரப்போகிறதோ?
 
☺️உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
'நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாறேன்'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 08:-
அடுத்தடுத்து நிகழும் அரசியல் கைதுகள்பற்றி? 
 
பதில்:-
'கப்சிப்' (நான் நல்லாய் இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?)

😝உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'வாரிதிக்கும் நடுக்கமா?'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்