பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 23: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- எங்கே உங்களின் எதிரி, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடைய சத்தத்தை இப்போதெல்லாம் அதிகம் காணமுடிவதில்லையே. என்ன காரணம்? (தேர்தல் காலத்தில் அவர் நம் இனத்தின் உரிமைபற்றி அளவுக்கதிகமாகப் பேசியதால்த்தான் இக்கேள்வி)

பதில்:-

என்ன? எனக்கு வால்முறுக்கிவிடப் பார்க்கிறீர்களா? 
இந்த நாரதர் வேலைதானே வேண்டாம்  என்கிறது. 
முதலில் உங்கள் கேள்வியில் இருக்கும் ஒரு பெரிய பிழையைத் திருத்திக்கொள்ளுங்கள். 
மு.முதலமைச்சர் ஒருக்காலும் என் எதிரி அல்லர். 
இன்றும் அவர் என் நண்பர்தான். நான் எதிர்ப்பது அவரை அல்ல. 
அவரது பிழையான சமூகச் செயற்பாடுகளையே.
இனி உங்கள் கேள்விக்கு வருகிறேன். 
தன்நோக்கத்தை நிறைவேற்றத்தானே அவர் அதிகம் பேசினார். 
இன்று அவரது நோக்கம் நிறைவேறிவிட்டது. 
இனி ஏன் அவர் அதிகம் பேச வேண்டும் என்று கேட்கிறேன்? 
'என்னது நம் இனத்திற்கு விடுதலை கிடைத்துவிட்டதா' என்று கேட்கிறீர்களா?
அவரது நோக்கம் நிறைவேறிவிட்டது என்று சொன்னேனே தவிர, 
அவரது நோக்கம் இனவிடுதலைதான் என்று நான் எப்போதாவது சொன்னேனா? 
தன்னை அரசியலுக்குக் கொணர்ந்த கட்சியை உடைக்க முயன்றார். 
குற்றம் சொல்லிச் சொல்லிக் கடைசிவரை அவர்களோடும் 
அவர்கள் தந்த பதவியோடும் ஒட்டிக்கொண்டிருந்தார். 
பின்னர் தனது பிழைகளை மறைக்க மக்களின் உணர்ச்சிகளை ஊதிக்கிளப்பினார். 
மனிதர்களின் பலவீனங்களைத் தெரிந்தும், வளர்த்தும் 
வேற்றுக் கட்சிகளுக்குள் பேதங்களை உருவாக்கினார். 
அதையெல்லாம் பார்த்து உங்களைப் போன்ற ஏமாளிகள் வாக்களித்து 
அவரைப் பாராளுமன்றிற்கு அனுப்பிவிட்டார்கள்.
இன்று கொழும்புக்கு வந்து பிள்ளைகளுடனும், மருமக்களுடனும், 
பேரப்பிள்ளைகளுடனும் சந்தோஷமாய் வாழ, 
அவருக்குச் சம்பளத்தோடு பதவி கிடைத்திருக்கிறது. 
இனி ஏன் அவர் அதிகம் பேச வேண்டும்? 
இனியாவது அவர் அதிகம் பேசியதன் நோக்கத்தை 
நம் தமிழினமும் அவருக்கு வால்பிடித்த ஊடகங்களும் புரிந்து கொள்ளுமா?

😡உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'வாரிதியார் செத்த பாம்பைத் திரும்பத்  திரும்ப அடிக்கிறார். வேண்டாத வேலை!'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
தமிழ்நாடு 'ஸ்ராலின்' அரசின் செயற்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறீர்களா?

பதில்:-

கவனித்து வருகிறேன். 
ஆற்றல் மிக்க செயலாளர்களை நியமித்தது, 
புதிய இளைஞர்களை மாவட்ட ஆட்சியாளர்களாய் அமைத்தது, 
உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களை ஆலோசகர்களாய் ஆக்கிக் கொண்டது, 
ஈழத்தமிழர் பிரச்சனையை நேர்மையாய்க் கையாள முயற்சிப்பது என, 
அடுத்தடுத்த புதுமைச் செயற்பாடுகளால் 'சிக்ஸர்களாய்' அடித்துத் தள்ளுகிறார் அவர்.
மத்திய அரசு 'ஸ்ராலினுக்கு' டெல்லியில் தந்த வரவேற்பைப் பார்த்தால்
'மோடி'யே கொஞ்சம் ஆடிப்போய் இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.  
மதுக்கடைகளைத் திறந்ததற்கு 'ஸ்ராலின்' சொன்ன காரணம் தான் 
சர்க்கரைப் பொங்கலில் அகப்பட்ட கல்லாய் நெருடுகிறது. 
(மதுக்கடைகளைத் திறக்காவிட்டால், 
மக்கள் கள்ளச்சாராயத்தை அருந்தி வீணாவார்களாம்-ஹா..ஹா... ஹா...)
இந்தப் பிரச்சனையிலும் வருமான இலாபத்தைப் பார்க்காமல்
மதுவிலக்கை உறுதியாய்க் கொணர்வார் என்றால் 
'ஸ்ராலின்' தமிழ்நாட்டின் வரலாற்று நாயகனாய் மாறிவிடுவார் என்று நினைக்கிறேன்.

😜உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
சுகாதார அதிகாரிகள் 'கொவிட்' நோயாளர்களின் மரணங்கள்பற்றிப் பிழையான தரவுகளைத் தந்ததாகவும், தான்  புலனாய்வுத்துறையினரைக் கொண்டு அவர்கள் தந்த தரவுகள் பிழையானவை என்று கண்டுபிடித்ததாகவும் ஜனாதிபதி சொல்கிறாரே?

பதில்:-

(மேற்படி செய்தி உண்மையானால்) 
அதிகாரிகள் அதைச் செய்திருக்கக் கூடாது. 
ஜனாதிபதி இதைப் பகிரங்கமாய்ச் சொல்லியிருக்கக் கூடாது.

🥭உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'அதுவும் சரி. இதுவும் சரி. ஹி.. ஹி..' 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
அறம். அறம் என்று வாய்கிழியப் பேசும் உங்களிடம் ஒன்றைக் கேட்க வேண்டி இருக்கிறது? இலட்சக்கணக்கானவர்களை வக்கிரமாகக் கொன்று ஊழிக்கூத்தாடிய உகண்டாவின் முன்னாள் ஜனாதிபதி 'இடிஅமீன்', சவுதிஅரேபியாவில் கடைசிவரை எல்லாச் சுகங்களையும் அனுபவித்து இறந்தான். சத்தியத்தை உலகிற்குப் பறைசாற்றி, அகிம்சையைக் கடைசிவரை கடைப்பிடித்து வாழ்ந்த, மகாத்மா காந்தியோ சுடப்பட்டு துடிதுடித்து இறந்தார். இதற்குப் பிறகும் அறம்  என்று பேசுவதால் என்ன பயன் ?

பதில் :-

உங்கள் கேள்விக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, 
வள்ளுவன் என்கின்ற எங்களது முப்பாட்டக்கிழவர் பதில் சொல்லிவிட்டுப் போய் விட்டார். 
'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்' 
என்பதே அவர் தந்த பதிலாம். 
அவரது பதிலைக் கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்கிறேன். 
நன்மையையோ, தீமையையோ செய்த ஒருவன், 
தான் செய்த அதே அளவான நன்மையையும் தீமையையும் 
அனுபவித்தே ஆக வேண்டும் என்பதே, நமது முன்னோர் கூறிய விதிக் கொள்கை. 
அந்த அனுபவிப்பு, குறித்த ஒரே பிறவியில் நடக்க வேண்டும் என்பதில்லையாம். 
செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ற பலன்களை
ஏதோ ஒரு பிறவியில் அவ்வுயிர் அனுபவித்தே ஆகும் என்கிறார்கள் அவர்கள். 
செய்த பாவ புண்ணியத்திற்கு அந்தந்த பிறவியிலேயே 
பலன் கிடைக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். 
அதனால்தான் உங்களிடம் இந்தக் கேள்வி எழுந்தது. 
மேற்சொன்ன உண்மையைத் தெளிவுற உணர்ந்த வள்ளுவர், 
தீயவன் ஒருவனுக்கு நல்வாழ்வும், நல்லவன் ஒருவனுக்குக் கேடும் விளைகையில், 
இது இவர்களின் விதியால் நடந்தது என, உயர்ந்தவர்கள் நினைப்பார்கள் என்கிறார். 
'பேஸ்புக்' என்றும் 'யூடியூப்' என்றும் தேவையில்லாதவற்றுக்கெல்லாம் 
அதிக நேரம் செலவழிக்கும் நீங்கள் நம் வள்ளுவக் கிழவரையும் கொஞ்சம் படித்துப் பார்க்கலாமே! 

😆 உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'தற்ஸ் ரூ' காமத்துப்பாலும் இருக்கிறதால் படிக்கலாம்தான். ஹி ...   ஹி.... 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 05:-
காமமும் காதலும் இல்லாமல் மனிதனால் வாழ முடியுமா?

பதில் :-
மனிதனால் மட்டும் என்று இல்லை 
உயிருள்ள எந்த ஜீவராசிக்கும் அது முடியாத காரியம் என்பது திண்ணம். 

🤭உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  வாரிதியார் ஆழம் தெரியாமல் காலை வி..ட்...டு...ட்...டா..ர்!

 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 06:-
'அமெரிக்க' ஜனாதிபதியும் 'ரஷ்ய' ஜனாதிபதியும் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியாய் முடிந்திருக்கிறதாமே? வல்லரசுகளின் இந்த இணக்கப்பாட்டால் உலகிற்கு ஏதாவது நன்மை நடக்குமா?

பதில் :-
உலகிற்கு நன்மை நடக்கிறதோ இல்லையோ? 
இவர்களை வழிமொழிந்து அணிசார்ந்து நின்ற நாடுகளுக்கு விழிபிதுங்கப் போகிறது. 
போட்டி போட்டுக் கொண்டிருந்த இரு பகையாளிகள் 
காரணமின்றித் திடீரென ஒன்று சேர்கிறார்கள் என்றால், 
மூன்றாவது சக்தி ஒன்று பலம்பெறத் தொடங்கிவிட்டது என்பது தான் அர்த்தம். 
அது எந்தச் சக்தி என்று இப்போதுதான் எல்லோருக்கும் தெரியத் தொடங்கியிருக்கிறது. 
தனது எதிரி நாட்டைக் கடந்து வந்து 
அதன் எல்லையில் இருக்கும் நமது சிறிய நாட்டில் கூட 
காலூன்றிவிட்ட அந்தச் சக்தியின் பலத்தை, 
நம்மால் ஓரளவு ஊகிக்கமுடிகிறது. 
இந்த உண்மை தெரியாமல் நம்மவர்கள் வலியப் போய் 
அதன் பிடிக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

🤔உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டுகிறதோ?'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 07:-
இந்த வாரத்தில் மீண்டும் கொரோனாக்கிருமி புதிய வடிவெடுத்திருக்கிறதாமே? இந்த உலகம் தப்பிப் பிழைக்குமா?

பதில் :-
இந்த, மாறுபடும் சூரனை வதைக்குமுகம் வருமா? 
எல்லோர் மனதிலும் இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் கேள்வி இது. 
நிச்சயம் வரும் என்பதே பதிலாம். 
எப்படித்தெரியும் என்கிறீர்களா? 
இருள் வந்தால் ஒளியும், மாரி வந்தால் கோடையும் வருவது தவிர்க்க முடியாத இயற்கை நியதி.
எனவே இதற்கும் முடிவு வரும். எப்போது வரும் என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள்!

🙏உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'கூறும் அடியார்கள் வினை' தீருமா?'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 08:-
என்ன ஐயா! உங்களது கம்பன் கழகத்தின் ஐஸ்வர்ய லக்ஷ்மி  கோவிலில் சுவாமிக்கு மக்களே பால் வார்க்கிறார்களாமே? அதை நமது சமயம் ஏற்றுக் கொள்ளுமா?   
பதில்:-

உங்கள் கேள்வி புரியவில்லை. 
இங்கே மக்கள் பால் வார்க்கிறார்கள் என்றால் 
மற்றைக் கோயில்களில் பால் வார்ப்பவர்கள் மக்களில்லையா? 
ஐயர்மார்களிடம் நீங்கள் வீணாய் அடி வாங்கப் போகிறீர்கள். 
உங்களுக்கு ஒன்று தெரியுமா? நமது சைவசமய புராணங்களில், மக்கள் மட்டுமல்ல 
விலங்குகளும் லிங்கத்திற்குப் பால்வார்த்தும் பூசைசெய்தும் 
உயர்வடைந்திருப்பதாய்ப் சொல்லப்படுகிறது. 
அவற்றையும் வழிபடவிட்டால் என்ன என்றுதான் 
இப்போது நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றோம். 
உங்களிற்கு ஏதாவதுவழி தெரிந்தால் சொல்லுங்களேன்! 
இவற்றை எல்லாம் சமயம் ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ? 
இறைவன் நிச்சயம் ஏற்றுக் கொள்வான்.

🛕உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣அதுகளுக்கும் ரிக்கற் போடுவினம் போல. ஹி.....ஹி.... 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்