பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 16: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-
வேள்விகளில் உயிர்ப்பலியை நியாயப்படுத்துகிறீர்கள். திருக்குறளைப் போற்றுகிற உங்களுக்கு '
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று'

என்ற குறளில், உயிர்க்கொலையை வள்ளுவரே கண்டித்திருப்பது, தெரியாமல் போனது எப்படி?​ ​  
 
பதில்:-
என்னிடம் கேட்கப்பட்ட, 'இந்துமதத்தில் உயிர்ப்பலி உண்டா?' 
என்ற கேள்விக்கான பதிலாகத்தான் 'உண்டு' என்ற பதிலை 
நான் சொன்னேனே ஒழிய, நான் உயிர்ப்பலிக்கு ஆதரவாளன் இல்லை. 
நான் சொன்னதை நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை.
இந்துமதத்தில் பலிகொடுத்துச் செய்யும் யாகங்களும் உண்டு என்று தான்
நான் சொல்லியிருக்கிறேன். 
பலி கொடுக்காமல் யாகங்களைச் செய்ய முடியாது என்று 
நான் சொல்லவில்லை. 
பலிகொடுக்காமல் செய்யப்படும் யாகங்கள் பற்றியும் நான் எழுதியதை, 
நீங்கள் படிக்கவில்லையா? 
எனவே கட்டாயம் உயிர்ப்பலி கொடுத்துத்தான் 
யாகங்கள் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. 
ஆனால் இந்து மதத்தில் யாகங்களில் 
உயிர்ப்பலி கொடுக்கும் முறை உண்டு என்பதை மட்டும் 
யாராலும் மறுக்க முடியாது.

😜உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'வெட்டொன்று துண்டு இரண்டு.' பதிலைச் சொன்னேன். ஹி..ஹி..'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராய்ப் பொறுப்பேற்கப் போகும் 'ஸ்ராலின்' முதல்வராய் வெல்வாரா? 

பதில்:-
வெல்ல வேண்டும்! வெல்வதற்குப் பல புதுமைகளை அவர் செய்ய வேண்டும்! 
அந்தப் புதுமைகள் தமிழ்நாட்டிற்கும் தமிழருக்கும் உரியவையாய் இருக்க வேண்டும்! 
பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் ஜனநாயகப் பண்பு. 
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் உணர்ச்சி, 
அற உணர்;ச்சி, பக்தி உணர்ச்சி என்பவை 
உயர்ந்தவர்களால் தமிழ்மக்களின் இரத்தத்தில் 
பல்லாண்டுகளாய் ஏற்றப்பட்டுவிட்டன. 
எந்தக் கொம்பனாலும் தமிழ்மக்களின் அந்த உணர்வுகளை 
மாற்ற முடியாது என்பது நிச்சயம்.
பேராற்றலாளர்களான மறைந்த திராவிடத் தலைவர்களாலும் 
மக்களின் இக்கருத்தை மாற்றமுடியாமற் போனது நிதர்சனம்.
பெரும்பான்மைத் தமிழ் மக்களின் 
அவ்  உணர்ச்சிகளை மதித்தால்த்தான் ஒரு ஜனநாயகவாதியாக 
'ஸ்ராலி'னால் வெற்றிபெற முடியும் என்று நம்புகிறேன். 
அங்ஙனமன்றி இவற்றையெல்லாம் மறுத்து,
இன்னும் மார்க்ஸ், பெரியார், அண்ணா, கலைஞர் என்று 
பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை.
எவர்தான், எப்படித்தான் பாடுபட்டாலும் தமிழ்நாட்டில் 
நாத்திகத்தை நிலைநிறுத்த முடியாது என்றே கருதுகிறேன். 
கலைஞருக்குக் கடைசிக்காலத்தில் இவ் உண்மை தெரிந்துவிட்ட போதும் 
போட்ட தொப்பியைக் கழட்ட முடியாமல் அவர் சங்கடப்பட்டார். 
அந்தச் சங்கடம் தேவையில்லாதது. 
அவ் உண்மையைப் புரிந்து கொண்டு இயங்கினால் 
'ஸ்ராலின்' மதிப்புப் பெறுவார்.  
காலமாற்றத்தை உணர்ந்து கருத்து மாற்றம் செய்வாரானால் மட்டுமே 
அவரால் வெல்ல முடியும்.

🤓உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
'குங்குமத்தை அழித்தவருக்குக் கூறும் ஆலோசனையைப் பார்!'
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
நமது தமிழ்ப் பத்திரிகை உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?

பதில்:-
வீரியம் மிக்க உலகப் பத்திரிகையாளர்களின் ஆளுமையால் 
உலகளாவி வழங்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கான சலுகைகளைத் 
தாமும்பெற்று, தமிழ்ப் பத்திரிகையாளர்கள்தான் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். 
நம் பத்திரிகை உலகம் ஆரோக்கியமாக இருப்பதாய்த் தோன்றவில்லை. 
மேற்சொன்ன விதிக்கு விதிவிலக்காய், ஒருசிலர் இல்லாமலும் இல்லை. 
 
👨‍🏭உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'வித்தி' விதியா? விலக்கா?'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, அடிப்படைக் கல்வி வசதியோடு, கணிதப்பிரிவில், தேசியரீதியில் முதலிடம் பெற்றுத் தலைநிமிர்ந்திருக்கும் சாவகச்சேரியைச் சேர்ந்த மாணவனின் சாதனைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?   

பதில் :-
அவன் தன் தலையை மட்டும் நிமிர்த்தவில்லை. 
தமிழினத்தின் தலையை, யாழ்ப்பாணத்தின் தலையை, 
சாவகச்சேரியின் தலையை, தன் குடும்பத்தின் தலையை, 
தன் கல்லூரியின் தலையை எனப் பல தலைகளை நிமிர்த்தியிருக்கிறான். 
யாழ்ப்பாணத்தின் அறிவு வேர் 
இன்னும் அறுந்துபோய் விடவில்லை என்பதையும் நிரூபித்திருக்கிறான். 
வசதியான குடும்பங்களிலிருந்துதான் 
ஆற்றல் வெளிப்படவேண்டும் என்ற தேவையில்லை என்பது 
அவனால் நிரூபணமாகியிருக்கிறது.
வெளிநாடுகளில் வசதியாக இருந்து கொண்டு 
இனப்பற்று பேசும் புலம்பெயர் தமிழர்களின் வசதிமிக்க கரங்கள் 
அவனை நோக்கிப் பரிசுகளைக் குவிக்கலாமே!

👏உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'இளையவனுக்கு ஈழத்தமிழர்களின் இனிய 'சல்யூட்'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:-
கொரோனாவால் மீண்டும் இலங்கை முடக்கப்படுமா?  

பதில் :-
எதனாலும் இலங்கை முடக்கப்படக் கூடாது என்பதே என் விருப்பம். 

😍உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'வாழ்க வாரிதியின் தேசப்பற்று.'
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 06:-
பாராளுமன்றத்தில் நடந்த புலி-நாய் விவாதம் கேட்டீர்களா? 
  
பதில் :-
கேட்காமல் என்ன? கௌரவமிக்க மக்கள் பிரதிநிதிகள், 
ஒருவரையொருவர் விலங்குகளாய் வர்ணிப்பது வெட்கப்படவைக்கிறது. 
சாணக்கியனின் துணிவுமிக்க பதிலடி உச்சம்! ஆனாலும் அது பயப்படவும் வைக்கிறது. 
 
😃உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
 'மக்கள் மன்றா? மாக்கள் மன்றா?'
 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 07:-
27 வருடம் ஒன்றாய் வாழ்ந்த மனைவியை 66 வயதில் விவாகரத்துச் செய்யப் போவதாக 'பில்கேட்ஸ்' அதிர்வின்றிக் 'கூலாய்' அறிவித்திருக்கிறாராமே?

பதில் :-
அதிர்வில்லை என்று யார் சொன்னது? ஏதோ அதிர்வில்லாமலா, 
இந்த முடிவுக்கு வந்திருப்பார்? 
அதிர்வில்லாமல் காட்டுவதெல்லாம் வெள்ளைக்காரர்களின் பொய் நாகரீகப்பூச்சு. 
இங்கு பலபேர் 'பில்கேட்ஸ்' போலப் பணக்காரராய் வந்தால் 
சந்தோஷமாக வாழலாமென நினைக்கிறார்கள்.
நிம்மதியான, சந்தோஷமான வாழ்வுக்கு பணம் மட்டும் போதாது என்பதுதான் 
மேற்செய்தியினூடு நாம் பெறும் பாடம். உணர்வார்களா?
 
😔உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
'இதுவும் ஒரு சாதி 'மணி' விழாத்தானுங்கோவ்.. வ்.. வ்..'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 08:-
அண்மையில் இணையவெளியில் நடந்த 'திகடசக்கரப்' பட்டிமண்டபத்தில் அரசியல் தலைவர்களுக்கு நடுவராய் இருந்தீர்கள். யாருடைய பேச்சு உங்களுக்கு அதிகம் பிடித்தது?
 
பதில்:-
வரவர நம் தமிழ்த்தலைவர்களில் ஆற்றல்மிக்க பேச்சாளர்களின் தொகை 
மிகக் குறைந்துவிட்டது. 
பேச்சாற்றல், அரசியலாளர்களுக்கு அவசியம் என்கிறார் வள்ளுவர். 
இத்தகைய அரங்குகளில் கலந்து கொண்டால், 
நம் தலைவர்கள் வலிமைமிக்க பேச்சாளர்கள் ஆகலாம் என நினைக்கிறேன். 
அதுபோக, அன்றைய அரங்கில் பேசிய எல்லோருமே 
ஓரளவு நன்றாகத்தான் பேசினார்கள். துணிந்து பொதுவெளியில், விவாதமொன்றில் 
கருத்துரைக்க வந்த அத் தலைவர்களின் துணிவைப் பாராட்டத்தான் வேண்டும். 
கேள்விகளைக் கேட்டும், சில செய்திகளைச் சொல்லியும் 
அவர்களை நான் சங்கடத்திற்கு ஆளாக்கினேன். 
ஆனாலும் புன்னகை மாறாமல் அவர்கள் அதனை எதிர்கொண்டார்கள். 
அரசியல் கூட்டங்களில் மட்டும் என்றில்லாமல் இப்படி மக்கள் மன்றிற்கும்
அடிக்கடி வருவார்களானால்த்தான் மக்கள் கருத்துக்கள் தலைவர்கள் மனதில் பதியும்.
போருக்குப் பின் தாங்கள் சில விடயங்களை முன்னெடுக்கத் தவறியமையைப் 
பகிரங்கமாகச் சுமந்திரன் ஒத்துக் கொண்டது மகிழ்வு தந்தது.

😝உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'இவர், தலைவர்களுக்குப்  பேச்சுப் பயிற்சி அளிக்கலாமே!'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 09:-
ஆயிரம் ரூபா சம்பள உயர்வைக் கொடுத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களைக் கசக்கிப்பிழிய நினைக்கும் தேயிலைத் தோட்ட முதலாளிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :-
மலையகத்தில் உள்ள அட்டைகள்தான், 
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இரத்தத்தை
உறிஞ்சி வருவதாகப் பலரும் தவறாக நினைக்கிறார்கள். 
அவ்வளவுதான் சொல்வேன்.
 
☺️உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
'இவர் முதலாளிகளைச் சொல்கிறாரா? தலைவர்களைச் சொல்கிறாரா?'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 10:-
சீனப் பாதுகாப்பு அமைச்சர் வந்துசென்ற கையோடு இந்தியத் தூதர் நம் ஆட்சியாளர்களைச் சந்தித்தது பற்றி?​ 
 
பதில்:-
பாவம் இலங்கையின் நிலைமை! 
பாக்குவெட்டியின் நடுவில் அகப்பட்ட பாக்குப்போலாகிவிட்டது.
கத்தியும் அழுத்துகிறது. தண்டும் அழுத்துகிறது. 
அதனால் கத்திக்கோ தண்டுக்கோ ஏதும் நேரப் போவதில்லை. 
பாக்குத்தான் துண்டாடப்படப்போகிறது. 
ஏறச்சொன்னால் கழுதைக்குக் கோபம்.
இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்ற கதைதான். 
இது முள்ளில் அகப்பட்ட சேலை!
எப்படித்தான் கிழியாமல் எடுக்கப்போகிறார்களோ?

😝உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'யார் கழுதை? யார் முடவன்? ஹி...ஹி...'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
 
ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்