பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 19: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-
தமிழ்நாடு மக்கள் நீதிமையக் கட்சியில் இருந்து கமலஹாசனைவிட்டு ஒவ்வொருவராய் கழண்டு கொண்டு இருக்கும் நிர்வாகிகள் சுயநலவாதியான அவரோடு இணைந்து இருக்க முடியாது என்கிறார்களே கவனித்தீர்களா?
பதில்:-
கமலுக்கு இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. நம்பியவர்களைத் தன் சுயநலத்திற்காய் கைவிடுவது அவரது வழக்கமான விடயம்தான். சேருகிறபோது தங்கள் சேர்க்கைபற்றி இலக்கியமாய்ப் பேசுவார். பின்னர் காரணம் சொல்லாமலே அவர்களை விட்டுப் பிரிந்து போவார். இவர் பிரிவார் என்பதைவிட, இவரோடு சேர்ந்தவர்கள் இவரைப் பிரிவார்கள் என்பதுதான் உண்மை. வாணி கணபதி, சரிகா என இந்த வரிசையில் பதிவானவர்கள் பலபேர். பதிவாகாமலும் பலபேர் இந்த 'லிஸ்டில்' இருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. கடைசியாக இவரோடு பல ஆண்டுகளாய் ஒப்பந்த முறையில் வாழ்க்கை நடத்திய நடிகை கௌதமியும், மறைமுகமாய் இதே காரணத்தைச் சொல்லித்தான் அண்மையில் இவரை விட்டுப் பிரிந்தார். வாழ்க்கையிலும் அவர் தசாவதார நாயகன்தான். தனி வாழ்க்கையில் செய்து கொண்டிருந்த அந்த வேலையை இப்பொழுது பொது வாழ்க்கையிலும் ஆரம்பித்திருக்கிறார் கமல். தனி வாழ்க்கையில் அவரை விட்டு ஒவ்வொருவராய் பிரிந்தார்கள். பொது வாழ்க்கையில் இப்போது பலர் கூட்டமாய் பிரிந்திருக்கிறார்கள். இதுதான் ஒரே வித்தியாசம்.
😜உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'மன்மதராசா மன்மதராசா!'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
மீண்டும் ஊரடங்கு வாழ்வு எப்படி இருக்கிறது?
பதில்:-
உலகம் தெரியாதவராய் இருக்கிறீர்கள்! இப்போது நடப்பது ஊரடங்கு வாழ்வு இல்லை, பயணத்தடை வாழ்வாக்கும்! 'ஓகோ! ஊரடங்குச் சட்டத்தின் பெயரை இப்போது இப்படி மாற்றிவிட்டார்களா?' என்று கவுண்டமணி கேட்பதைப் போல் நீங்கள் கேட்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.
இனி உங்கள் கேள்விக்கு வருகிறேன். என்னைப் பொறுத்தவரை இந்தப் பயணத்தடை வாழ்வு (ஹி...ஹி...) மகிழ்வைத்தான் தருகிறது மாறி மாறி வரும் ஆட்கள், மாறி மாறி வரும் பயணங்கள், மாறி மாறி வரும் நிகழ்ச்சிகள் என இருந்த பரபரப்பான வாழ்க்கை ஓய்ந்து அமைதியான வாழ்க்கை கிடைத்திருக்கிறது. அதனால் நிம்மதியாய் கும்பிட, படிக்க, படுக்க முடிகிறது. அதற்காக 'கொரோனாவிற்கு' நன்றியுடன் கூடிய ஒரு 'சல்யூட்'
'இனிது இனிது ஏகாந்தம் இனிது' என்ற ஓளவையாரின் கட்சிக்காரன் நான் என்னைப் பொறுத்தவரை சும்மா இருப்பதுவே சுகம். 

😷உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'மோனம் என்பது ஞான வரம்பு'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
சீனா 'கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறதே? 
பதில்:-
(நம் மண்ணை) கிள்ளிக் கிள்ளி எடுப்பதற்கான பிரதி உபகாரம் அது. இது இலங்கைக்குக் காட்டும் ஆதரவில்லை. இந்தியாவிற்குக் காட்டும் எதிர்ப்பு. 
💉 🐟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'சின்ன மீனைப் போட்டால்தான் பெரிய மீனைப்பிடிக்கலாம். ஹி...ஹி...' 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
பாராளுமன்றில் நடந்த துறைமுகச்சட்டமூல வாக்கெடுப்பில் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறத்தவறியமை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :-
எண்ணுவதில் தவறு செய்துவிட்டார்களாம். வாக்கை எண்ணுவதில் மட்டுமல்ல நாட்டுமக்களின் வாழ்க்கையை எண்ணுவதிலும் அதைத்தான் செய்து கொண்டிருப்பதாய் பேசிக் கொள்கிறார்கள்.
👌 உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'வாக்கை! வாழ்க்கை! வாரிதியின் தமிழ் விளையாட்டு.'
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:-
மணிவிழாக் காணும் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுக்கு வாழ்த்து சொன்னீர்களா?
பதில் :-
வாழ்த்துப் பெறவேண்டிய நிலையைக் கடந்த மற்றவர்களை வாழ்த்துகிற நிலைக்கு அவர் உயர்ந்து பல காலம் ஆகிவிட்டது.
🙏உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'பதிலே வாழ்த்துத்தான்.'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 06:-
தீவிரவாத தாக்குதல்கள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதால் தனது பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்திருக்கிறதே?
பதில் :-
தீர்க்கதரிசனத்தில் அமெரிக்காவிற்கு நிகர் அமெரிக்காதான் சம்பவங்களுக்கான காரணங்களை உருவாக்குகிறவர்களுக்குத்தான் காரியங்களைப் பற்றி முன்னரே சொல்ல முடியும். யார் யார் எங்கெங்கே என்னென்ன திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்களோ? ஈழத்தாயின் இன்னல்கள் இன்னும் முடியவில்லைப் போலும். (கொவிட்டால்) மரத்தால் விழுந்த இலங்கையரை மிதிக்கப் போகும் மாடு எங்கிருந்து வரப்போகிறதோ? 
😒உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   'பொன்னான வாழ்வே மண்ணாகி போமா?'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 07:-
தனிமரம் தோப்பாகுமா?
பதில் :-
சிலவேளைகளில் ஆகும் என்றுதான் நினைக்கிறேன். ஆலமரம் தனிமரமாய் இருந்தாலும் தோப்பாகப் பயன் செய்வதில்லையா? இதற்கு விளக்கமாய் நம் கையிலேயே ஒருவர் இருக்கிறாரே. இந்தவாரத்தை கலாநிதி ஆறுதிருமுருகனின் மணிவிழா வாரமாகப் பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். யாழ் மண்ணை அடையாளப்படுத்துகிற குறியீடாய் மாறியிருக்கிறார் திருமுருகன். அதிகம் பேசுவதை மட்டும் தம் செயற்பாடாய் வைத்திருக்கும் நமது மக்கள் பிரதிநிதிகளால் செய்ய முடியாத பலவிடயங்களை தனிமனிதராய் சாதித்துக் காட்டியிருக்கிறார் அவர். இயந்திரங்களின் வேகத்தையும் தோற்கடிக்கும் அவர் செயற்பாடு அவர் வயதை அறுபதாய்க் காட்ட மறுத்து நிற்கிறது. எந்தப் பின்னணியும் இல்லாமல் தனிமனிதனாய் அவர் உருவாக்கி இருக்கும் புதிய தொண்டுலகம் தேவர்களுக்கெதிராய் விசுவாமித்திரர் உருவாக்கிய உலகை நினைவூட்டுகிறது. வாய்ப்பில்லாததால் வளர முடியவில்லை என்று ஒப்பாரி வைப்போரை மறுதலிக்கும்  முன்னுதாரணராய்த் திகழ்கிறார் அவர். இளையோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஏதிலிகள், கலைஞர்கள், சமயவாதிகள், அறிஞர்கள் என அவரது தொண்டின் நிழல்படியாதவர்கள் எவரும் இல்லை எனலாம். அவரும் ஒரு தனிமரம்தான் ஆனால் தோப்பாய் சமூகத்திற்குப் பயன் செய்கிறார்.

அந்தச் சாதனையாளனுக்கு 'கலாநிதி'ப்பட்டம் வழங்கி அறிவுலகம் தன் கடமையைச் செய்துவிட்டது. தமிழுலகு செஞ்சொற்செல்வர் பட்டம் வழங்கி அவரைப் போற்றியிருக்கிறது. சமய உலகு மிகப்பெரிய ஆலயப் பொறுப்பைக் கொடுத்து அவரைக் கௌரவித்திருக்கிறது. இன்னும் நம் அரசியல் உலகுதான் அவரைச் சரியானபடி போற்றாமல் நிற்கிறது. வெளியில் கடுமையான இனப்பற்றைப்பேசியபடி ரகசியமாய் அரசிடம் தம் தேவைகளுக்காகக் கையேந்தி நிற்கும் நமது மக்கள் பிரதிநிதிகள் ஓர் உண்மைத் தமிழ்த் தொண்டனுக்காக இந்நாட்டில் வழங்கப்படும் அதியுயர் விருதினை அரசிடம் பேசிக் கொடுக்கச் செய்யலாமே!
😇உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்